Saturday, April 5, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 34

ஃபோபர்ஸ் - மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைக் கட்டாந்தரைக்கு கொண்டு வந்த சொல்!

'திருவாளர் பரிசுத்தம்’ என்று அடையாளப்படுத்தப்பட்டு அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட ராஜீவ் காந்தியை 'பீரங்கித் திருடன்’ என்று பரிகாசம் செய்யக் காரணமான சொல்!
ராஜீவைக் காதலித்துக் கரம்பிடித்த அப்பாவி இத்தாலிப் பெண் என்று அதுவரை கருதப்பட்ட சோனியா மீது அரசியல் பார்வை விழுவதற்கு காரணமான சொல்!
இந்தியாவின் பாதுகாப்புக்கு அண்மை நாடுகளால் அச்சுறுத்தல், அதனைச் சமாளிக்க பீரங்கிகள் தேவை எனச் சொல்லி ஸ்வீடனைச் சேர்ந்த ஃபோபர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இரண்டு அரசுகளுக்கும் இடையில் 1985 டிசம்பர் 13 முதல் 1986 மார்ச் 23 வரை பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. இந்த ஒப்பந்தங்களுக்கு இடையில் இடைத்தரகர்கள் கிடையாது என்றும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ராணுவ ஒப்பந்தங்களின் இடைத்தரகர்கள் சம்பாத்தியமும் கோடிக்கணக்கில் இருக்கும். அனைத்து நாடுகளிலும் தேவையற்ற அளவுக்கு ராணுவத்துக்கு செலவிடுவதற்குக் காரணமே, இதுபோன்ற இடைத்தரகுப் பணங்களைக் கைப்பற்றுவதற்காகத்தான். அரசியல்வாதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் இதுபோன்ற ஒப்பந்தங்களில் ஆர்வமாக இருப்பதற்கும் அதுதான் காரணம். இடைத்தரகர் கிடையாது என்று இந்தியா அறிவித்ததை ஸ்வீடன் நிறுவனம் ஏற்கவில்லை என்று சொல்லி, வின்சத்தாவின் அன்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை இடைத்தரகராகப் போட்டார்கள். ஒப்பந்தம் கையெழுத்தான அன்று, டெல்லி மௌரியா ஹோட்டலில் வின்சத்தா விருந்து வைத்துக் கொண்டாடினர். 1987 ஏப்ரல் 16 வரை இதில் என்ன நடந்தது என்பது 'ராணுவ ரகசியமாகவே’ இருந்தது.
அன்றைய தினம் ஸ்வீடன் வானொலி ஒரு செய்தியை ஒலிபரப்பியது. 'ஃபோபர்ஸ் பீரங்கிகளை வாங்குவதற்கு லஞ்சம் தரப்பட்டுள்ளது. இந்தப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது’ என்பதுதான் அந்தச் செய்தி. ராஜீவ் தலைகவிழ்ந்து நின்றார். 'எந்த முறைகேடும் நடக்கவில்லை’ என்று அவர் சொன்னார். யாரும் நம்பத் தயாராக இல்லை.
நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இந்தப் பிரச்னை ராஜீவை தலை முதல் கால் வரை சுற்றி இறுக்கியது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. 'ஒன்றை மறைக்க வேண்டுமானால் கல்லைப் போடு; அல்லது, கமிஷனைப் போடு’ என்று சொல்வதைப்போல, இறுதியில் ஜே.பி.சி. விசாரணைக்கு ராஜீவ் ஒப்புக்கொண்டார்.
30 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையில் 24 பேர் காங்கிரஸ் உறுப்பினர்கள். உண்மை எப்படி வெளியில் வரும்? இதில் நியாயம் கிடைக்காது என்று எதிர்க்கட்சியினரும் வர மறுத்து விட்டார்கள். இதுவும் வசதிதானே. அந்த 24 பேரும் ஸ்வீடனுக்குச் சுற்றுலா போனார்கள். திரும்பிவந்தார்கள். கூடிக்கூடிப் பேசினார்கள். 'எந்த ஊழலும் நடக்கவில்லை. யாருக்கும் கமிஷன் தரப்படவில்லை. சுவிஸ் வங்கியில் யார் பேருக்கும் பணம் போடப்படவில்லை’ என்று அறிக்கை கொடுத்தார்கள். அத்தோடு ஃபோபர்ஸ் விவகாரம் முடிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழகத்தில் இருந்து ஒரு குரல்.
''இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது'' என்று அன்று அ.தி.மு.க. எம்.பி-யாக இருந்த ஆலடி அருணா அறிக்கை வெளியிட்டார். இவர் இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்தவர். அன்று காங்கிரஸும் அ.தி.மு.க-வும் கூட்டணியில் இருந்தன. அதனால் அவருக்கு ஜே.பி.சி. விசாரணைக்குள் நடந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் அத்தனையும் தெரியும். அவற்றைத்தான் யார் பெயரையும் குறிப்பிடாமல் ஆலடி அருணா அம்பலப்படுத்தினார்!
'இந்து’ பத்திரிகை ஃபோபர்ஸ் விவகாரத்தை கையில் எடுத்தது. ராணுவ ரகசியங்கள் அனைத்தையும் மொத்தமாகப் போட்டு உடைத்தது. ஊழலை மறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் மண்ணாகிப்போனது.
''எவ்வளவு பெரியவர்கள் தவறு செய்திருந்தாலும், தப்ப விடமாட்டோம்'' என்று நல்ல பிள்ளையாக முதலில் அறிவித்தார் பிரதமர் ராஜீவ். ''ஸ்வீடன் வானொலியில் கூறப்பட்ட தொகை சுவிஸ் கம்பெனிக்குத்தான் தரப்பட்டது. அதற்கும் இந்தியாவிடம் பீரங்கி வாங்கியதற்கும் தொடர்பு கிடையாது'' என்று ஃபோபர்ஸ் கம்பெனியையே அறிக்கைவிட வைத்தார்கள். ''சுவிஸ் வங்கியில் பணம் எதுவும் போடப்படவில்லை என்று ஸ்வீடன் அரசு என்னிடம் சொல்லிவிட்டது'' என்றார் ராஜீவ். ''நானோ என் குடும்ப உறுப்பினர்களோ இந்த விவகாரத்தில் எந்தப் பணமும் பெறவில்லை என்று ஜனநாயகத்தின் தலையாய மன்றமான இங்கு தெரிவிக்கிறேன்'' என்று நாடாளுமன்றத்தில் ராஜீவ் சொன்னார்.
1987 ஆகஸ்ட் 26-ம் தேதி ஸ்வீடனில் இருந்து வந்த அறிக்கை, ஊழலின் இருண்ட பக்கத்தை லேசாக வெளிச்சம் போட்டது. ''நாங்கள் தந்த பணத்தில் எங்கள் ஏஜென்ட்கள் இந்தியாவில் யாருக்காவது லஞ்சம் தந்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது'' என்றார் நோபல் தொழிற்சாலைகளில் தலைவர்.
''மூன்று கம்பெனிகளின் பெயர்களில் இந்த லஞ்சப் பணம் தரப்பட்டுவிட்டது'' என்று ஃபோபர்ஸ் கம்பெனியின் அதிகாரிகளில் ஒருவரான பார்பெர்க் பேட்டியைக் கொடுத்தார். அந்த மூன்று கம்பெனிகளின் பெயரை முதன்முதலில் அம்பலப்படுத்தினார் 'இந்தியன் எக்ஸ்பிரஸில்’ இருந்த அருண் ஷோரி. 'இந்து’ நாளிதழில் பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியன், எந்தெந்த சுவிஸ் வங்கியில் பணம் போடப்பட்டது என்ற தகவலை அம்பலப்படுத்தினார்.
ஸ்வீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் மாவட்ட தலைமை வழக்கறிஞர் ரிஸ்பெர்க், ''ஸ்விஸ் வங்கிகள் வாயிலாக ஸ்வென்ஸ்கா, மொரெஸ்கோ, ஏ அண்டு ஈ சர்வீஸ் ஆகிய மூன்று கம்பெனிகளுக்கு 65 கோடி ரூபாய்க்கு மேல் ஃபோபர்ஸ் கம்பெனி லஞ்சம் கொடுத்துள்ளது உண்மையே!'' என்று சொல்லி 1988 ஜனவரி 25-ம் தேதி இந்தியாவையே அதிரவைத்தார்.
ஸ்வீடன் ஆடிட் அறிக்கையில், ''பீரங்கி பேரத்தில் கமிஷன் கொடுக்கப்படவில்லை என்று கூறுவது உண்மையல்ல. பீரங்கி பேரத்தில் கொடுக்கப்பட்ட தொகைகள் எல்லாம் கணக்கு முடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தொகைகள் என்று கூறப்பட்டதும் உண்மை அல்ல. அனைத்துத் தொகைகளும் கமிஷன் தொகைகள்தான். பீரங்கி பேரத்தில் கமிஷன் வாங்கியவர்கள் யாருமே இந்தியர்கள் அல்ல என்று இந்தியப் பிரதமர் சொல்லிவருகிறார். அதுவும் உண்மை அல்ல'' என்று சொல்லி கமிஷன் வாங்கிய கம்பெனிகளின் இந்தியத் தொடர்புகளை அம்பலப்படுத்தியது. இந்தியத் தொழிலதிபர்களாக வின்சத்தா, இந்துஜா சகோதர்கள் தொடர்புடைய கம்பெனிகள் இவை எனவும் அம்பலமானது.
இந்த வர்த்தக - லஞ்சத்தின் மறைந்த பக்கங்களை மத்திய அரசிடம் வழங்குவதற்காக ஃபோபர்ஸ் கம்பெனியின் குழுவினர் இந்தியா வரப்போவதாக அறிவித்தார்கள். அவர்கள் வருகை ராஜீவால் தடுக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக இருந்த அருண் சிங் தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
லஞ்சம் தரப்பட்ட விவகாரம் வெடித்துக்கொண்டு இருந்தபோது, இந்தியாவின் ஆடிட்டர் ஜெனரலான சதுர்வேதி, இந்த ஒப்பந்தத்தின் மற்ற கோளாறுகளை அம்பலப்படுத்தினார்.
''இவை முதல்தரமான பீரங்கிகள் அல்ல. பலமுறை நிராகரிக்கப்பட்ட பீரங்கிகள் இவை. திடீரென முடிவை மாற்றிக்கொண்டு இதனை வாங்கியிருக்கிறார்கள். ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் பீரங்கிகளை இவர்கள் சப்ளை செய்யவில்லை. குறிப்பிட்டபடி பீரங்கிகளின் இயக்கமும் இல்லை. வெடிமருந்துகளும் தரம் தாழ்ந்தவையே'' என்றார் சதுர்வேதி.
சதுர்வேதி மூட்டிய தீயில் எண்ணெய் வார்த்தார் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி சுந்தர்ஜி.
''ஃபோபர்ஸ் கம்பெனியின் குழு, கமிஷன் வாங்கியவர்களின் பெயரை வெளியிடத் தயாராக இருந்தது. மாஸ்கோவில் இருந்து டெல்லி திரும்பிய ராஜீவ், இந்தத் தகவலை அறிந்து கோபமடைந்தார். ஃபோபர்ஸ் குழு டெல்லி வராமல் தடுத்துவிட்டார். இதன் எதிரொலியாகவே அருண்சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்'' என்றார்.
சி.பி.ஐ-யின் மூலமாக இந்த வாதங்களை மறைக்க முயற்சித்தார்கள். சி.பி.ஐ. என்ற அமைப்பை, தங்கள் வசதிக்கு ஏற்ப ஆளுங்கட்சி பயன்படுத்தும் முயற்சி ஃபோபர்ஸ் காலத்திலேயே ஆரம்பம் ஆகிவிட்டது.
சி.பி.ஐ-யின் அன்றைய தலைவர் மோகன் காத்ரே, ''ஸ்வீடன் நாடு முழுவதும் தேடித் தேடி சலித்துப்போனோம். இவர்கள் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லும் மொராஸ்கோ என்ற கம்பெனியே இல்லை'' என்று சொன்னார். மொராஸ்கோ என்ற கம்பெனி இருக்கிறது; அதன் இயக்குநர்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் 1988 அக்டோபர் 9-ம் தேதி வெளிவர ஆரம்பித்தன.
ஃபோபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பெயர் மார்ட்டின் ஆர்த்போ. இவர்தான் பீரங்கி பேரம் நடந்த காலத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர். இவர் தினமும் டைரி எழுதி வந்துள்ளார். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மறைக்காமல் எழுதிவந்தார். ஸ்வீடன் நாட்டுப் போலீஸார் இந்த டைரியைக் கைப்பற்றினார்கள். அதில்தான் 'R’  'Q’ என்றால் யார் என்பது அம்பலம் ஆனது!
- Vikatan

No comments:

Post a Comment