Saturday, April 5, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 35

ஜெனீவாவில் இருந்த பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் 1988 ஏப்ரல் 8-ம் தேதி ஒரு தகவலை வெளியிட்டார். ''ஸ்வீடன் நாட்டுப் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்தேன். இவர்தான் ஃபோபர்ஸ் ஒப்பந்தம் பற்றிய உண்மையை விசாரிக்கும் பொறுப்பில் இருந்தவர். ஃபோபர்ஸ் வர்த்தகம் நடக்கும்போது அதன் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மார்ட்டின் ஆர்த்போவை சந்தித்து விசாரணை நடத்தியவர் இவர். 'ஃபோபர்ஸ் கம்பெனி இந்த வர்த்தகத்துக்கு ஏஜென்ட்கள் யாரும் இல்லை என்று சொல்லியிருந்தால் இந்த ஒப்பந்தத்தையே இந்திய அரசு போட்டிருக்காது. ஏஜென்ட்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாகத்தான் இந்த ஒப்பந்தமே போடப்பட்டது. ஆனால், பெரிய இடத்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக என்னையும் ஃபோபர்ஸ் நிறுவனத்தையும் பலிகடா ஆக்குகிறார்கள்’ என்று மார்ட்டின் ஆர்த்போ சொன்னதாக அந்த போலீஸ் அதிகாரி என்னிடம் சொன்னார்'' என்று எழுதினார். அந்தப் பெரிய மனிதர்கள் யார்? மார்ட்டின் ஆர்த்போவின் டைரி அம்பலப்படுத்தியது.

''காந்தி டிரஸ்ட் வக்கீல் பாப்வில்சன் என்பவர் ஏ அண்ட் ஈ சர்வீஸஸ் என்ற கம்பெனியின் இரண்டு டைரக்டர்களை ஜெனீவாவில் சந்தித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்'' என்று 1987 ஜூலை 2-ம் தேதி தனது டைரியில் மார்ட்டின் ஆர்த்போ எழுதியிருக்கிறார். இதில் சம்பந்தப்பட்ட காந்தி டிரஸ்ட், ஏ அண்ட் ஈ சர்வீஸஸ் ஆகிய இரண்டும் பணம் கைமாறப் பயன்பட்டவை.
1987 செப்டம்பர் 2-ம் தேதி மார்ட்டின் ஆர்த்போ எழுதிய வாசகங்கள்தான் முக்கியமானது.
''முழு உண்மையைக் கூறும்படி நான் நிர்ப்பந்திக்கப்படலாம். 'N’ ஐ பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் 'Q’ வுக்கு இந்த விவகாரத்தில் என்ன தொடர்பு என்பது வெளிப்பட்டால் அது பெரிய பிரச்னையைக் கிளப்பும். ஏனென்றால், 'Q’ வுக்கு 'R’ மிகவும் நெருக்கமானவர்'' என்று எழுதியிருக்கிறார்.
'N’ என்பது அருண்நேரு.
Q என்பது இத்தாலியைச் சேர்ந்த குவாத்ரோச்சி. R என்பது ராஜீவ் காந்தி என்ற விளக்கம் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜீவ் காந்தியை கேள்விக்கு உள்ளாக்கி அதன்மூலம் சோனியாவையே சிக்கலுக்குள் இழுத்துவர ஆதாரமானது அந்த டைரி.
ராணுவ ஆயுத பேரங்களில் முதலில் இடைத்தரகர்களை ஒழித்துவிட்டோம் என்று சொன்னவரும் ராஜீவ் காந்திதான். பேரங்கள் வெளியில் வந்ததும் கமிஷன் எதுவும் தரப்படவில்லை என்றதும் ராஜீவ்தான். சுவிஸ் வங்கியில் பணம் போடப்பட்ட தகவல் வந்ததும், இந்தியர்கள் யாரும் பணம் வாங்கவில்லை என்றதும் ராஜீவ்தான். கமிஷன் பணம் தரப்பட்டதை நிரூபித்ததும் 'அது சர்வீஸ் சார்ஜ்’ என்று வியாக்கியானம் செய்ததும் ராஜீவ்தான்!
பிரிட்டிஷார் இந்தியச் செல்வங்களை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லும்போது சொன்ன வார்த்தை ஞாபகம் இருக்கிறதா? 'நாங்கள் இந்தியாவில் இருந்து, கொண்டு செல்வதற்குப் பெயர் ஹோம் சார்ஜ்’ என்றார்கள். ராஜீவ் புதிய வார்த்தையை கண்டுபிடித்தார் 'சர்வீஸ் சார்ஜ்’ அவருக்கு ஹோம் இங்கே இருந்ததால் அந்த வார்த்தையை அவரால் பயன்படுத்த முடியவில்லை.
இந்த லஞ்சப் பணம் சுவிஸ் வங்கியில் லோட்டஸ் என்ற பெயரில் போடப்பட்டதாக அடுத்த தகவல் வெளியானது. இதுவும் ராஜீவின் பெயரோடு சேர்த்து இணைத்துப் பேசப்பட்டது 'தாமரை’ என்றால் வடமொழியில் ராஜீவ் என்று அர்த்தம். இவை அனைத்தும் சேர்த்து ராஜீவ் பதவிக்கு வேட்டு வைத்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடையச் செய்ய ஃபோபர்ஸ் காரணமானது. இந்த ஊழல் கறையை மறைக்க 1990-ம் ஆண்டில் இருந்து இன்று வரை காங்கிரஸ் எடுத்த முயற்சிகளை விவரித்தாலே, அவர்களின் உண்மை முகம் அம்பலம் ஆகும்.
ஃபோபர்ஸ் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் வி.பி.சிங் 1990-ல் முடிவெடுத்து ஒப்படைத்தார். 91 மே 21-ம் தேதி மிகக் கொடூரமான முறையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதால் அவர் நீங்கலாக மற்றவர்கள் இதில் சுட்டிக் காட்டப்பட்டார்கள். சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் குவாத்ரோச்சி மற்றும் வின்சத்தாவை கைதுசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
1991-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் பிரதமராக பி.வி.நரசிம்மராவ் உட்கார்ந்தார். ஃபோபர்ஸ் விவகாரத்தை அமுக்கும் வேலைகள் ஆரம்பமானது. இது சம்பந்தமான விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்தும் வண்ணம் ஒரு கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மாதவ் சிங் கோலங்கி ஸ்வீடன் அரசுக்கு அனுப்ப, அந்தக் கடிதம் வெளியில் ரிலீஸ் ஆகி அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
கமிஷனில் சம்பந்தப்பட்ட ஏ அண்ட் ஈ சர்வீஸஸ் நிறுவனம் பனாமா தீவில் உள்ள கொல்பார் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும் அதன் உரிமையாளர்கள் குவாத்ரோச்சியும் அவர் மனைவியும்தான் என்றும் சுவிஸ் நீதிமன்றம் 1993-ம் ஆண்டு ஜூலையில் அறிவித்தது. 1996-ல் காங்கிரஸ் அரசு போய் ஐக்கிய முன்னணி அரசு இங்கு பதவிக்கு வந்தது. இதுவும் காங்கிரஸ் தயவில் இருந்ததால் சி.பி.ஐ. எதுவும் செய்யவில்லை.
1998-ல் தனக்கு எதிரான விசாரணையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் குவாத்ரோச்சி மனுத் தாக்கல் செய்து வலிய வந்து மாட்டினார். ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்ந்து பி.ஜே.பி. ஆட்சி உட்கார்ந்தது. காங்கிரஸை தட்டிவைக்க பி.ஜே.பி-க்கு கிடைத்த அஸ்திரமாக ஃபோபர்ஸ் மாறியது.
குவாத்ரோச்சி, இந்துஜா, வின்சத்தா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பட் நாகர் ஆகியோர் பெயரைச் சேர்த்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. இது 1999 அக்டோபர். குவாத்ரோச்சியை கைதுசெய்ய முயற்சித்தார்கள். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது வங்கிக் கணக்கு மட்டுமே லண்டனில் முடக்கப்பட்டது. 2001 அக்டோபரில் வின்சத்தா மரணம் அடைந்தார்.
2004-ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி. முடக்கப்பட்ட குவாத்ரோச்சியின் லண்டன் வங்கிக் கணக்கை விடுவிக்க காங்கிரஸ் அரசு கடிதம் எழுதியது மட்டுமல்ல இந்திய அதிகாரியே லண்டனுக்கு நேரில் அனுப்பி வைக்கப்பட்டார். அன்று சட்ட அமைச்சராக இருந்து அதனை பகிரங்கமாகச் செய்தவர் பரத்வாஜ்.
ஃபோபர்ஸ் வழக்கில் இருந்து ராஜீவ் பெயரை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கியது. 2005-ல் இந்துஜா சகோதரர்களின் பெயரும் ஃபோபர்ஸ் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.
ராஜீவ் இறந்துபோனார். வின்சத்தா இறந்துபோனார். இந்துஜா சகோதரர்களின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. நான் மட்டும் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டார் குவாத்ரோச்சி.
''குவாத்ரோச்சி என்பவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரை கைது செய்யவும் முடியவில்லை. அவருக்கு இந்தமுறை கோர்ட்டில் ஆதாரமும் இல்லை. எனவே இந்த வழக்கை முடித்துக் கொள்கிறோம்'' என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வழக்கு தாக்கல் செய்தது. 2009 ஏப்ரலில் இன்னொன்றும் நடந்தது. குவாத்ரோச்சியை கைதுசெய்ய இன்டர்போல் விட்டிருந்த வாரன்ட் நோட்டீஸை சி.பி.ஐ. வாபஸ் பெற்றது.
இந்துஜா சகோதரர்கள் மீது போடப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று சொல்லி டெல்லி உயர் நீதிமன்றம் அவர் பெயரை நீக்கியது. சி.பி.ஐ. சிரித்தபடி ஏற்றுக்கொண்டது. இவ்வளவும் எதனால் சாதிக்க முடிந்தது? சோனியா அரசியலுக்கு நுழைந்ததால் மட்டுமே!
ராஜீவ் மறைவுக்குப் பிறகு அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்த சோனியா திடீரென அரசியலுக்குள் நுழைய ஃபோபர்ஸ் விவகாரம்தான் காரணம் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். சிக்கிம் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இணைப் பேராசிரியராக இருக்கும் வி.கிருஷ்ணா அனந்த் எழுதுகிறார். ''ஃபோபர்ஸ் வழக்குக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் நரசிம்ம ராவ் செயல்படுவதைத் தொடர்ந்து அதுவரை அமைதி காத்துவந்த சோனியா தனது மௌனத்தை மெள்ள கலைக்கத் தொடங்கினார். வழக்குகளில், குறிப்பாக ஃபோபர்ஸ் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதுதான் ஒரேவழி என்ற முடிவுக்கு வந்தார். அரசியல் ஆசை அவரது ஆழ் மனத்திலும் மெள்ள முளைவிடத் தொடங்கியது. ஆனால், அதற்கு ஃபோபர்ஸ்தான் காரணம் என்று கூறுவது,  'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோல் ஆகிவிடும் என்பதால் பிரச்னையைத் திசைதிருப்ப சோனியா முடிவு செய்தார்.
1993 மே 21 அன்று அமேதியில் நடைபெற்ற ராஜீவ் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். ராஜீவ் படுகொலைக்கு காரணம் யார்? சதி வலை பின்னியவர்கள் யார்? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று மத்திய அரசு மீது சரமாரியான கேள்விக் கணைகளை வீசினார். ஃபோபர்ஸ் பிரச்னை செய்தித்தாள்களில் பரபரப்பாக இடம் பெறுவதற்குப் பதிலாக மௌனம் கலைத்த சோனியாவின் பேச்சே பத்திரிகைகளில் முதலிடத்தைப் பிடித்தது.''
அதன் பிறகு ஃபோபர்ஸ் பிரச்னையை நரசிம்ம ராவ் எடுக்கவில்லை. சோனியாவும் ராஜீவ் கொலையில் உள்ள சதி குறித்த கேள்விகளை எழுப்பவில்லை. ராஜீவ் கொலை சதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனில் நரசிம்ம ராவின் நண்பர்கள் தலை உருண்டதை வைத்துப் பார்த்தால் பல்வேறு மர்மங்களை உணர முடியும்!
    

- Vikatan

No comments:

Post a Comment