Saturday, April 5, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 37
ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானபோது, அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக இருந்த கமலாபதி திரிபாதி அவருக்கு ஐந்து பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார்.

''சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, காங்கிரஸ் கட்சிக்கென சில நெறிமுறைகளை உருவாக்கித் தந்தார். காங்கிரஸ் கட்சி எப்போதுமே இடதுசாரி சிந்தனை கொண்ட கட்சியாகத்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. இன்று கட்சியின் கொள்கைகள் நடைமுறைகள் அடியோடு மாறிவிட்டன.
ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து, அந்த அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். காங்கிரஸின் கொள்கைகள், காங்கிரஸின் கலாசாரம் ஆகியவை பற்றி எல்லாம் அவர்களுக்கு என்ன தெரியும்?
காங்கிரஸ் மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி சொல் வேறு; செயல் வேறு என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் ஒரே சமயத்தில் பல பதவிகளில் இருக்கக் கூடாது. மாநில முதல்வர்களை மேலிட விருப்பப்படி முடிவுசெய்து திணிப்பதை கைவிட வேண்டும். கட்சியின் சகல மட்டங்களுக்கும் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும். மாநில காங்கிரஸ் கமிட்டிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தேர்தல் மூலமே அமைக்கப்பட வேண்டும். கட்சியின் தோல்விக்குப் பெரும் காரணம் கட்சியை ஆட்டிப்படைத்துவரும் இடைத்தரகர்கள்தான். இந்த இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்'' - இப்படி அடுக்கினார் கமலாபதி திரிபாதி.
இந்தக் கடிதம் ராஜீவ் காந்தியால் நிராகரிக்கப்பட்டது. அடுத்து வந்த நரசிம்ம ராவ் காலத்தில் உதாசீனப்படுத்தப்பட்டது. திரிபாதி சுட்டிக்காட்டிய இடைத்தரர்கள் ராவ் காலத்தில்தான் புற்றீசல்போல எழுந்து வந்தார்கள். இடைத்தரகர்கள் வெளிப்படையாகவே செயல்பட்டார்கள். அவர்கள் நினைத்ததே நடக்கும், அவர்​களைப் பிடித்தால்தான் அனைத்தும் நிறைவேறும் என்ற நிலை ராவ் காலத்தில் பட்டவர்த்தனமானது.
'இந்தியாவின் பிரதமர் பதவியில் இருப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் தந்தேன்’ என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஒருவர் பகிரங்கமாக அறிவித்தால் என்ன ஆகும்? 1993 ஜூன் 16-ம் நாள் ஹர்ஷத் மேத்தா இப்படித்தான் அறிவித்தார். பங்குச் சந்தை ஊழல் என்று வரலாற்றில் பதிவான அசிங்கத்தின் மையப்புள்ளியான ஹர்ஷத் மேத்தா, 'பிரதமராக இருக்கும் நரசிம்ம ராவுக்கு ஒரு கோடி ரூபாயை பணமாகக் கொடுத்தேன். கொடுத்தவன் நான்தான். எங்கள் இருவருக்கும் மீடியேட்டராக இருந்து செயல்பட்டவர் லலித் மிட்டல். ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்தான் கொண்டு போய் கொடுத்தார்’ என்று ஹர்ஷத் மேத்தா சொன்னார்.
இப்படி ஒரு அவமானத்தை சஞ்சய் காந்தி கூட இந்திராவுக்கு ஏற்படுத்தித் தரவில்லை. ஏற்கெனவே பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆடிக்கொண்டு இருந்த நரசிம்ம ராவ் ஆட்சி, இந்தப் பேட்டிக்குப் பிறகு இன்னும் ஆடியது. ராவ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தார்கள். லேசாக மாறினாலும் ராவ் ஆட்சி கவிழ்ந்துபோகும் என்பதே அன்றைய நிலைமை. ஆனால், ராவ் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி அவரைச் சுற்றி வலம் வந்துகொண்டு இருந்த இடைத்தரகர்களுக்கே இருந்தது. அவர்கள் தங்கள் பண மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்கள். எம்.பி-களுக்குப் பணம் கொடுத்து அவர்களது மனதை மாற்றி விலைக்கு வாங்க அன்றுதான் அடித்தளம் இடப்பட்டது. அஜித் சிங் ஆதரவு எம்.பி-க்களும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி-க்களும் ராவ் இடைத்தரகர்களின் வலையில் சிக்கினார்கள். யாரும் எதிர்பாராத வகையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் ராவ் தப்பினார். ஆனால், 'எம்.பி-க்களுக்கு பணம் கொடுத்தார்’ என்று ஜார்க்கண்ட் தலைவர் போட்ட வழக்கில் ராவ் சிக்கினார்.
ஹர்ஷத் மேத்தாவைத் தொடர்ந்து லக்குபாய் பதக் வந்தார். 'ஊறுகாய்’ பதக் என்றால்தான் எல்லாருக்கும் தெரியும். நரசிம்ம ராவுக்கும் சந்திரா சாமிக்குமான நட்பை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது இந்த 'ஊறுகாய்’ பதக்தான். நரசிம்ம ராவ் எந்தப் பதவியில் இருந்தாலும் அங்கு மறைமுகமாக சந்திரா சாமியின் ஆட்சிதான் நடக்கும். ராவ் பேரைச் சொல்லி காரியங்கள் சாதித்துக்கொள்ளும் மிகப் பெரிய, முக்கியமான இடைத்தரகராக சந்திரா சாமி செயல்பட்டு வந்தார். அப்படிப்பட்ட சந்திரா சாமி, ராவை காட்டி லக்குபாய் பதக்கிடம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை 1987-ம் ஆண்டு வாங்கியதாக விவகாரம் கிளம்பியது. ஆனால், சொன்ன வேலையை செய்து கொடுக்கவில்லை என்று லக்குபாய் பதக் கோபமானார். வழக்குப் போட்டார். இது சி.பி.ஐ. விசாரணைக்குப் போனது.
காலங்கள் உருண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வழக்கு பூதாகாரமானது. அதுவரை சந்திரா சாமியிடம் பணம் கொடுத்தேன் என்று சொல்லிவந்த லக்குபாய் பதக், 'நான் பணம் கொடுக்கும்போது நரசிம்ம ராவ் பக்கத்தில் இருந்தார்’ என்று சி.பி.ஐ-யில் வாக்குமூலமே கொடுத்தார். பிரதமர் பதவியை விட்டு இறங்கிய பிறகு நரசிம்ம ராவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அடுத்து கிளம்பியது ஹவாலா ஊழல். இதில் காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்லாமல், அதுவரை புனிதர்களாக வேடமிட்டுக் கொண்டிருந்த பி.ஜே.பி-யினரும் சிக்கினார்கள். பி.ஆர்.ஜெயின் என்ற தொழிலதிபர் எழுதிய டைரியில் சட்டத்துக்குப் புறம்பாகப் பணப் பரிமாற்றங்கள் நடைபெற்ற விவகாரங்கள் வெடித்தன. வி.சி.சுக்லா, பல்ராம் ஜாக்கர், மாதவராவ் சிந்தியா, கமல்நாத் போன்ற காங்கிரஸ்காரர்களும் எல்.கே.அத்வானி, மதன்லால் குரானி, யஷ்வந்த் சின்ஹா போன்ற பி.ஜே.பி-யினரும் சிக்கினார்கள். உடனடியாக வழக்குப் போடாமல் இழுத்தடித்தார்கள். உச்ச நீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் போனது. அதன் பிறகுதான் பலர் மீதும் சி.பி.ஐ. தனது விசாரணையைத் தொடங்கியது.
அதன் பிறகு யூரியா ஊழல், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு உரம் இறக்குமதி செய்ய துருக்கி நாட்டு நிறுவனத்துக்கு 133 கோடி ரூபாய் தரப்பட்டது. அவர்கள் உரத்தை இறக்குமதியே செய்யவில்லை. உரத்தை அனுப்புங்கள், இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவோம் என்று மத்திய அரசு அதிகாரிகள் எச்சரித்த பிறகும் வந்து சேரவில்லை. மேல் நடவடிக்கையில் இறங்கினார்கள். துருக்கியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை. ஆனால், பணம் உடனடியாக எடுக்கப்பட்டுவிட்டது. இதில் நரசிம்ம ராவின் மகன் பிரபாகர் ராவ் சம்பந்தப்பட்டு இருப்பதாக அவர் தலை உருண்டது. தப்பிக்கப் பார்த்த பிரபாகர் ராவ், இறுதியில் சி.பி.ஐ-யில் கைதானார்.
இப்படிப்பட்ட யோக்கிய சிகாமணியான நரசிம்ம ராவ், வி.பி.சிங் மீது கறையை ஏற்படுத்த எப்படிப்பட்ட மோசடியில் இறங்கினார் என்பதே செயின்ட் கீட்ஸ் வழக்கு. ராஜீவ் காந்தியின் போஃபர்ஸ் ஊழலை அம்பலப்படுத்தி அதனை மக்கள் மத்தியில் பிரசாரமாகக் கொண்டுசென்ற வி.பி.சிங் மீது பழிபோட நினைத்து, செயின்ட் கீட்ஸ் என்ற இடத்தில் உள்ள வங்கியில் வி.பி.சிங் மகன் அஜேயாவுக்கு 21 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பதாகச் செய்தி பரப்பினார்கள். பக்காவாக ஆதாரங்களையும் தயாரித்தார்கள். அப்படி ஒரு கணக்கு இருந்தால் அதனை கைப்பற்றிக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார் அஜேயா. அடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்து, 1989-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வி.பி.சிங் பிரதமர் ஆனார். அவர் இதுபற்றி விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டார்.
செயின்ட் கீட்ஸ் தீவு வங்கியில் வி.பி.சிங் மகனுக்குக் கணக்கு இருப்பதாகவும், அதில் ஏராளமான பணம் இருப்பதாகவும் ஆவணங்களை அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் தயாரித்ததாக சி.பி.ஐ. அதிகாரி என்.கே.சிங் கண்டுபிடித்தார். இந்த வேலையை நரசிம்ம ராவுக்காக செய்துகொடுத்தது சந்திரா சாமியும், அவரது உதவியாளர் கே.என்.அகர்வாலும். சி.பி.ஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் இவர்கள் குற்றம்சாட்டப்பட்டார்கள். இறுதி அறிக்கையில் நரசிம்ம ராவும் குற்றம் சாட்டப்பட்டார்.
ஹர்ஷத் மேத்தா, லக்குபாய் பதக், ஜெயின் சகோதரர்கள், சந்திரா சாமி, கே.ஆர்.அகர்வால் என்ற மாமாஜி போன்ற இடைத்தரகர்கள் வட்டாரம் மத்திய அரசுக்குள் புகுந்து மனம் விரும்பும் அளவுக்கு ஆட்டத்தை நடத்தியது நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில்தான்.
பி.ஜே.பி-யின் இந்துத்துவா முன்னெடுப்புகளும் இதே ராவ் ஆட்சியில்தான் முளைவிட்டு வளரத் தொடங்கியது.


- Vikatan

No comments:

Post a Comment