Tuesday, April 15, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 38

மக்களை நாட்டுப்பற்று என்ற மகுடிக்கு மயக்கினால் தாங்கள் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று காங்கிரஸ் நினைத்ததைப்போல, மக்களை மதப்பற்றுக்குள் இழுத்துப் போய்விட்டால் தாங்கள் எது செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று கண்டுபிடித்தது பி.ஜே.பி.

மதத்தை விட்டு வெகுதூரத்தில் அரசியல் இருக்க வேண்டும். ஆனால், மதத்தையே அரசியலுக்குள் கொண்டுவந்தது பி.ஜே.பி. இது தங்களுடைய கட்சியை வளர்க்கத் தேவையான அஸ்திரமாக அந்தக் கட்சி பயன்படுத்தியது. ஆனால், காலங்காலமாக சகோதர சகோதரிகளாகப் பழகியும் பிணைந்தும் வாழ்ந்து வந்த கோடானு கோடி இந்து - முஸ்லிம் மக்களுக்குள் பேதம் விளைவிக்கக் காரணமானது. இந்த செயல்பாடுகள் காரணமாகத்தான் பி.ஜே.பி. வளர்ந்தது. இன்னொரு பக்கம் நாட்டின் அமைதி தேய்ந்தது.
1990 செப்டம்பர் 25-ம் நாள் அன்று குஜராத் சோமநாதபுரத்தின் பிரதான ஆலயத்தில் இருந்து தன்னுடைய ரத யாத்திரையை லால் கிஷன் அத்வானி ஆரம்பித்தார். இன்றைக்கு எந்த நரேந்திர மோடி தன்னை ஓவர்டேக் செய்கிறார் என்று அத்வானி அலறுகிறாரோ, அவரே அன்று வாஜ்பாயை முந்துவதற்கு இப்படி ஒரு காரியத்தைக் கையில் எடுத்தார். 6000 மைல் ரத யாத்திரை அது. இந்தியாவின் எட்டு மாநிலங்களை அது தொட்டு அயோத்தியை அடைய வேண்டும். அந்த ரத யாத்திரை எந்த மாநிலத்துக்குள் நுழைந்தாலும் பதற்றம் பற்றிக்கொண்டது. 'ஆண்மை கொண்ட இந்துவே அணிதிரள்’ என்று அழைத்தார்கள். 'அன்பே கடவுள்’ என்று சொல்லப்பட்ட பூமியில் ஆயுதம் ஏந்திய தொண்டர்கள் அணிவகுக்க வைக்கப்பட்டார்கள். 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டு’ என்பதுதான் அத்வானியின் ஒரே லட்சியமாக இருந்தது. அன்று அத்வானியின் ரத யாத்திரையை குஜராத்தில் வழிநடத்தியவர்தான் நரேந்திர மோடி. அன்று அவர் சாதாரணத் தொண்டர்.
அயோத்திக்குள் அத்வானியுடன் தொண்டர்கள் போனால் மிகப் பெரிய களேபரம் ஆகிவிடும் என்று பயந்த அன்றைய பிரதமர் வி.பி.சிங் இதைத் தடுப்பதற்கு முயற்சித்தார். அன்றைய வி.பி.சிங் ஆட்சியே பி.ஜே.பி. தயவில்தான் இருந்தது. தன்னுடைய பதவி நிலைக்க வேண்டும் என்று வி.பி.சிங் நினைத்திருந்தால் அத்வானி எதை உடைத்தால் என்ன என்று வி.பி.சிங் விட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ், பி.ஜே.பி. தலைவர் அத்வானி இருவருடனும் வி.பி.சிங் பேசினார். இருவரும் ரத யாத்திரையை நிறுத்த சம்மதிக்கவில்லை.
பிரச்னைக்குரிய பாபர் மசூதி இடத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்வது, பிரச்னை இல்லாத இடத்தை ராமஜென்ம பூமி யஞ்ய சமிதியிடம் ஒப்படைப்பது என்ற சமாதானத் திட்டத்தை பிரதமர் வி.பி.சிங் வகுத்தார். இதனை பி.ஜே.பி., வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி ஜும்மா மஜ்ஜித் ஷாகி இமாமும் ஏற்கவில்லை. அரசியல் கட்சிகளிடம் இருந்து இந்தப் பிரச்னையை நகர்த்தி வந்துவிட வேண்டும் என்று வி.பி.சிங் துடித்தார். எனவே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். பி.ஜே.பி. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஆச்சர்யம் அல்ல. ஆனால், இன்று மதவாதத்துக்கு எதிராகப் பிறப்பெடுத்தவர்கள்போலப் பேசும் காங்கிரஸ் கட்சியும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ரத யாத்திரையை தடுத்து நிறுத்துவது என்று வி.பி.சிங் முடிவெடுத்தார். அக்டோபர் 22-ம் தேதி பாட்னா சென்றது ரத யாத்திரை. 'இது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து’ என்று சொல்லி அத்வானியைக் கைது செய்ய வி.பி.சிங் உத்தரவிட்டார். உடன டியாக வி.பி.சிங் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பி.ஜே.பி. வாபஸ் வாங்கியது.
1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று வி.ஹெச்.பி. அறிவிப்பு செய்தது. இதில் பங்கெடுக்கப் போவதாக அத்வானியும் அறிவித்தார். நாடு முழுவதும் இருந்து கரசேவகர்கள் வர வேண்டும் என்று அத்வானி அறிவித்தார். இந்தியா அதுவரை காப்பாற்றி வைத்திருந்த மதநல்லிணக்கத்தை குலைத்து, எதிர்கால அமைதியையும் உருக்குலைத்து நாசப்படுத்தும் நாளாக அது மாறிப்போனது.
டிசம்பர் 5-ம் தேதி லக்னோவில் இருந்து அத்வானி, அயோத்திக்கு வந்தார். சிவசேனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் மோரிஷ்வர் சேவே, பஜ்ரங்தள் தலைவர் வினாய் கட்டியார், அத்வானி ஆகிய மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். பாபர் மசூதியைச் சுற்றி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தின் எல்லையில் இருந்து இரும்புக் குழாய்கள் டிசம்பர் 6-ம் தேதி காலை 8.15 மணிக்குப் பிடுங்கப்பட்டது. அந்த இடத்துக்கு 10.15 மணிக்கு வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் வந்தனர். 11.30 மணிக்கு மசூதியை சுற்றி இருந்த இடத்துக்குள் கரசேவகர்கள் நுழைந்து பூஜைகள் நடத்தினார்கள். 11.50 மணிக்கு வலதுபுற கோபுரத்தின் மீது ஒருவர் ஏறிவிட்டார். அதன் பிறகு ஒவ்வொருவராக ஏற ஆரம்பித்தார்கள். அப்போதுதான் பைசாபாத்தில் இருந்து அதிரடிப்படை 2 கி.மீ. தள்ளி வந்துகொண்டு இருந்தது. தடுக்க யாருமே இல்லாத நிலையில் தகர்ப்பு முடிந்தது. மாலையில் ராமர் சிலை நிறுவப்பட்டு, பூஜைகள் நடந்தது. அப்போதும் அதிரடிப்படையோ, ராணுவமோ வரவில்லை. டிசம்பர் 7-ம் தேதி காலையில் கரசேவகர்கள் அந்த இடத்தைவிட்டு அமைதியாக வெளியேறினார்கள். எல்லோரும் அயோத்தியை விட்டு வெளியேறிய பிறகு சாவகாசமாக டிசம்பர் 8-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்குத்தான் போலீஸ் படையின் நான்கு பிரிவுகள் அயோத்திக்குள் நுழைந்தது. அப்போது ஒன்றிரண்டு பேர்தான் அங்கு இருந்தார்கள். அவர்கள் மீது கண்ணீர் புகை வீசி கலைத்தது போலீஸ். 4.15 மணிக்குத்தான் ராணுவம் வந்து அந்த இடத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்தது.
பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் அயோத்திக்குள் வரப்போவது தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்துக்கொண்டு இருந்தது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு. டிசம்பர் 6-ம் தேதி மதியம் 2 மணிக்கு மசூதி இடிக்கப்படுகிறது என்றால் டிசம்பர் 8-ம் தேதி அதிகாலை 4 மணிக்குத்தான் அந்த இடத்துக்கு ராணுவமே வருகிறது. சினிமா போலீஸைவிட மோசமாக நடந்துகொண்டார்கள்.
''கரசேவகர்களை பெரிய அளவில் பிரச்னைக்குரிய இடத்தில் திரளவிடுவது ஆபத்து; பிறகு அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்; இன்னொருப் பிரிவினர் மசூதியைத் தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பிரிவினரை நாங்கள் அடையாளம் காணமுடியவில்லை'' என்று மத்திய உளவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நவம்பர் 15-ம் தேதியே எச்சரிக்கை செய்துவிட்டது. டிசம்பர் 6-ம் தேதி கரசேவை நடத்தப்போகிறோம் என்று அக்டோபர் 30-ம் தேதியே வி.ஹெச்.பி-யும் அறிவித்துவிட்டது.
''வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அவரது கருத்தும் செயல்பாடும் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு முழுமையாகத் தெரியும். எனவே நாங்கள் அவருக்கு ஆலோசனைகள் கூறினோம். இப்போது நரசிம்ம ராவ் கருத்து என்னவென்றே எங்களுக்குத் தெரியவில்லை. எனவே உளவுத் துறை அறிக்கையை மட்டும் அப்படியே பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டோம் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் சொன்னார்கள்.
நிலைப்பாடுகளே எடுக்காமல் இரண்டு பக்க அநியாயங்களையும் கண்மூடி வேடிக்கை பார்ப்பதுதான் காங்கிரஸின் வழக்கமாக இருந்தது. அதுவே பி.ஜே.பி-யின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகராம் டெல்லி முதல் தென்பகுதி முக்கிய நகரான ஹைதராபாத் வரை கலவரம். இதில் 1200-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் ஆகிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. அத்தோடு சேர்த்து இஸ்லாமிக் சேவக் சங், ஜமய்த்-இ-இஸ்லாம்-ஈ ஹிந்த் எனும் முஸ்லிம் அமைப்புகளும் தடை செய்யப்பட்டன.
''இந்தியாவை இந்து நாடாக்கும் கனவு விரைவில் நனவாகப் போகிறது. புதிய ராமர் கோயிலை ராமஜென்ம பூமியில் கட்டுவோம். இதுதான் துவக்கம்’ என்று வி.ஹெச்.பி. தலைவர் அறிவித்தார். 'இந்தப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்புகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துமே தவிர எங்களைக் கட்டுப்படுத்தாது’ என்று அசோக் சிங்கால் சொன்னார். உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங், 'நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். ராமஜென்ம பூமி பிரச்னை நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டது’ என்றார். வினாய் கட்டியார் இன்னும் ஒருபடி மேலே போனார். 'பலம்தான் எனக்குத் தெரிந்த சட்டம். பலம் மேலோங்கும்போது சட்டம் அமைதியாகிவிடும்’ என்று அறைகூவல் விடுத்தார்.
இதுதான் பி.ஜே.பி-யை வளர்த்தது. 1989-ல் 85 எம்.பி-களை வைத்திருந்த பி.ஜே.பி. 1991 நாடாளுமன்றத் தேர்தலில் 119 இடங்களை கைப்பற்றியது. 89 தேர்தலில் ஜனதா தளத்து டன் கூட்டணி. ஆனால் 91 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இந்த வெற்றி உ.பி-யில் மொத்தமுள்ள 85 இடங்களில் 51 இடங்களை பி.ஜே.பி. பிடித்தது. 96 தேர்தலில் 161 எம்.பி-களை வென்றார்கள். கூட்டணி கட்சிகளோடு சேர்த்தால் 201. பெரும்பான்மையை நிரூபிக்கும் பலம் இல்லை என்பதால் ஆட்சி தொடரவில்லை. 98 தேர்தலில் 182 இடங்களை பி.ஜே.பி. பிடித்தது. ஆட்சி அமைத்தது. 99-ல் கவிழ்ந்தாலும் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிதான். 2004 வரை பி.ஜே.பி. கட்சி தொடர்ந்தது.
சுத்தமானவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் ஆட்சியும் அசுத்தமாகவே இருந்தது

- Vikatan

No comments:

Post a Comment