Thursday, March 24, 2016

உணவின்றி அமையாது உலகு - 3

- vikatan

உணவின்றி அமையாது உலகு - 3

நாம் உட்கொள்ளும் உணவு, செரிமானம் ஆகி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உண்பதற்கு முன்பு, வெறும் பொருளாகக் காட்சிஅளித்த உணவு, உட்கொண்டதும் நம் உடலின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறுகிறது. இவ்வளவு முக்கியமான உணவுக்கு, நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

உணவை அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு அணுகி இருந்தோமானால், ரசாயனக் கலப்படம் வரை வந்திருக்க மாட்டோம். இன்னொருவர் சாப்பிடும் உணவின் மீதான அலட்சியம் மற்றும் லாபவெறிக்காக, நஞ்சுகளைக் கலக்கும் அளவுக்குக் கலப்படம் பெருகியிருக்காது.

உணவுக் கலப்படம் என்பது ஏதோ இப்போது திடீரென உருவான விஷயம் இல்லை. உணவுப் பொருட்களை விற்கும் பழக்கம் தொடங்கிய காலத்திலேயே, கலப்படமும் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் காலத்து கலப்படத்துக்கும் நவீன காலத்துக் கலப்படத்துக்கும் மிக முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது.

விலை உயர்ந்த உணவுப்பொருளோடு, விலை குறைந்த உணவுப் பொருளைக் கலப்படம் செய்வார்கள். தேயிலைப் பொடியில் புளியங்கொட்டையை அரைத்துக்  கலப்பது போன்றவைதான் அந்தக் காலத்துக் கலப்படங்கள்.

ஆனால், இப்போது கலப்படம் என்பது பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. விற்கும் உணவுப் பொருளோடு எதை வேண்டுமானாலும் கலந்துவிடலாம். கலக்கப்படும் பொருள் உணவுப் பொருளாக இருக்க வேண்டும் என்பதுகூட அவசியம் இல்லை; அதைச் சாப்பிடும் மனிதர்களின் உடல்நலம் பற்றியும் கவலை இல்லை; கலப்படத்தின் நோக்கம்,  வியாபாரமும் அதீத லாபமும் மட்டும்தான்.

உலகின் எல்லா தொழில்களிலும் அறம் குறைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், உணவுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் அறம் குறைந்துவிட்டால், என்ன நடக்கும்? மனிதர்கள் அனைவரும் நோயாளிகளாக மாற்றப்படுவார்கள். இப்போது அது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இதழில், தலைக்குத் தேய்ப்பதில் இருந்து சமையலில் பயன்படுத்துவது வரை நாம் பயன்படுத்தும் மிக முக்கியமான பொருளான தேங்காய் எண்ணெயில் செய்யப்படும் கலப்படத்தைப் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெயைக் குளிர்ச்சிக்காகத் தலைக்குப் பயன்படுத்துகிறோம். இதன் மருத்துவக் குணங்களுக்காக சமையலில் பயன்படுத்துகிறோம். இந்தத் தேங்காய் எண்ணெய் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

‘இதென்ன வேடிக்கையான கேள்வியாக இருக்கிறது? தேங்காயில் இருந்துதான் தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறார்கள்’ என்று நீங்கள் பதில் சொன்னால், உங்களுக்கு இன்னொரு கேள்வி. அப்படி என்றால், தேங்காய் விலை கூடும்போது எல்லாம் தேங்காய் எண்ணெய் விலையும்கூட வேண்டுமே. அப்படிக் கூடுகிறதா? இல்லை. அதற்குப் பதிலாக பெட்ரோலியப் பொருட்களின் விலை கூடும்போது, தேங்காய் எண்ணெயின் விலையும் கூடுகிறது.

பெட்ரோலுக்கும் தேங்காய் எண்ணெய்க்கும் என்ன தொடர்பு? வைத்தியர் மோகனன் ஆய்வுகள் தேங்காய் எண்ணெய் பற்றிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன. பூமியில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயில் இருந்து வெள்ளை பெட்ரோல், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்ட பிறகு, எஞ்சும் கழிவுதான் லிக்யூட் பாரஃபின் (Liquid paraffin) . இது கலங்கலான எண்ணெய் போன்ற திரவம். இதை, ‘மினரல் ஆயில்’ என்றும், ‘அமெரிக்க மண்ணெண்ணெய்’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்தத் திரவத்தை பிளீச்சிங் கெமிக்கல் கொண்டு நிறமற்றதாக மாற்றுகிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்தால், ஏதோ ஒரு எண்ணெய் மாதிரி நமக்குத் தெரியும். அதனுடன், தேங்காய் எண்ணெயின் செயற்கை மணம் (ஃப்ளேவர் எசென்ஸ்) கலந்தால், தேங்காய் எண்ணெய் ரெடி. அந்தக் காலத்து கொழும்புத் தேங்காய் எண்ணெய் போல மணமும் தூய்மையும் நம்மை ஈர்ப்பதாக இருக்கும். இது செயற்கை எண்ணெய் என்பதும், ரசாயனத்தால் உருவாக்கப்பட்டது என்பதும், இதற்கும் தேங்காய்க்கும் தொடர்பு இல்லை என்பதும் நமக்குத் தெரியாது. டப்பாவில் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான எண்ணெய்களில் இந்த லிக்யுட் பாரஃபின் கலப்பு இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள்... குளிர்ச்சிக்காகத் தலையில் தேய்க்கும் தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக, மண்ணெண்ணெயைத் தேய்த்தால் உடல் என்ன ஆகும்? அதைப் பயன்படுத்தி சமையல் செய்தால், குடல் என்ன ஆகும்?

முன்பு தேங்காய் எண்ணெயில் வடை சுட்டு, அது மிச்சமாகிப் போனால் என்ன ஆகும் நினைவிருக்கிறதா? ஊசிப்போகும். அதாவது, வடைக்குள்ளிருந்து நூல் நூலாக பூஞ்சை பிடித்துப்போகும். இப்போது, அப்படிப் பார்க்க முடிகிறதா? உயிர்ச்சத்துள்ள எண்ணெயில் இருந்துதான், இப்படிப் பூஞ்சை வளரும்.இந்த செயற்கை எண்ணெயில் இருந்து வளராது. குளிர் காலங்களில் தூய தேங்காய் எண்ணெய் உறைந்துபோகும். இந்த ரசாயன எண்ணெய் உறைந்துபோவது இல்லை. இவற்றை மட்டும் அளவுகோல்களாக வைத்து ரசாயன எண்ணெய்களைக் கண்டுபிடித்துவிட முடியாது.

பல கம்பெனிகள் தங்கள் தயாரிப்புகளிலேயே மினரல் ஆயில் சேர்க்கப்பட்டிருப்பதை லேபிளில் தெரிவிக்கிறார்கள். இன்னும், பல கம்பெனிகள் தூய எண்ணெய் மட்டுமே இருப்பதாகச் சத்தியம் செய்கிறார்கள். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான எண்ணெய்களை ஆய்வு செய்த வைத்தியர் மோகனன், தர நிர்ணய ஆய்வுக்கூடங்கள் மூலம் ரசாயனக் கலப்பை உறுதி செய்திருக்கிறார்.

இது தேங்காய் எண்ணெயோடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. செயற்கை மணம் எந்தப் பொருளுக்கு எல்லாம் கிடைக்குமோ, அத்தனை பொருட்களும் ரசாயனத்தன்மையோடு தயாரிக்கப்படுகின்றன. நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில், நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள், பெட்ரோலிய ரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. எல்லா எண்ணெய்களும் எப்படித் தயாராகின்றன என்று தொடர்ந்து பார்க்கலாம்.

- பயணம் தொடரும்.

எண்ணெய் அறிந்தால்

பொதுவாக, உணவில் எண்ணெய் பயன்படுத்துவது எந்த அளவுக்கு நல்லது? ‘உணவுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயைச் செரிக்கும்திறன் நம் தோலுக்கு மட்டுமே உண்டு’ என்கிறது, இயற்கை மருத்துவம். அதனால்தான் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற மரபுவழி மருத்துவங்களில் எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து, சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தன. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், வாரம் தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்ததும் இதனால்தான். உடல் செரிக்க வேண்டிய எண்ணெயை, குடலுக்குக் கொடுத்தோமானால் என்ன ஆகும்? செரிமானத்தில் எஞ்சும் கழிவுகளில், பிசுபிசுப்பான அமிலத்தன்மையுள்ள கழிவுகள் உடலில் சேர்வதற்குக் காரணமாக அமையும். எனவே, முடிந்த அளவு எண்ணெயின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது.

நேரடியாக எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களை, எண்ணெய்ப் பயன்பாடு இல்லாமலேயே பெறுவதற்காக, நம் முன்னோர்கள் ஒரு டெக்னிக் வைத்திருந்தார்கள். எண்ணெய்த்தன்மை உள்ள உணவுப் பொருட்களை நேரடியாகச் சாப்பிடுவதுதான் அந்த முறை. உதாரணமாக, தேங்காய் எண்ணெயின் பலன்களைப் பெறுவதற்காக, தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது. இப்படிச் சாப்பிடும்போது, உணவுப் பொருட்களில் இருக்கும் எண்ணெய்த்தன்மையை உடலே ஜீரணம் மூலம் பெற்றுக் கொள்ளும்.

சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்களைவிட தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்கள் சமையலுக்கு மிகவும் சிறந்தவை. உலகில் பெரும்பாலான நாடுகளில் மரபாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை, அமெரிக்காவின் சோயா எண்ணெய் பிரசாரம் பின்னுக்குத் தள்ளியது. அந்தந்த நாடுகளில் வழக்கத்திலிருந்த எண்ணெய் பயன்பாடு மாறி, உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக ரீஃபைண்ட் ஆயில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது

- vikatan

No comments:

Post a Comment