Wednesday, March 23, 2016

ரோடு டெஸ்ட் மஹிந்திரா KUV100


  - motor vikatan post



பேபி எஸ்யுவி!


ரோடு டெஸ்ட் மஹிந்திரா KUV100தொகுப்பு: ராகுல் சிவகுரு

எஸ்யுவி தயாரிப்பாளர் என மஹிந்திராவை உறுதியாக அழைக்கலாம். ஏனெனில், இந்தியாவின் 40 சதவிகித எஸ்யுவி மார்க்கெட்டைத் தன்வசம் வைத்திருக்கிறது மஹிந்திரா. இப்போது காம்பேக்ட் க்ராஸ்ஓவர் மற்றும் எஸ்யுவி கார்களுக்கு இருக்கும் டிமாண்டை உணர்ந்து, தனது வழக்கமான கோட்பாடுகளில் இருந்து வெளிவந்து, KUV 1OO எனும் பெயரில் ஒரு மாஸ் மார்க்கெட் ஹேட்ச்பேக் காரைக் களமிறக்கியிருக்கிறது மஹிந்திரா. போட்டி கார்களிடம் இருந்து தனித்துத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள KUV 1OO இடவசதி, பெர்ஃபாமென்ஸ், மைலேஜில் எப்படி இருக்கிறது?

டிஸைன்

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 ஆகிய பிரபலமான கார்களை விட நீளத்தில் குறைவாக இருந்தாலும், உயரம் அதிகம். அதனால், முன்பக்கம் பார்த்தால், ஒரு மினி கிராஸ்ஓவர்/எஸ்யுவி போல இருக்கிறது KUV 1OO. ரேஞ்ச்ரோவர் இவோக் காரில் இருப்பதுபோன்ற கிரில்லுடன், கிட்டத்தட்ட ‘ஏ’- பில்லர் வரை நீளும் ஹெட்லைட் இணையும் விதம் அழகு. பின்பக்கக் கதவுக் கைப்பிடிகள் செவர்லே பீட் காரில் இருப்பதுபோல ஜன்னல் அருகே வைக்கப்பட்டிருக்கின்றன. பின்பக்கம் வழக்கமான ஹேட்ச்பேக்போல இருக்கிறது. ஆனால், பின்பக்க பம்பரில் பாடி கிளாடிங் மற்றும் அம்சமான டெயில் லைட்டைக் கொடுத்து, அந்த எண்ணத்தைத் தவிர்க்க மஹிந்திரா முயற்சித்திருக்கிறது. எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட்  டார்ஷன் பார் சஸ்பென்ஷன் அமைப்பு, மோனோகாக் சேஸி, ஃப்ரன்ட் வீல் டிரைவ், குறுக்குவாட்டில் வைக்கப்பட்டுள்ள இன்ஜின் என KUV 1OO மெக்கானிக்கலாக ஹேட்ச்பேக் கார்களைப்போலவே இருக்கிறது.

காரின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ABS மற்றும் EBD அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுவது பாராட்டுதலுக்குரியது. எதிர்பார்த்ததுபோலவே டாப் வேரியன்ட்டான K8-ல் இரு காற்றுப் பைகள் இடம் பெற்றிருப்பதுடன், + பேக்கேஜில் [K2, K4, K6] வேரியன்ட்டுகளில் இரு காற்றுப் பைகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன.

இன்டீரியர் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தியக் குடும்பங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில், டட்ஸன் கோ காரைப்போல ஆறு இருக்கைகளுடன் வந்திருக்கிறது KUV 1OO. சென்டர் கன்ஸோலிலேயே கியர் மற்றும் ஹேண்ட் பிரேக் லீவர்களை வைத்ததால் கிடைத்த ஃப்ளாட் ஃப்ளோர் மற்றும் லெக்ரூமைப் பயன்படுத்தி, முன்பக்க இருக்கைகளுக்கு நடுவே ஒரு சீட்டைச் சேர்த்துவிட்டது மஹிந்திரா. ஆனால் நடுவில் இருக்கும் அந்தச் சீட்டில் ஒரு சிறுவன் அல்லது  சிறுமிதான் உட்காரமுடியும். 
 
டட்ஸன் கோ காருடன் ஒப்பிடும்போது, பக்காவான 6 சீட்டராக மிளிர்கிறது KUV 1OO. ஆனால், பாதுகாப்பற்ற அந்த சீட்டை மடக்கிவிட்டால் வசதியான ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கிறது. பெஞ்ச்போல இருக்கும் மூன்று பேர் உட்காரக்கூடிய இருக்கை, தனித்தனியாக இரண்டு பேர் உட்காரக்கூடிய இருக்கைகளைப்போல சப்போர்ட் அளிக்கவில்லை. ஃப்ளாட் ஃப்ளோர், உயரமான இருக்கைகள் என இந்த காருக்குள் நுழைவது சுலபமாக இருக்கிறது. மேலும் KUV 1OO காரின் கேபின் ஸ்மார்ட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

உள்ளலங்காரம்

நீட்டான சென்டர் கன்ஸோலைக் கொண்டிருக்கும் டேஷ்போர்டின் மேல்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரம் சூப்பராக இருந்தாலும், கீழ்ப்பகுதியின் தரம் சுமார்தான். இந்த டச் ஸ்கிரீன் யுகத்தில், ஆடியோ சிஸ்டத்தில் பழைய மோனோக்ரோம் டிஸ்ப்ளேவை ஏன் மஹிந்திரா சேர்த்தது எனப் புரியவில்லை.

லெக்ரூம், ஹெட்ரூம், சாய்மானம், சென்டர் ஆர்ம் ரெஸ்ட், மூன்று இருக்கைக்கும் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் என சொகுசு மற்றும் இடவசதியில் ஆச்சரியப்படுத்துகிறது KUV. 
243 லிட்டர் பூட் ஸ்பேஸ் போதுமானதாக இல்லை. தவிர, பூட் உயரமாக இருப்பதுடன் பூட்டின் வாய் குறுகலாக இருப்பது வசதியாக இல்லை. அதிக இடம் தேவைப்பட்டால், பின்பக்க இருக்கைகளை மடக்கிக்கொள்ளலாம்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

பெரிய கார்களுக்கு mHawk - mEagle என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்க, தனது சின்ன கார்களுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள mFalcon சீரிஸ் இன்ஜின்களை, முதன்முறையாக KUV 1OO காரில் பொருத்தியுள்ளது மஹிந்திரா. முழுக்க அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள 3 சிலிண்டர், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் ஒரு சிலிண்டருக்கு 4 வால்வுகள் மற்றும் வேரியபிள் வால்வு டைமிங் (இன்டேக் - எக்ஸாஸ்ட்) போன்ற தொழில்நுட்பங்கள் இருந்தாலும், இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் பவர் (81.8bhp@5,500rpm) மற்றும் டார்க் (11.7kgm@3600rpm) போட்டியாளர்களைவிட அதிகமாக இல்லை. ஆனால், இன்ஜினின் செயல்பாடு நிறைவாகவே இருக்கிறது.

அதேபோல், 3 சிலிண்டர் டீசல் இன்ஜினிலும் சிலிண்டருக்குத் தலா 4 வால்வுகள். இது 77bhp சக்தியையும், 19.37kgm டார்க்கையும் அளிக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை எட்டிப் பிடிக்க ஸ்விஃப்ட் டீசல் காருக்கு 13.65 விநாடிகளும், KUV 1OO காருக்கு 14.85 விநாடிகளும் தேவைப்படுகின்றன. உண்மையைச் சொல்வது என்றால், கிராண்ட் i10 காரைவிட KUV 1OO காரின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. 1,500 ஆர்பிஎம்மிலேயே டர்போ சார்ஜர் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவதால், டர்போ லேக் மிகக் குறைவாகவே தெரிகிறது. 1,800 - 3,500 ஆர்பிஎம் வரை பவர் நன்றாக வெளிப்படுகிறது. அதற்கு மேல் பெரிதாக பவர் இல்லை என்பதுடன், இன்ஜினின் அதிகபட்ச வேகமான 4,800 ஆர்பிஎம் வரை செல்வதற்குப் பொறுமை மிக அவசியம். ஏனெனில், இந்த நேரத்தில் இன்ஜின் அதிக சத்தம் போடுவதுடன், வேகத்தில் முன்னேற்றம் இல்லை. டீசல் இன்ஜினில் பவர் - எக்கோ என இரு டிரைவ் மோடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்களுக்குத் தேவையானதை ஸ்டீயரிங் அருகே இருக்கும் பட்டன் மூலமாகத் தீர்மானிக்கலாம். எதிர்பார்த்ததுபோலவே எக்கோ மோடில் பெர்ஃபாமென்ஸ் டல்லாக இருப்பதுடன், அதிகபட்சமாக 3,500 ஆர்பிஎம் வரைதான் இன்ஜின் ரெவ் ஆகிறது.

டீசல் இன்ஜினில் உள்ள எக்கோ மோடில் 0 - 100 கி.மீ வேகத்தை எட்டிப் பிடிக்க, பவர் மோடுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமான நேரம் - அதாவது, 28.88 விநாடிகள் தேவைப்படுகிறது! ஆனால், நெரிசல் மிகுந்த சிட்டி டிராஃபிக்கில் நல்ல மைலேஜுடன் பயணிக்க, இந்த டிரைவ் மோடு உபயோகமானதாக இருக்கிறது.  கிளட்ச்சைப் பயன்படுத்துவது ஸ்மூத்தாக இல்லாவிட்டாலும், கியர்பாக்ஸ் துல்லியமாகச் செயல்படுகிறது. TUV 3OO-ல் இருக்கும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனை ஏன் மஹிந்திரா இதில் சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை. 

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை 

அமெரிக்க நிறுவனமான Cayman Dynamics உதவியுடன் TUV 3OO காரைத் தொடர்ந்து, KUV 1OO காரின் சஸ்பென்ஷனையும் வடிவமைத்துள்ளது மஹிந்திரா. சாலைகளில் உள்ள இடர்பாடுகளை இது எளிதாகச் சமாளித்துவிடுகிறது. காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ என்பதால், பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் அடிபடாமல் கார் தப்பிவிடுகிறது. சஸ்பென்ஷன் சத்தம் காருக்குள்ளே கேட்பது நெருடல். தவிர, சின்ன 14 இன்ச் சக்கரங்களைக்கொண்டிருக்கும் KUV 1OO-ல் பெரிய மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது கவனம் தேவை. சஸ்பென்ஷன் மென்மையாக செட் செய்யப்பட்டுள்ளதால், அதிக வேகத்தில் செல்லும்போது காரின் பின்பக்கம் நிலையாக இல்லாமல் ஆட்டம் போடுகிறது. மேலும், ‘ஏ’ -பில்லர் அருகே Wind Noise தொடர்ச்சியாகக் கேட்கிறது. மென்மையான சஸ்பென்ஷன் மற்றும் காரின் அதிக உயரம் காரணமாக, திருப்பங்களில் காரைச் செலுத்தும்போது பாடி ரோல் ஆகிறது. பிரேக்குகள் இன்னும் கொஞ்சம் திறன்மிக்கவையாக இருந்திருக்கலாம். ஸ்டீயரிங் போதுமான எடையுடன் இருப்பதால், அதன் செயல்பாடு நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், XUV 5OO காரைவிட KUV 1OO காரை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. அதற்காக இதனை ஸ்விஃப்ட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.

மைலேஜ்

அதிக மைலேஜுக்காக இரண்டு இன்ஜின்களிலும் மைக்ரோ ஹைபிரிட் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டத்தைச் சேர்த்துள்ளது மஹிந்திரா. பெட்ரோல் மாடல், நகரத்தில் 11 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 15.5 கி.மீ-யும் மைலேஜ் தந்தது. டீசல் மாடல், நகரத்தில் 13 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 17.3 கி.மீ-யும் மைலேஜ் அளிக்கிறது.

 ஹேட்ச்பேக் காரின் விலையில் (5.2 - 7.90 லட்ச ரூபாய்) 14 வேரியன்ட்டுகளாகக் களமிறங்கியிருக்கிறது KUV 1OO. ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் இது சற்று பின்தங்கிவிட்டதையும் சொல்லியாக வேண்டும். மேலும், ஒட்டுமொத்த பெர்ஃபாமென்ஸில், ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய இன்ஜின்களுடன் போட்டியிடும் அளவுக்கு KUV 1OO காரின் இன்ஜின்கள் இல்லை. ஆறு பேர் உட்காரக்கூடிய வசதி மற்றும் பல்வேறு ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் என காரின் கேபின் அசத்துகிறது. தவிர, நகரத்தில் ஓட்டுவதற்கு எளிதான காராக திகழும் KUV 1OO, இந்த விலைக்குக் கிடைக்கும் மற்ற ஹேட்ச்பேக் கார்களில் இருந்து தனித்துத் தெரிகிறது.

No comments:

Post a Comment