Friday, February 7, 2014

நான் ஏன் பிறந்தேன்? - எம்.ஜி.ஆர்

சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரையிலும் உச்ச வேகத்தில் எம்.ஜி.ஆர் பயணித்துக்கொண்டு இருந்த சமயம், ஆனந்த விகடனில் 'நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுதினார். வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் முதல் அத்தியாயம் எம்.ஜி.ஆரின் கையெழுத்தில் இப்படித் தொடங்கியது...
அல்வா தேசம்!
 'சோத்துக் கட்சி ஆரம்பித்திருக்கிறார் பார்த்திபன். அரசியலைத் தனது ஸ்டைலில் கலாய்க்கப்போகிற இந்தப் படத்துக்காக வைரமுத்து, தேவா இருவருடனும் இணைந்து பார்த்திபன் கிண்டிய ஸ்பெஷல் அல்வா இங்கே...
தேர்தலு வந்துபுட்டா
தேடி வரும் அல்வா
வாக்காளர் அனைவருக்கும்
வாக்குறுதி அல்வா
ஆட்சிக்கு வந்துபுட்டா
அஞ்சு வருஷம் அல்வா
ஆக மொத்தம்
ஆல் இண்டியா அல்வா
பெத்த புள்ள சத்தம் போட்டா
வாயில் ரப்பர் முதல் அல்வா
வாழ்க்கை முடிஞ்சு போகும்போது
வாய்க்கரிசி லாஸ்ட் அல்வா
பேரழகி நீதான்னு
காதலிக்கு நீ குடுப்பே அல்வா
உன்னைவிட ஆள் கிடைச்சா
உனக்கு அவ குடுப்பா அல்வா
பசிக்காத புள்ளையார்க்கு
படைப்பாங்க பால் அல்வா
பசியில் அழும் புள்ளைக்கு
பால் குடுக்காத நாடல்லவா
ஏழையில் சிரிப்பினிலே
இறைவனைக் காட்டுறாங்க அல்வா
இறைவனுக்கும் பதவி வந்தா
அவனும் குடுப்பான்டா அல்வா
இங்க சக்கரைநோய்தான் அதிகமடா    - காரணம்
அல்வா குடுக்கிற தேசமடா!


'நான் ஏன் பிறந்தேன்’... எம்.ஜி.ஆரால் விகடன் இதழில் எழுதப்பட்டு  பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர்.  அந்தத் தொடரில் இருந்து  சில பகுதிகள் இங்கே...


''அண்ணாவை கடவுள் என்று சொல்வது தவறா?''
''என் உள்ளத்தில் அண்ணாவையும் அவர்தம் செயலினையும் எண்ணிப் பார்க்குந்தோறும், அவர் மனிதத் தன்மைக்கும் மீறிக் கடவுள் தன்மையோடு வாழ்ந்தார் என்பதை நான் துணிந்து கூற இயலும்!
நான் சுடப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் தேறிக்கொண்டு இருந்த நேரத்தில், அமைச்சரவை அமைத்துக்கொண்டு இருந்தார் பேரறிஞர் அண்ணா.
ஒருநாள் நாவலரின் அன்பு இளவல் திரு. இரா.செழியன் அவர்கள் என்னை மருத்துவமனையில் காண வந்தார். என் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு, தன்னிடம் இருந்த ஒரு காகிதக் குறிப்பை எடுத்து என்னிடம் காண்பித்தார். 'இந்தக் குறிப்பில் அமைச்சர்களின் பெயர்களும், அவர்களுக்குத் தரப்படவிருக்கும் இலாகாக்களின் பெயர்களும் இருக்கின்றன!’ என்று சொன்னார்.
நான், 'இதை என்னிடம் ஏன் காண்பிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
'அண்ணா அவர்கள் உங்களிடம் இதைக் காண் பிக்கச் சொன்னார்!’ என்றார் அவர். நான் கனவில் கூடக் கற்பனை செய்ய முடியாத ஒன்று.
நான் யார்? அண்ணா அவர்கள் யார்?
கழகத்துக்காக நேரடியாக நான் செய்த தியாகம் என்ன? அண்ணா அவர்கள் செய்த தியாகம் என்ன? என்னுடைய அறிவு, ஆற்றல், செல்வாக்கு இவை எந்த அளவுடையவை! அண்ணா அவர்களின் அறிவு, ஆற்றல், செல்வாக்கு இவை எந்த அளவுடையவை!
அப்பப்பா! மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா?
சாதாரணத் தொண்டரிடத்திலும் அண்ணா காட்டும் மரியாதையை எண்ணிப் பார்க்கும்போது, பேரன்புகொண்ட அவருடைய பெரிய மனத்தை - உள்ளத்தை - எப்படிப்பட்ட வார்த்தைகளால் விளக்குவது, போற்றுவது என்று புரியவில்லை.
அந்தப் பட்டியலைப் படித்தேன். அதில் ஒருவருடைய பெயர் அமைச்சராகக் குறிப்பிடப்பட்டு இருந்ததைப் பார்த்ததும் திரு. இரா.செழியன் அவர்களிடம் ஆத்திரத்தோடு சொன்னேன். பேசவே முடியாது இருந்த அந்த நேரத்தில், 'கத்தினேன்’ என்றுகூடச் சொல்லலாம்.
''சமீப காலம் வரையில், தி.மு.கழகத்துக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் எதிரான கருத்துக்களைப்பரப்பிக் கொண்டு இருந்தவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவியா? இத்தனை நாட்களாகக் கழகத் துக்கு உழைத்த எத்தனையோ பேர், அனுபவம், கல்வி அறிவு பெற்றவர்கள் இருக்க, கழகத் தொண்டர்களின் உள்ளத்தில் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டு இருந்த ஒருவருக்குப் போய் அமைச்சர் பதவி கொடுப்பதா? இது என்ன நியாயம்?'' என்று பதறினேன்.
திரு.இரா.செழியன் என்னை அமைதிப்படுத்திவிட்டு, ''இவருக்கும் வேண்டாம் என்றால், இவருக்கு ஒதுக்கியுள்ள இந்தத் தொழில் இலாகாவை வேறு யாருக்குக் கொடுப்பது?'' என்றார்.
''லஞ்சம் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ள இலாகா என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எனவே, இதை வேறு யாரிடமும் இப்போது கொடுப்பது கூடாது. நாவலருக்கே இந்த இலாகாவையும் சேர்த்துக் கொடுக்கலாம்!'' என்று சொன்னேன்.
திரு. இரா.செழியன் அவர்கள் குழம்பிய நிலையில் சொன்னார், ''எனது தமையனாருக்கு இந்த இலாகாவை நீங்கள் கொடுக்கச் சொன்னீர்கள் என்று நானே எப்படிச் சொல்வது? நான் உங்களிடம் சொல்லி, உங்கள் வாயிலாக இந்தக் கருத்தைச் சொல்லவைத்துவிட்டேன் என்று எண்ணினால்? இப்படிப்பட்ட சந்தேகம் என் மீது ஏற்பட்டு விட்டால்? இத்தனை நாட்கள் நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு உருவாக்கிய நல்லெண்ணத்தை, நானே அண்ணாவிடம் இழந்து விடுவேனே; இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு யாருக்காவது சொல்லுங்கள்'' என்றார்.
நான் துணிவோடு பதில் சொன்னேன், ''பல ஆண்டுகளாக நான் பார்த்திருக்கிறேன், நீங்கள் அண்ணாவுடைய நிழலாக இருப்பதை. அண்ணா ஒரு போதும் உங்களைப்பற்றித் தவறாக நினைக்க மாட்டார். நம்மை எல்லாம் சரிவர எடை போட்டு வைத்திருக்கிறார்.தைரிய மாக என் கருத்தைச் சொல்லுங் கள்!'' என்று சொன்னேன்.
ஆனால் அவரோ, உண்மையில் குழம்பிய மனத்தோடுதான் சென்றார்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு மருத்துவர் வந்து, என்னைப்பற்றி அப்போதைய அவரது கருத்தினைச் சொல்லிவிட்டுப் போனதும், எங்களில் யாருக்கும் என் நிலையைப்பற்றி உற்சாகம் இல்லாது போய்விட்டது.
இந்தக் கவலையில் இருந்த என்னைப் பார்ப்பதற்கு திரு.இரா.செழியன் மீண்டும் வந்தார். அமைச்சர்களின் பெயர்ப் பட்டியலையும் கொண்டுவந்திருந்தார்.
என்னிடம் அதைக் காண்பித் தார். இப்படியும் நடக்குமா? என் வார்த்தைக்குக்கூட இவ்வளவு மதிப்பா?
ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், நான் யாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்று கருதினேனோ, அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று கூறும் புதுப் பட்டியல்தான் அது. நாவலர் அவர்களுக்கே தொழில் இலாகாவும் தரப்பட்டு இருந்தது. ஆனால், அந்த நண்பருக்கு அமைச்சர் பதவி இல்லை; வேறு ஒரு பதவி குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்குச் சில காரணங்களை யும் அண்ணா அவர்கள் சொன் னதாக திரு.இரா.செழியன் சொன்னார்.
அதற்கு மேல் நான் ஏதும் பேசவில்லை. ''அண்ணாவுக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதை அவர் செய்யலாம். நானும் மனதார ஏற்றுக்கொள்வேன்!'' என்று சொன்னேன்.
மாபெரும் தலைவரும் மேதையுமான அண்ணா அவர்கள், தம்முடைய கருத்துக்கு நான் மாறுபட்டுச் சொன்னேன் என்று என் மேல் வெறுப்புற்றுப் பழி வாங்கா தது மட்டுமல்ல; அலட்சியப் படுத்தாமல், ஒரு சாமானியத் தோழனின் கருத்துக்கு மரியாதை அளித்த விந்தையை என்ன என்று சொல்வது?
அவரை, அந்த மாபெரும் அன்புள்ளம்கொண்ட மேதையை நான் கடவுள் என்று சொல்வது தவறா?

மக்கள் புரிந்துகொள்கின்றனர்!
ந்தக் காலத்தில் தி.மு. கழகத்தின் பிரசாரப் பொதுக் கூட்டங்கள், நாடகங்கள், பாட்டுக் கச்சேரிகள் போன்றவை, அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் நண்பர்களால் பெரிய அளவுக்குத் தடை செய்யப்பட்டன.
சட்டம் போட்டுத் தடை செய்யவில்லை. பேசுவதற்கு நல்ல இடங்களைத் தருவது இல்லை. இத்தனை மணிக்குள் கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று திடீர்க் கட்டளைகள் வரும் அதிகாரிகளிடம் இருந்து!
கூட்டத்தில் பேசுகிற பேச்சாளர்கள் பேசி விட்டுத் திரும்பிப் போகும்போது வெட்டப்பட்டுக் கொலை செய்யப்படுவார்கள், அல்லது கை கால்கள் முடமாக்கப்படும்.
இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரசாரகர்களின் உயிருக்கோ அல்லது மக்களைச் சந்திப்பதற்கோ தடை ஏற்படுத்தும் வன்முறைச் செயல்கள், தாராளமாக நடைபெற்றன. எப்படியோ நாங்கள் மக்களைச் சந்திக்க முடியாமல் செய்துவிட முடிவு.
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இன்று தமிழகத்தில் மீண்டும் காணுகிறோம். அன்று எந்த தி.மு.க-வினர் அடிபட்டார்களோ, அவர்களே இப்போது பிறரை அடிக்கிறார்கள், வெட்டுகிறார் கள். யாரை? தங்களோடு இருந்து அன்று அடி வாங்கித் தி.மு.கழகத்தைக் காப்பாற்றி யார் வளர்த்தார்களோ... அதே உடன்பிறப்புக்களைத்தான் தாக்குகிறார்கள்.
இன்று ஆட்சியில் இருக்கும் தி.மு. கழகத்தை அமரர் அண்ணாவின் கழகமாகக்கொண்டு, தங்களது உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்து, தமது கண்ணீரையும் செந்நீரையும் எருவாக்கி, தங்களே அழித்துத் தி.மு.கழகத்தை வளர்த்து, இன்றைய ஆட்சியாளர்கள் அங்கு இருப்பதற்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யாரோ, அந்தத் தியாகிகளையே இன்று அரசோச்சும் தி.மு.க-வினரும் (மீதம் இருக்கும் ஒரு சிலரும்) தங்களது அரசின், அதிகாரிகளின் உதவி பெற்றுத் தாக்குகிறார்கள்.
இப்படி நடப்பதுதான் 'அரசியல்’ என்று சொல்லுவார்களேயானால், வருத்தத்தோடு எழுதுகிறேன்... அரசியல் என்ற பெயரையே அகராதியில் இருந்து மாற்றுவதற்கு நல்லறிவாளர்கள் முயன்றாக வேண்டும்!
இன்றைய ஆளும் கட்சியினர் சமூக இயலையும், பொருளாதார இயலையும், அரசு இயலையும், இயல் - இசை - நாடகம் என்ற முத்தமிழில் உள்ள அந்த இயலுக்குத் தரப்படும் கருத்தில் உரை நடை என்று கருதி, அதில் தங்கள் திறமையைக் காட்டுவதில்தான் முக்கியக் கவனத்தை வைத்திருக்கிறார்கள்.
தன்மை, தகுதி, ஒழுக்கம் என்ற பொருள்கள் போய், 'பேச்சு’ என்ற பொருளுக்கு இலக்காக, அந்த 'இயல்’ தனது 'இயல்’ மாறிவிட்ட அவல நிலைமை!
மக்களாட்சித் தத்துவத்தில், மக்கள் தமது கண்டனத்தை வெளியிட எத்தனையோ வழிமுறைகள் வரையறுத்துக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்று... கறுப்புக் கொடி காட்டுவது!
அமரர் நேரு அவர்கள் சென்னைக்கு வந்தபோது, தமிழக மக்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட, அமரர் அண்ணா அவர்கள் அந்த முறையைத் தமது தம்பிகளுக்கு நினைவுபடுத்தி அற வழியில் செயல்பட உத்தரவிட்டார். அன்றைய அண்ணாவின் தி.மு. கழகம் நடந்திற்று அறவழியில் அமைதியாக!
ஆனால், காங்கிரஸ் கட்சியினரும் அன்றைய அதிகாரிகளும் சேர்ந்து தி.மு.கவினரைத் தாக்கினார்கள். வீட்டுக்குள் இருந்த திரு.கே.ஆர்.இராமசாமி, திரு.எஸ்.எஸ்.இராஜேந்திரன், திரு. டி.வி. நாராயணசாமி அவர்களையும், என்னையும் எச்சரிக்கையாகக் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். ஆயிரம் ஆயிரம் பேர்களாகக் கைது செய்தனர்.
அன்று ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட அனுமதிக்கப்பட்டனர். அண்மையில் ஓரிரண்டு இடங்களில் எனக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவெடுத்தனர். இன்றைய ஆளும் கட்சியினரான மாண்புமிகு கருணாநிதிக் கட்சியினர். அவர்கள் அந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு, போலீஸாரே சிறந்த பாதுகாப்புக் கொடுத்திருந்தனர்.
கறுப்புக் கொடி காட்டுகின்ற திரு.கருணாநிதியின் கட்சியினருக்கென நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களைச் சுற்றிப் பலத்த போலீஸ் படையினரைத் தக்க ஆயுதங்களோடு நிறுத்தியிருந்தனர். அந்த போலீஸார் கறுப்புக் கொடி காட்டும் நண்பர்களைக் காத்து நின்றார்கள்.
ஆனால், அண்ணா தி.மு.க-வினர் தமிழகத்தின் இன்றைய அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட முயலும்போது, குறிப்பிட்டவர்களை முன்னதாகவே கைது செய்கின்றனர். தொண்டர்களை அடிக்கின்றனர். அண்ணா தி.மு. கழகத் தினர் மீது பயங்கரமான தாக்குதலை நடத்துகின்றனர்.
இதுவும் ஜனநாயகம்தான் என்று இவர்கள் பேசுகின்றனர். அமரர் அண்ணா அவர்கள் கட்டிக் காத்த ஜனநாயகப் பண்புக்கும், திரு.கருணாநிதியின் கட்சியினர் நடத்தும் ஜனநாயகத்துக்கும் எத்தனை வேறுபாடு, மாறுபாடு என்பதை மக்களும் நேரிடையாகப் புரிந்துகொள்ளுகின்றனர்!


1957
-ம் ஆண்டின்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கழகத்துக்கு என்று உதவி செய்ய, பிரபல பத்திரிகைகளோ, புகழ் பெற்ற பெரியவர்களோ இல்லை. கழகத்தின் கையில் பணமும் இல்லை. பதவிகளும் கிடையா. வியாபாரிகளோ, மில் உரிமையாளர்கள், மிராசுதாரர்கள், மடாதிபதிகள் போன்றவர்களோ, கான்ட்ராக்டர் போன்றவர்களோ பணம் கொடுக்கத் தயாராக இல்லை.
 எனவே, ஆடம்பரமாகச் செலவு செய்யப் பணமும் இல்லை. கழகத்தின் கொள்கையை விளம்பரப்படுத்த நாளேடுகள் போன்றவற்றின் உதவியும் இல்லை. அப்படிப்பட்ட நெருக்கடி நிலையில், இன்றைய தமிழக அமைச்சர்களில் ஒருவரான மாண்புமிகு திரு. ப.உ.சண்முகம் அவர்கள், தனது தொகுதியில் தேர்தலுக்கு நின்றார். அண்ணாவின் தம்பிக்குரிய நல்ல தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று, கழகக் கோட்பாடுகளில் மிகமிக நெருக்க உணர்வுகொண்டு இருந்தார். இந்த நண்பர் எப்படியும் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் அமர வேண்டும் என்று பெரிதும் ஆசைகொண்டேன். நான் அன்று அவருக்குப் பணம் கொடுக்கும் வசதியில் இருக்க வில்லை. அவருக்காக வாக்குகள் கேட்டு மக்களை ஈர்க்க முயலும் ஒரே ஒரு சக்திதான், அந்தத் தொண்டைச் செய்யும் வசதி மட்டும்தான் என்னிடம் இருந்தது. அவர்களுக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற பேராவலில் அவரிடம் நானே வலியச் சென்று கேட்டேன். அவர் எப்போதும் போல் சிரித்தவாறே சொன்னார், ''இந்தத் தேர்தல் நமது கழகத்துக்கு முதல் தேர்தல் அனுபவமாகும்! இதில் நாம் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நமது கழகத்துக்கு என்று தனிச் சின்னமே தரப்படவில்லை. அந்தத் தகுதி இப்போது நமக்கு இல்லை.
முதலில் அந்தத் தகுதியை நாம் இந்தத் தேர்தலில் பெற்றாக வேண்டும். எனது தொகுதியில் சிக்கல்கள், இடைஞ்சல்கள் அதிகம்தான். எனினும், நான் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுவேன். வெற்றி பெறப் பெரிதும் போராடினாலும் வெற்றி கிட்டாது போலும் என்றிருக்கும் தொகுதிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தொகுதிகளுக்கு நீங்கள் சென்று பிரசாரம் செய்வீர்களானால், அந்த நண்பர்களுக்கும் கழகத்துக்கும் நல்லதோர் உதவி செய்தவர்கள் ஆவீர்கள்!'' என்று சொன்னார். அவருடைய பேச்சு எந்த அளவுக்குப் பக்குவம் நிறைந்து இருந்ததோ அந்த அளவுக்குக் கண்டிப்பாக இருந்தது.
தேர்தல் முடிந்தது. கழகத் தோழர்கள் பலர் நல்ல பண்பு இருந்தும் மக்களுக்கு உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருந்தும் தோற்றுவிட்டார்கள். தப்பியவர்களில் திரு. ப.உ.ச. அவர்களும் ஒருவர் என்ற சேதி கிடைத்தது. ஏனோ, மகிழ்ந்தேன். இந்த 15 பேர்களாவது வெற்றி பெற்றார்களே என்பதுதான்!
அடுத்த தேர்தலும் வந்தது. மதிப்புக்குரிய காமராசர் அவர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள், '1962-ம் ஆண்டு தேர்தலின் முடிவில் இந்த 15 பேர்களும் தோற்றுவிட்டார்கள் என்ற சேதி வெளியிடப்படும்!’ என்று.
அவருடைய வழக்கம்போல் மக்களைச் சந்தித்தும் தேர்தலில் வெற்றி பெற அவர் செய்ய வேண்டிய தொண்டுகள் அனைத்தையும் புயல்போல் நிறை வேற்றினார். தமிழகத்தின் இன்றைய முதல்வர் கலைஞர் ஒருவரைத் தவிர, மற்ற 14 பேரும் தோற்றுப் போனார்கள்.
தோல்வியிலும் வெற்றியைக் காணும் அமரர் அண்ணாவின் கொள்கை, இதிலும் தோல்வியில் வெற்றியே கண்டது. 14 பேர்களைத் தோற்கடித்தார்கள். ஆனால், அதே சட்டமன்றத்தில் முன்பிருந்த 15 பேர்களுக்குப் பதிலாக 50 பேர்கள் கழகப் பிரதி நிதிகளாக அமர்ந்தார்கள்.
அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்த திரு. ப.உ.ச. அவர்கள் சென்னைக்கு வந்தபோது நாங்கள் சந்தித் தோம். அவரைப் பார்ப்பதற்கே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தோளில் பலமாகத் தட்டிய வாறு என்னை இழுத்து அணைத்துக்கொண்டு, அதே சிரிப்போடு உரத்த குரலில் கலகலவென்று வலுவோடு வார்த்தைகள் வெளியே வரும்படி பேசினார்... ''விஷயம் தெரியுமா? நான் தோத்துட்டேன். என்னை எதிர்த்தவர் நல்ல புத்திசாலி. மக்கள்கிட்ட எதெச் சொல்லி, எப்படி நெருங்கினா, ஓட்டு வாங்கலாங்கிறதெ, என்னைக் காட்டிலும் நல்லாத் தெரிஞ்சுவெச்சிருக்கார். அந்தத் தந்திரத்தை சரியாப் பயன்படுத்தி, அருமையா என்னைத் தோற்கடிச்சுட்டார்'' என்றார். நான் அவரையே பார்த்தேன். அது மட்டுமல்ல... 'திருவண்ணாமலையில் ஒரு பொதுக் கூட்டம் போடப் போகிறேன். அதில் வந்து பேச வேண்டும்’ என்றார்.
நான் விரக்தி மன நிலையில் கேட்டேன், ''எதுக்காகக் கூட்டம்? தோற்கடித்தார்களே அந்த மக்களுக்கு நன்றி சொல்லவா?'' என்று.
''தோற்றது உண்மைதான். ஆனால், ஜாமீன் பணத்தைத் திரும்பப் பெறும் அளவுக்கு ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்களே, அந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா?'' - இது சிரிப்போடும், தன்னம்பிக்கையோடும், ஏமாற்றமற்ற வகையிலும் உளமார என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி.
அது மட்டுமல்ல, மேலும் தொடர்ந்தார்... ''ஒரு சில வாக்குகள் குறைந்ததால்தானே தோற்றேன். அந்த வாக்குகளும் கிடைத்திருக்குமானால், இப்போது எனக்கு அளித்திருக்கும் வாக்காளர்களையும் சேர்த்துப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறியிருப்போம் அல்லவா? அப்போது நாம் காட்டும் நன்றியை இப்போதும் காட்டுவதற்கு நமக்கும் கடமை இருக்கிறது. அதைப் பெற அவர்களுக்கும் உரிமை இருக்கிறது!'' இதையும் அவருக்கே உரித்தான சிரிப்போடுதான் சொன்னார்!
அண்ணாவின் பெருந்தன்மை!
''என் கால் முறிந்து நான் நடக்க முடியாதிருந்தபோது திரு. அ.பொ அரசு அவர்களும் மற்ற நண்பர்களும் 'கழக மாநாட்டில் நான் கலந்துகொள்வேன்’ என்று விளம்பரம் செய்துவிட்டார்கள். ஆனால், மருத்துவரோ, 'கூட்டத்தின் நெரிசலில் சிக்கிவிட்டால் காலுக்கு ஊனம் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் அது மிகப் பெரிய விபத்தாகிவிடும்!’ என்று சொல்லி, 'கூடாது’ என்று தடுத்துவிட்டார். நானும் நடந்து பழகுவதற்காக என் அண்ணனுடன் தோட்டத்துக்குச் சென்றுவிட்டேன்.
ஆனால், நாவலர் திரு.நெடுஞ்செழியன் அவர்களும் மற்றும் கழகத் தலைவர்களும் அங்கு வந்து, 'நீங்கள் வராவிட்டால் மக்கள், கழகத்தைக் குறை சொல்லிப் பேசுவார்கள். நடிகரின் பெயரை வெளியிட்டு, ஏமாற்றிவிட்டார்கள் என்று. எனவே, நீங்கள் வந்து தலையைக் காட்டிவிட்டுத் திரும்பிவிடுங்கள் என்று அண்ணா சொல்லி அனுப்பினார்’ என்று கூறியதற்கு இணங்க, அந்த மாநாட்டுக்குச் சென்றேன். நான் சென்றபோது யாரோ பேசிக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது. 'பேச்சு முடியட்டும்... மேடைக்கு வருகிறேன்’ என்றேன். 'பெரிய தலைவர்கள் யாரும் பேசவில்லை; வாருங்கள்’ என்று கூறி, மேடைக்கு அழைத்துப் போய்விட்டார்கள்.
மேடைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. முன்னால் போடப் பட்டு இருந்த தனி மேடையில் அண்ணா அவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார் என்பது. எல்லோருமே மிக்க வேதனைப்பட்டோம்.
சிறு குழப்பம். அண்ணா அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்சங்கூட வெறுப்போ, கலவரமோ அடையாமல், திரும்பி வந்து என்னை விசாரித்தது மட்டுமின்றி, மேடையில் இருந்த 'மைக்’கில் என்னைப் பேசச் செய்தார்கள். நான் பேசி முடித்ததும், உடனே என்னைப் பத்திரமாக பாதுகாப்போடு அனுப்பி வைத்தார்கள்.
சிறிதுகூடச் சலித்துக்கொள்ளா மல், என் மீது குற்றம் காணாமல், தான் எத்தனையோ லட்சக் கணக்கான தம்பிமார்களுக்குத் தனிப் பெருந்தலைவராக இருக்க, சாதாரணமான யாரோ ஒருவன் வந்து, கூட்டத்தினர் தன் பேச்சைக் கேட்க முடியாமல் செய்து (சிறு குழப்பமாயிருப்பினும்), தனது பேச்சை இடையில் நிறுத்துமாறு செய்துவிட்டானே என்று எண்ணாமல், தாய்ப் பாசத்தோடும் பரிவோடும் வரவேற்று அன்பு செலுத்திய அண்ணா அவர்களின் அந்தப் பெருந்தன்மையை நினைத்து நினைத்துப் போற்றி வருகிறேன்!''
மலைக்கும் மடுவுக்கும்!
''நான் முதன்முதல் எம்.எல்.சி. பதவி ஏற்று உறுதி எடுத்துக் கொண்டு, எனது அன்பு நண்பரான திரு.திரவியம் அவர்களைச் சந்திக்க அவருடைய அறைக்குச் சென்றேன். அவர் எடுத்த எடுப்பிலேயே எனக்கு விளக்கமாகச் சொன்னார். அவர் சொன்னதாவது:
'நீங்கள் தலைவர் காமராசர் அவர்களை நம்பலாம். மனதில் வைத்துக்கொண்டு பழி வாங்கும் குணத்தினரல்ல. ஆனால், இன்னொருவர் இருக்கிறார். அவரிடம் மிகவும் எச்சரிக்கையோடு இருங்கள். 'பாம்பு’ போன்றவர்... கவனம்!’ என்று சொன்னார்.
அதை நான் சில பல மாதங்களுக்குப் பின் அனுபவித்து அறிந்தேன்.
அன்று ஸ்டுடியோ தொழிலா ளர்களின் போராட்டம் நடந்து கொண்டு இருந்தபோது, சில குறிப்புக்களைக் கொண்டுபோய் அந்த அமைச்சரிடம் கொடுத்தேன். ஸ்டுடியோ தொழிலாளர்கள் எவ்வளவு பரிதாப நிலையில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தையும் கொடுத்தேன். இந்தக் குறிப்பு, புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஸ்டுடியோ உரிமையாளரிடமே பெற்று வந்ததுதான்.
உடனே, அதைக் கவனிப்பதாகவும் தொழிலாளர் தலைவர்களை அழைத்துப் பேசி நல்லதொரு சுமுகமான முடிவுக்கு வரச் செய்வதாகவும் என்னிடம் கூறி விட்டு, நான் அங்கிருந்து புறப் பட்டவுடனேயே அந்த ஸ்டுடியோ அதிபரை அழைத்து, 'எம்.ஜி.ஆர். உங்களுக்கு எதிராகத் தொழிலா ளர்களைத் தூண்டிவிட்டு, என்னிடமும் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச்சொல்கி றார்'' என்று சொல்லி, நான் கொடுத்த குறிப்புக்களையும் காண்பித்து இருக்கிறார்.
ஆனால், ஸ்டூடியோ அதிபரோ அந்தக் குறிப்புகள் தன்னால் கொடுக்கப்பட்டதுதான் என்று சொல்லிவிடவே, சிறிது ஏமாற்றம் அடைந்திருக்கிறார். எனினும், அந்த அதிபரின் மனதில் நான் நயவஞ்சகமாக நடந்து, அதிபரை ஏமாற்றிக் குறிப்பைப் பெற்று  விட்டதாக நம்பும்படி செய்ய முனைந்திருக்கிறார்.
பெரிய இடத்தில் இருந்த அவருக்கு எவ்வளவு சிறிய உள்ளம் என்பதை அறிந்ததும், எவ்வளவு சிறிய உருவம் படைத்த திரு. திரவியம் அவர்களிடம் எத்தனை பெரிய மனம் இருக்கிறது என்று திகைத்துப் போனேன்.
இத்தகையவர்களின் நிலையைக் கருதித்தானோ என்னவோ, 'மலைக்கும் மடுவுக்கும்’ என்ற மேற்கோளை உருவாக்கினார் களோ என்னவோ?!''

- Vikatan Article

No comments:

Post a Comment