Thursday, February 6, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 20

- Vikatan Article

எமர்ஜென்சி என்றும் அவசரநிலைப் பிரகடனம் என்றும் சொல்லப்பட்ட அடக்குமுறை, 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அது ஒரு இருண்ட காலத்தின் ஆரம்ப நாள். ஜனநாயகத்தை சவக்குழிக்குத் தள்ளி, சர்வாதிகாரத்தைச் சந்தியில் நிற்கவைத்து, சதிராட்டம் போடவைத்ததன் மூலமாக, சட்டத்தின் இன்னொரு முகத்தை இந்தியாவுக்கு பிரதமர் இந்திரா காட்டினார். ஆனால், இந்தியாவின் வளர்ச்சிக்காகவே தான் பிறப்பெடுத்ததாகவும், அதற்காகவே இப்படியரு அவசரநிலையை அமல்படுத்துவதாகவும் இந்திரா சொல்லிக்கொண்டதுதான் விநோதமான வேடிக்கை.
 பொதுமக்களின் துன்பங்களைக் குறைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதை அடிப்படையான நோக்கமாகக் கொண்டு, நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதாக இந்திரா அறிவித்தார். அடக்குமுறைகளை மறைப்பதற்காக, புதிய திட்டங்களை அறிவித்தார். அதுதான் இந்திராவின் 20 அம்சத் திட்டம். நெருக்கடி நிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டது 25.6.1975-ம் நாள். அதற்கு ஐந்து நாட்கள் கழித்து 1.7.1975 அன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் இந்திரா பேசினார்.
''கடந்த ஐந்து நாட்களில் பல பொருட்களின் விலைகள் சரியத் தொடங்கிவிட்டன'' என்றார். நெருக்கடி நிலைமை அமலுக்கு வந்த ஒரு வாரகாலத்தில் அரிசி, கோதுமை விலை குறைந்ததை வைத்து இந்திரா இப்படிப் பேசினார். ''இந்த நாட்டில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த வியாபாரிகள் அவர்களாகவே தங்களது பொருட்களின் விற்பனை விலையை குறைத்துக்கொண்டார்கள்'' என்றும் சொல்லப்பட்டது. இந்திரா அறிவித்த மற்ற திட்டங்கள் அப்படிச் செயல்படுத்தப்படவில்லை.
இந்திராவின் 20 அம்சத் திட்டம் இதுதான்...
1. விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
2. நில உச்சவரம்புச் சட்டத்தை செயல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. கிராமப்புற மக்களுக்கு வீடு கட்ட மனை வழங்கப்படும்.
4. தொழிலாளர்களை அடிமைகளாகக் கருதும் எல்லா ஒப்பந்தங்களும் சட்ட விரோதம் ஆக்கப்படும்.
5. கிராமப்புற மக்களின் கடன் சுமைகள் அகற்றப்படும்.
6. விவசாயிகளின் குறைந்தபட்சக் கூலி உயர்த்தப்படும்.
7. 50 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசன வசதிக்கு உட்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.
8. மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
9. கைத்தறி தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்புத் தரப்படும்.
10. ஆலைகளில் உற்பத்தியாகும் வேஷ்டி, சேலைகள் கிராமப்புற பகுதியில் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
11. நகர்ப்புற நிலங்களை தேசிய உடைமை ஆக்க சட்டங்கள் இயற்றப்படும்.
12. வரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் மீது உடனுக்குடன் விசாரணை செய்து தண்டனை வழங்கப்படும்.
13. கள்ளக் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் பறிக்கப்படும்.
14. புதிய தொழில்கள் தொடங்கும் முயற்சிகளுக்கு இப்போது அமலில் உள்ள லைசென்ஸ் முறை குறுக்கிடுகிறது. எனவே, லைசைன்ஸ் பெறும் முறைகள் தளர்த்தப்படும்.
15. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்குப் பங்கு இருக்க வேண்டும்.
16. லாரிகள், டிரக்குகள் மூலம் சரக்குகள் அனுப்புவதற்கான தடைகளும் அகற்றப்படும். இதற்கான தேசிய பர்மிட் ஏற்படுத்தப்படும்.
17. வருமான வரிக்கான குறைந்தபட்ச விதிவிலக்கு தொகை இப்போது ரூ.6,000 ஆக இருப்பது ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.
18. தங்கள் மேற்படிப்புக்காக வெளியூர் சென்று கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கான அனைத்து விடுதிகளிலும் அத்தியாவசியமான பொருட்கள் கன்ட்ரோல் விலையில் வழங்கப்படும்.
19. பாடப்புத்தங்கள், நோட்டுகள், பேனா, பென்சில் முதலியவை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நியாய விலைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
20. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க தொழிற்பயிற்சியாளர் கூட்டம் திருத்தப்படும்.
- இப்படி 20 அம்சத் திட்டத்தை இந்திரா அறிவித்தபோது 'சோஷலிச மாதா’வாகவே அவர் பார்க்கப்பட்டார். பொதுவாகவே அவர், 'சோஷலிசம்’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினார். ஜவஹர்லால் நேருவால் ஏற்பட்ட பாதிப்பு இது.
'ஏழ்மையை ஒழிப்போம்’ என்பதையே தனது லட்சியமாகக் கொண்டு 1971 தேர்தலில் வென்றவர் இந்திரா. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் அமல்படுத்திய மன்னர் மான்யம் ஒழிப்பும் இந்திராவுக்கு செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலைமையில்தான் இந்த 20 அம்சத் திட்டம் என்ற அஸ்திரத்தையும் இந்திரா எடுத்தார்.
அம்மா அறிவித்த 20 அம்ச திட்டம் போதாது என்று மகன் சஞ்சய் காந்தி தனியாக ஐந்து அம்சத் திட்டத்தை அறிவித்தார். அது...
1. முதியோர் கல்வி கட்டாயம் ஆக்கப்படும்.
2. வரதட்சணை ஒழிக்கப்படும்.
3. சாதி ஒழிக்கப்படும்.
4. நகர்ப்புறம் அழகுபடுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
5. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.
- இவைதான் சஞ்சயின் கனவுகள்.
அம்மா அறிவித்தது பொருளாதாரக் கனவுகள் என்றால், மகன் அறிவித்தது சமூகச் சீர்திருத்தங்கள். ஆனால், நிறைவேறியவை கனவுகள் அல்ல; கைதுகள். செயல்படுத்தப்பட்டவை சீர்திருத்தங்கள் அல்ல; சித்ரவதைகள்!
எமர்ஜென்சி என்ற பெயரையே அப்போதுதான் முதல் தடவையாக கேள்விப்படுகிறார்கள் மக்கள். அவசரநிலைப் பிரகடனம் பற்றி அதுவரை பேசியதே இல்லை. அதனால், இந்திராவின் அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் ஆரம்பத்தில் எந்தச் சலனமும் இல்லை. இப்படி ஒரு சட்டம் அறிவிக்கப்பட்டபோது தலைநகர் டெல்லியைத் தாண்டி, இது என்ன மாதிரியானது என்ற யோசனையே எழவில்லை. ஆனால், இந்திராவுக்கு எதிரான முதல் பொறியை தூக்கிப்போட்டவர் ஜே.பி. என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அன்று இந்திராவுக்கு அவர்தான் சிம்ம சொப்பனமாக இருந்தார்.
இந்திராவின் எதிர்ப்பைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இருந்த ஸ்தாபன காங்கிரஸ்காரர்களும், லட்சிய தாகம் கொண்ட சோஷலிஸ்ட்களும், மதவாத சிந்தனை கொண்ட ஜனசங்கத் தலைவர்களும் ஜே.பி-யின் பின்னால்தான் இருந்தார்கள். ஜே.பி-யின் நிழலில் பயணப்பட்டார்கள். ஜே.பி-க்கு ஆதரவாக இந்திராவுக்கு அருகில் இருப்பவர்களே சிலர் மாறினார்கள். அவர்கள், 'இளம் துருக்கியர்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். அப்படி இளம் துருக்கியராக கருதப்பட்டவர் பிற்காலத்தில் இந்தியப் பிரதமராக இருந்த சந்திரசேகரும், மோகன் தாரியாவும்.
'ஜே.பி-யுடன் முரண்படுவதை விடுத்து அவரோடு பேச்சுவார்த்தை நடத்துங்கள்’ என்று இந்திராவிடமே சொல்லும் துணிச்சல் சந்திரசேகருக்கு இருந்தது. சந்திரசேகர் சொன்னதை இந்திராவால் மறுக்க முடியவில்லை. 1974-ம் ஆண்டு நவம்பர் கடைசியில் இந்திராவும் ஜே.பி-யும் சந்தித்தார்கள். ஆனால், எந்தப் பலனும் ஏற்படவில்லை. இளம் துருக்கியரும் இந்திராவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான மோகன் தாரியா, ஜே.பி-யின் தலைமையின் கீழ் போராடுபவர்களை போலீஸார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதைக் கண்டித்தார். இதனை இந்திரா எதிர்பார்க்கவில்லை. உடனடியாக மோகன் தாரியாவை பதவியில் இருந்து நீக்கினார். இப்படி உட்கட்சியிலும் கொந்தளிப்பை இந்திரா சந்தித்த நிலையில்தான், அவசரநிலைப் பிரகடனத்தை அமல்படுத்தினார்.
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதற்கு அடுத்த நாள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மொரார்ஜி தேசாய் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பேசினார்.
இந்திரா பதவி விலக வேண்டி நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்த ஜே.பி., கடைசியாகச் செய்தது போர்ப் பிரகடனமாக இருந்தது.
''இது சட்டவிரோதமான அரசாங்கம். இந்தச் சட்டவிரோதமான அரசாங்கத்தின் உத்தரவுக்கு இந்திய ராணுவ வீரர்களும், போலீஸ் காவலர்களும் அடிபணியாதீர்கள்'' என்று சொன்னர் ஜே.பி. சுதந்திர இந்தியாவின் அரசியல் களத்தில் இப்படி ஒரு குரலை அதுவரை யாரும் சொன்னது இல்லை. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்று நினைக்கும் தலைவராக ஜே.பி. சீறி எழுந்தார்.
''சர்வாதிகார அச்சுறுத்தல்களிடம் இருந்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் கடமை இந்திய ராணுவத்துக்கு உண்டு. ஏதாவது ஒரு கட்சியின் அரசாங்கமோ அல்லது கட்சித் தலைவரோ தனது நலனுக்காக ராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு முயன்றால், என்னைப் பொறுத்தவரை ராணுவம் அதற்கு இடமளிக்கக் கூடாது'' என்று கட்டளையிட்டார்.
''அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து இந்திரா காந்தி தனது பதவியை விட்டு விலக வேண்டும்'' என்று ஜே.பி. விடுத்த கோரிக்கையை மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழியத் தொடங்கினார்கள். 'இந்திரா தலைமையில் அமைந்திருப்பது சட்டவிரோதமான அரசாங்கம்’ என்று இவர்கள் கூறினார்கள். 'இந்திரா காந்தியை அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வீட்டுச் சிறையில் வைக்கப்போகிறோம்’ என்று மொரார்ஜி செய்த அறிவிப்பு சூட்டைக் கிளப்பியது. 'லோக் சங்கிராஷ் சமிதி’ என்ற அமைப்பை ஜே.பி. உருவாக்கினார். இதன் தலைவராக மொரார்ஜி தேசாயும் ஒருங்கிணைப்பாளராக ஜனசங்கத்தைச் சேர்ந்த நானாஜி தேஷ்முக்கும் நியமிக்கப்பட்டார்கள்.
அடக்குமுறையை எதிர்க்க ஆட்களைத் திரட்டுகிறார்கள் என்பதை உணர்ந்ததும் கையில் விலங்குகளை எடுக்க ஆரம்பித்தார் இந்திரா!

No comments:

Post a Comment