Friday, February 7, 2014

“கட்சி என்ன... கத்தரிக்கா வியாபாரமா...?” Vikatan 02.11.1997

தீபாவளிக்கு மட்டும் மணிவண்ணன் நடித்து ஆறு படங்கள் ரிலீஸாகின்றன.
டைரக்டராக ஆரம்பித்து அவ்வப்போது வில்லனாக முகம்காட்டி, இன்று காமெடியனாகக் கலக்கும் மணிவண்ணன் பெயர் சொன்னால், ஏரியா விற்கிறது! 'ரஜினியை விடவும் அதிகம் சம்பாதிக்கிறார்’ என்று கவுண்டமணியைக் கை காட்டுவார்கள். அவரையும் நைஸாக ஓரங்கட்டிவிட்டுப் பறக்கிறது மணிவண்ணக் கொடி!
மணிவண்ணன் வீட்டில் சாம்பல் நிற கிரானைட் பதிக்கப்பட்ட ஹாலைக் கடந்து உள்ளே போனதுமே, மணிகள் கோத்த கதவுகளுடன் ஓர் அறை!
''பூஜை அறைதான். நான்தான் பக்கா நாத்திகவாதி. ஆனா, என் மனைவி ஒரு கோயில் பட்டாச்சாரியோட பொண்ணாச்சே! கோயில் சாப்பாட்டையே சாப்பிட்டு வளர்ந்த ஐயங்கார் பொண்ணு!'' - சிரித்தபடி தன் மனைவி
செங்கமலத்தை அறிமுகப்படுத்துகிறார். செங்கமலத்தின் அண்ணன் ஆறுமுகமும் பாரதி ராஜாவும் நெருங்கிய நண்பர்கள். பாரதிராஜாவே தன் சிஷ்யன் மணிவண்ணனுக்கு செங்கமலத்தை மணப் பெண்ணாகச் சிபாரிசு செய்ய, இவர் களது கலப்புத் திருமணம் 17 வருடங்களுக்கு முன் குன்றத்தூர் முருகன் கோயிலில் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்... ஜோதியும் ரகுவும்.  
''பசங்க என்னை மாதிரிதான். சாமி, பூதமெல்லாம் பிடிக்காது!''
பாரதிராஜாவின் இயல்பான கிராமத்துப் படங்களால் கவரப்பட்டு, 23 வயதில் சென்னை வந்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அக்கா பரிமளமுத்து வீட்டில் தங்கி, சினிமா வாய்ப்பு தேடி... இன்று புகழின் உச்சியில்!
''எனக்கு எப்பவுமே நம்பிக்கை கொஞ்சம் அதிகம். நான் முதன்முதலாகக் கதை வசனம் எழுதின 'நிழல்கள்’ எனக்குப் பலத்த அடி வாங்கித் தந்த படம்தான் தெரியுங்களா? 'பதினாறு வயதினிலே’ல ஆரம்பிச்சு, அதுவரைக்கும் தொடர்ச்சியா ஹிட் படங்களாத் தந்துட்டு இருந்த பாரதிராஜாவுக்கும் அந்தப் படம்தான் முதல் அடி. 'வழக்கமா பாரதிராஜாவுக்குக் கதை வசனம் எழுதுற பாக்யராஜ், செல்வராஜ் ரெண்டு பேரையும் விட்டுட்டு, சினிமா தெரியாத ஒரு புதுப் பையனை எழுதவெச்சதாலதான் படம் விழுந்துடுச்சு’னு இண்டஸ்ட்ரில பேச்சு கிளம்பிடுச்சு. அந்த வெறியிலதான் அடுத்து 'அலைகள் ஓய்வதில்லை’க்குக் கதை வசனம் எழுதினேன். ஃபீலிங்ஸை ஒதுக்கிவெச்சுட்டேன். படத்துல யதார்த்தத்தை மீறின காதல் இருக்கும். செக்ஸ் கொஞ்சம் பிரதானமா இருக்கும். பட், படம் ஜெயிச்சது. நானும் படத்தை ஜெயிக்கவைக்கிற சூத்திரத்தைக் கத்துக்கிட்டேன்னு வெச்சுக்கங்களேன்!''
''இப்ப உங்க குருவை நீங்க பகைச்சுக்கிட்ட தாகவும் நீங்க படைப்பாளிகள் அமைப்புப் பக்கமே போகாததால்தான் அப்படி ஆச்சுன்னும் கூடப் பேச்சு இருக்கே?''
''அதெல்லாம் வேலைவெட்டி இல்லாதவங்க பேசறதுங்க. உண்மையில் எனக்கும் பாரதிராஜா வுக்கும் குரு-சிஷ்யன்கிற உறவுக்கும் மேல, தந்தை-மகன்ற அளவுக்குப் பலமான உறவு இருக்குங்க. டைரக்ஷனை விட்டுட்டு நான் ஒரு நடிகனா ஆயிட்டதால், நடுநிலைமையோட இருப்போம்னுதான் அங்கே போகல. ஆனா, என்னோட ஆதரவு தமிழ்ப் படைப்பாளிகள் சம்மேளனத்துக்குத்தான். ஃபெப்சிங்கிறதே தேவையில்லாத காய்ஞ்சுபோன சருகு மாதிரிங் கிறது என்னோட கருத்து!''
சமீப காலமாக டைரக்ஷனை விட்டுட்டு மணிவண்ணன் நடிப்பில் முழுசாக செட்டிலாகி விட்டதுக்கு அவர் உடல்நிலையும்கூட ஒரு காரணம். நாலு வருடங்களுக்கு முன் மணி வண்ணனுக்குப் பெரிய அளவில் ஆபரேஷன் ஒன்று ஆனது. 'அதிக குடிப் பழக்கத்தால் வயிறு கெட்டுவிட்டதுதான் அந்த ஆபரேஷனுக்குக் காரணம்’ என்று அப்போது பேசப் பட்டது. ஆனால், அதை மறுக்கிறார் மணிவண்ணன்.
''அதுக்கு ஒண்ணு ரெண்டு வருஷத்துக்கு முந்தியே நான் குடிப்பதை நிறுத்திட்டேங்க. அப்போ நடந்தது குடல்வால் ஆபரேஷன். உயிர் பிழைச்சதே உம்பாடு எம்பாடுனு ஆயிடுச்சு. அந்த ஆபரேஷனுக்கு அப்புறம்தான் டைரக்ஷன்ல இருந்து விலகி இருக்கேன்.''
பேச்சுக்குப் பேச்சு, 'வந்துங்க... போய்ங்க...’ என்று மரியாதையான கோயம்புத்தூர் பாஷை மிளிர்கிறது. ''டைரக்ஷனைச் சுத்தமா மறந்துபோக, நான் ஒண்ணும் தோல்விகரமான டைரக்டர் இல்லீங்களே... டைரக்டரா இருந்த 17 வருஷமும் ரொம்ப பிஸியாவே இருந்தேன். இப்பவும்கூட நிறைய சப்ஜெக்ட் கைவசம் இருக்கு. அடுத்த மார்ச்சுக்கு மேல விஜயை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேங்க!''
தாடியைத் தடவியபடி கேஷ§வலாகப் பேசுகிறார்.
''நினைச்சுப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு... 40 வயசுக்கு மேல ஒரு லைஃப் வந்திருக்கு பாருங்க... நடிக்கணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன்னுகூடச் சொல்லலாம். 'நிழல்கள்’, 'கல்லுக்குள் ஈரம்’னு பாரதிராஜா சார் படத் தில் எல்லாம் அடிச்சுப் பிடிச்சு சின்னச் சின்ன வேஷத்திலாவது வந்துடுவேன். 'கொடி பறக்குது’லதான் கொஞ்சம் பேர் சொல்ற வேஷம். என்ன பண்றது... அப்போ இருந்த என் மூஞ்சிக்குப் பெரிசா சான்ஸ் தர யாருக்கும் தைரியமில்லே... இன்னிக்கு இது க்ளிக் ஆயிடுச்சு!''
''சரிதான்... ஆனா, அதே தாடி அதே இங்கிலீஷ் கலந்த டயலாக்னு உங்க நடிப்பு வித்தியாசமில்லாமல் ஒரே மாதிரியாகிவிட்டதே..?''
''என்னங்க செய்யிறது? 'என்னங்கண்ணா’னு டயலாக் பேசி ஒரு படம் ஹிட்டாகுதுனு வெச்சுக்கங்க... அடுத்தடுத்த படத்தில் 'சூப்பரா இருக்கு சார். அதேபோலப் பேசிடுங்க’னு ஆர்டர் போட்றாங்க. நம்ம 'கெட்அப்’பும்கூட இந்த ஸ்டைல்லதான் மாட்டிக்குது. இப்படியே போனா, கொஞ்ச நாள்ல சலிப்புத் தட்டும்னு எனக்குத் தெரியுது. அதனாலதான் இப்போ லாம் மேக்அப், டயலாக் விஷயத்தில் வித்தியாசம் காட்ட முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்!'' என்று சொல்லும் மணிவண்ணனைத் தன்னைப் பற்றி சுயவிமர்சனம் செய்துகொள்ளச் சொன்னால்...
''எனக்குள்ளே எப்பவுமே ஒரு தலைவனுக்கு உரிய குணங்கள் இருக்கு!'' என்று சொல்லி அசத்துகிறார்.
''பல்லு முளைச்ச வயசிலிருந்தே அரசியலைக் கவனிச்சு வளர்ந்ததாலேயோ என்னவோ, என் பேச்சுல அரசியல் கிண்டல் ரொம்ப இருக்கும். அதையெல்லாம்தான் இப்போ என் பட டயலாக்ல கொண்டுவர்றேன். கிராமத்துலகூட நான் எதுக்கும் பணியாத ஒரு போர்க் குணம் உள்ள இளைஞன்னு வெச்சுக்கங்களேன். மத்தவங்க பாஷைல சொன்னா, முரட்டுப் பிடிவாதக்காரன். அந்தப் போர்க் குணம் இன்னிக்கும் என்கிட்ட இருக்கிறதால, எந்த அரசியல் கட்சிகள்கூடவும் என்னால் அனுசரிச்சுப் போக முடியல'' என்றவர், அரசியல் வாதிகளை ஒரு பிடி பிடித்தார்.
ம.தி.மு.க-விலிருந்து விலகியது பற்றியும் சொன்னார்:
''வை.கோ-வோட நியாயமான போர்க்குணம் எனக்குப் பிடிச்சிருந்ததால் அவர் கட்சிக்குப் போனேங்க. கடைசியில் அவரே இத்தனை ஊழல் பண்ணின ஜெயலலிதாவோட போய்க் கூட்டுச் சேர்ந்துட்டார். கேட்டா, 'அடுத்த எலெக்ஷன்ல நம்ம கட்சிக்கான ஓட்டுக்களை அதிகப் படுத்த’னு ஒரு பதில் கிடைச்சது. ஓட்டு கிடைக்கணும் கிறதுக்காகக் கட்சி வெச்சிருக்கற வங்களோட எனக்கு என்ன வேலைனு சொல்லுங்க? இப்போ நானே தலைவன்... நானே தொண்டன். தனி நபர் சிந்தனையே கொள்கை.''
''நீங்களே ஏன் ஒரு கட்சி ஆரம்பிச்சுடக் கூடாது?''
''கட்சி என்ன... கத்திரிக்காய் வியாபாரமா..? டக்குனு ஒரு தனி மனுஷன் ஆரம்பிச்சுடுறதுக்கு? ஒரு நல்ல காரணத்துக்காக ஒரே மாதிரி பாலிசி கொண்ட பலர் சேர்ந்து ஆரம்பிக்கிற ஒரு இயக்கம் அது. அப்படித்தான் காங்கிரஸ் அன்னிக்கு ஆரம்பமாச்சு. ஆனா இப்போலாம், 'உன்னோட எனக்குச் சரிப்பட்டு வராதுப்பா... நானே தனியா கடை போட்டுக்கறேன்’னு மளிகைக் கடை போடற மாதிரி கட்சியைக் கேவலப்படுத்திட்டாங்க.''
விடுதலைப் புலிகளிடம் மணிவண்ணனுக்கு நெருக்கம் உண்டு.
''விடுதலைப் புலிகள்கிட்ட எனக்கு அனுதாபம் இருக்கு. அதுவும், ராஜீவ் படுகொலைக்கு அப்புறம் நான் நடுநிலைமையாளனாகிவிட்டேன். விடுதலைப் புலிகள்தான்னு இல்லை... விடுதலைக்காகப் போராடுற எந்த நாட்டுக்காரனா இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும்கூட என் அனுதாபம் அவங்களுக்கு உண்டு. மனிதாபிமானமும் தன்மானமும் உள்ள யாருமே சொல்ற விஷயம்தானே இது'' என்றார்.
''நான் அழுது நீங்க பார்த்திருக்கீங்களா? நேத்து டி.வி. செய்தியில் ஒரு விஷயத்தைப் பார்த்துக் கலங்கிட்டேங்க... கியூபாவோட நிதியமைச்சரா இருந்து போராளியா மாறின 'சே குவேரா’வைப் பத்திக் காட்டினாங்க. எப்பவோ 30 வருஷத்துக்கு முன்னே அமெரிக்க சி.ஐ.ஏ. திட்டம் போட்டு அவரைக் கொன்னு புதைச்ச உடம்பைத் தேடிப் பிடிச்சு இப்போ கியூபாவுக்கு எலும்புக்கூடா கொண்டுவந்திருக்காங்க. நம்மூர்ல நாட்டுக்காகப் போராடின சுபாஷ்சந்திர போஸ் இருக்காரா, செத்தாரானுகூட நம்மளால இன்னும் கண்டுபிடிக்க முடியல!''
- திரையில் காமெடி பண்ணும் அந்த நடிகரின் கண்களில் நிஜமான நீர்!

- Vikatan

No comments:

Post a Comment