Friday, February 7, 2014

சென்னை ஆஸ்பத்திரிகள் நாடோடி - 06.04.1952

ஜெனரல் ஆஸ்பத்திரி
யிரக் கணக்கானவர்கள் தினம் நாடிப்போகும் ஜெனரல் ஆஸ்பத்திரி எப்படித்தான் இருக்கிறது, பார்த்துவிட்டு வருவோம் என்று தோன்றவே, ஒரு பஸ்ஸில் ஏறி, ஆஸ்பத்திரிக்கு எதிரில் இறங்கினேன்.
வ்வொரு அறைக்கும் ஒரு வைத்தியர் வீதம்தான் சர்க்கார் வேலைக்கு நியமித்து இருக்கிறார்கள். இருந்தும், உள்ளே நுழைந்தால் ஒவ்வோர்  அறையிலும் பத்துப் பன்னிரண்டு டாக்டர்கள் இருப்பதைக் காண ஆச்சர்யமாக இருக்கும். இவர்களில் பாதி லேடி டாக்டர்களாக இருப்பார்கள். இத்தனை டாக்டர்களும் நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அவஸ்தைப்படுத் தும்போது நமக்கு ஏண்டா உள்ளே நுழைந்தோம் என்றுகூடத் தோன்றும். ஒரு டாக்டர் நாக்கை நீட்டச் சொன்னால், இன்னொரு டாக்டர் கையை நீட்டச் சொல்லுவார். ஒருவர் வயிற்றைத் தட்டிப் பார்த்தால், இன்னொருவர் முதுகைத் தட்டிப் பார்ப்பார். ஒருவர் மார்பின் மீது ஸ்டதாஸ்கோப்பை வைத்துப் பார்த்தால், இன்னொருவர் வாய்க்குள் தர்மாமீட்டரை வைத்துப் பார்ப்பார். வியாதியஸ்தருக்கு எத்தனை டிகிரி ஜுரம் இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு மட்டும் இன்றி, வளவளவென்று சம்பந்தம் இல்லாத விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு போகும் வியாதியஸ்தர்களின் பேச்சை நிறுத்துவதற்கும் இந்த தர்மாமீட்டரை உபயோகப் படுத்துகிறார்கள். வாய்க்குள் தர்மாமீட்டரை வைத்துவிட்டால் மேற்கொண்டு பேச முடியுமா?!
இத்தனை டாக்டர்களை வேலைக்கு வைத்துக்கொண்டால், ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கட்டுப்படி ஆகுமா என்று நான் முதலில் ஆச்சர்யப்பட்டேன். ஆனால், பிறகுதான் உண்மை விளங்கிற்று. அந்தக் கூட்டத்தில் ஒருவர்தான் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த வைத்தியர் என்றும், மற்றவர்கள் பக்கத்தில் உள்ள மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் என்றும். மெடிக்கல் காலேஜ் மாணவர்களுக்கு நேரிடைப் பயிற்சி அளிப்பதற்காக இம்மாதிரி அவர்களைக் கொண்டு நோயாளிகளைப் பரிசோதிக்கச் சொல்லுகிறார்கள்!
முதல் ஹாலில் உள்ள படி வழியாக ஏறி மாடிக்குச் சென்றால், இடது கைப்பக்கம் சர்ம வியாதிகளைக் கவனிக்கும் இடமும் வலது பக்கத்தில் காது, மூக்கு, தொண்டை சம்பந்தமானவியாதி களையும் குஷ்ட வியாதிகளைக் கவனிக்கும் இடங்களும் இருக்கின்றன.
ங்கில வைத்தியத்தில் காது, மூக்கு, தொண்டை இந்த மூன்றையும் ஒன்றுபடுத்தித்தான் பார்க்கிறார்கள். கண்ணுக்கு என்று தனி வைத்தி யர்கள் உள்ளதுபோல், காதுக்கு என்றும் மூக்குக்கு என்றும் தொண்டைக்கு என்றும் தனித் தனி வைத்தியர்கள் கிடையாது. மூன்றும் ஒன்றுக்குஒன்று சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அதனால் மூன்றுக்கும் ஒரே வைத்தியர் போதும் என்றும் ஆங்கில வைத்தியர்கள் கருதுகிறார்கள். இந்த மூன்று அவயவங்களும் சம்பந்தப்பட்டு இருக் கின்றன என்பதன் உண்மையை நம் நாட்டு சங்கீத ரசிகர்கள் நன்கு அறிவார்கள். எத்த னையோ பாடகர்கள் பாட்டுப் பாடுவதற்கு, தொண்டையை உபயோகப்படுத்துவதற்குப் பதில் மூக்கை உபயோகப்படுத்துவதையும் இன்னும் பாடும்போது தங்கள் காதைத் தாங்களே பொத்திக்கொள்வதையும் கவனித்துள்ள ரசிகர்களுக்கு இந்த மூன்று அவயவங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளன என்பதன் உண்மை நன்கு தெரியும்.
மாடியில், வலது கைப் பக்கத்தில், இந்த இடத்தைத் தாண்டி குஷ்டரோகத்தைக் கவனிக் கும் இடமும், அதற்குப் பிறகு பல் வைத்தியம் செய்யப்படும் இடமும் இருக்கின்றன.
ஜெனரல் ஆஸ்பத்திரியில் பல் வைத்திய இலாகாவில் பல்லைப் பிடுங்குவதற்கு ஒரு புதுமுறையைக் கையாளுகிறார்கள். முன்னெல்லாம் பிடுங்க வேண்டிய பல்லுக்குப் பக்கத்தில் 'கொக்கெய்ன்’ இன்ஜெக்ஷன் குத்தி, பல்லைப் பிடுங்குவார்கள்.
கொக்கெய்ன் சேர்வதால், பல்லைச் சுற்றி உள்ள இடம் மரத்துப்போய் வலி தெரியாது என்றாலும், டாக்டரையும் அவர் கையில் உள்ள கொறடாவையும் பார்க்கும்போதே நமக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து, நாம் கதற ஆரம்பிப்போம். ஆனால், இப்போதோ நோயாளியின் மூக்கில் ஒரு குழாயைப் பொருத்தி, 'நைட்ரஸ் ஆக்ஸைட்’ என்னும் மயக்க வாயுவை அதன் மூலம் செலுத்திவிடுவதால், நோயாளி மயக்கமாகிவிடுகிறார். உடனே, டாக்டர் பல்லை பிடுங்கிவிட, மூக்கை மூடியுள்ள குழாய் அகற்றப்படுகிறது. இரண்டு நிமிஷத்துக்கு எல்லாம் நோயாளி மூர்ச்சை தெளிந்து, டாக்டரைப் பார்த்து, ''ஏன் இன்னும் பல்லைப் பிடுங்காமல் இருக்கிறீர்கள்?'' என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.
முன்னெல்லாம் நாற்பது ரூபாய் சம்பளம் என்றாலே ஜெனரல் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலித்தார்கள். இப்போது விலைவாசி உயர்ந்துவிட்டதால் நூறு ரூபாய் வாங்கினால்தான் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
பட்டணத்தில் வேலை பார்க்கும் குமாஸ்தாக்களைத்தான் ஜெனரல் ஆஸ்பத்திரிக்காரர்களால், ஆளைப் பார்த்தே சம்பளத்தை நிதானிக்க முடிகிறது. அல்லது காரியாலயத்தில் இருந்து கடிதம் கொண்டு வா என்று கேட்க முடிகிறது.
ஆனால், கிராமங்களில் இருந்து வரும் கிராமவாசிகளிடம் இந்த யுக்தி பலிக்குமா? மாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கிறவர்கள் ஆனாலும் சரி, ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவர்கள் ஆனாலும் சரி, கிராமவாசிகள் எல்லாரும் ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்கள் வருமானத்தை அவர்கள் தோற்றத்தைக்கொண்டு கண்டுபிடிக்க முடியாது. போதாக்குறைக்கு, கிராமத்தில் இருந்து வருகிற வர்கள் வருமானத்தைக் குறைத்துச் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொடுப்பதற்காகச் சிலர் எழும்பூர் ஸ்டேஷனுக்கும், சென்ட்ரல் ஸ்டேஷ னுக்கும் போய்விடுகிறார்களாம். இதையே அவர்கள் தொழிலாக வைத்துக்கொண்டு கிராம வாசிகளிடம் இருந்து பணம் பறிக்கிறார் களாம்.
மொத்தம் 30 வார்டுகள் உள்ள ஜெனரல் ஆஸ்பத்திரியில் 894 நோயாளிகளுக்குத்தான் இடம் இருந்தும், சாதாரணமாக எப்போதும் சுமார் 1,200 பேர் காணப்படுகின்றனர். இப்படி அதிகப்படியாக உள்ள நோயாளிகள் படுப்பதற்கு என்று தனியாகக் கட்டில் கொடுக்க முடியாமல் இரண்டு கட்டில்களுக்கு இடையில் பாயைக் கொடுத்துப் படுக்கவைத்திருக்கிறார்கள். சீக்கிரமே இன்னும் 238 நோயாளிகள் இருக்க இட வசதி செய்யப்போகிறார்களாம்.
தனியாகக் கட்டணம் கொடுக்கிறவர்களுக்கு என்று, ஏ, பி, சி, என்று ஸ்பெஷல் வார்டுகள் உள்ளன. இதில் குறைந்தபட்சக் கட்டணம் 'சி’ வார்டுக்கு. ஆதலால், இதற்கு உள்ள போட்டி சொல்லி முடியாது. இதில் இடம் கோருகிறவர்கள் முன்கூட்டியே பதிவுசெய்துகொண்டால், வரிசைக் கிரமத்தில் சொல்லி அனுப்புகிறார் கள்.
ஜெனரல் ஆஸ்பத்திரியில் உள்ள வார்டுகளின் பெயர்கள்தான் வாயில் நுழையாத பெயர்களாக இருக்கின்றன. நிப்னாக் வார்ட், பாட்டிங்கன் வார்ட், டொனோவன் வார்ட் என்றெல்லாம் பழைய ஆங்கில வைத்தியர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த வார்டுகளின் பெயர்களைச் சொல்லத் தெரியாமல் முன்னெல்லாம் கிராமவாசிகள் அவதிப்படுவது உண்டு. இப்போது அந்தச் சங்கடம் இல்லை. எல்லா வார்டுகளுக்கும் நம்பர்கள் கொடுத்திருப்பதோடு, நம்பர்கள் எழுதப்பட்டுள்ள பெரிய பெரிய தகடுகள் ஒவ்வொரு வார்டுக்கு முன்னாலும் தொங்குகின்றன. வியாதியஸ்தர்களின் உறவினர்களும் நண்பர்களும் இத்தனாம் நம்பர் வார்டு என்று ஞாபகம் வைத்துக்கொண்டால் போதும்.
முன்னெல்லாம் ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இரண்டு நாளைக்கெல்லாம் எப்படா ஆஸ்பத்திரியை விட்டு வீட்டுக்குப் போவோம் என்று ஆகிவிடும். பொழுது விடிந்தால், பொழுது அஸ்தமித்தால் சாப்பிடுவதற்குக் கொடுக்கப்படும் ரொட்டியையும் வெண்ணெயையும் கண்டுதான் அவர்களுக்கு அத்தனை ஆத்திரம். ஆங்கிலேயர்களுக்குப் பழகிப்போன ரொட்டியையும் வெண்ணெயையும் இந்தியர்கள் வாயில் திணிப்பது என்றால் முடியுமா? இந்த ரொட்டியினால் நோயாளிகள் பாதி சமயம் பட்டினியாகக் கிடப்பதை உணர்ந்து, டாக்டர் ராஜம் எல்லா நோயாளிகளுக்கும் தினம் காலை இட்லியும் சாம்பாரும் கிடைப்பதற்கு வழி செய்திருக்கிறார்.
இட்லியென்றால் காஞ்சீவரம் இட்லி மாயவரம் இட்லியென்று கண்ட போலி இட்லிகள் விற்கிறார்களே, அது என்று நினைத்துவிடாதீர்கள். ஜெனரல் ஆஸ்பத்திரியில் கிடைக்கும் இட்லி அசல் கும்பகோணம் இட்லி. அதாவது, அரிசியும் உளுந்தும் சேர்ந்து ஆனது; மற்ற பருப்பு வகை கள் கலந்தது அல்ல;
ரேஷன் விதிகளினால் இத்தகைய சுயம் இட்லி வெளியில் கிடைப்பது அரிதாயிருக்கையில், ஜெனரல் ஆஸ்பத்திரியில் கிடைக்கிறது என்றால், அதற்காகவாவது ஜனங்கள் ஜெனரல் ஆஸ்பத்திரியில் நோயாளிகளாக இருக்க விரும்புவார்களா, மாட்டார்களா? நீங்களே சொல்லுங்கள். இட்லிக்கு மாவு அரைப்பதற்கு என்றே மின்சாரத்தினால் இயங்கும் ஒரு யந்திரம் வைத்திருக்கிறார்கள். நம் ஹோட்டல்களில் கிடைக்கும் இட்லிகளைவிடப் பெரிய இட்லிகள் தயாரிப்பதற்கு. சாம்பாரும் சேர்ந்து, இட்லி ஒன்றுக்குச் சராசரி அரையணாதான் ஆகிறதாம்.
1664-ல் வேறு இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரி 1753-ல் இந்த இடத்துக்கு வந்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று உள்ள பிரமாண்டமான நிலையை அடைந்திருக்கிறது. ஜெனரல் ஆஸ்பத்திரி எத்தனை பிரமாண்டமான ஆஸ்பத்திரி என்பதை அங்கு துணிகளைத் துவைப்பதற்கு என்றே தனியாக உள்ள 'நீராவி லாண்டிரி’யைப் போய்ப் பார்த்தால் போதும். தினம் ஐயாயிரம் உருப்படிகள் இந்த லாண்டிரியில் யந்திரத்தினால் துவைக்கப்படுகின்றன. இல்லாவிடில், அங்கு தினம் செலவாகும் பால் கணக்கைப் பார்த்தாலும் போதும், தினம் சுமார் 400 படி பசும்பால் செலவாகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஜெனரல் ஆஸ்பத்திரியில் எல்லா இடங்களையும் பார்த்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி வர வேண்டுமானால் இரண்டரை மைல் தூரம் ஆகிறது.
மாதக் கணக்கில், படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளின் மனத்தைக் குஷிப்படுத்தவும் அதிகம் யாரும் முன் வந்ததாகத் தெரியவில்லை. நமது சங்கீத வித்வான்களும், விகட கவிகளும், இன்னும் மற்றவர்களும் மாதம் ஒரு இலவசக் கச்சேரி ஜெனரல் ஆஸ்பத்திரிக்குள் செய்வது என்று வைத்துக்கொள்ளலாம். பட முதலாளிகளும் தங்கள் படத்தைக் கொடுத்து உதவலாம். ரேடியோ வியாபாரிகளும் ரேடியோக்களை நன்கொடையாகக் கொடுத்து உதவலாம்!

ஒரு மணி அடித்தால்....
ழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத் திரியில், எத்தனையோ காரியங்களுக்கு மணியடிக்கிறார்கள். நர்ஸ்கள் 'லஸ்க’ரைக் கூப்பிடுவதற்கென்று ஒரு தனி மணி வைத்திருக்கிறார்கள். பிரசவ வைத்தியத்தில் பயிற்சி அளிப்பதற்கு என்று அங்கு அடைக்கப்பட்டு உள்ள வைத்தியக் கல்லூரி மாணவர் களை அழைப்பதற்கு என்று ஒரு தனி மின்சார மணி வைத்திருக்கிறார்கள். இதில்கூட, ஒரு மணி அடித்தால் சாதாரண கேஸ், மூன்று மணி அடித்தால் ஆபரேஷன் கேஸ் என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள். இன்னும், பழைய காலத்தில் 'சிசேரியன் ஆபரேஷன்’ (அதாவது வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுக்கும் ஆபரேஷன்) அபூர்வமாக இருந்த காலத் தில், அது நடந்தால், எல்லா டாக்டர் களும் நர்ஸ்களும் வந்து பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய மணியே வைத்திருந்தார்கள். இப்போது அது உபயோகமாகாமல் அப்படியே பழைய சம்பவங்களை ஞாபகமூட்டிக்கொண்டு தொங்கிக்கொண்டு இருக்கிறது!

- Vikatan

No comments:

Post a Comment