'லாங்ஸ் கார்ட’னில் உள்ள ஸ்டோரில் 2,600 குழாய் - பம்புகள் தயாராக நிற்கின்றன. 5,000 பம்புகள் வரை தயார் செய்துகொண்டு, அங்கங்கே 'போர்’ போடுவதற்குக் கிளம்பப்போகிறார்களாம்.
ராக்கெட் போன்ற துளைக் கருவிகள், குழாய்கள், பம்புகள், செக் - நட்டுகள் இவற்றுக்கு நடுவே நின்று அவற்றின் கணக்கையும் 'செக்’ பண்ணிக்கொண்டு இருக்கிறார் ஓர் அதிகாரி.
''அவ்வளவும் கணக்குப் பிசகாமல் இருக்கும். நான் அதற்கு உத்தரவாதம் தருகிறேன்'' என்று தைரியமாக அடித்துச் சொல்கிறார் அந்தோணி. கார்ப்பரேஷன் நிர்வாகத்தில் இப்படி ஒரு காலமா?
''இவை எல்லாம் எப்போது தெருவில் இறங்கப்போகின்றன?''

''ஜனங்கள் சங்கடப்பட மாட்டார்களா?''
''இல்லை. அதுதான் மக்களுடைய மனப்பான்மை. 'அடுத்த மாதத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு ஒரு தடவைதான் தண்ணீர் விடப்போகிறோம்’ என்று இப்போதே சொல்லிவிட்டால், இந்த மாதத்தில் இருந்தே அதை நினைத்து நினைத்துப் பழகிவிடுகிறார்கள். திடீரென்று இல்லை என்று சொன்னால்தான் தவித்துப்போகிறார்கள்.''
''மழை பெய்யாவிட்டால் திண்டாட்டம் என்றுதான் இருக்க வேண்டுமா? இதற்கு விமோசனமாக நீண்ட நாளைய திட்டம் எதுவும் இல்லையா?''
''இருக்கிறது. வீராணம் நீர்த் தேக்கத்தில் இருந்து சென்னைக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டம்தான் அது. நிலைமை சாதாரணமாக இருந்தால், நாம் ஒரு நாளைக்கு 500 அல்லது 600 லட்சம் காலன் வரை சப்ளை செய்யலாம். வீராணம் நீர்த் தேக்கத்தில் இருந்து இன்னும் 350 லட்சம் காலன் வரை கிடைக்கும். ஜனத்தொகை சென்னையில் இதே அளவில் பெருகிக்கொண்டே போனால்கூட, இன்னும் 10 ஆண்டுகளுக்குக் கவலை இல்லாமல் இருக்கலாம்!''
''ஜனத்தொகை பெருகுவது ஒரு பக்கம் இருக் கட்டும்... தெருவில் எத்தனை கால்நடைகள் திரிந்துகொண்டு இருக்கின்றன பார்த்தீர்களா? பம்பாய் கார்ப்பரேஷனைப் போல 'மாடுகள் எல்லாம் ஊருக்கு வெளியேதான் இருக்க வேண்டும்’ என்று நீங்கள் ஏன் ஒரு சட்டம் கொண்டுவரக் கூடாது?''
''சென்னை நகரத்தில் இப்போது 40,000 பசு, எருமை மாடுகள் இருக்கின்றன. அவற்றை நம்பி சுமார் ஒரு லட்சம் பேர் பிழைக்கிறார்கள். அரசாங்கம் நடத்தும் பால் பண்ணைகள் தரும் பாலைத் தவிர, இவர்கள் சப்ளை செய்யும் பாலின் உதவியில்தான் நமது தேவையைச் சமாளிக்க முடிகிறது.''
''சமாளிக்க முடியவில்லையே? தண்ணீர் கிடைக்காமல் பால் சப்ளை செய்கிறவர்களும் திண்டாடுகிறார்களே?'' என்றோம்.
பால் கறந்து சப்ளை செய்கிறவர்கள்தான் தண்ணீரைக் கண்ணில் படாமல் மறைத்துவைக்கிறார்கள் என்பது இல்லை. கார்ப்பரேஷனிலும் குடிதண்ணீரைப் பெரிய புல்தரைகளின் அடியில் மறைத்துதான் தேக்கிவைத்து இருக்கிறார்கள். ஆமாம், கீழ்ப்பாக்கம் நீர்நிலையத்தில் அவ்வளவு தண்ணீரையும் கீழேதான் பார்க்கலாம்.
55 மில்லியன் காலன் தண்ணீர் வந்து தேங்க வேண்டிய இடத்தில் இப்போது 20 மில்லியன் காலன்தான் கிடைக்கிறது. அதில் பாதி சென்னை யின் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து பூமிக்குக் கீழே பம்ப் செய்து கொண்டுவரப்பட்டதண்ணீர். ஆக, கிடைப்பது, தேங்குவது, வெளியே போவது எல்லாமே கண்ணுக்குப் படாமல்தான் நடக்கிறது. அதனால்தானோ என்னவோ, வெளியிலும் தண்ணீர் லேசில் கண்ணுக்குத் தென்படுவது இல்லை.

இங்கேயே நான்கு இடங்களில் ஆழ்துளைக் கிணறு வைத்திருக்கிறார்கள். ஓர் அவசரத்துக்கு இவற்றை உபயோகிக்கலாம். ஒவ்வொன்றும் லட்சம் காலன் தண்ணீர் சப்ளை செய்யும். பசும்புல் தரையும் அழகிய நீர்த்தேக்கமுமாக இருக்கும் இந்தப் பகுதியைப் பார்க்கும்போது, 'இங்கே சினிமாவுக்குப் படப்பிடிப்பு நடத்தலாமே’ என்று தோன்றுகிறது. ''அனுமதிக்கலாமே, உங்களுக்கு வருமானம் கிடைக்குமே!'' என்று கேட்கிறோம்.
''கிட்டே வரக் கூடாது. நீர்த் தேக்கத்தில் ஏதாவது அசுத்தம் கலந்துவிட்டால், 30 லட்சம் மக்களைப் பாதிக்குமே'' என்கிறார் அந்தோணி.
வெளியே வருகிறோம். தண்ணீர் அருவியாக 'ஜோ’ வென்று கொட்டுகிறது. கண்கொள்ளாக் காட்சி. லாரிகளில் பிடித்துப்போகிறார்கள். வீட்டைத் தேடித் தண்ணீர் வரவில்லை; தண்ணீ ரைத் தேடி லாரி வருகிறது.
''இப்படியும் வாங்கிக்கொண்டு போகலாமா, என்ன?''
''போகலாம். ஆயிரம் லிட்டருக்கு இரண்டு ரூபாய். லாரியை இங்கேயே கொண்டுவந்து பிடித்துப் போக வேண்டும். பெரிய பார்ட்டிகள், ஹோட்டல்கள் இவற்றுக்கு இப்படித்தான் சப்ளை செய்கிறோம். மொத்த செலவைப் பார்க் கும்போது ஒரு லாரி தண்ணீருக்குச் சுமார் 60 ரூபாய் ஆகும்!''
''கல்யாண மண்டபங்களிலும் இப்படித்தான் உபயோகமா?''
''ஆமாம். ஒரு கல்யாண மண்டபத்தையே வேறுவிதமாக உபயோகித்திருக்கிறோம்... பாருங்கள்'' என்று அழைத்துப்போகிறார் அந்தோணி.
ராயபுரத்தில் உள்ள புதிய கல்யாண மண்டபத்தில் பந்தல் போட்டிருக்கிறார்கள்; சாப்பாடு போடுகிறார்கள்; வரவேற்பு பிரமாதமாக இருக்கிறது. இவை எல்லாம் குடும்பத்தைப் பெருக்க கல்யாணம் செய்துகொள்வதற்கு அல்ல. கல்யா ணம் செய்துகொண்டவர்கள் குடும்பத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கு. கல்யாணத்தில்தான் அட்சதை போடுவதும் தட்சணை கொடுப்பதும் உண்டா என்ன? இங்கேயும்தான் கட்டுப்பாடு செய்துகொண்டு திரும்புகிறவர்களுக்கு நான்கு கிலோ அரிசியும் 60 ரூபாய் பணமும் கொடுத்து அனுப்புகிறார்கள்.
அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் 'கேரம் போர்டு’ வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம்''அறுவை சிகிச்சை ஒன்றும் சிரமமாக இல்லையா?'' என்று கேட்கிறோம்.

''இரண்டு நாட்கள் நல்ல சாப்பாடு போடுகிறோம். சென்னையில் நல்ல ஹோட்டல்களில்கூட இந்த மாதிரி சாப்பாடு கிடைக்காது. அரிசியும் பணமும் தந்து அனுப்புகிறோம்.
இப்படிக் கட்டுப்பாடுசெய்துகொள்ள முன் வருபவர்களில் பெரும்பாலானோர் தொழிலா ளிகள். சிகிச்சை செய்துகொண்டபிறகு ஐந்து நாட்களுக்கு அவர்கள் வேலை செய்யக் கூடாது. அதன் பின் இரண்டு வாரங்களுக்கு லேசான வேலையில்தான் ஈடுபடலாம். அந்த நிலையில், அவர்களுக்கு இந்த அரிசியும் பணமும் உபயோ கப்படும்.''
''தொழிலாளிகள் தாமாகவே வருகிறார்களா?''
''தாமாகவும் வருகிறார்கள்; தொழில் நிறுவ னங்கள் சிபாரிசு செய்தும் அனுப்பிவைக்கின்றன. இதில் அவர்களுடைய நன்மையும் சேர்ந்து இருக்கிறதல்லவா?''
''எத்தனை வயது ஆனவர்களாக இருந்தாலும் கட்டுப்பாடு செய்ய நீங்கள் உதவுவீர்களா?''
''பொதுவாக, 45 வயதுக்கு உட்பட்ட ஆண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். அவர்களுக்குத் தீவிரமான நோய் ஏதும் இருக்கக் கூடாது. கல்யாணம் ஆகாதவர்களுக்கு அனுமதி இல்லை. சுமார் 30 வயது ஆனவர்கள் - இரண்டு குழந்தை கள் இருப்பவர்கள் - அதுதான் ஐடியல்!'' என்கிறார் அந்தோணி.
தண்ணீரையும் மக்கள்தொகையையும் அளவுபடுத்திக் குறைத்துக்கொண்டு இருக்கும் அந்தோணி, அதிகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கும் அம்சமும் ஒன்று உண்டு. அதுதான் கார்ப்பரேஷ னின் வருவாய். பல வகைகளிலும் அநாவசியமான வடிகால்களை அடைத்து, வரும் வழிகளை அமைத்து, நிதி நிலைமையைச் சீர்படுத்தி இருக் கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கோடி ரூபாய் கடன் என்ற நிலையில் இருந்தது. இன்று 30 லட்ச ரூபாய் உபரி என்ற நிலைக்கு உயர்ந்து இருக்கிறது.
வருவாயைப் பெருக்கிக்கொள்ளச் செய்துள்ள வழிகளில் சில: ஆங்காங்கே காலியாகக் கிடக் கும் இடங்களில் சுமார் 150 ஸ்டால்கள் வரை கட்டி இருக்கிறார்கள். சாலையில் கார்களை நிறுத்திவைக்கும் இடங்களில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பனகல் பார்க், மூர் மார்க்கெட் பகுதிகளில் கார் ஒன்றுக்குக் கட்டணம் ஐந்து பைசா. பார்க் அருகேதான் இந்த கார் பார்க் என்று இல்லை; மற்ற இடங்களிலும் விரைவில் வரும்.
''இவ்வளவு பெரிய கார்ப்பரே ஷனை நிர்வாகம் செய்வது சிரமமாக இல்லையா? சென்னையைப் பிரித்து நிர்வாகம் செய்தால்,
சௌகரியமாக இருக்கும் அல்லவா?''
''அப்படி ஒரு அவசியம் இல்லை. இதைவிடப் பல மடங்கு பெரிய நகரங்கள் உலகில் இருக்கின்றன. அங்கெல்லாம் இயங்குவது ஒரே கார்ப்பரேஷன்தான். இந்தியாவிலேயே பம்பாயும் கல்கத்தாவும் சென்னையைவிடப் பெரியவை. அங்கே எல்லாம் ஒரே கார்ப்பரேஷன்தானே இருக்கிறது. நிர்வாகம்நன்றாகவும் நடக்கிறதே!'' என்கிறார் அந்தோணி.
''ஏற்கெனவே நடந்துவிட்ட ஊழல்களை விசாரிப்பதில் கொஞ்சம் சுறுசுறுப்பு காட்டினால் நன்றாக இருக்குமே?''
''அதைப்பற்றி நான் சொல்வதற்கு இல்லை. போலீஸ் துறையில் ஒரு அதிகாரி தனியாகப் பொறுப்பேற்று விசாரித்துக்கொண்டு இருக்கிறார்!''
''இந்த 15 மாதங்களில் நிர்வாகம் சீர்பட்டு வந்திருக்கிறது. கவுன்சிலர்கள் நகரசபை என்று இருப்பதைவிட, இதைப் போல ஆபீஸர் நிர்வாகம் செய்வதே நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் நினைக்கிறார்களே?''
''அது சரி அல்ல. அந்தந்தப் பகுதி மக்களின் குறைகளைத் தெரிந்துகொண்டு, அதை நீக்க வழி தேடுவதற்கு கவுன்சிலர்கள்தான் சிறப்பாக உதவ முடியும். மக்களுக்கும் தங்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை அணுகிக் கேட்பதுதான் சௌகரியமாக இருக்கும். நல்ல சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுடன் கவுன்சிலர்கள் இயங்கினால், அந்த நகரசபை செய்து தரும் நன்மைகளை ஒரு தனி ஆபீஸர் தனது நிர்வாகத்தில் செய்து கொடுத்துவிட முடியாது.''
''எல்லாப் பொறுப்புக்களையும் இப்படி உங்கள் கையில் விட்டுவைத்திருக்கிறார்களே, உங்கள் முடிவுகளில் அமைச்சர்கள் குறுக்கிடுவது இல்லையா?''
''அதுதான் இல்லை. இப்படி ஒரு அநாவசியமான சந்தேகம் இருந்தால், அதை நீக்க வேண்டியது என்னுடைய கடமை. இந்த 15 மாதங்களில் அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டதே இல்லை. எந்த முடிவையும் பாரபட்சம் இல்லாமல், நேர்மையான காரணத்துக்காகச் செய்து முடிப்பதால், அதில் எனக்குப் பூரணமான ஒத்துழைப்பு கிடைக்கிறது.''
கடற்கரைச் சாலையில் செல்கிறது கார். கடற்கரையில் காற்றுதான் கிடைக்கும் என்று இத்தனை நாளும் நினைத்துக்கொண்டு இருந்தோம். தண்ணீரும் கிடைக்கும் என்கிறார் அந்தோணி.
''இங்கே ஒன்பது கிணறுகள் இருக்கின்றன. அவற்றில் பம்பு செட் வைத்துத் தண்ணீரை வெளியே லாரிகளில் பிடித்துக்கொண்டு போகும்படி வசதி செய்துகொடுக்கப்போகிறோம். ஆளுக்கு 15 லிட்டர் விகிதம் இந்தப் பகுதியில் சுமார் 7,000 பேருக்கு இதனால் தண்ணீர் கிடைக்கும்!''
கடற்கரைக் காற்று குளிர்ந்து வீசத் தொடங்குகிறது. நமக்குக் கொஞ்சம் ஓய்வு எடுக்கத் தோன்றுகிறது. ஆனால், கடற்கரைக்கு வந்தாலும் கோட்டையில் தலைமைச் செயலகத்துக்குப் போகும் ஞாபகமாகத்தான் இருக்கிறார் அந்தோணி.
''காலையில் இருந்து மாலை வரை வேலையும் கவலையுமாகவே இருக்கிறீர்களே... உங்களுக்கு இந்த வேலை பிடித்திருக்கிறதா?''
''சிரமமான வேலைதான். புத்தகம் படிக்கக்கூட நேரம் இல்லை. ஆனாலும், இந்தப் பொறுப்பும் உழைப்பும் என் மனத்துக்குப் பிடித்தவையாகத்தான் இருக்கின்றன.''
''மிஸஸ் அந்தோணி என்ன நினைக்கிறாரோ?''
''அவருக்கு விரக்தியே வந்தாயிற்று. 'கேட்டரிங் இன்ஸ்டிட்யூட்’டுக்கு பொழுதுபோக்காக ஓரிரு மணி நேரம் போய்க்கொண்டு இருந்தவர், இப்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கேயேதான் இருக்கிறார்'' என்று சிரிக்கிறார் அந்தோணி.
-Vikatan
No comments:
Post a Comment