Wednesday, February 19, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 24

உண்மையில் அன்று ஆட்சி செய்தவர் சஞ்சய் காந்தி என்றால், அவரது வலது கரமாக இருந்தவர் வி.சி.சுக்லா என்று சுருக்கமாக அறியப்படும் வித்யா சரண் சுக்லா. அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டத்தில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஐ.கே.குஜ்ரால். தங்களுக்குச் சாதகமான செய்திகள் மட்டுமே வரவேண்டும் என்று விரும்பிய இந்திராவும் சஞ்சயும் அதற்காக ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தனர். அவை அனைத்தையும் குஜ்ரால் அலுவலகத்தில் இருந்து சொல்லச் சொன்னார்கள். இந்திராவுக்கு ஆதரவாக முழக்கமிடுவதற்காக டெல்லிக்குள் தினமும் காங்கிரஸ் தொண்டர்கள் அழைத்துவரப்பட்டார்கள் அல்லவா? அந்தச் செய்திகளையும் அவர்களது புகைப்படங்களையும் அனைத்துப் பத்திரிகைகளும் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று குஜ்ரால் மூலமாக அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் சொல்லச் சொன்னார் சஞ்சய். 'இது என்னுடைய வேலை அல்ல’ என்றார் குஜ்ரால். 'அப்படியானால் உங்களுக்கு இங்கு வேலை இல்லை’ என்று சொல்லி திட்டங்களுக்கான துறைக்கு அனுப்பினார்கள்.அப்போது சஞ்சய் காந்தி சொன்னதைச் செய்பவராக, அவர் சொல்லாததையும் செய்பவராக வி.சி.சுக்லா வந்தார்!

இந்திரா காந்தியின் பிரசார தளபதியாக எமெர்ஜென்சி காலத்தில் நியமிக்கப்பட்டதும், 'அதுவரை ஆல் இந்தியா ரேடியோவின் ஸ்டேஷன் இயக்குநர்கள், அதிகாரிகள் வைத்திருந்தது அனைத்தும் தவறான கொள்கைகள்; அதைத் திருத்திக்கொண்டு, தான் காட்டுகிற வழிமுறையில் நடக்க வேண்டும்; தங்களின் சிந்தனைப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தார். எல்லாவற்றையும் கவனிப்பதையும், தணிக்கை செய்வதையும் கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் ஆணைகள் பறந்தன. கூடவே, யார் யாரெல்லாம் துரோகிகளாக இருக்கக் கூடுமோ அவர்களின் நெடிய பட்டியலும் வேண்டும் என்றும் ஆணைகள் பறந்தன.
அப்போது இருந்த எல்லா இதழ்களின் ஆசிரியர்கள், நிருபர்களைப் பற்றிய விவரமான பட்டியல் தயாராக வேண்டும் என்றும், அவர்களின் கடந்த காலம் பற்றியும் விரிவான அறிக்கைகள் வேண்டும் என்றும் ஆணைகள் பறந்தன. இப்படி அரட்டி உருட்டி வேலை வாங்கிய சுக்லாவுக்கு, செம பவ்யமான இன்னொரு முகமும் இருந்தது. காலை, மாலை இருவேளையிலும் சஞ்சய் காந்தியைப் பார்த்து அவருக்கு அடிபணிவதைத் தன்னுடைய முக்கியக் கடமையாக வைத்திருந்தார்.
செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஆனதும் சுக்லா தனக்கு நம்பகமான கே.என்.பிரசாத் என்கிற காவல் துறை அதிகாரியை அமைச்சகத்துக்குள் கொண்டுவந்தார். அவருக்கு வெளிநாடு வரை சென்று பல்வேறு  உளவு டெக்னிக்குகள் அறிந்து வந்த அனுபவம் உண்டு. அவர் உளவறிந்து தந்த தகவல்களை அன்றைய காங்கிரஸ் கட்சியின் கிச்சன் கேபினெட் ஆட்களான தேவ் காந்த் பரூவா, ரஜினி படேல் மற்றும் சித்தார்த் சங்கர் ரே போன்றவர்களிடம்... அதாவது, தன்னை இந்த இடத்துக்குக் கொண்டுவரக் காரணமான ஆட்களிடம் கொண்டுபோய் சேர்த்து நல்ல பேர் வாங்கினார் சுக்லா.
இந்த மூவர் கூட்டணிதான் சுக்லாவை 75-ல் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பணியாற்ற இந்திராவிடம் பரிந்துரை செய்தது. இந்திரா காந்தியை இளமையான, வலிமை மிகுந்த, நேர்மையான, மாற்றத்துக்கான தலைவராக அங்கே விளம்பரப்படுத்துவதை கச்சிதமாக செய்திருந்தார் சுக்லா. அதன் அடுத்த பலன்தான் குஜ்ரால் இடத்துக்கு இதே மூவர் அணி அவரைக் கொண்டுவந்தது.
வானொலி நிலைய இயக்குநர்களுடன் நடந்த கூட்டத்தில், 'ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வதை வெளியிடக் கூடாது. 60 கோடி மக்களின் ஒரே தலைவி இந்திரா'' என்று சொன்னார். ''கட்சியே அரசாங்கம். ஆகவே, காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை மட்டும் வெளியிட்டால் போதுமானது'' என்றும் சொன்னார். அப்போது ஒரு இயக்குநர், ''அது எப்படிச் சரியாகும்! கட்சி, அரசு இரண்டும் வேறுவேறு அல்லவா?'' என்று கேட்க, ''கட்சிக்கு உங்களை வேலை செய்யச் சொல்லவில்லை. கட்சிதான் ஆட்சி செய்கிறது. அதன் கொள்கைகளை அமல்படுத்துங்கள் என்றுதான் சொன்னேன்!'' என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னார் சுக்லா. பின்னர் ஒரு வாரத்துக்குள் அந்த அதிகாரி தூக்கி அடிக்கப்பட்டார்.
அடுத்து வெளிநாட்டு இதழ்களின் நிருபர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டினார் சுக்லா. 'தணிக்கையை மீறி செய்தி வெளியிட்டால் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள்’ என்று எச்சரித்தார். 'இது எச்சரிக்கையோ, பயமுறுத்தலோ இல்லை. ஒரு வெற்று வாசகம்’ என்றும் கவனமாகச் சொன்னார் சுக்லா. அதை வாஷிங்டன் போஸ்ட் நிருபர் லீவிஸ் சிமன்ஸ் எழுதுவதை பார்த்ததும், 'ஏன் அதை எழுதுகிறீர்கள்? அவையெல்லாம் ரிப்போர்டிங் அல்ல!'' என்று அலறினார் சுக்லா. பின்னர், 'உங்களின் கட்டுரைகளைக் கொண்டு மட்டுமல்லாமல், உங்களின்  இதழ்கள் என்ன செய்தி எழுதுகின்றன, அவர்களைப் பற்றி உள்துறையில் இருக்கும் கோப்புகள் எல்லாவற்றையும் கொண்டே நடவடிக்கை இருக்கும்’ என்றும் மறைமுகமாக மிரட்டினார்.
'இதழ்கள் அறத்தோடு இருக்க வேண்டும்’ என்று சுக்லா வகுப்பெடுக்க... பி.பி.சி. நிருபர் எழுந்து, ''நாங்கள் அறத்தோடுதான் இருக்கிறோம். ஆனால், நீங்கள் பேசுகிற எதுவும் அறம் சார்ந்ததாக இல்லவே இல்லை'' என்று சொன்னதும் அங்கே இருந்த நிருபர்கள் கைதட்டினார்கள்! பல்லைக் கடித்தார் சுக்லா!
இதைத் தொடர்ந்து இந்த நிருபர்கள் சிக்கலை அனுபவித்தார்கள். சுக்லா சொன்னதை எழுதிய வாஷிங்டன் போஸ்ட் நிருபர் லீவிஸ் சிமன்ஸ் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என்று அமெரிக்காவில் உள்ள அவரது எடிட்டரிடம் இருந்து செய்தி வந்தது.
அப்போது இன்னொரு சங்கதியும் சிமன்ஸுக்கு ஞாபகம் வந்தது. அயல்நாட்டவர் பதிவு அலுவலகத்தில் அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் பதிவு செய்ய வேண்டும். அடிக்கடி வெளிநாடுகளுக்கு வாஷிங்டன் போஸ்டின் ஆசியா நிருபர் என்கிற முறையில் பறக்க நேர்ந்தபடியால், அவரால் அடிக்கடி பதிவுசெய்ய முடியவில்லை. இதைக்காட்டி நாடு கடத்துவார்கள் என்று பயந்தவராக பதிவு அலுவலகம் போனார்.
''24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு நீங்கள் கிளம்புங்கள்!'' என்று அழுத்திச் சொன்னார்கள் அதிகாரிகள். அதற்கு மறுத்தால் கைது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்கள். சிமன்ஸ், பேங்காக் நகருக்கு அனுப்பப்பட்டபோது அவரின் அனைத்து குறிப்பேடுகளும் கைப்பற்றப்பட்டன. நான்கு மாதங்கள் கழித்து அந்த நோட்டுகள் அவர் கைக்கு வந்தபோது, அவை எண்கள் இடப்பட்டும், பல இடங்களில் முத்திரை பதிக்கப்பட்டும் இருந்தது.
சுக்லா செல்வ வளம் மிகுந்த ஆள். மிக சொகுசான நம்பர் ஏழு, ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் இருந்த இவர் அதைவிட்டு நீங்க நேர்ந்தாலும், மார்க்கெட் மதிப்புக்கு வாடகை கொடுத்து அங்கேயே தங்குவேன் என்று சொல்கிற அளவுக்கு அவரின் செழிப்பு இருந்தது. அவரின் அப்பா ரவிஷங்கர் சுக்லா மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்தார். எளிய ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பல கோடி சொத்துக்களைச் சேர்த்து தன் பொது வாழ்வைக் கழித்தவர். அவர் 70-களில் டெல்லிக்கு சீட் கேட்டு வந்தபோது அவரின் வங்கிக் கணக்கு காட்டப்பட்டு கேள்வி கேட்கப்பட்டதாகவும் அந்த அதிர்ச்சி தாங்காமல் இறந்துபோனதாகவும் டெல்லி வட்டாரத்தில் சொல்லப்படுவது உண்டு.
மத்தியப்பிரேதேச மாநிலத்தின் பல முக்கிய கம்பெனிகளை இவர்கள் வாங்கிக் குவித்தார்கள். சுரங்கங்கள்கூட இவர்களால் விழுங்கப்பட்டது. முடிவெட்டக்கூட ஓபராய் ஹோட்டலுக்குப் போவது சுக்லாவின் பாணியாக இருந்தது. ''இதையெல்லாம் நீங்கள் ஆடம்பரம் என்று எப்படி சொல்கிறீர்கள்?'' என்று இயல்பாகக் கேட்டார் அவர்.
கலாசாரக் காவலராக தன்னைக் காட்டிக்கொண்ட சுக்லா, காம ரசம் பொங்கும் காட்சிகள் இருந்த படங்களை வரவிடாமல் பார்த்துக்கொண்டார். ஆனால், வன்முறை மற்றும் உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள் நிறைந்த 'ஷோலே’ படத்தை சஞ்சய்க்கு அமிதாப் நெருக்கம் என்பதால், அப்படியே சென்சார் இல்லாமல் ஓகே செய்தார். சினிமா நிதி கழகத்தின் தலைவராக இருந்த கரஞ்சியா எனும் ஃபிலிம்ஃபேர் இதழின் ஆசிரியர் அந்தப் பதவியை ராஜினாமா செய்தபோது சொன்ன காரணம் என்ன தெரியுமா? 'சுக்லாவை ஒவ்வொரு முறை விமான நிலையத்தில் போய் வரவேற்பது என் வேலையில்லை’ என்றார். வித்யா சின்ஹா எனும் நடிகை வெளிநாட்டுக்குப் போனபோது, 'உங்கள் பெயரிலும் வித்யா உள்ளது, என் பெயரிலும் வித்யா இருக்கிறது’ என்று சொல்லி வழிந்ததாகச் சொல்வார்கள். ராய்ப்பூரில் இந்திராவுக்கு எதிராக இருந்த விஜயலக்ஷ்மி பண்டிட் பேசிய உரையின் 75 வரி செய்தி வானொலியில் வந்ததற்கு டெலிகிராபின் மூலம் அந்தச் செய்தியை பதிவுசெய்த அதிகாரியை உடனடியாக  டிஸ்மிஸ் செய்யச் சொன்னவர் சுக்லா.
கே.என்.பிரசாத், ஏ.கே.வர்மா (இவர் சுக்லாவின் வகுப்புத் தோழர்) ஆகியோர் இதழியல் மற்றும் சினிமா நபர்களை மிரட்டுகிற வேலையைச் சிறப்பாக செய்தார்கள். தயாள் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்திரிகைகள் எதைப் பற்றியும் மூச்சுவிடாமல் இருப்பதைப் பார்த்துக்கொண்டார். கிஷோர் குமார் அரசாங்க விளம்பரத்தில் (குடும்பக் கட்டுப்பாட்டு) நடிக்க மறுத்ததால், அவரது பாடல்களை ஒலிபரப்ப மறுத்தனர். மத்திய தகவல் சர்வீஸ் துறையை ஒட்டுக்கேட்கும் கருவிகள் வாங்கவும், உளவு பார்க்கும் கருவிகள் வாங்கவும் பயன்படுத்திக்கொண்டார் சுக்லா. அவை எங்கே, எதற்குப் போனது என்று தெரியாது. ஒரு கட்டத்தில் பத்திரிகைகளின் ஆசிரியராக யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முயல்கிற அளவுக்கு சுக்லா செயல்பட்டு சஞ்சய் காந்தியின் நன்மதிப்பைப் பெற்றார். ஆனால், உலகம் முழுவதும் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் நாற்றம் எடுக்கும் அளவுக்கு சுக்லாவைத் திட்டின. ஆனால், அதைப் பற்றி எல்லாம் சுக்லாவுக்குக் கவலையே இருந்தது இல்லை!

- Vikatan

No comments:

Post a Comment