Saturday, February 15, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! 22

'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்றான் பாரதி. அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டு இருந்த காலக்கட்டத்தில், அடக்குமுறைக்கு எதிராகவும் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் ஒரு பத்திரிகை முடிவெடுத்தால், அது என்ன மாதிரியான இருண்ட காலத்துக்குள் பயணிக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக நம் மனக்கண் முன் நிற்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்!
 இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்காவின் உறவினர் ஷிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் ஒருநாள் கோயங்காவை வந்து சந்தித்தார். 'காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கைகளை நீங்கள் அதிகமாகக் கடைப்பிடிக்கிறீர்கள். அதனால், உங்கள் மகன் பி.டி.கோயங்காவை மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்போவதாகச் சொல்கிறார்கள்’ என்று சொன்னார். 'இதை உங்களிடம் யார் சொன்னது?’ என்று கேட்டார் கோயங்கா. பம்பாய் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரஜனி படேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே.பரூவாவும் தன்னிடம் இதனைச் சொன்னதாக ஜெயின் சொன்னார். ஷிரியன் பிரசாந்த் ஜெயின், கோயங்காவின் மகனின் மாமனார். தனது மருமகனைக் கைதுசெய்யப்போவதான தகவல் மாமனாருக்கே சொல்லப்பட்டால் என்ன செய்வார்? 'அந்த மாதிரி எந்தக் கைது நடவடிக்கையும் வேண்டாம்’ என்று அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து அதாவது ஜூலை 21-ம் தேதி (1975) டெல்லி சென்றிருந்தார் கோயங்கா. அப்போது அவரிடம் பம்பாய் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரஜனி படேல் பேசினார். 'உங்கள் மகன் சம்பந்தமாக பிரதமரிடம் பேசினேன். உங்கள் மகனை கைதுசெய்ய வேண்டாம் என்று பிரதமர் சொல்லிவிட்டார்’ என்று சொன்னார். இது சம்பந்தமாக பிரதமரை ஜெயின் மட்டும் வந்து சந்திக்கட்டும் என்று ரஜனி படேல் அழைத்தார். மறுநாள், அவரே போன் செய்து, பிரதமரை ஜெயின் சந்திக்க வேண்டாம் என்றும் சொன்னார். உங்கள் மகனை கைதுசெய்யப்போகிறோம் என்றும் கைதுசெய்ய மாட்டோம் என்றும் பிரதமரைச் சந்தியுங்கள் என்றும் பிரதமரைச் சந்திக்க வேண்டாம் என்றும் மாற்றி மாற்றி குழப்பிக்கொண்டே இருந்ததற்கு என்ன காரணம்?
ஷா கமிஷன் முன் தாக்கல்செய்த தனது வாக்குமூலத்தில் கோயங்கா சொல்கிறார்:
''வயதான காலத்தில் எனது ஒரே மகனைச் சிறையில் அடைத்து அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், எனது நடவடிக்கைகளை முடக்கவே கைது நடவடிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்த மிரட்டல்களைத் தீவிரப்படுத்தி, எனது பத்திரிகைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்; பின்னர், அதை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களிடம் விற்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகிறது.''
அன்றைய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லாதான் இந்த நடவடிக்கைகள் முழுமைக்குமான சூத்திரதாரி. பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கான கொள்கைகளை மேற்பார்வையிட, பொதுவாழ்வில் உள்ள மூன்று நபர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று சுக்லா கடிதம் எழுதினார். இது எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஆர்.கே.மிஸ்ராவுக்கு கடிதமாக அனுப்பிவைக்கப்பட்டது. முழு அடக்குமுறை காலம் என்பதால், இதனை முழுமையாக நிராகரிக்க கோயங்காவால் இயலவில்லை. ஆசிரியர் குழுவுக்கான கொள்கைகளை இந்த மூவர் கண்காணிக்கட்டும் என்பதை கோயங்கா ஏற்றுக்கொண்டார். திடீரென அமைச்சர் சுக்லா தனது முடிவை மாற்றினார். 'ஆசிரியர் குழுவைக் கண்காணிக்கும் குழுவால் எந்தப் பயனும் இல்லை. எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் அரசு நியமிக்கும் இயக்குநர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும். அதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் மிசா சட்டத்தின் கீழ் கோயங்கா, அவரது மகன் பி.டி.கோயங்கா, அவரது மருமகள் சரோஜ் கோயங்கா ஆகிய மூவரையும் கைதுசெய்துவிடுவோம்’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 'இவை அனைத்தும் நான் சொல்லவில்லை. சூப்பர் பிரைம் மினிஸ்டர் சொன்னவை’ என்றார் சுக்லா. அவர் அப்படிச் சொன்னது சஞ்சய் காந்தியை. இதைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் குழும இயக்குநர்கள் குழு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இயக்குநர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சட்டதிட்டங்களை அமைச்சர் சுக்லாவும் கோயங்காவும் சேர்ந்து தயாரித்தார்கள். அவை அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதன்மை ஆசிரியர் மல்கோகர், எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் குல்தீப் நய்யார் ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அதனை கோயங்கா மறுத்துவிட்டார். கொள்கைரீதியான முடிவுகளை இயக்குநர்கள் எடுப்பது என்பதை மீறி, தினப்படியான நடவடிக்கைகளிலும் இந்த இயக்குநர்கள் தலையிட்டார்கள். அதனை கோயங்கா ஏற்றுக்கொள்ளவில்லை. 'இவை செயல்படுத்த முடியாதவை’ என்று கோயங்கா எதிர்ப்புத் தெரிவித்தார். உடனடியாக அவசரக் கூட்டம் கூட்டி, 'அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பலதடவைகள் நீங்கள் மீறிவருகிறீர்கள்’ என்று அமைச்சர் சுக்லா குற்றம்சாட்டினார்.
'எந்த இடத்திலும் நாங்கள் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறவில்லை. ஒரே ஒரு செய்தியை மட்டும் வெளியிட்டோம். அதுவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தப்பட்டது. மற்றபடி எந்த மீறலும் செய்யவில்லை. நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பல பத்திரிகைகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாகக் கண்டித்து எழுதி இருக்கும்போது... எக்ஸ்பிரஸ், சில யோசனைகளைத்தான் சொன்னது’ என்று கோயங்கா சொன்னார். 'மற்ற பத்திரிகைகள் எப்படியோ போகட்டும். இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது ஆதரவை அரசுக்கு முழுமையாகத் தர வேண்டும்’ என்று அமைச்சர் சுக்லா சொன்னார். 'இது பாரபட்சமான நடவடிக்கை’ என்று கோயங்கா சொன்னார். 'எங்களது திட்டங்களை ஏற்காவிட்டால் கடுமையான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டிவரும்’ என்று சுக்லா நேரடியாகவே எச்சரிக்கை செய்தார். கைது மிரட்டல்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்தன.
இந்த நிலையில் பிரதமர் இந்திராவின் செயலாளர் பி.என்.தர் என்பவருக்கு கோயங்கா ஒரு கடிதம் எழுதினார். தன்னை அமைச்சர் வி.சி.சுக்லா மிரட்டும் கதையை அதில் முழுமையாக விவரித்தார். 'இந்தியன் எக்ஸ்பிரஸும் சரி, வேறு எந்தப் பத்திரிகையும் சரி, தங்களது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்துவிட்டு, யாரோ ஒருவருடைய நோக்கத்துக்காகச் சேவை புரிய முடியாது என்று எப்போதும் நான் குறிப்பிட்டு வருகிறேன். அதுதான் என் முடிவு. இயக்குநர்கள் குழுத் தலைவர் என்பவர் நிர்வாகத்தின் பிரதிநிதி மட்டுமே. அவருடைய மேலாதிக்கத்துக்குப் பணிந்து, ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தொழில் ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை. அத்தகைய மேலாதிக்கத்தைத்தான் அமைச்சர் சுக்லா கேட்கிறார். இதை ஏற்றுக்கொண்டால் ஒட்டுமொத்த ஆசிரியர் குழு ஊழியர்களும் தார்மீக பலம் இழந்துவிடுவார்கள். அதன் விளைவாகப் பத்திரிகையின் தரமும் நம்பகத்தன்மையும் சீரழிந்துவிடும்’ என்று எழுதினார்.
ஆனாலும், கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. தினமும் இந்தத் தொந்தரவுகளை அவரால் சமாளிக்க முடியவில்லை. அரசு சார்பு இயக்குநர்கள் 1976-ம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்கள். அடுத்த மூன்றாவது மாதம் கடுமையான இருதய நோயால் கோயங்கா பாதிக்கப்பட்டார். இரண்டு மாத காலம் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாயிற்று. அப்போது எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த எஸ்.மல்கோகரை அரசு பிரதிநிதிகள் திடீரென்று நீக்கினர். அவருடைய இடத்துக்கு வி.கே.நரசிம்மன் நியமிக்கப்பட்டார். அவர் அரசுக்குக் கட்டுப்பட்டு, பயப்படும் ஆசிரியராகச் செயல்படவில்லை. துணிச்சல் மிக்க போராட்டங்களை அரசு இயக்குநர்களுக்கு எதிராக நடத்தினார்.
மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த பிறகும், கோயங்கா தன்னுடைய போராட்டத்தை நிறுத்தவில்லை. ஒருநாள் அமைச்சர் வி.சி.சுக்லாவின் அறைக்கே சென்று, 'உங்களுக்கு தைரியம் இருக்குமானால், என்னைக் கைதுசெய்து பாருங்கள்’ என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டு வந்தார். இப்படி பகிரங்கமாக மிரட்டிய பிறகும், கோயங்காவை கைதுசெய்ய முடியாமல் தடுத்தது எது?
இந்திராவின் கணவர் ஃபெரோஸ் காந்தி, தனது பத்திரிகையுலக வாழ்க்கையை இந்தியன் எக்ஸ்பிரஸில் தொடங்கியவர். அவருக்கும் கோயங்காவுக்கும் நல்ல நட்பு உண்டு. இந்திரா, ஃபெரோஸ் காந்தி ஆகிய இருவரும் தங்களுக்குள் எழுதிய கடிதங்கள் பல கோயங்காவிடம் இருப்பதாகவும், அதிகமான மிரட்டலைச் செய்தால் இதனை கோயங்கா வெளியில் விட்டுவிடக்கூடும் என்று செய்தி பரப்பப்பட்டது. இந்தத் தகவல் காரணமாக, 'கைது நடவடிக்கை தவிர மற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும்’ என்று சுக்லாவுக்கு அறிவுரை சொல்லப்பட்டது.
அரையாண்டு முடிந்ததும் அரசு சார்பு இயக்குநர்களை போர்டு கூட்டத்தில் மீண்டும் தேர்வுசெய்ய வேண்டும் அல்லவா? அதனை தந்திரமாக தவிர்த்தார் கோயங்கா. இயக்குநர்களை நியமித்த பிறகும் எந்தப் பயனும் இல்லாமல் போனதை உணர்ந்த அரசு, அதனை வலியுறுத்தவும் இல்லை. இப்படியாக அந்த அடக்குமுறை நாடகம் முடிந்தது. அடுத்து வருமான வரி வழக்குகளை தூசிதட்டி எடுத்தார்கள். 'இந்த வழக்குகளை மீண்டும் எடுப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று அமைச்சர் சுக்லாவுக்கு கோயங்கா கடிதம் அனுப்பினார்.
1976-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸின் எட்டு பதிப்புகளுக்கும் முன்தணிக்கை அமல்படுத்தப்பட்டது. அனைத்து செய்திகளையும் காட்டிவிட்டுத்தான் பிரசுரிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு செய்தியைத் தணிக்கை செய்துதருவதைத் தாமதப்படுத்தி, பத்திரிகையை உரிய நேரத்தில் வரவிடாமல் தடுக்கும் தந்திரமாகவே இந்த முன்தணிக்கை பயன்படுத்தப்பட்டது. காலை 5 மணிக்கு வெளியாக வேண்டிய செய்தித்தாள், மதியம் 2 மணிக்குத்தான் வரமுடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தினர்.
திடீரென்று ஒருநாள், கோயங்காவைச் சந்தித்தார் சஞ்சய் காந்தியின் அன்றைய வலதுகரமாக இருந்த கமல்நாத். இன்று அவர் மத்திய அமைச்சராக இருக்கிறார். 'ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் வி.கே.நரசிம்மனை எடுத்துவிட்டு, ஷமீம் என்பவரை நியமியுங்கள்’ என்றார். இதனை கோயங்கா கடுமையாக எதிர்த்தார். 'ஷமீம் அனுபவம் இல்லாதவர். அவரை நியமித்தால் பத்திரிகை அழிந்து போகும்’ என்றார். அரசு நியமிக்கச் சொன்ன ஷமீம், ஒரு உள்ளூர் செய்தியாளர். ஒரு பத்திரிகையின் முதன்மை ஆசிரியருக்கு என்ன மாதிரியான தகுதி எல்லாம் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லி கோயங்கா வாதிட்டார். அதனை அமைச்சர் சுக்லாவும் கமல்நாத்தும் ஏற்கவில்லை. அனைத்து கிளைகளிலும் இருந்த பொறுப்பாசிரியர்களை மாற்றிவிட்டு, துணைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று அடுத்த நெருக்கடி கொடுத்தார்கள். அரசால் நியமிக்கப்பட்ட இயக்குநர் குழுவுக்கு துணையாக இன்னொரு குழு அமைக்க வேண்டும் என்றார்கள். இந்தக் குழுவில் கே.கே.பிர்லாவும் கமல்நாத்தும் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பதவியேற்றுக்கொண்டதுமே,  எக்ஸ்பிரஸ் முதன்மை ஆசிரியர் வி.கே.நரசிம்மனை நீக்கினார்கள். தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி கோயங்கா இதனைத் தடுத்தார்.
கோபம் கொண்ட அரசு தரப்பு என்ன செய்தது தெரியுமா? எக்ஸ்பிரஸ் வளாகத்துக்கு மின்சாரத்தைத் தடைசெய்தார்கள்!

- Vikatan

No comments:

Post a Comment