Sunday, February 23, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 25

ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட தலைவர்கள் சித்ரவதைச் சிறையில் இருந்தனர். பெரிய நாளிதழ்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டு இருந்தன. வட இந்தியாவே இந்திரா, சஞ்சய், சுக்லா வட்டாரத்தால் வறுத்தெடுக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகம் தனித் தீவாக இருந்தது. இங்கு காங்கிரஸ் ஆட்சி இல்லாதது மட்டுமல்ல, கருணாநிதி முதல்வராகவும் இருந்தார். அவசரநிலைப் பிரகடனத்தை ஆரம்பகட்டத்திலேயே எதிர்ப்பது என்று துணிந்து முடிவெடுத்தார் அவர்.

''உலகத்தின் மிகப் புகழ்வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியத் திருநாட்டில், அண்மைக் காலமாக ஆளும் காங்கிரஸார் கடைப்பிடிக்கும் போக்கும், பிரதமர் இந்திரா காந்தியார் அவர்கள் நடைமுறைப்படுத்தும் காரியங்களும், ஜனநாயக ஒளியை அறவே அழித்து நாட்டை சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்து வருவது கண்டு தி.மு.க. செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறது...
உண்மையின் உருவம் மறைக்கப்பட்டு பொய்யின் நிழலில் நின்றுகொண்டு எதிர்க்கட்சிகளை அடக்குவதற்குத் திட்டம் தயாரித்து, அந்தத் திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான போலி காரணங்களைத் தேடி அலைந்து, வீண் அபவாதங்களை வாரியிறைத்து, எடுத்ததற்கெல்லாம் சதி, வெளிநாட்டுத் தொடர்பு, பிற்போக்குவாதிகள் என்ற சொற்கணைகளைப் பொழிந்து, காலாகாலத்துக்கும் இந்திய மக்களுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் திருமதி இந்திரா காந்தி நேற்றைய தினம் (26.6.1970) அதிகாலையில் சர்வாதிகாரத்துக்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார்...
சதி நடத்துவோர், வன்முறையில் ஈடுபடுவோர், தகாத வார்த்தையில் பேசுவோர், எழுதுவோர் தண்டிக்கப்பட ஏற்கெனவே எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போது, நாட்டைச் சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வருவது தேவைதானா? ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் எனக் கூறி, சர்வாதிகாரக் கொற்றக்குடையின்கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா?'' - இப்படி ஒரு தீர்மானத்தைப் போடும் துணிச்சல் அன்றைய தி.மு.க-வுக்கு இருந்தது. அன்று முதலமைச்சர் நாற்காலியில் இருந்த கருணாநிதிக்கும் இருந்தது. இப்படி ஒரு தீர்மானம் வேறு எந்தக் கட்சியிடம் இருந்தும் அன்றைய இந்தியாவில் வரவில்லை.
அன்றைய தினம் மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி சென்னையில் இருந்தார். ''தி.மு.க. தீட்டியிருக்கும் தீர்மானத்தை வாழ்த்துவதற்குத்தான் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற தலைவர்களான காந்திஜி, ராஜாஜி, அண்ணா ஆகியோரின் வருந்தும் இதயங்களை டாக்டர் கருணாநிதி நிச்சயம் மகிழ்வுற வைத்திருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும் குரலாகவும் தமிழ்நாடு ஆகியிருக்கும் இந்த நேரம்போல், பாதித் தமிழனாக இருக்கும் என்னுடைய பெருமை இதற்கு முன் வேறு எப்போதும் என்றும் உயர்ந்திருக்கவில்லை'' என்று அறிக்கைவிட்டார். காந்தியின் மகனுக்கும் ராஜாஜியின் மகளுக்கும் பிறந்தவர் ராஜ்மோகன் காந்தி. அதனால்தான் தன்னை பாதித்தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டார்.
அப்போது சோழிங்கநல்லூரில் பேசிய பெருந்தலைவர் காமராஜர், எமர்ஜென்சி குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியும் அன்றைய கல்வி அமைச்சர் நெடுஞ்செழியனும் காமராஜரைச் சந்தித்தார்கள். அப்போது காமராஜர் கண் கலங்கினார். 'தேசம் போச்சு, தேசம் போச்சு’ என்று அவர் சொன்னார். 'இந்த சர்வாதிகாரத்தை நீங்கள்தான் தடுக்க வேண்டும். நீங்கள் சம்மதித்தால் உடனே நாங்கள் அமைச்சரவையை ராஜினாமா செய்துவிட்டு உங்கள் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம்’ என்று கருணாநிதி சொல்ல... 'இந்தியாவிலேயே இப்போது தமிழகத்தில்தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். அதனால் பொறுமையாக இருங்கள்’ என்று காமராஜர் சொன்னார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே காமராஜர் இறந்தும் போனார்.  
சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டம் கூட்டி, எமர்ஜென்சியை திரும்பப்பெற முழக்கமிட்டார்கள். நாடாளுமன்றத்தில் எமர்ஜென்சிக்கு ஆதரவாகத் தீர்மானம் வந்தபோது, தி.மு.க. அதனைக் கடுமையாக எதிர்த்தது. எந்நேரமும் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற சூழ்நிலை இருந்தது. அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று கருணாநிதியும் தினமும் பேசிவந்தார். நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இந்திரா, 'இந்தியாவில் கட்டுப்பாடு இல்லாத இரண்டு தீவுகள் இருக்கின்றன’ என்று சொன்னார். ஒன்று, தி.மு.க. ஆண்டு வந்த தமிழகம். இன்னொன்று, ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி செலுத்திவந்த குஜராத். அங்கு முதல்வராக பாபுபாய் படேல் இருந்தார்.
வட சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு விழா 20.1.76 அன்று நடந்தது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியையும் குஜராத் முதல்வர் பாபுபாய் படேலையும் அழைத்திருந்தார்கள். இது காங்கிரஸ் அரசுக்கு கடுமையான கோபத்தைக் கொடுத்தது. அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பரூவா, 'ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்ததுபோல தி.மு.க-வையும் தடைசெய்ய வேண்டும்’ என்று பம்பாயில் பயமுறுத்தினார். அதில் இருந்து 10-வது நாள் ஜனவரி 31-ம் தேதி மாலையில் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு பிப்ரவரி 15-ம் தேதி திறப்பு விழாவுக்கு காத்திருந்தது வள்ளுவர் கோட்டம். கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவருக்கு 75 அடி சிலை அமைக்கும் அறிவிப்பு அப்போதுதான் வெளியிடப்பட்டு இருந்தது. அனைத்துக்கும் தடைபோடும் விதமாக ஆட்சி கலைக்கப்பட்டது.
ஆட்சி கலைக்கப்பட்ட அன்றைய தினமே கருணாநிதி வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாதுகாவலர்கள் சென்றுவிட்டார்கள். கோபாலபுரம் வீட்டுக்குள் கைது நோக்கத்தோடு காவலர்கள் நுழைந்தனர்.
'என்னைக் கைதுசெய்ய வந்துள்ளீர்களா?’ என்று கருணாநிதி கேட்டார். 'இல்லை, உங்கள் மகனைக் கைதுசெய்ய வந்துள்ளோம்’ என்றார்கள். 'அவர் இங்கு இல்லை. வெளியூர் போயிருக்கிறார்’ என்றார் கருணாநிதி. 'வீட்டுக்குள் சென்று சோதனை போட்டுப் பார்க்கலாமா?’ என்றார்கள் காவலர்கள். உள்ளே செல்ல கருணாநிதி அனுமதித்தார். உண்மையில் ஸ்டாலின் அங்கு அப்போது இல்லை. வெறுங்கையோடு திரும்பினார்கள் காவலர்கள். ஆட்சிபோன இரண்டு மணி நேரத்தில் முதலமைச்சராக இருந்தவர் வீட்டில்தான் இந்தக் காட்சி. மறுநாள் ஸ்டாலின் வந்ததும், கருணாநிதியே ஐ.ஜி-க்கு தகவல் சொன்னார். உடனே காவலர்கள் வந்து அவரைக் கைதுசெய்தனர். மறுநாள் முரசொலி மாறன் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க-வினர் கைதானார்கள். மூன்றே நாளில் பல ஆயிரம் பேரைக் கைதுசெய்தார்கள். அன்று பத்திரிகை தணிக்கை இருந்ததால், கைதானவர்கள் பட்டியலை பத்திரிகையில் வெளியிட முடியாது. கருணாநிதி தந்திரமாக ஒரு காரியத்தைச் செய்தார்.
பிப்ரவரி 3-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம். கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு கட்சிக்காரர்கள் மலர் வளையம் வைப்பது வழக்கம். கைதானவர்கள் பட்டியலை முழுமையாக வெளியிட்டு, 'அண்ணா சதுக்கத்துக்கு மலர்வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்’ என்று கருணாநிதி தலைப்பிட்டார். கருணாநிதி மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருக்கின்றன என்று துண்டு பிரசுரங்களை அச்சடித்து வெளியிட்டார்கள். அடுத்த சில நாட்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். கொடுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டதாகவும், அதில் மொத்தம் 54 புகார்கள் இருப்பதாகவும், அதில் கருணாநிதி மீது 27 புகார்கள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஓம் மேத்தா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பழைய காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்பினரும் கைதுசெய்யப்பட்டார்கள். பத்திரிகை தணிக்கை காரணமாக அனைத்துச் செய்திகளும் அடக்கப்பட்டன. 'இனி கருணாநிதி என்ற பெயரால் எழுதக் கூடாது’ என்று சொல்லப்பட்டதால், 'கரிகாலன் பதில்கள்’ என்று கருணாநிதி எழுத ஆரம்பித்தார். பேய், பூதம் போன்ற மூடநம்பிக்கை பற்றி கருணாநிதி எழுதிய கேள்வியைத் தடைசெய்தார்கள். 'இது மறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கிறது’ என்று காரணம் சொல்லப்பட்டது.
ஒரு மாதம் கழிந்திருக்கும். மத்தியச் சிறைக்கு கருணாநிதி செல்கிறார். ஸ்டாலினையும் முரசொலி மாறனையும் மட்டுமே பார்க்க அனுமதி தரப்படுகிறது.
'அடித்தார்களாமே?’ என்று கருணாநிதி கேட்க, 'இல்லை’ என்று ஸ்டாலின் சொன்னார். சுற்றிலும் போலீஸ்காரர்கள் இருந்ததால் ஸ்டாலின் உண்மையைச் சொல்ல முடியவில்லை. அடித்தார்கள் என்று சொல்லியிருந்தால், மறுநாளும் அடி விழுந்திருக்கும். இப்போது இடிக்கப்பட்டு மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கும் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருட்டு அறையில் அப்போது நடந்த காட்சிகள், இப்போது நினைத்தாலும் ரத்தம் உறைய வைக்கும்!

- Vikatan

No comments:

Post a Comment