Thursday, February 6, 2014

ஆறாம் திணை - 74 மருத்துவர் கு.சிவராமன்,

- Vikatan Article

பொங்கல் சமயம் பரணில் இருந்த வெண்கலப் பானையை எடுக்கும் முயற்சியின்போது, ஆக்கர் குத்து வாங்கி நெடுவாக்கில் பிளந்துகிடந்த பம்பரம் கையில் தட்டுப்பட்டது. நைந்துகிடந்த அந்தப் பம்பரக் கயிற்றின் நுனியில் போட்டிருந்த முடிச்சு, 35 வருடங்களை விழுங்கியிருந்தது. ஆக்கர் வைத்து, அழுகையுடன் பிளக்கப்பட்ட அந்தப் பம்பரம்...  தொலைந்த நட்பு, கோலிக்காய் கொடுத்து வந்த புது சிநேகம், பக்கத்து வீட்டுப் பெண்களின் கத்திரிப் பூ பாவாடையைக் கையில் பிடித்து, நொண்டியடித்து ஆடிய பாண்டி விளையாட்டில் முளைத்த எள்ளல், டவுன் மாமா வீட்டுப் பையன் சொல்லித்தந்த புது ஐஸ்பால் விளையாட்டு, பால்காரத் தாத்தா முருங்கை மரத்தில் சீவிய கில்லி பின்பு ஒருமுறை வீசி அடித்ததில் அவர் மண்டையையே பதம் பார்த்த வரலாறு... என அத்தனை நினைவுகளையும் வரிசைக்கிரமமாக மீட்டெடுத்தது!
ஆனால் இன்றோ, இது எதற்கும் சாத்தியம் இல்லாது, கணினி முன் தனியாக அமர்ந்து சிறுவர்களால் எப்படி குதூகலிக்க முடிகிறது என வியப்பாக இருக்கிறது. 'உங்கள் எதிராளியைக் கொல்ல கத்தி வேண்டுமா, துப்பாக்கியா, எறிகுண்டா?’ என கணினி கேட்க, பட்டாக்கத்தியை சிறுவன் தேர்ந்தெடுக்க, கணினியில் கொலைவெறி விளையாட்டு தொடங்குகிறது. போலீஸ் ஒரு புறம் துரத்த, வெட்டிச் சாய்க்கும் வெறியுடன் சிறுவன் விளையாடும் அந்தக் கணினி விளையாட்டில் வியர்வையையும் கற்பனையையும் தொலைக்கும் பிஞ்சுகள் ஏராளம்.
அந்தக் கால மரபு விளையாட்டுகள் உடலையும் மனதையும் ஒருசேர வலுப்படுத்தி மகிழ்விப்பவை. 'இன்னொரு ஐந்து டாலர் கொடுத்தால், நீங்கள் விஷக் கத்தி வைத்து குத்தி விளையாடலாம்...’ எனச் சொல்லித் தராதவை. நடு இரவில் திடுக் என எழுந்து 'கத்தியோடு விரட்றான் மம்மி...’ எனக் கத்த வைக்காதவை.
'எல்லாம் வணிகமயம்’ என்றாகிப் போனதில், இரைக்காமல் வலிக்காமல், வெறி ஆக்ரோஷத்தை மனதுள் விதைத்து அகங்காரம் வளர்க்கும் கணினிக் கொலைகார விளையாட்டுகளை பிஞ்சுகள் விளையாட அனுமதித்து, 'அவன் பாட்டுக்கு அமைதியா கம்ப்யூட்டர் கேம்தான் விளையாடுவான். பசங்களோட வீதி குப்பையில் விளையாடுறது இல்லை. பொல்யூஷனே அவனுக்குச் சேராது’ என சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் பெற்றோருக்குத் தெரிவது இல்லை, அந்த அமைதிக்குப் பின் கிளை பரப்பும் அவலங்கள்.
'ஓடி விளையாடுறதா? அவன் ரொம்ப வீக். அலர்ஜி. லேசா வீசிங் வேற. புழுதியில் எல்லாம் விளையாட அனுப்ப முடியாது’ என்போருக்குச் சில விஷயங்கள்.
அழகாக விளம்பரப்படுத்தப்பட்டு புட்டியில் வரும் சத்து பான பவுடர்களில் நீர்த்துவத்தை நீக்கி ஸ்ப்ரே டிரை செய்யப்பட்ட பால்-மால்ட், செயற்கை உயிர்ச் சத்து, உங்கள் குழந்தை அடம்பிடித்து அப்படியே சாப்பிடவைக்கச் சொல்லும் கோகோ முதலான பொருள்கள் தவிர, கட்டிப்போகாமலும் கெட்டுப்போகாமலும் இருக்கச் சேர்க்கப்படும் ரசாயனங்களும் சேர்ந்திருக்கும். ஒரு பாசிப்பயறின், ஒரு முட்டையின், தூய மல்லைச் சம்பாவின் அத்தனை நல்ல குணங்களையும் அவை தந்துவிட முடியாது. பப்பாளியின், தர்பூசணியின், பீட்ரூட்டின் சுவையையும் மணத்தையும் தொழில்நுட்பம் அச்சுப்பிசகாமல் அப்படியே தரலாம்; குணத்தை அப்படியே தரமுடியாது.
சமீபத்தில் இங்கிலாந்தில், 'ஸ்ட்ராபெர்ரி மணமுடைய பானத்தில் என்ன சேர்க்கிறீர்கள்?’ என நீதிமன்றம் விசாரித்தபோது, சுமார் 84 வகை உப்புகளின் பெயர்களை அவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் வியாபார பந்தங்கள்தாம் இங்கேயும் பல பழச்சாறுகளை விதம்விதமாக விற்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
'எல்லாம் சரி... வெரைட்டி வெரைட்டியாக சிறுதானியத்தில் எப்படிச் செய்வது?’ எனக் கேட்போருக்கு ஒரு செய்தி.
வெரைட்டி என்பது பொருளில் இல்லை. உங்கள் மனதில், நலம் மட்டும் தேடும் கற்பனையில், அக்கறையில்தான் உள்ளது. பள்ளிக்கு அவசரமாகக் கிளம்பும் குழந்தைக்கு வாரம் ஒருநாள் சிவப்பு அரிசியும், ஆர்கானிக் வெல்லமும், காய்ந்த திராட்சையும் சேர்த்து இனிப்புப் பொங்கலும் தொட்டுக்க நேந்திரம் வாழைப்பழத் துண்டுகளும் கொடுக்கலாம். மறுதினம் பல தானியத் தோசையும் அதற்கு தேங்காய்ச் சட்னியும், இன்னொரு நாள் தினையும் பாசிப் பருப்பும் மிளகும் சேர்த்து வெண்பொங்கலும் சாம்பாரும், அடுத்த நாள் கேழ்வரகு உளுந்து சேர்த்த இட்லி, வறுத்த நிலக்கடலைச் சட்னியும், அதற்கு அடுத்த நாள் குதிரைவாலி, உளுந்து சேர்த்து அரைத்த மாவில் சுட்ட தோசையும் (மிக மென்மையாக வரும் தோசை) தொட்டுக்கொள்ள தக்காளி வெங்காயம் சேர்த்த காரச் சட்னியும், மீதம் உள்ள இரண்டு நாட்களில் அவல் கொழுக்கட்டை, கேழ்வரகு இடியாப்பம், கம்பு தோசை/ரொட்டி, கண்டசாலா அரிசி ஆப்பம் - கடைந்த தேங்காய்ப் பால் எனக் கொடுத்துப் பாருங்கள். அறிவும் ஆற்றலும் பெருகுவதோடு பக்கவிளைவாக அன்பும் ஊற்றெடுத்துப் பொங்கும். தேங்காயில் நோய் எதிர்ப்பும், நேந்திரம்பழத்தில் தேவையான உடல் எடையும், நிலக்கடலை, உளுந்தில் இருந்து புரதமும், கேழ்வரகில் இருந்து கால்சியமும், கம்பில் இருந்து இரும்பும் கனிமமும், குதிரைவாலி, கண்டசாலா, மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருந்து ஸ்மார்ட் கார்போஹைட்ரேட் எனும் லோ கிளைசிமிக் சர்க்கரை நாரும் கிடைக்கும்.
குழந்தையின் மென்மையான உள்ளங்கையை சமையல் களமாக்கி, 'இது இட்லி, இது சாம்பார் சாதம், இது கத்திரிக்காய் பொரியல், இது தயிர்ச் சோறு...’ என ஒவ்வொரு விரலாக மடித்து, அம்மாவுக்கு ஒரு வாய், அப்பாவுக்கு ஒரு வாய், பாட்டிக்கு ஒரு வாய், தாத்தாவுக்கு ஒரு வாயாம். அப்புறம் தொழுவத்துல உள்ள கன்னுக்குட்டிக்கு, அப்புறமா இந்தச் செல்லக் குட்டிக்கு’ என நண்டு ஊறுது, நரி ஊறுது எனச் சொல்லி மகிழ்வித்து உறவை, உயிரைப் போற்றி உணவூட்டிய சமூகம் இது. இதன் அக்கறை தரும் சுவையையும் பயனையும் எந்த உப்பும் உயர் புட்டி உணவும் தந்துவிடவே முடியாது!
- பரிமாறுவேன்...

No comments:

Post a Comment