Saturday, February 15, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 23

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழைத் தடை செய்வதற்கான தந்திரங்கள் தொடங்கின.

எக்ஸ்பிரஸ் வளாகத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்ட நாள் 30.9.1976. இதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு மின்சார வாரியத்துக்கு விடுமுறை. திங்கள்கிழமை வந்துதான் அவர்களால் சரிசெய்ய முடியும். இதன்படி பார்த்தால் நான்கு நாட்கள் நாளிதழ் வெளிவராது. இதற்காகவே அந்த மின்தடையை ஏற்படுத்தினார்கள்.
1.10.76 அன்று நாள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோயங்கா ஒரு ரிட் மனுத் தாக்கல் செய்தார். தடைசெய்யப்பட்ட மின் இணைப்பை உடனடியாக வழங்கக் கோரி அன்று மாலையே உத்தரவு போட்டது நீதிமன்றம். ஆனால், 2.10.76 மதியம் ஒரு மணி வரை மின் இணைப்பு சரி செய்யப்படவில்லை. 'நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடுவேன்’ என்று கோயங்கா கூறிய பிறகு மதியம் 1.30 மணிக்கு மின் இணைப்பு தரப்பட்டது.
பத்திரிகை வெளிவருவதையே, முற்றிலுமாகத் தடுக்கும் வேலைகளைத் தொடங்கினார்கள். 4-ம் தேதி காலையில் போலீஸ் படை, எக்ஸ்பிரஸ் அச்சகத்துக்குள் நுழைந்தது. உடனடியாக எக்ஸ்பிரஸ் தொழிலாளர்களை வெளியேற உத்தரவு போட்டார்கள். சட்டப்படியான எந்த உத்தரவு நகலும் அவர்கள் கையில் இல்லை. என்ன காரணம் என்று எக்ஸ்பிரஸ் பொது மேலாளர் கேட்டார். 'டெல்லி மாநகராட்சிக்குப் பல லட்சம் ரூபாய் சொத்துவரி செலுத்தவில்லை’ என்று காரணம் சொன்னார்கள். இது சம்பந்தமான தரவுகளைப் பொது மேலாளர் கொடுத்து வாதங்களை வைத்தார். அந்த வளாகம் எக்ஸ்பிரஸின் வேறொரு நிறுவனத்துக்குச் சொந்தமானது. நியூஸ் பேப்பர் நிறுவனம், அந்த கட்டடத்தைக் குத்தகைக்கு எடுத்துத்தான் இயங்கி வந்தது. எனவே எங்களிடம் சொத்துவரி கேட்க முடியாது என்று பொது மேலாளர் சொல்லிப் பார்த்தார். எதனையும் அவர்கள் ஏற்கவில்லை. அச்சக வளாகம் முழுவதையும் அவர்கள் சீல் வைத்தனர். அதன் பிறகு 5, 6 தேதிகளிலும் நாளிதழ் வெளிவர முடியவில்லை. மறுபடி நீதிமன்றம் போவதைத் தவிர கோயங்காவுக்கு வேறுவழி இல்லை.
சொத்துவரி பாக்கியை வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அச்சகத்தைத் திறந்துவிட வேண்டிய சூழ்நிலை வந்ததும், மீண்டும் மின்வாரியம் நெருக்கடி கொடுத்தது. மின்சார டிரான்ஸ்ஃபார்மர்களை காலை 9 முதல் மாலை 6 மணி வரைதான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். ஒரு நாளிதழ், இரவில் அச்சாகி, அதிகாலையில்தான் வெளிவரும். அந்த நேரத்தில் மின்சார டிரான்ஸ்ஃபார்மர்களை பயன்படுத்த முடியாது என்றால் பத்திரிகை எப்படி வெளியாகும்? மின்தடை செய்யக் கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவு இருப்பதால், இப்போது போடப்பட்டது நீதிமன்ற அவதூறு ஆகும். இதனைச் சொல்லி இன்னொரு ரிட் மனு போட்டார் கோயங்கா.
அச்சகம் உள்ள கட்டடத்தின் பூஸ்டர் பம்புகளை பறிமுதல் செய்து 6-ம் தேதி இன்னொரு உத்தரவை போட்டார்கள். இத்தோடு, குளிர்சாதனத்தையும் மோட்டாரையும் பறிமுதல் செய்து, விற்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குளிர் சாதனம், தரைக்கு அடியில் இருக்கிறது. அதை இடித்து எடுக்க முயற்சித்தார்கள். 17-ம் தேதி அன்று இன்னொரு நோட்டீஸ் விட்டு, இரண்டு டிரான்ஸ்ஃபார்மர்களையும் பறிமுதல் செய்யப் போவதாகச் சொன்னார்கள். எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு சொந்தமான பூஸ்டர் பம்புகள், குளிர்சாதன இயந்திரங்கள் 31.10.76 அன்று ஏலம்விடப் போவதாக வேறொரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்கள். ஏலம் எந்தத் தேதியில் நடக்க இருப்பதாகச் சொன்னார்களோ அன்றுதான் விளம்பரமும் தரப்பட்டது.
இதற்கு மறுநாள்தான், டெல்லி கார்ப்பரேஷன் மீது கோயங்கா தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை நடக்க இருந்தது. இந்த வழக்கை வாபஸ் வாங்க நிர்ப்பந்தப்படுத்தியே இந்த ஏல விளம்பரம் வெளியிடப்பட்டது. அசையும் சொத்துக்களை விற்கத் தடை கேட்டு வேறொரு மனுத் தாக்கல் செய்தார் கோயங்கா.
31-ம் தேதி ஏலம் எதுவுமே நடக்கவில்லை. ஆனால், நீதிமன்றத்தில் அதிகாரிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அனைத்துப் பொருட்களையும் ஏலம்போட்டு விற்றுவிட்டோம் என்று சொன்னார்கள். அப்படி விற்கப்பட்டு இருந்தால் அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டார் கோயங்கா. இப்படி நெருக்கடி மேல் நெருக்கடி தொடர்ந்தது.
''1976-க்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிவரக் கூடாது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால் நாங்கள் மேற்கொண்ட கடுமையான பொருளாதாரச் சிக்கன நடவடிக்கை மற்றும் ஊழியர்களின் விசுவாசம் காரணமாக, இறுக்கிப் பிடித்து எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளைக் கொண்டுவர முடிந்தது. நெருக்கடி நிலை முடிவுக்கு வந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில் நாட்டில் நிலவிய சர்வாதிகாரப் போக்குகளுக்கு எதிராகப் பொதுமக்களின் கருத்தை வலுவாக்க எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் தனது கடைசிச் சொட்டு ரத்தத்தைப் பயன்படுத்தின'' என்று கோயங்கா கம்பீரத்துடனும் கண்ணீருடனும் ஷா கமிஷன் முன் கூறினார்.
ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் இதழ் சந்தித்த அவலம் இது. இப்படி ஒவ்வொரு பத்திரிகையும் அடக்கு முறைக்கு எதிரான மூச்சுத் திணறலை இரண்டு ஆண்டுகள் அனுபவித்தன.
செய்திக் கட்டுப்பாட்டை இறுக்கி பத்திரிகைகளின் குரல்வளை நெறிக்கப்பட்டது. செய்தி நிறுவனங்களாக அகில இந்திய அளவில் இயங்கிய யு.என்.ஐ., பி.டி.ஐ. ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களையும், மேலும் இரண்டு சிறிய செய்தி நிறுவனங்களையும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து 'சமாச்சார்’ என்ற நிறுவனமாக ஆக்கினார்கள். பிரஸ் கவுன்சில் அமைப்பே மூடப்பட்டது. 253 பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். குல்தீப் நய்யார் இதில் முக்கியமானவர்.
இந்திரா காந்தி, தனது தலைமுடியை பாப் கட்டிங் வெட்டிக் கொண்டபோது, 'இந்த ஸ்டைல் நன்றாக இருக்கிறதா?’ என்று குல்தீப் நய்யாரிடம்தான் கேட்டாராம். அந்தளவுக்கு இருவருக்கும் நட்பு உண்டு. ஆனால் குல்தீப் நய்யாரையும் இந்திரா விடவில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதும் டெல்லி பிரஸ் கிளப்பில் துணிச்சலாக கூட்டம் கூட்டி கண்டித்தார் குல்தீப் நய்யார். இதைத் தொடர்ந்து இந்திராவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தைப் படித்து கோபமான இந்திரா, உடனடியாக அவரைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தார். புது டெல்லி ரயில் நிலையத்தில் கூடி இருந்த முஸ்லிம்களை அரசுக்கு எதிராகக் கலகம் செய்யும்படி தூண்டியதாக குல்தீப் நய்யார் மீது வழக்குப் போட்டார்கள். ஆனால் உண்மையான காரணம், அவர் எழுதிய கட்டுரைக்காகத்தான்.
'ஈஸ்ட்டன் எகானமிஸ்ட்’ என்ற பத்திரிகையில் வீ.பாலசுப்பிரமணியன் என்ற கட்டுரையாளர், 'இந்தியாவின் கால்நடைகள் பிரச்னை’ என்று ஒரு கட்டுரை எழுதினார். 'நாட்டில் இப்போது 58 கோடி ஆடுகள் உள்ளன’ என்று கட்டுரையை ஆரம்பித்தார். மொத்த மக்களையும் கால்நடைகளாக உருவகப்படுத்தியது அந்தக் கட்டுரை.
மகாத்மா காந்தியின் பொன் மொழியை வெளியிட்டதற்காக ஹிம்மத் (மும்பை) இதழுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அடக்குமுறை தாங்க முடியாமல் 'ஒப்பீனியன்’ ஆசிரியர் தனது பத்திரிகையையே நிறுத்தினார். பத்திரிகையாளர்களைப் போல 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் இருந்தார்கள். வங்காள எழுத்தாளர் சுனாதா சங்கர் ரே, தனது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் முகமாக எழுதுவதையே நிறுத்தினார். கார்ட்டூனிஸ்ட் கே.சங்கர் பிள்ளை, வரைவதை நிறுத்தினார். 'சர்வாதிகாரச் சூழ்நிலையில் சிரிப்பு எதற்கு?’ என்று கேட்டார்.
அரசு செய்தி நிறுவனங்கள் இந்திரா, சஞ்சய் பற்றியே செய்திகளைத் திரும்பத் திரும்பத் தருவதையே தங்களது பணியாக நினைத்தன. இதுபற்றி ராமச்சந்திர குஹா தனது, 'காந்திக்குப் பிறகு’ என்ற நூலில் எழுதுகிறார்:
''ஆல் இந்தியா ரேடியோவும் அரசின் தொலைக்காட்சியும் பிரதமர் மகன் மீது காட்டிய கவனம் அதிக வியப்புக்குரியது அல்ல. ஒரே வருடத்தில் ஆல் இந்தியா ரேடியோவின் டெல்லி நிலையத்தின் வழியாக சஞ்சய் பற்றி 192 செய்திக் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் சஞ்சய்யின் நடவடிக்கைகள் பற்றி தூர்தர்ஷன் 265 செய்திகளை ஒளிபரப்பியது. அவர் ஆந்திரப் பிரதேசத்துக்கு 24 மணி நேரப் பயணம் மேற்கண்டபோது செய்திப்படப் பிரிவு, 'நினைவில் ஒருநாள்’ என்ற ஒரு முழு நீளச் செய்திப் படத்தை மூன்று மொழிகளில் தயாரித்தது.
சஞ்சய் காந்தியின் முக்கியத்துவத்தின் வளர்ச்சிக்கு நிச்சயமானதொரு அடையாளம், மத்திய மந்திரிகளும் மாநில முதல்வர்களும் அவருக்குக் காட்டிய மரியாதை. எந்த அட்மிரலுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு அளிப்பது என்று முடிவு செய்ய பாதுகாப்பு அமைச்சர் பன்ஸிலால், இரு வேட்பாளர்களையும் சஞ்சய் காந்தியிடம் அழைத்துச் சென்றார். சஞ்சய், ராஜஸ்தான் சென்றபோது அவரை வரவேற்க முதல்வரே விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஜெய்ப்பூர் செல்லும் வழியில் 501 வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர் உத்தரப் பிரதேசம் சென்றபோதும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. லக்னோ விமான நிலையத்தில் விமான ஓடு பாதையில் தடுக்கி, சஞ்சய் செருப்பை நழுவவிட்டபோது உ.பி. முதல்வரே அதைக் குனிந்து எடுத்து மரியாதையுடன் அளித்தார்''.
அம்மாவும், மகனும் சேர்ந்து நடத்தும் குடும்ப ஆட்சியின் தொடக்கமாகவே அந்தக் காலக்கட்டம் மாறிப்போனது. சுதந்திர நாளில் நள்ளிரவில் பேசிய நேரு, 'இது விதியுடனான சந்திப்பு’ என்றார். இதனைச் சுட்டிக் காட்டிய ஒரு எழுத்தாளர், 'அவர் மகள் நடத்தியது சர்வாதிகாரத்துடனான சந்திப்பு’ என்று எழுதினார்.

- Vikatan

No comments:

Post a Comment