Saturday, February 1, 2014

ரைடர் மேனியா புகழ் திலீபன்

புல்லட் வைத்திருப்பவர்களுக்கு, ஜனவரி மாதம் பொங்கலுடன் சேர்த்தால் இரட்டைத் திருவிழா. ஏனெனில், அந்தச் சமயத்தில்தான் ரைடர் மேனியா எனும் பைக் சங்கமம் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு புல்லட் கிளப்புகள் ஒன்றிணைந்து, 'ரைடர்ஸ் மேனியா’ எனும் புல்லட் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். கடந்த ஆண்டு சிரபுஞ்சியில் நடந்த இந்த விழா, இந்த ஆண்டு சென்னை மாமல்லபுரத்தில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 52 கிளப்புகள் இதில் கலந்துகொள்ள... இரண்டு நாட்கள் மாமல்லபுரம் புல்லட்டுகளால் திமிறியது.
இந்தத் திருவிழாவை ஒருங்கிணைத்த 'மெட்ராஸ் புல்ஸ்’ கிளப்பின் உறுப்பினர் டேவிட்டிடம் பேசினோம். பைக் ஓட்டுவதுதான் எங்களுக்கு ரிலாக்ஸ். வேலை நேரம் போக, விடுமுறை தினங்களில் சவாலான இடங்களுக்கு அட்வெஞ்சர் ட்ரிப் செல்வோம். எங்களைப் போலவே ஒவ்வொரு மாநிலத்திலும் புல்லட் கிளப்புகள் இருக்கின்றன. இந்த கிளப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் ஏதாவது ஓர் இடத்தில் கூடுவோம். மொத்தம் 52 கிளப்புகள் கலந்துகொள்ளும் ரைடர் மேனியாவுக்கு, வயது 14. இந்தியாவில் உள்ள ரீ-டிசைன் செய்யப்பட்ட, வித்தியாசமான, விசித்திரமான புல்லட் பைக்குகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். மொத்தம் 1,200 புல்லட்டுகள் இந்த ஆண்டு விழாவுக்கு வந்துள்ளது'' என்றார்.
இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கலந்து கொண்ட ரைடர் மேனியாவில், இரண்டு நாட்களும் பலவிதமான போட்டிகள் நடத்தி அதகளப்படுத்தினார்கள். பைக் அசெம்ப்ளி, ஸ்லோ ரேஸ், ஃபாஸ்ட் ரேஸ் என உற்சாக அலை கரைபுரண்டது. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டது தான் ஆச்சரியம். ''நானும் புல்லட் ரசிகைதான்'' என்ற சென்னையைச் சேர்ந்த ரம்யா பாலாஜியிடம் பேசியபோது, ''எனக்கு சின்ன வயசுல இருந்தே புல்லட் பைக் மேல கிரேஸ். நான் ஒரு பொண்ணுகிறதால யார்கிட்டயும் என்னோட ஆசையைச் சொல்லலை. திருமணத்துக்குப் பிறகு, என்னோட கணவரும் புல்லட் பிரியர்னு தெரிய வந்தபோது ரொம்ப சந்தோஷமாயிட்டேன். என்னோட ஆசையைத் தெரிஞ்சிகிட்டவர், என்னை உற்சாகப்படுத்தினார். இப்போ, தண்டர்பேர்டு பைக் வெச்சிருக்கேன். புல்லட் ஓட்டுற எல்லாரும் டிராவல் பண்றதுக்கு மட்டும் ஓட்டுறது கிடையாது. அது ஒருவித காதல்னு சொல்லலாம்'' என்றார்.  
மும்பையில் இருந்து தண்டர்பேர்டு 500 பைக்கில் வந்திருந்த எலைன், ''உடலில் பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கு புல்லட் மீது எனக்கு வெறி. 15 ஆண்டுகளுக்கும் மேலாக புல்லட் ஓட்டுகிறேன். இந்தியா முழுக்க பைக்கிலேயே சுற்றியுள்ளேன். இரண்டு முறை விபத்தும் நடந்துள்ளது. இருந்தாலும் என் புல்லட் காதல் கொஞ்சம்கூடக் குறையவில்லை'' என்று அழகாகச் சிரிக்கிறார்.
தொடரட்டும் இந்த புல்லட் காதல்!

- Vikatan Article

No comments:

Post a Comment