Saturday, February 1, 2014

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2014 முன்னோட்டம் - Motor Vikatan

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெல்லியை அதகளப்படுத்தும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, இதோ வந்துவிட்டது. பிப்ரவரி 7-ம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, இந்தமுறை ஜன நெருக்கடி காரணமாக பிரகதி மைதானத்தில் இருந்து நொய்டாவுக்கு இடம் மாறியிருக்கிறது.
டி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் துவங்கி மாருதி, டாடா வரை இந்தியாவுக்கு என அடுத்த இரண்டு ஆண்டுகளில், தாங்கள் களமிறக்கப்போகும் அத்தனை கார்களையும் இங்கே காட்சிக்கு வைக்க இருக்கிறார்கள். இந்தியாவின் உச்சபட்ச ஆட்டோமொபைல் திருவிழாவான இதில், இடம்பெறப் போகும் கார்கள் என்னென்ன?
டட்ஸன் கோ, கோ ப்ளஸ்
2014 டட்ஸன் ஆண்டாக இருக்கும். பிப்ரவரி மாத இறுதியில் விற்பனைக்கு வரவிருக்கும் டட்ஸன்தான், நிஸானின் ஆட்டோ எக்ஸ்போ கதாநாயகன். 4 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வரவிருக்கும் டட்ஸன் கோ காருக்கு, எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன. டட்ஸன் பிராண்டில் விற்பனைக்கு வரவுள்ள மூன்று கார்ளையுமே டெல்லி ஆட்டோ எஸ்க்போவில் காட்சிக்கு வைக்கிறது நிஸான். கோ ப்ளஸ் என்ற எம்யூவி, மேலும் ஒரு சின்ன ஹேட்ச்பேக் காரும் காட்சிக்கு வைக்கப்படும்.
4 லட்சம் ரூபாய் விலை. ஆனால் ஆல்ட்டோ, ஐ10, சான்ட்ரோ, பீட் கார்களை விட அதிக இட வசதி என்பதால், சின்ன கார் மார்க்கெட்டை டட்ஸன் அசைத்துப் பார்க்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல், கோ ப்ளஸ் காரும் 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் 7 சீட்டர் எம்யூவி. இதன் விலையும் போட்டி கார்களைவிட மிகக் குறைவாக இருக்கும். 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரவிருக்கும் டட்ஸன் கோ - எர்டிகா, குவான்ட்டோ கார்களுக்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கும்.
தற்போது, டட்ஸன் 4 மீட்டர் சின்ன ஹேட்ச்பேக் காருக்கான ஸ்கெட்ச்சுகளை வெளியிட்டிருக்கிறது நிஸான். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின்போது இதன் கான்செப்ட், காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. 800சிசி திறன் மட்டுமேகொண்ட இந்த கார் 'கோ’-வையும்விட சின்ன கார். இதை 2-3 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது நிஸான். இந்த கார் 2015-ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும். டட்ஸன் கார்கள் அனைத்துமே பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே விற்பனைக்கு வரும்

ஹோண்டா
'இனிவரும் காலம் எங்கள் காலம்’ எனச் சவால்விடுகிறது ஹோண்டா. அமேஸ் மற்றும் புதிய சிட்டியைத் தொடர்ந்து மொபிலியோ, ஜாஸ், விஷன் எக்ஸ்எஸ்-1 கான்செப்ட், என்எஸ்எக்ஸ் கான்செப்ட் மற்றும் அக்கார்டு ஹைபிரிட் என நான்கு கார்களைக் காட்சிக்கு வைக்கிறது ஹோண்டா. இதில், மொபிலியோ மற்றும் ஜாஸ் இரண்டு கார்களும் இந்த ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கின்றன.
ஜாஸுக்கு இது மறுபிறவி. 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரவேண்டிய ஜாஸ் கார், 8 லட்சம் ரூபாய்க்கு வந்து வீணாகப்போனது. இந்த முறை அப்படி எதுவும் தவறு செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது ஹோண்டா. அமேஸுக்கும் சிட்டிக்கும் இடையில்தான் இந்த காரை ஃபிட் செய்கிறது ஹோண்டா. பிரியோ பிளாட்ஃபார்மில் அல்லாமல் சிட்டி பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் பெரிய ஹேட்ச்பேக் கார் ஜாஸ். அமேஸின் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் ஜாஸின் விலை, 6 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் எனத் தெரிகிறது.
ஹோண்டாவின் முதல் எம்பிவி காராக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படவிருக்கிறது மொபிலியோ. ஏப்ரல் - மே மாதவாக்கில் விற்பனைக்கு வரும் இந்த கார், பிரியோ பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் பெரிய எம்பிவி கார்.  7 சீட்டர் காரான இது, 4 மீட்டர் கார் இல்லை. பெரிய கார் என்பதால், இது எர்டிகாவுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும். ஹோண்டா சிட்டியில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது மொபிலியோ.
இனோவாவுடன் மொபிலியோ போட்டி போடாது. அதற்கு மொபிலியோவைவிட பெரிய கார் ஒன்றை உருவாக்கிவருகிறது ஹோண்டா. '2ஜிஏ’ எனும் புதிய பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட இருக்கும் இந்த காரின் கான்செப்ட், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காண்பிக்கப்பட இருக்கிறது. 'விஷன் எக்ஸ்.எஸ்-1’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரும் 7 சீட்டர்தான். ஹோண்டா சிஆர்-வி காரில் இருப்பதுபோன்ற பெரிய பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது.
விஷன் எக்ஸ்எஸ்-1 கான்செப்ட் போலவே 'என்எஸ்எக்ஸ்’ என்ற கான்செப்ட் காரையும் டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. இது ஸ்போர்ட்ஸ் ஹைபிரிட் கான்செப்ட் கார். அக்கார்டில் இருந்த வி6 பெட்ரோல் இன்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களையும் இதில் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. இது இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்று ஹோண்டா உறுதி செய்யவில்லை.
இது தவிர, அக்கார்டு ஹைபிரிட் காரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கிறது. இதில் 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 124 கிலோவாட் திறன்கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் ஒரு சார்ஜில் 24 கி.மீ வரை பயணிக்க முடியும். புதிய அக்கார்டு 2014-ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும்.

ஹூண்டாய்
புதிய 4 மீட்டர் செடான் காரைத் தவிர, ஹூண்டாயிடம் இந்த முறை ஸ்பெஷல் சரக்கு எதுவும் இல்லை. தற்போது சென்னை சாலைகளில் டெஸ்ட் செய்யப்பட்டு வரும் கிராண்ட் ஐ10 காரின் செடான் வெர்ஷனை டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய். ஹோண்டா அமேஸ் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையருடன் போட்டி போடும் இந்த செடானில், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.1 லிட்டர் டீசல் இன்ஜினைப் பொருத்துகிறது ஹூண்டாய். கிராண்ட் ஐ10 கார் போலவே இதிலும் பின்பக்க ஏ.சி வென்ட் உண்டு.
இதுவரை விற்பனையில் எடுபடாத சான்டா ஃபீ காரின் புதிய மாடலையும் டெல்லியில் அறிமுகம் செய்கிறது ஹூண்டாய். எஸ்யூவி காரான சான்டா ஃபீ காரில் ஏழு பேர் பயணிக்கலாம். 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட இந்த காரில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட மாடலையும் அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே காட்சிக்கு வைக்கப்பட்ட புதிய ஜெனிஸிஸ் காரையும் வைக்கிறது ஹூண்டாய். பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காருக்குப் போட்டியான இது இந்தியாவில் விற்பனைக்கு வருவது சந்தேகம்தான்.

ஃபோர்டு
2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், எக்கோஸ்போர்ட் என்ற ஒற்றை காருடன் கலக்கிய ஃபோர்டு, இந்த முறையும் ஒற்றை காருடன் கலக்கவிருக்கிறது. அந்த காரின் பெயர் ஃபிகோ. இதுதான் பழைய காராச்சே என்று கடந்துவிட வேண்டாம். ஃபியஸ்டா, எக்கோஸ்போர்ட் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவிருக்கும் புத்தம் புதிய ஃபிகோ இது. 2015-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவிருக்கும் இதில், எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் 1 லிட்டர் எக்கோ பூஸ்ட் பெட்ரோல் இன்ஜினை அறிமுகம் செய்கிறது ஃபோர்டு. புதிய ஃபிகோவை தற்போதைய ஃபிகோவைவிட விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது ஃபோர்டு.
ஃபிகோ மட்டும் அல்லாமல், தற்போது மார்க்கெட்டில் எடுபடாமல் போய்விட்ட ஃபியஸ்டாவுக்கு மாற்றாக, புதிய தலைமுறை ஃபியஸ்டாவை அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. ஆஸ்டன் மார்ட்டின் கிரில்லுடன் வெளிவர இருக்கும் புதிய ஃபியஸ்டாவின் பின்பக்கத் தோற்றத்திலும் சில மாற்றங்கள் இருக்கும். ஆனால், காரின் உள்பக்கத்திலும் இன்ஜினிலும் எந்த மாற்றமும் இருக்காது!

ஜெனரல் மோட்டார்ஸ்
ஃபோர்டு எக்கோஸ்போர்ட் காருக்குப் போட்டியாக, மற்றொரு அமெரிக்க கார் தயாரிப்பாளரான ஜெனரல் மோட்டார்ஸும் இந்தியாவுக்கு என ஸ்பெஷல் எஸ்யூவியைக் களம் இறக்குகிறது. 4 மீட்டருக்குள் தயாரிக்கப்படும் புதிய எஸ்யூவி காரான இதன் கான்செப்ட் டிசைனை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கிறது ஜி.எம். 'காமா-2’ என்று அழைக்கப்படும் ஜெனரல் மோட்டார்ஸின் புதிய சின்ன கார் பிளாட்ஃபார்மில் இந்த காரும் தயாரிக்கப்பட இருக்கிறது. செவர்லே செயில் மற்றும் என்ஜாய் கார்களில் இடம்பிடித்துள்ள அதே 1.3 லிட்டர், 77bhp இன்ஜின்தான் இதிலும் பொருத்தப்படுகிறது.
கான்செப்ட் கார் மட்டும் அல்லாமல், புதிய பீட் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது ஜி.எம். ஃப்ரங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட புதிய ஸ்பார்க்தான், இந்தியாவில் புதிய பீட்டாக விற்பனைக்கு வருகிறது. புதிய பம்ப்பர், புதிய கண்ணாடிகள், புதிய பின்பக்க விளக்குகளைத் தாண்டி, காருக்குள் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. அதே 1 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான்.
இந்த இரண்டு கார்களைத் தவிர, ட்ரெய்ல்ப்ளேசர் எனும் எஸ்யூவியையும் கார்வெட் ஸ்டிங்ரே மற்றும் செவர்லே கேமெரோ சூப்பர் கார்களையும் காட்சிக்கு வைக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்!

டாடா
டாடாவுக்கு இது முக்கியமான ஆட்டோ எக்ஸ்போ. விற்பனையில் சரிவைச் சந்தித்துக்கொண்டே போகும் டாடா, இந்த ஆண்டு புத்தம் புதிய கார்களை விற்பனைக்குக் கொண்டு வந்தேயாக வேண்டிய கட்டாயம். விஸ்டா மற்றும் மான்ஸா கார்களுக்கு மாற்றாக வரும் புதிய கார்கள்தான், இந்த முறை டாடாவின் ஷோ ஸ்டாப்பர்ஸ்.
'ப்ராஜெக்ட் ஃபால்கன்’ என தற்போது அழைக்கப்படும் இந்த இரண்டு கார்களிலும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் இன்ஜின் இருக்கும். இது தவிர, இந்த இரண்டு கார்களில், டாடாவின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட இருக்கிறது. பெர்ஃபாமென்ஸுக்காக அல்லாமல், மைலேஜுக்காக இந்த காரை ட்யூன் செய்திருக்கிறது டாடா. இது, அதிகபட்சமாக 80 bhp சக்தியை வெளிப்படுத்தும். இன்ஜின் மட்டும் அல்லாமல், டாடாவின் ஆராய்ச்சி நிலையத்தில் நீண்ட காலம் டெஸ்ட்டிங்கில் இருந்த 'டிஏ65’ கியர் பாக்ஸையும் இதில் அறிமுகப்படுத்துகிறது டாடா.
டாடாவின் புதிய இன்ஜின், இந்த இரண்டு கார்களில் மட்டும் அல்லாமல், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படவிருக்கும் புதிய க்ராஸ் ஓவர் காரிலும் இடம் பிடித்திருக்கும். பெட்ரோல் இன்ஜினோடு டாடாவின் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இந்த க்ராஸ்ஓவர் கார் விற்பனைக்கு வரவிருக்கிறது. தவிர, 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூடிய சஃபாரி ஸ்டார்ம் காரையும் அறிமுகப்படுத்துகிறது டாடா.

மாருதி
செலிரியோ மட்டும் அல்லாமல், ஐவி-4 எனும் புதிய எஸ்யூவி கான்செப்ட் காரைக் காட்சிக்கு வைக்கிறது மாருதி. ஏற்கெனவே, கடந்த 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதி எஸ்யூவி காரின் கான்செப்ட் ஃபேஸ்லிஃப்ட்தான் இது. 7 சீட்டர் எஸ்யூவியான இந்த கார், 2016-ம் ஆண்டுதான் விற்பனைக்கு வருகிறது.
ஐவி-4 கான்செப்ட் மட்டுமல்லாமல் எஸ்எக்ஸ்4  ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படவிருக்கும் கான்செப்ட் காரையும் காட்சிக்கு வைக்க இருக்கிறது மாருதி.
ஃபோக்ஸ்வாகன், மஹிந்திரா, ஸ்கோடா, டொயோட்டா, பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் என அனைத்து கார் நிறுவனங்களும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார்களை அறிமுகப்படுத்தவிருக்கின்றன.

ஹோண்டா
125சிசி ஸ்கூட்டர், 125சிசி பைக் என இரண்டு புதிய மாடல்களை டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. இவை இரண்டைத் தவிர, சிபிஆர் 300ஆர் அல்லது சிபிஆர்500ஆர் பைக்கையும் டெல்லியில் காட்சிக்கு வைக்கிறது ஹோண்டா.

பஜாஜ்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பல்ஸர் 375சிசி பைக்கை அறிமுகப்படுத்தவிருக்கிறது பஜாஜ். கேடிஎம் 390 ட்யூக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் பல்ஸர் 375சிசி பைக்கிலும் இடம்பிடித்திருக்கும். ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுடன் அறிமுகமாகிறது புதிய பல்ஸர். இது தவிர, அவென்ஜர் போன்ற புதிய க்ரூஸர் பைக்கையும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்துகிறது பஜாஜ்.

 ஹீரோ
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஐந்து புதிய பைக்குகளை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்துகிறது. இதில், 250சிசி ஸ்போர்ட்ஸ் பைக்தான் புத்தம் புது வரவு. இது தவிர, இரண்டு புதிய ஸ்கூட்டர்களும் அறிமுகமாகின்றன. இதில் ஒன்று, ஹைபிரிட் ஸ்கூட்டர்.

மஹிந்திரா
நீண்ட காலமாக காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் மஹிந்திராவின் மோஜோ பைக், டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது. 300சிசி நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்கான மோஜோ, ஏப்ரல மாதவாக்கில் விற்பனைக்கு வரும். இது தவிர, புதிய 110சிசி ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா.

சுஸுகி
இனஸ¨மா எனும் ஸ்போர்ட்ஸ் பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது சுஸுகி. 248சிசி திறன்கொண்ட இந்த பைக்கின் விலை 3 லட்சம் ரூபாய்.

 பியாஜியோ
பியாஜியோ வெஸ்பா 946 மாடலை டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது. மேலும், வெஸ்பா எஸ் மாடல் மற்றும் ஏப்ரில்லா ஆர்எஸ்வி-4, மோட்டோ குஸி பைக்குகளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.

யமஹா
ரேஸ்கூட்டரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது யமஹா. பெர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்குப் பெயர்பெற்ற யமஹா ஆர்-25 எனும் கான்செப்ட் ஸ்போர்ட்ஸ் பைக்கைக் காட்சிக்கு வைக்கிறது. இந்த கான்செப்ட் பைக்தான், இந்த ஆண்டு இறுதியில் 250சிசி பைக்காக இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

டிவிஎஸ்
பிஎம்டபிள்யூ கூட்டணியுடன் தயாராக இருக்கும் டிவிஎஸ் பைக்குகள், இந்த ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பிடிக்காது. ஆனால், அப்பாச்சி பைக்கின் லேட்டஸ்ட் மாடலைக் காட்சிக்கு வைக்கிறது டிவிஎஸ். இது தவிர, புதிய ஸ்கூட்டர் ஒன்றும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மோட்டார் விகடன்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மோட்டார் விகடன் ஸ்டாலும் உண்டு. மோட்டார் சைக்கிள் அரங்குகளுக்கு அருகில் ஹால் எண்: 2-ல் மோட்டார் விகடன் ஸ்டால் வரவேற்கிறது. வாசகர்களை ஆட்டோ எக்ஸ்போவில் மோட்டார் விகடன் அரங்கில் சந்திக்கக் காத்திருக்கிறோம்!

No comments:

Post a Comment