Friday, February 7, 2014

''டெடி பொம்மைகளோட தனியா பேசறேன்!'' 'காதலன்' விஜய் Vikatan 14.02.1999

ரு மிடில் கிளாஸ் இளைஞனின் தனி அறை போலத்தான் இருக்கிறது விஜய்யின் பெட்ரூம். ஒரு சின்னக் கட்டில். தலைமாட்டில் ரஜினியுடன் சேர்ந்து சிரிக்கிற படம். குட்டி பீரோ, சில புத்தகங்கள், ஆடை கள், 60 சேனல்கள் தெரிகிற கலர் டி.வி. அப்புறம்... அதற்கு மேல் விஜய் - சங்கீதா என்று எம்ப்ராய்டரி பண்ணப்பட்ட இரண்டு கரடி பொம்மைகள்.

''அது கீதா பிரசன்ட் பண்ணது!'' என்று லேசாக வெட்கப்படுகிறார். பக்கத்திலேயே தாஜ்மஹால் மினியேச்சருக்குள் நைட் லேம்ப் ஒளிர்கிறது. ''இதுவும் லண்டன்லேர்ந்து கீதா அனுப்பிச்சதுதான்!'' - மறுபடியும் வெட்கம்.
கடந்த இரண்டு வருடங்களாகக் காதல். இதோ வருகிற ஆகஸ்ட் மாதம் விஜய்க்குத் திருமணம்!
அவரிடம் பேசியதில் இருந்து...
'' 'லவ் டுடே’, 'பூவே உனக்காக’, 'காதலுக்கு மரியாதை’னு வெரைட்டியான படங்கள் பண்ணி இருக்கீங்க. இதுல உங்களுக்குப் பிடிச்ச காதல் எது?''
''எனக்கு மட்டும்னு இல்லை. தமிழ்நாட்டுக்கே பிடிச்சது 'காதலுக்கு மரியாதை’தான்.
ஒரு பொண்ணும் பையனும் 'உலகமே வேணாம்’னு ஒதுக்கித் தள்ளிட்டு, எவ்வளவு சுவாரஸ்யமா லவ் பண்ணாலும்கூட, நடைமுறையில அதுக்கு மதிப்பு இல்லாமப்போயிடும்.
அம்மா - அப்பா சம்மதத்தோடு, விருப்பமான பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறதுதான் பெரிய அதிர்ஷ்டம். அதுதான் நல்லதும்கூட. குடும்பம்... காதல் இரண்டுமே முக்கியம். எந்த ஒண்ணுக்காகவும் இன்னொண்ணை இழக்கக் கூடாது. அதனால காதலுக்கு மரியாதைதான் கரெக்ட்!''
''உங்களைக் கவர்ந்த காதல் ஜோடி யார்?''
''என் அம்மா - அப்பாதான். 25 வருஷ வாழ்க்கைக்குப் பிறகும் இன்னும் புதுசா லவ் பண்றாங்க. இப்போ சமீபத்தில் எங்க அம்மா ஒரு மாசம் ஃபாரின் டூர் போயிட்டாங்க. இங்கே வீட்ல எங்க அப்பா தனியா வெள்ளைத் தாடி வளர்த்துட்டு ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்டார். 'ஏம்ப்பா?’னு கேட்டேன். 'இல்லடா... கல்யாணமானதுல இருந்து அவ என்னைவிட்டுத் தனியாப் போனதே இல்லை. இப்போ அவளைப் பிரிஞ்சு இருக்க முடியலைடா’ங்கறார். நான் உடனே அம்மாவுக்கு போன் போட்டுப் பேசி அவங்களை வரவெச்சேன். அப்புறம்தான் இவர் தாடியே எடுத்தார்.
யோசிச்சுப் பார்த்தா... தமிழ் சினிமாவுல நாங்க பண்ற லவ்வை எல்லாம் இவங்க காதல் தூக்கிச் சாப்பிட்டுடும்போல.''
''வரப்போற பொண்ணு எப்படி இருக்கணும்னு யோசிச்சது உண்டா?''
''நான் கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அதனால வர்ற பொண்ணாவது உம்முனு இல்லாம கொஞ்சம் கலகலப்பா இருக்கணும். என்னை ஜாஸ்தி கேள்வி கேட்டு இம்சை பண்ணக் கூடாது. என்னைவிடப் படிச்சவளா இருக்கணும். வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் வரும்போது உபசரிக்கணும். கொஞ்சம் விட்டுப்பிடிக்கற ஆளா இருக்கணும். சின்ன பிரச்னைன்னாலும் எதிர் பார்ட்டிதான் முதல்ல ஸாரி கேட்கணும்னு பிடி வாதம் பிடிக்கிற ஆளு நான். அட்ஜஸ்ட் பண்ணிக்கற ஆளா இருக்கணும். முக்கியமா, நல்லா தோசை போடத் தெரிஞ்சிருக்கணும். ஏன்னா, என்னை ஒரு துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தறதைவிட, ஒரு தோசையைக் காட்டி ஈஸியா வழிக்குக் கொண்டுவந்துடலாம். அந்த அளவுக்கு நான் தோசைப் பைத்தியம். அப்புறம்... என்னோட ரசிகையா இருக்கணும். மொத்தத்துல, எனக்கு ஒரு நல்ல கேர்ள் ஃப்ரெண்டா இருக்கணும்!''
''இதுல சங்கீதாவுக்கு எவ்வளவு மார்க்?''
''நூத்துக்கு நூறு. 'அழகான, அமைதியான’ன்னு சொல்லிட்டே போகலாம். தோசை மேட்டர்ல மட்டும்தான் கொஞ்சம் உதைக்குது. இப்போ சமையல் கத்துட்டு இருக்கிறதாத் தகவல்!''
''சங்கீதா பற்றிச் சொல்லுங்களேன்...''
''என்னோட ரசிகை. பூர்வீகம் இலங்கை. இப்போ லண்டன்ல இருக்காங்க. மெடிக்கல் சயின்ஸ் படிக்கறாங்க. ஒரு தடவை என்னைப் பார்க்க குடும்பத்தோடு வீட்டுக்கு வந்திருந்தாங்க. போட்டோ எடுத்துட்டு, ஆட்டோகிராஃப் வாங்கிட்டுப் போற வழக்கமான ஒரு சம்பவம்தான் அது.
எங்க வீட்ல லஞ்ச் டைம்ல யார் வந்தாலும் சாப்பிடாம வெளியே போக முடியாது. அப்படி ஒரு நேரத்துல அவங்க வர... எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டோம். இப்படியே மெள்ள ஒரு நட்பு வளர்ந்து... எங்க அம்மாவுக்கு சங்கீதாவையும் அந்தக் குடும்பத்தையும் பிடிச்சுப்போச்சு.
ஒருநாள் என்கிட்டே சங்கீதா பற்றி கல்யாணப் பேச்சை அம்மாதான் ஆரம்பிச்சாங்க. முதல்ல கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம் டபுள் ஓ.கே. சொன்னேன். அவங்க அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்க... நானும் சங்கீதாவும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்.
ம்... அழகான பொண்ணு. பக்கத்துல நான் நின்னா, பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி இருக்கும். அப்படி ஒரு கலர். படிச்ச பொண்ணு. ரொம்பப் பணிவு. எப்பவும் சிரிக்கிற முகம்... அப்படி இப்படினு நான் யோசிச்ச பொண்ணு மாதிரியே இருக்கறதால சந்தோஷம்!''
''கல்யாணம் நிச்சயம் பண்ணிய பிறகு உங்க 'வுட்பி’யோடு அவுட்டிங் போனது உண்டா?''
''அதை ஏன் கேக்கறீங்க... எங்கே போனாலும் ஆறேழு பேர் பாதுகாப்புக்குக் கூட வந்துடுறாங்க. லண்டன்ல அவங்க பேரன்ட்ஸ். இங்கே என் பேரன்ட்ஸ். இன்னும் ஒரு சினிமாகூட தனியாப் போனதில்லைங்க.
ஒரு வசதி என்னன்னா... எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசலாம். இருக்கவே இருக்கு... ரெண்டு பேரும் பிறந்து வளர்ந்த இருபத்தஞ்சு வருஷக் கதை, அப்புறம் லண்டன் குளிர், கிரிக்கெட் மேட்ச்னு 'ஸ்வீட் நத்திங்ஸ்’ பேசிட்டே இருக்கலாமே...''
''ஹனிமூன் எங்கே?''
''சுவிஸ்ல கிரிண்டில் வேர்ல்டுனு ஓர் இடம் இருக்கு. அங்கே எங்கே பார்த்தாலும் இரண்டு பேர் உட்கார்ற மாதிரி டபுள் ஸீட்ஸ் மட்டும்தான் இருக்கும். காதல் ஜோடிகளுக்காகவே ஸ்பெஷலா டிசைன் பண்ணியிருக்காங்க. எங்கே பார்த்தாலும் ஜோடி ஜோடியா போய்ட்டிருப்பாங்க. சின்ன வயசுல அங்கே டூர் போயிருந்தோம். அம்மா, அப்பா ஒரு கார்ல ஏறிட்டாங்க. பிரிட்டோ அங்கிள், ராணி அக்கா ஒரு கார்ல... நான் மட்டும் துணைக்கு யாருமே இல்லாம தனியா உட்கார்ந்திருந்தேன். 'நமக்கும் ஒருநாள் கல்யாணம் ஆகும். அப்போ ஹனிமூன் இங்கேதான்டா’னு அப்ப ஒரு சபதம் எடுத்தேன். அதை நிறைவேத்தணுமே...''
''காதல் எப்படி இருக்கு?''
''இப்போதான் கவிதைகள் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். 'அண்ணாந்து இமை திறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது’னு படிக்கிறப்போ சிரிப்பு வருது.
ராத்திரி தனியா படுத்துட்டு இந்த தாஜ்மஹால் நைட் லேம்ப் சுவிட்சை ஆன், ஆஃப்னு மாறி மாறிப் போட்டு விளையாடறேன். எப்பவாவது இந்த டெடி பொம்மைகளோட தனியாப் பேசறேன். நிச்சயம் பண்ணப்போ போட்ட மோதிரம்... இதோ கை விரல்ல இருக்கே... இதையே பார்த்துட்டு ஏதாவது யோசனையில இருப்பேன். மத்தபடி, இப்பவும் நான் நார்மலாத்தான் இருக்கேன்!''

- Vikatan

No comments:

Post a Comment