Friday, February 7, 2014

“ ‘நம்பர் டென்’னாக இருக்கவும் சம்மதம்தான்..!” அன்பழகன் பேட்டி 01.02.1998

''அவரே என்னைத் தலைவர் என்று ஒப்புக்கொண்டுவிட்டார். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றது போலிருக்கிறது!'' - சமீபத்தில் ஒரு மேடையில் இப்படி சிலிர்ப்போடு பேசினார் கலைஞர்.
அரசியலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊறித் திளைத்து நான்கு முறை முதல்வராகவும் ஆகிவிட்ட கலைஞரை இவ்வளவு சிலிர்ப்போடு பேசவைத்தவர் பேராசிரியர் அன்பழகன்.
கலைஞரைவிட ஒன்றரை வயது மூத்தவரான அன்பழகனுக்கு இது 75-வது வருடம். தேவை ஏற்பட்டாலொழிய வாய் திறக்கவே மறுக்கும் இவர், ஒருகாலத்தில் சூடு பறக்கும் மேடைப் பேச்சாளராகத்தான் தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
''கலைஞரைத் தலைவராக ஏத்துக்க முடியாதுன்னு சொன்ன நீங்க, இப்போ ஏத்துக்கிட்டதா சொல்லியிருக்கீங்க. எப்படி வந்தது இந்த மாறுதல்?''
''அண்ணா மறைந்த சமயம் அது... அடுத்த தலைவரா யாரை நியமிக்கிறதுனு பேச்சு வந்தப்போ, கட்சியோட பொருளாளரா இருந்த கலைஞருக்கும் நெடுஞ்செழியனுக்கும் போட்டி வந்தது. பெரும்பான்மையோர் கலைஞரைத் தேர்ந்தெடுத்தாங்க. 'கலைஞர் என்னைவிட வயதால் இளைஞர். அதனால் அவரை என் தலைவரா ஏத்துக்க முடியாது. ஆனா, இயக்கம் அவரைத் தலைவரா ஏத்துக்கிட்டது. அதனால், அவரை இயக்கத்தின் தளபதியா ஏத்துக்கிறேன்’னு சொன்னேன்.
தலைமைப் பொறுப்பை அவர் ஏத்துட்டு செயல்பட முடியுமோ முடியாதோனு அந்தச் சமயத்துல தோணுச்சு. அதுக்கப்புறம் 71 தேர்தல்ல தி.மு.க. ஜெயிச்சு வந்தப்போ அவர்கிட்டே இருந்த நிர்வாகத் திறமை எனக்குப் புரிஞ்சது. கடைசியாக, எமர்ஜென்ஸி சமயத்தில் தி.மு.க.-வைக் கட்டிக் காப்பாத்தின அவர் அறிவாற்றலையும் உழைப்பையும் கண்ட பின்புதான் என் நினைப்பை நான் மாற்றிக்கொண்டேன். கலைஞர்தான் தி.மு.க. தலைவராக இருக்க முடியும். வேறு யாருக்கும் அந்த இடத்தில் இருக்கத் தகுதி இல்லைனு உணர்ந்து வியப்போடு அவரை என் தலைவரா ஏத்துக்கிட்டேன். என்னைக் கேட்டா, இந்த அம்பது வருஷ தமிழக சரித்திரத்திலேயே கலைஞர் அளவுக்கு Able Administrators யாரும் இல்லை!''
''நீங்க அரசியலுக்கு எப்போ வந்தீங்க?''
''என்னோட பதினாலு வயசுல. பதினேழு வயசுல தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தோட உறுப்பினர். அந்தச் சங்கம்தான் அப்புறம் நீதிக் கட்சியாச்சு. அத்தனை சின்ன வயசிலே நான் கட்சியில் ஈடுபாடுகொள்ளக் காரணம், எங்கப்பா கல்யாணசுந்தரம். தமிழ்ப் பெயரா வைக்கணும்னு அப்புறம் மணவழகர்னு பேரை மாத்திவெச்சுக்கிட்டார். காந்தி மேலிருந்த பக்தியால் மாயவரத்தில் கதர்க் கடை வெச்சிருந்தார் அப்பா. அப்பல்லாம் வீட்டில் முருகன் படமெல்லாம் வெச்சு கும்பிட்டோம். பக்தியுள்ள சைவ வெள்ளாளர் குடும்பம். இடஒதுக்கீட்டுப் பிரச்னையால் காங்கிரஸிலிருந்து பெரியார் பிரிந்துவந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது, பெரியாரோடு அப்பாவும் சேர்ந்துகொண்டார்.
காங்கிரஸை எதிர்த்ததால் எங்கள் கதர்க் கடை கடனில் மூழ்கியது. பெரியாரின் குடியரசு, நவசக்திப் பத்திரிகைகளின் ஏஜென்டாகவும் இருந்தார் அப்பா. பெரியார், அண்ணா என்று இயக்கத் தலைவர்கள் அப்பாவை எங்கள் வீட்டில் வந்து அடிக்கடி சந்தித்துப் பேசுவார்கள். எனக்கு இயல்பாகவே அவர்கள் பேசும் தீண்டாமை ஒழிப்பு, இடஒதுக்கீடு மாதிரி விஷயங்கள் பிடித்துப்போனதால் அவர்களுடன் நானும் நெருங்க ஆரம்பித்துவிட்டேன். நான்கு தம்பிகள், ஒரு தங்கையைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு. அதனால் நான் இயக்கத்தில் இருந்துகொண்டே பச்சையப்பன் கல்லூரியில் வேலையும் தேடிக்கொண்டேன். பதிமூணு வருஷம் அங்கே வேலை பார்த்த பிறகுதான், அண்ணாவின் வற்புறுத்தலின்படி முழுநேர அரசியல்வாதியானேன்.''
''உங்க பேருக்கு முன்னால இருக்கற 'இனமான’ அடைமொழி என்பது பட்டமா?''
''பட்டம் இல்லை. அது கலைஞர் கொடுத்த அடைமொழி. என் பேச்சு எப்போதுமே தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றித்தான் அதிகமாக இருக்கும். அதனால் ஒருமுறை மேடையில் என்னைக் கலைஞர் அறிமுகப்படுத்தும்போது 'இனமானப் பேராசிரியர்’ என்று அவரே ஒரு அடைமொழி கோத்துக்கொண்டார். வல்லவன் வகுத்ததே வாய்க்காலாச்சு!''
''இந்த வெற்றிலைப்பாக்குப் பழக்கம்..?''
''நான் சிறையில் இருந்தப்போ ஏற்பட்ட பழக்கம் இது. ’62-ல் விலைவாசி எதிர்ப்புப் போராட்டத்தில் மதுரை சிறையில் ரெண்டு மாசம் இருந்தேன். அப்பல்லாம் எல்லோருக்கும் ஒரே பாத்ரூம்தான். பாத்ரூம்ல இருந்து வர்ற கடுமையான ஸ்மெல் தெரியாம இருக்கணுமேனு வெற்றிலை போட ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் திருச்சி சிறையில் ரெண்டு மாசம் இருந்தப்பவும் இந்தப் பழக்கம் தொடர்ந்து, இப்போ அது இல்லாம நான் இல்லேங்கிற அளவுக்கு நிரந்தரமாவே ஆயிடுச்சு.''
''அ.தி.மு.க-வில் உங்க நண்பர் நெடுஞ்செழியன் நிரந்தர 'நம்பர் டூ’ன்னும் தி.மு.க-வில் நீங்க நிரந்தர 'நம்பர் டூ’ன்னும் ஒரு கமென்ட் இருக்கே!''
''நண்பர்களான நாங்க ரெண்டு பேரும் 'நம்பர் டூ’வா இருக்கிறது  சந்தோஷம்தான். ஆனா, இந்த நம்பருக்காக எங்க போய் வேணும்னாலும் நான் நிக்க மாட்டேன். அவர் நிலைமை வேற. எனக்கு 'நம்பர் டென்’னா இருக்கக்கூட சம்மதம்தான். ஆனா, தமிழர் இனம் உயரணும்கிற என் கொள்கைகள் சரிப்படும் இடமாக மட்டும் அது இருக்கணும்!''
'ஏன் உங்க வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரலே..?''
''அரசியல் ஈடுபாடுங்கிறது தானா வரணும். பொது வாழ்வுக்கு வர்றதுக்கு ஒரு நல்ல குறிக்கோளோட வரணுமே தவிர, கட்சி பார்த்து வரக் கூடாது. அவங்கவங்க வழியை அவங்களேதான் தேடிக்கணும். என்னோட ரெண்டு பெண்கள் டாக்டர்ஸ். ஒரே பையன் இன்ஜினீயரா இருக்கான்.''
''வாரிசு அரசியல் தவறா?''
''வாரிசு அரசியல்னா என்ன.. ஒரு வாரிசுக்கு எப்படியாவது அதிகாரத்தைத் தேடிக் கொடுத்தா, அது வாரிசு அரசியல். ஆனா, ஒரு வாரிசு அவனே ஒரு இயக்கத் தலைவனா வளர்ந்தார்னா அது எப்படி வாரிசு அரசியலாகும்?
'நேரு குடும்பம்.. அதனால ராஜீவ் காந்தி அரசியல்ல இல்லேன்னாலும் அவர்தான் பிரதமர்’னு கொண்டுவந்ததுக்குப் பேர்தான் வாரிசு அரசியல். ஆனா ஸ்டாலினை எடுத்துக்கிட்டா, அவன் பதினைஞ்சு வயசில இருந்தே கட்சியில இருக்கான். நெருக்கடி நிலையில ஜெயிலுக்குப் போய் கட்சியோட ஏற்றத்தாழ்வில் பங்கெடுத்துட்டு இருக்கான். அவனுக்கும் நாப்பத்தஞ்சு வயசாச்சு. தன் உழைப்பில் மக்கள் ஆதரவு பெற்ற ஒருத்தனா வளர்ந்து கட்சியில எந்த செல்வாக்கு பெற முடியுமோ, அதைப் பெற்றிருக்கான். கலைஞர் அவங்கப்பாவா இருக்கிற ஒரே காரணத்துக்காக, அவனை எப்படி நீங்க வாரிசு அரசியல்னு தடை பண்ணுவீங்க? அரசியல் சூழலை ஸ்டாலினுக்கு அறிமுகப்படுத்திவெச்சது வேணா கலைஞரா இருக்கலாம். அதுக்கு மேல அவன் வளர்ச்சி, உழைப்பு தனி.''
நீங்க எப்படிப்பட்ட மனுஷர்... நீங்களே உங்களை சுயவிமர்சனம் பண்ணிக்கங்களேன்?''
''எனக்கு குறிக்கோள் உண்டே தவிர, நாமதான் தலைவனா இருக்கணும்கிற எண்ணமெல்லாம் கிடையாது. சமூகமும் நாடும் முன்னேறணும். இதை யாராவது ரொம்ப சிறப்பா செஞ்சா, அவங்களை சப்போர்ட் பண்றவனா இருக்க விரும்பறேன்.''
''ஏன் நீங்க சப்போர்ட் பண்றவராகவே இருக்கணும்.. நீங்களே தலைவராகணும்னு எண்ணம் வரலியா?''
''சமூகத்தை வழிநடத்தற வாய்ப்பு, தானா தேடி வரணும். எவனும் பொறுக்கக் கூடாது. இந்த நாட்டோட பெரிய கொடுமையே அவனவன் தலைவனாகணும்னு பல காரியங்கள்ல ஈடுபடறதுதான். திருவிழாவுக்குப் போறோம்... நாமளே முன்னால நிக்கணும்னா எப்படி? நிக்கிற இடம் எதுவா இருந்தாலும், அது நம்ம உணர்வுக்கு ஏத்ததுதானாங்கிறதுதான் முக்கியம். என்னைக் கேட்டா தலைவனாகிற நோக்கத்துல அரசியல் பண்றது கண்ணியமற்ற செயல்!''

- Vikatan article

No comments:

Post a Comment