Friday, February 7, 2014

கலைஞருடன் ஒரு விறுவிறுப்பான பேட்டி vikatan 13.02.1994

கலைஞருடன் ஒரு விறுவிறுப்பான பேட்டி
“களைப்பைப் போக்குகின்றன... சுறுசுறுப்பைக் கூட்டுகின்றன!
உடன்பிறப்புக்கு கடிதங்கள்...
லைஞர் கருணாநிதி- கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக - அநேகமாகத் தினமும் கடிதம் எழுதிவருபவர்!
கலைஞரைச் சந்தித்து, அவரது கடித அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது...
''கடிதங்கள் மூலம் கருத்துகளைச் சொல்லி, அதைப் படிக்கும் ஒவ்வொருவரையும் அந்தக் கருத்துகளோடு தனிப்பட்ட முறையில் ஈடு பாடுகொள்ளச் செய்வதில் நேரு, மு.வரத ராசனார் போன்ற அறிஞர்கள் முன்னோடிகள். அண்ணா இருந்தபோது 'தம்பிக்கு...’ என விளித்து, வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதுவார். அப்போதே நான் 'அன்பு நண்பா...’ என்று அழைக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட 1965-ல் இருந்து உடன்பிறப்புக் கடிதங்கள் எழுதி வந்திருக்கிறேன். 1968-ல் இருந்து எழுதப்பட்ட எனது உடன்பிறப்புக் கடிதங்கள் புத்தமாகத் தொகுக்கப்பட்டு, இதுவரை பன்னிரண்டு தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. 'நண்பா...’ என்ற வார்த்தையிலிருந்து 'உடன்பிறப்பே...’ என்ற வார்த்தைக்கு மாறியதன் காரணம், அது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை என்பதால்தான். மற்றபடி, பாச உணர்வோடு கழகத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பிணைப்புப் பணியை இந்த உடன்பிறப்புக் கடிதங்கள் செய்கின்றன என்றால், அது மிகையில்லை.''
''நீங்கள் உங்கள் பெற்றோருக்கோ அல்லது சொந்த உடன்பிறப்புக்கோ எழுதிய கடிதம் பற்றி..?''
''அநேகமாகச் சிறையில் இருந்த காலகட்டங்களில்தான் அவர்களுக்கு நாலே வரிகளில், என் நலம்குறித்துக் கடிதம் எழுதியிருக்கிறேன். நீண்டதொரு கடிதம் எல்லாம் அவர்களுக்கு எழுதியதே இல்லை.''
''உங்கள் அம்மாவோ, சகோதரியோ உங்களுக்கு எழுதியது உண்டா?''
''உண்டு... 1943-44களில் நான் 'குடியரசு’ அலுவலகத் தில் இருந்தபோதும் சரி, கோவையில் ஜூபிடர் நிறுவ னத்தில் கதை-வசனம் எழு தியபோதும் சரி... கொள்கைப் பிரசார நாடகங்களைப் போடுவதற்காக விழுப்புரம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் முகாமிட்டிருந்தபோதும் சரி... எனக்கு, என் தாய்-தந்தையர் மற்றும் சகோதரியிடம் இருந்து அடிக்கடி நலம் விசாரித்துக் கடிதம் வரும்.''
''கடிதத்தில் என்ன எழுதியிருக்கும்?''
''என் தாயின் அன்பு மிகுந்திருக்கும். நிறைய தூங்கச் சொல்லி அறிவுரை சொல்லி இருப்பார்கள். 'ராத்திரியில் தூங்கும்போது மறக்காமல் ஜன்னல்களைச் சாத்திவிட்டுப் படுக்கப் போ!’ என்று எழுதுவார்கள்... எல்லாம் என் பாதுகாப்புக்காகத்தான்!'' (சிரிப்பு)
''நீங்கள் பதில் கடிதம் போடுவீர்களா..?''
''எப்போதாவது போடுவேன். அந்தக் கடிதத்திலேயே என் மருமகன் மாறனுக்காக ஒருதலைப்பும் கொடுத்திருப்பேன். அப்போது மாறன் ரொம்ப சின்னப் பையன். அவனிடத்தில் கற்பனையும் சொல் வளமும் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. நான் எழுதி அனுப்பும் தலைப்பின் கீழ், மாறன் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். நான் அடுத்த கடிதத்தின்போது அதைத் திருத்தி அனுப்புவேன். இப்படிக் கடிதப் பரிமாற்றத்திலேயே ஆற்றிவிட்டேன், பொறுப்பான மாமன் பணியை!''
''பிற கட்சித் தலைவர்கள், உங்களுடைய  உடன்பிறப்புக் கடிதங்களைப் படித்துவிட்டுக் கருத்து சொன்னது உண்டா..? எழுதியது உண்டா..?''
''ராஜாஜி பலமுறை பாராட்டியிருக்கிறார். அவர் ஒருமுறை எனக்குக் கடிதம் எழுதினார்...
'அன்புள்ள கருணாநிதி,
தங்கள் பத்திரிகையில், என்  பெயரை வடமொழி எதிர்ப் புக்காக 'இராசாசி’ என்று வெளி யிட்டிருக்கிறீர்கள்... விஜயகுமாரி, ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். ஆகியோர் பெயர்களிலும் ஜா, ஜி எழுத்துகள் உண்டு. அவை எல்லாம் களையப்படுவது இல்லை. இதில் நான் மாத்திரம் செய்த குற்றம் என்ன?’ என்று கேட்டிருந்தார் அந்தக் கடிதத்தில்!
நான் அந்தக் கடிதத்தை 'முரசொலி’யில் வெளியிட்டு, 'தவறுக்கு வருந்துகிறேன். இனி, ராஜாஜி என்றே தங்கள் பெயர் இடம்பெறும்!’ என்ற என் பதிலையும் வெளியிட்டேன். இந்தி எதிர்ப்புக்காக, பெயர்ச் சொற்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லையே!''
''எமர்ஜென்ஸி காலகட்டத்தில் உடன்பிறப்புக் கடிதப் பணியை எப்படிச் செய்தீர்கள்?''
''ரொம்பவே சிரமப்பட்டேன். எனது ஐந்து பக்கக் கடிதத்தில், மூன்று பக்கங்களைச் சிரச்சேதம் (சென்ஸார்) செய்து இரண்டே பக்கத்து மேட்டரைத்தான் அனுமதிப்பார்கள். ஒருமுறை, என் பிறந்த நாளன்று (ஜூன்-3ல்) 'என் அன்னையைவிட என்பால் அதிக அன்பு செலுத்தியவர் அண்ணா...’ என்று எழுதியிருந் தேன். அந்த வரியை சென்ஸார் நீக்கிவிட்டது. அப்போது மாறனும் ஸ்டாலினும் 'மிசா’வில் கைதாகிச் சிறையிலிருந்தார்கள். என் மகன்கள் தமிழ், அழகிரி மற்றும் மருமகன் செல்வமும் வீட்டில் இருந்தார்கள். நீக்கப்பட்ட வார்த்தை கள் அடங்கிய கடிதத்தை இரவோடு இரவாக ட்ரெடில் இயந்திரத்தில்வைத்து அழுத்தி, நூற்றுக்கணக்கான பிரின்ட்டுகள் எடுத்தோம். செய்தி 'லீக்’ ஆகிவிடக் கூடாது என்பதால், வீட்டிலேயே கமுக்கமாய்ப் பணி நடந்தது. அதிகாலையில் அந்தக் கடித நோட்டீஸுகளுடன் புறப்பட்டு, அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை நடந்து சென்று மொத்த நோட்டீஸையும் விநியோ கித்தோம். அண்ணா சிலை அருகே ஒரு கையில் கட்சிக் கொடியும், மறுகையில் நோட்டீஸுமாக நான் நிற்க... கூட்டம் கூடிவிட்டது. 'ஜனநாயகம் வாழ்க’ எனும் கோஷம் விண்ணைப் பிளந்தது. நான் கைது செய்யப் பட்டேன். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த என்னையும் பிற தொண்டர் களையும், அப்போது சென்னைக்கு வந்திருந்த காங்கிரஸ் அமைச்சர் சி.சுப்பிரமணியம்தான் டெல்லியில் இந்திராகாந்தியிடம் பேசி விடுவித்தார்.
இதற்குப் பின் கடிதங்களை முழுமையாக வெளி யிடும் உரிமை கோரி நான் கோர்ட்டுக்குப் போனேன். எனக்குச் சாதகமாக 'ஸ்டே’யும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஜனநாயகரீதி யாகக் காரசாரமான பல கடிதங்களை நான் 'முர சொலி’யில் எழுத, அரசியல் களம் பரபரப்பாகியது. சூட்டுப்பொறி நாலாப் பக்கமும் பறந்து கனல் உருவாவதற்குள், அவர்கள் நீதிமன்றத்தில் என் 'ஸ்டே’ மீது இடைக்காலத் தடை பெற்றார்கள். இதற்குப் பின்,இலக்கிய நடையில் அரசியல் கருத்துகளை ஜாடைமாடையாகச் செருகித்தான் என்னால் எழுத முடிந்தது. அப்படி நான் எழுதியவற்றில் 'ஒரு பனைமரத்தின் கதை’ எனும் சிலேடைக் கடிதம், பெரும்புழை எனக்கு ஈட்டித் தந்தது. இதெல்லாம் எப்போது..? 'காமராஜர் ஒரு ஜனநாயகவாதி’ என்றுகூட வாய் திறந்து சொல்ல முடியாத காலகட்டத்தில்!''
''நீங்கள் எழுதிய கடிதங்களிலேயே, உங்களால் இன்றும் மறக்க முடியாத உருக்கமான கடிதம் எது?''
''வள்ளுவர்கோட்டத் திறப்பு விழா நடந்தபோது நான் எழுதி, 'முரசொலி’யில் வெளியாகிய மூன்று பக்கக் கடிதம்! அப்போது என் ஆட்சி கலைந்து பத்து நாட்களே ஆகியிருந்தன. என் முயற்சியைப் பறைசாற்றும் கல்வெட்டு நீக்கப்பட்டு, புது அடிக்கல் நாட்டி கோலாகல விழா நடத்திக் கோட்டத்தைத் திறந்துவைத்தார்கள். நான் கலந்துகொள்ளக் கூடாது என்று, எனக்கு அழைப்பைக்கூடத் தாமதமாக அனுப்பினார்கள். அந்தச் சமயத்தில், நான் எழுதிய உடன்பிறப்புக் கடிதம் கண்டு உருகாதநெஞ்சமே இல்லை. எனக்கு இப்போதும் அதைப் படித்தால் கண் கலங்கும்!''
''உருக்கமான கடிதங்கள் என்றால், உங்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியா?''
''என் எழுத்துக்கு வேண்டுமானால் அப்படி யிருக்கலாம்... ஆனால், எனது மனத் துயரால் பொங்கும் உணர்ச்சிகள்தான் எனது உருக்கமான கடிதங்களுக்குக் காரணம். அது அல்வா ருசியல்ல; ரண வேதனை! இப்போதும் கட்சியின் முக்கியத் தொண்டர்கள் இறக்க நேரிடின், அவர்களுக்கான எனது இரங்கல் கடிதங்களில் உருக்கம் கொப்பளிக்கும். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் நான் தரும் தலைப்புகள் நிரம் பப் பேசப்படும். உதாரணத்துக்கு, தூத்துக்குடி கே.வி.கே.சாமி, அந்தப் பகுதியில் 'கழகத்தின் கமாண்டர்’ மாதிரி இருந்தவர். இவர் வெட்டிக் கொல்லப்பட்டபோது, 'தென்பாண்டிக் கடல் முத்தே! தீர்ந்ததோ உன் வாழ்வு...’ என்று தலைப் பிட்டேன். அதேபோல, கம்பம் நடராசன் (பெரிய மீசை’ வைத்திருப்பார்) எனும் கழகப் பிரமுகர் இறந்தபோது, 'போய்விட்டாயா... போர்வாள் மீசைக்காரா!’ என்று தலைப்பிட்டு எழுதினேன். இப்படி நிறைய்ய...''
''உடன்பிறப்புக் கடிதத்தைத் தினசரி எந்த நேரத்தில் எழுதுகிறீர்கள்?''
''வீட்டிலிருந்தால், பெரும்பாலும் செய் தித்தாள்கள் படித்து முடித்து... அறிவால யத்தில் 'வாக்’ போய்விட்டு வந்து, காலை ஆறரை மணிக்குத்தான் எழுதத் துவங்கு வேன். அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் வேலை முடிந்துவிடும். எப்போதாவது 'முரசொலி’ அலுவலகத்தில் போய் உட் கார்ந்து காலை பத்து மணிக்கும் எழுதுவது உண்டு.''
''வீட்டில் எங்கே உட்கார்ந்து எழுதுவீர்கள்?''
''என் பெட்ரூமில்தான்! பனியன் தெரிய சட்டை பட்டன்களைக் கழற்றிவிட்டு, மெத்தை மீது அமர்ந்து, தலையணையை மடியில் கிடத்திக்கொண்டு எழுதுவது என் வழக்கம்...''
(புகைப்படக்காரர் அன்புடன் கேட்டுக் கொள்ள, அதுபோல 'போஸ்’ கொடுத்தும் உதவினார்)
''இது என்ன சென்டிமென்ட்டா?''
''இல்லை... அப்படியே பழகிவிட்டேன்!''
''நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது எழுதிய கடிதங்களுக்கும் இப்போது எழுதும் கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம்?''
''சாதாரணமாக எழுதும்போது 'கனல்’ அதிகம் இருக்கும். பொறுப்பில் இருந்தால், எழுத்தில் சூட் டைக் கொஞ்சம் தணித்து எழுதுவேன். ஆனால், எப்போதுமே கொள்கையில் காம்ப்ரமைஸ் செய்துகொண்டது கிடையாது!''
''ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு உணர்வுகள் (தனித் தமிழ்நாடு கோரிக்கை, இந்தி எதிர்ப்பு மாதிரி) உங்கள் கடிதங்களில் மேலோங் கிக் காணப்படுகிறது. இப்போது 'பீக்’கில் இருப்பது எது?''
''இந்தி எதிர்ப்பும், சமூக நீதி உணர்வும்தான்! சமூக நீதிக்காக இருபத்தியோராம் நூற்றாண்டு தொடங்கிய பிறகும் நாம் போராட வேண்டியிருக் கும் என்று நினைக்கிறேன்...''
''பாதயாத்திரை போனாலும் சரி... படுக்கையில் கிடந்தாலும் சரி... கடிதப் பணியை மாத்திரம் விடாமல் தொடர்கிறீர்களே என்ன காரணம்?''
''காரணம், பொதுநலம் மட்டுமல்ல; சுய நலமும்தான்! கடிதங்கள் என் களைப்பைக் போக்குகின்றன. சுறுசுறுப்பைக் கூட்டுகின்றன. என் கனத்தை, மனச் சுமையை, அழுத்தத்தை... பகிர்தலின் மூலம் வெகுவாகக் குறைக்கின்றன. என் மனம் எப்போதும் லேசாக இருக்கவே, நான் விடாமல் எழுதுகிறேன். அதிலும் கடித வடிவத் தில் உடன்பிறப்புக்கு எழுதும்போது, என்னைச் சுற்றி நெருக்கமான பாச வலையைப் பின்னிக் கொள்கிறாற் போன்றதொரு உணர்வு. தவிர, என் கடிதங்களால் உடனுக்குடன் விளைவுகள் இருக் கும். வெறும் ஐந்து கடிதங்கள் எழுதித்தானே, சமீபத்திய சமூக நீதிப் பேரணிக்குச் சென்னையில் ஐந்து லட்சம் மக்களை அணி திரட்டினேன்!''
கலைஞரிடம் உள்ள முக்கியமான குணம் - அடித்தல் திருத்தலின்றி எழுதுவது! அதைப் பற்றியும் பேட்டியில் குறிப்பிட்டார்.
''எழுதும்போதே பிழைகள் வராமல்தான் எழுதுவேன்... பெரும்பாலும் பிழையே வராது... அப்படி ஒருவேளை பிழைச்சொல் வந்துவிட்டாலும் அடிக்கவோ, திருத்தவோ மாட்டேன்... அந்தத் தவறைச் சரிசெய்கிற வகையில் அடுத்த வரியினை அமைத்துவிடுவேன்...'' என்றார் கலைஞர் வெற்றிப் புன்னகையுடன்.
- எஸ்.சுபா, படம்: சு.குமரேசன்

ஒரு பனைமரத்தின் கதை!
'உடன்பிறப்பே,
இன்று ஒரு மரம், தன் கதையைச் சொல்கிறது. சோகமாக இருந்தாலும் சுவையாக இருக்கும். பாவம்; போனால் போகிறது - மரம்தானே என்று அலட்சியப்படுத்தாமல், மனம் திறந்து பேசும் அதன் கதையைச் செவி திறந்து கேட்போம் வா!’
என்று தொடங்கும் 'ஒரு பனைமரத்தின் கதை’ கடிதத்திலிருந்து சில பகுதிகள்....
'மின்சார விசிறி தெரியாத காலத்தில் குரோட்டன்ஸ் இலையிலா விசிறி தயாரித்தார்கள்...? இல்லை! இல்லை! இந்தப் பனை ஓலை விசிறிதான் அவர்கள் புழுக்கத்தைப் போக்கிக்கொண்டிருந்தது. இப்போதும் மின்சாரம் தடைபடும்போதெல்லாம் என் உதவிதான் தேவைப்படும். அதாவது நான் வழங்கிய ஓலையில் தயாரிக்கப்பட்ட விசிறி!
என்னைப் பயன்படுத்திக்கொண்டேயிருப்பார்கள். திடீரென மின்விசிறி சுழலும். மின்விளக்கு எரியும். 'ஆ! கரன்ட் வந்துவிட்டது’ என்று என்னை ஒரு மூலையில் தூக்கி ஏறிந்துவிடுவார்கள். என் செய்வது..?
நான் வளர்ந்த ஊரில் என்னை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட சிலருடைய பெயர்களை நீங்கள் அறியமாட்டீர்கள்! அந்த நன்றியுள்ள மனிதர்களின் பெயர்களை அறிந்து கொள்ளாமலிருப்பதே நல்லது!
அப்போது, திடீரென பெருங்காற்று - மழை - இடி - மின்னல்.
நானிருந்த ஊரின் எல்லையில் ஒரு வாய்க்கால் உண்டு. அந்த வாய்க்கால் கரை தெரியாமல் பெருகி ஓடுகிறதென்று செய்தி வந்தது. செய்தியைத் தொடர்ந்து அந்தச் சில மனிதர்களும் வந்தார்கள். அவர்கள் கையில் கோடரி, ரம்பம் எல்லாம் இருந்தன. வந்தவர்கள் என்னை அண்ணாந்துகூடப் பார்க்கவில்லை. அவசர அவசரமாக வெட்டினார்கள். நான் அந்த வலியைப் பொருட்படுத்தவில்லை. வேறொரு நல்ல காரியத்துக்குத்தான் பயன்படப்போகிறோம் என்ற உறுதியோடு இருந்தேன்.
விழுந்த என்னைக் கொண்டுபோய் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் வாய்க்காலின் குறுக்கே போட்டார்கள். அவர்கள்தான் என்ன செய்வார்கள்? வாய்க்காலை நீந்திக் கடக்கத் தெரியாதவர்கள்! அதனால் என்மீது காலூன்றி வாய்க்காலைக் கடந்து கொண்டிருந்தார்கள்.
பிறகு அந்தப் பாலப் பனைமரத்தையும் இரண்டாய்ப் பிளந்து ஏணியாக்கச் சிலர் முயல... ஊரார் தடுப்பது போல் முடிகிறது 'ஒரு பனைமரத்தின் கதை’!

- Vikatan article

No comments:

Post a Comment