Friday, February 7, 2014

அம்முவிடம்(J J) 6 கேள்விகள் Vikatan article 06.12.1970

1. ''அம்மு என்ற பெயர் தங்களுக்கு எப்படி வந்தது?''
 ''மைசூரில் உள்ள 'ஜெயவிலாஸ்’ என்னும் பங்களாவில்தான் நான் பிறந்தேன். ஒரு வயதிலேயே நான் என் தந்தையை இழந்தேன். அவர் பெயர் ஜெயராமன்.
வழக்கமாக எல்லாக் குழந்தை களுக்கும் 'அம்மா’ என்று அழைக்க கற்றுத் தர வேண்டி யது இல்லை. ஆனால், நான் மட்டும் என் அம்மாவை அப்படி அழைக்கவில்லையாம். மழலையோடு 'அம்மு... அம்மு’ என்றே அழைத்து வந்தேன்.
அதனால் அனைவரும் என்னை அம்மு என்று கேலி செய்யத் தொடங்கி, அதுவே நாளடைவில் என் செல்லப் பெயராக மாறிவிட்டது.
திரை உலகில் ஜெயலலிதாவை விட 'அம்மு’தான் கொடி கட்டிப் பறக்கிறது. 'நம் நாடு’ படத்தில் இதே பெயரில் தோன்றி நடித்தும்விட்டேன்.''
2. ''உங்களுக்கு 'குஷி’ பிறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?''
''என் மனம் குதூகலம் அடையும்போது, நான் என்னையே அறியாமல் வாயால் விசில் அடிக்கத் தொடங்கிவிடுவேன். இந்த வழக்கத்தை விட்டொழிக்க நான் பல முறை நினைத்தது உண்டு. ஆனால், முடியவில்லை.
ஒரு சமயம் மைசூர் பிருந்தாவனத்துக்கு என் தோழியுடன் சென்றிருந்தேன்.பிருந்தாவனத்தின் இயற்கை எழில் என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கவைத்தது. என்னையும் அறியாமல் விசில் அடிக்கத் தொடங்கிவிட்டேன். அப்படியே விசில் அடித்துக்கொண்டே எவ்வளவு தூரம் நடந்திருப்பேனோ தெரியவில்லை. ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என்ன ஆச்சர்யம்... ஒரு மாணவர் கூட்டமே என் பின்னால் என்னைக் கேலி செய்யத் தயாராக வந்துகொண்டு இருந்தது. திடுக்கிட்டவாறே வெட்கத்துடன் என் தோழியை அழைத்துக்கொண்டு ஓடிப் போய் காரில் அமர்ந்துகொண்டேன். இதை இன்று நினைத்தாலும் வெட்கமாகத்தான் இருக் கிறது.
சமீபத்தில் 'எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் நான் சகுந்தலையாக நடித்துக்கொண்டு இருந்தேன். அருகில் சிவாஜி கணேசன் துஷ்யந்தன் வேடத்தில் அமர்ந்து இருந்தார்.
நான் சகுந்தலை வேடத்தில் இருப்பதைக்கூட மறந்து விசில் அடித்துப் பாட ஆரம்பித்துவிட்டேன். சிவாஜி கணேசன் என்னைப் பார்க்கிறார் என்று தெரிந்த பிறகு, எனக்கே வெட்கமாகிவிட்டது. இந்த வழக்கத்தை விட்டுவிட முயற்சி செய்துவருகிறேன்.''
3. ''முதன் முதலாக நடித்த 'அவுட்டோர்’ காட்சியைப்பற்றி?''
''நான் முதன் முதலாக மேக்கப் போட்டு நடித்த காட்சியே அவுட்டோரில்தான் படமாக்கப்பட்டது. இடம்: மைசூர் பிருந்தாவனம். படம்: 'சின்னத கொம்பே’ - கன்னடப் படம். என்னுடன் அன்றைக்கு கல்யாண்குமார்தான் கதா நாயகனாக நடித்தார். பாடல் காட்சிகளை அன்று எடுத்தார்கள்.
அருகே உள்ள ஹோட்டல் கிருஷ்ணராஜசாகரில் நான் தங்கியிருந்தேன். பின்னர், இங்கே படப்பிடிப்புக்காக நான் செல்லும்போது எல்லாம் அந்த ஹோட்டலில்தான் தங்குவேன். அங்கு உள்ள தொழிலாளர்கள் அன்றுபோலவே இன்றும் என் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள். பிருந்தாவனத்தில் முதன் முதலாக நடித்ததால் என் வாழ்க்கையும் பிருந்தாவனமாகி ஒளி வீசுகிறது என்றே நான் நம்புகிறேன்.''
4. ''தங்களிடம் யாராவது தகாத முறையில் நடந்தது உண்டா?''
''நான் சர்ச் பார்க் கான்வென்டில் படித்துக்கொண்டு இருக்கும்போது, வீட்டில் இருந்து தினசரி 13-ம் நம்பர் பஸ்ஸில்தான் போவேன். பனகல் பார்க் சமீபத்தில் உள்ள ஸ்டாப்பிங்கில் நீண்ட நேரம் காத்திருப்பது வழக்கம்.
ஒருநாள் ஓர் இளைஞன் என்னையே உற்றுப் பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தான். நான் கண்டும் காணாதவள்போல் அலட்சியமாக இருந்தேன். பஸ்ஸில் நான் ஏறியதும் அந்த வாலிபனும் ஏறிக்கொண்டான். சர்ச் பார்க் திருப்பத்தில் இறங்கி நான் ஸ்கூலுக்குப் போய்விட்டேன்.
பள்ளிவிட்டுத் திரும்பும்போதும், அதே வாலிபன் மதில் சுவர் ஓரம் எனக்காகக் காத்துஇருப்பது தெரிந்தது. நான் அவனை லட்சியப்படுத்தவில்லை. மீண்டும் நான் பஸ் ஏறியபோது, அவனும் தொடர்ந்தான். பஸ்ஸைவிட்டு இறங்கித் திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குப் போய்விட்டேன்.
இதே நாடகத்தைத் தொடர்ந்து தினசரி செய்து வந்தான். எனக்கு மனத்துக் குள் ஒரே ஆத்திரம். ஆனால், யாரிடமும் சொல்லவில்லை.
ஒருநாள் ஸ்டாப்பிங்கில் நின்றிருக்கும்போது வழக்கப்படி அந்த வாலிபன் வந்தான். நீண்ட நாள் பழக்கப்பட்டவன்போல், ''ஹலோ டார்லிங்'' என்றவாறே என்னிடம் வந்தான்.
''ஸ்டுப்பிட்'' என்றேன் நான். அவன் மேலும் நெருங்கினான்.
அவ்வளவுதான்! என் புத்தகத்தால் அவனை ஓங்கி அறைந்துவிட்டு, வளர்ந்திருந்த நகத்தால் அவன் முகத்தைப் பிராண்டிக் காயப்படுத்தினேன். அடுத்த நிமிடம் அங்கே இருந்து வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தேன். அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி விம்மி விம்மி அழுதேன். அம்மா என்னைத் தேற்றினார். அன்று முதல் நான் காரிலேயே ஸ்கூலுக்குப் போகத் திட்டமிட்டேன்.''
5. ''ரசிகர்களின் அன்புத் தொல்லை இன்னமும் உண்டா?''
''நிறைய உண்டு. ஒருநாள் வீட்டில் இருந்தேன். ஒரு ரசிகர் மளமளவென உள்ளே வந்துவிட்டார். வந்தவர் 'என் ஒய்ஃப் ஜெயலலிதா எங்கே? மாமியார் சந்தியா எங்கே?’ என்றவாறே உள்ளே நுழைந்தார். என் வீட்டில் உள்ளவர்கள் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். அவர் கேட்கவில்லை. பின்னர், போலீஸை வரவழைத்து அவரை அழைத்துப் போகச் சொல்ல வேண்டியதுஆயிற்று.
பிறகு, திருச்சியில் உள்ள அந்த ரசிகரின் உறவினரிடம் இருந்து கடிதம் வந்தது. நான் நடித்த 'வெண்ணிற ஆடை’ படத்தை 62 தடவை பார்த்ததால் அந்த ரசிகருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று தெரிவித்து இருந்தார்கள். நான் அவருக்காக மிகவும் வருத்தப்பட்டேன்.''
6. ''மழையில் நனைவது என்றால் உங்களுக்கு விருப்பம் அதிகமாமே?''
''உண்மைதான்!
ஒரு தெலுங்குப் படத்துக்காக நான் ஊட்டிக்குச் சென்றிருந்தேன். அப்போது மாலை நேரங்களில் வாடகைக் குதிரையை அமர்த்திக்கொண்டு 'ரைடிங்’ செய்துவிட்டுத் திரும்புவேன். மறு நாள் சென்னைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அதனால் ஆசை தீர அன்று 'ரைடிங்’ செய்வது என்று தீர்மானித்து குதிரையை வரவழைத்தேன். ஆனால், அன்று மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.
என் அம்மா போக வேண்டாம் என்று தடுத்தார். நான் கேட்கவில்லை. அன்று நீண்ட நேரம் மழையில் நனைந்தவாறே சவாரி செய்தேன்.
திரும்பியதும், 'ஊட்டி மழை உடம்புக்கு ஒன்றும் செய்யாது’ என்று கூறி அம்மாவைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!''

No comments:

Post a Comment