Friday, February 7, 2014

17 கொலைகள் செய்த தீவிரவாதி தர்பாரா சிங்! பெரோஸ்பூர் சிறையில் நேரடிச் சந்திப்பு - 13.12.1992

- Vikatan Article

பெரோஸ்பூர் சிறை. அங்கு பலத்த காவலில் வைக்கப்பட்டு இருக்கும் தீவிரவாதி தர்பாரா சிங்கை விகடனுக்கு எனப் பிரத்யேகமாகச் சந்திக்கக் கேட்ட அனுமதி கிடைத்தது.
நெடிதுயர்ந்த, இரட்டை மதில் சுவர். கிட்டத்தட்ட 45 ஏக்கர் விஸ்தீரணம். பெரி...ய்...ய இரும்புக் கிராதிகளுடைய பெரோஸ்பூர் சிறை பிரமாண்டமாக வரவேற்றது.
''மேடம், போகலாமா?'' என்றபடி பெரிய சாவிக் கொத்தைக் கையில் எடுத்தபடி கிளம்பினார் ஜெயிலர். முற்றிலும் புதிய சூழ்நிலை என்பதால், மனதில் பலவித உணர்ச்சிகளுடன் ஜெயிலரைத் தொடர்ந்தேன். முதன்முறையாக ஒரு ஜெயிலுக்குள் போகிறேன். அதுவும் - மனித உயிருக்குச் சிறிதும் மதிப்பு கொடுக்காமல், சர்வ சகஜமாக 17 கொலைகளைச் செய்த ஒரு பயங்கரவாதியைப் பேட்டி காண!
மனதில் ஒருவித அச்சத்தோடு கூடிய தயக்கம். உள்ளே விசாலமான பெரிய முற்றம். சுற்றிலும் பெரிய பெரிய அறைகள். கைதிகளுக்குப் பலவித வேலைகளைக் கற்றுத்தரும் வொர்க்ஷாப் (அங்கே கைதிகள் நெய்து தயாரிக்கும் பெட்ஷீட்டுகள், துண்டுகள், கம்பளி, தரைவிரிப்புகள், மர ஃபர்னிச்சர்கள் - இவற்றுக்கெல்லாம் வெளியே ஏகப்பட்ட டிமாண்ட் என்றார்கள்).
தறியில் நெய்துகொண்டு இருந்த ஒரு சர்தாரை நோக்கிச் சென்ற ஜெயிலர், ''தர்பாரா சிங், இந்த மேடம் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்...'' என்றவுடன், எழுந்து நின்ற தர்பாரா சிங்கைப் பார்த்த எனக்குள் ஏற்பட்டது - வியப்பு!
கொலை வெறியுடன் கூடிய சிவந்த விழிகளுடனும் முறுக்கிய கொடுவாள் மீசையுடனும் பார்த்தால் நடுங்கும் அளவுக்குப் பயங்கரமான முரட்டுத் தோற்றத்துடன் ஒரு நபரைக் கற்பனை செய்துகொண்டு வந்திருந்த நான், புன்னகை தவழச் சாந்தமான முகத்துடன் என் முன்னால் வந்து நின்ற தர்பாரா சிங்கைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோனேன்.
விசிட்டர்கள் அறைக்கு என்னை அழைத்துச் சென்ற ஜெயிலர், ''மேடம் கேட்பதற்கு ஒழுங்காகப் பதில் சொல்லு...'' என்று தர்பாரா சிங்கிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். நான் தர்பாரா சிங்குடன் அந்த அறையில் தனித்துவிடப்பட்டேன். என்னுடைய அதிர்ஷ்டம், தர்பாராவுக்கு இந்தி நன்றாகவே தெரிந்திருந்தது. முதலில், தர்பாரா சிங்கைச் சகஜமான நிலைக்குக் கொண்டுவர... அவர் மனைவி, மக்கள், குடும்பம் என்று பேச்சுக் கொடுத்தேன். கொஞ்ச நேரத்துக்குள்ளாகவே என்னுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் பேச ஆரம்பித்தார். தான் ஒரு தீவிரவாதியாக மாறுவதற்குப் பின்னணியாக இருந்த சம்பவங்களைத் தர்பாரா சிங் விவரித்தார்.
எல்லோரையும்போல, கிராமத்து ஹையர் செகண்டரி பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த தர்பாரா சிங், வகுப்பில் ஒரு நல்ல மாணவனாகவே திகழ்ந்தார். எந்தக் குறையும் இல்லாத வசதியான குடும்பம். போதுமான நிலம். அப்பா விவசாயி. அம்மா - பஞ்சாபிகளுக்கே உரித்தான அழகுடன், படித்த வசதியான குடும்பத்துப் பெண். மணமான அக்கா, கல்யாணமாகாத ஒரு தங்கை, ஒரு தம்பி.
மெட்ரிக் பாஸ் செய்தவுடன் வேலைக்காக அலைந்த தர்பாராவுக்கு, அவன் தந்தை ஒரு செகண்ட் ஹாண்ட் ஃபியட் கார் ஒன்றை வாங்கித் தந்தார். கல்யாண நிகழ்ச்சிகளுக்கு காரை வாடகைக்கு ஓட்டிய தர்பாரா சிங்குக்கும் ஒரு நாள் கல்யாணம் ஆனது. அழகான மனைவி. பெயர் நீனா. அமைதியான வாழ்க்கை. கல்யாணமாகி ஐந்தாறு வருடங்கள் சந்தோஷமாகவே ஓடின. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையும் ஆனார்.
அப்போதுதான் 'காலிஸ்தான்’ தீவிரவாதிகளின் போராட்டம் முளைவிட ஆரம்பித்த நேரம்... பஞ்சாபின் ஒரு மூலையில் அமைதியாக வாழ்ந்துவந்தனர் தர்பாரா சிங் குடும்பத்தினர். ஆனால், அந்த அமைதி ஒரே நாளில் தவிடுபொடியாகும் என்று யாரும் கனவில்கூட நினைக்கவில்லை.
எதற்கும் இருக்கட்டும் என்று பாதுகாப்பு கருதி, தர்பாராவின் தந்தை வீட்டைச் சுற்றி உயர்ந்த மதில் சுவரை எழுப்பினார். அவர்களுடைய போதாத காலம், அவர்களுடைய வீடு கிராண்ட் டிரங்க் ரோட்டுக்கு (ஹைவேஸ்) பக்கத்தில் இருந்தது. இந்த ஒரு விஷயமே அவர்களுக்கு எதிராகவும் தீவிரவாதிகளுக்குச் சாதகமாகவும் அமைந்துவிட்டது.
இரவு முழுவதும் மனித வேட்டையாடிவிட்டு, விடியும் முன்பு பாதுகாப்புக்காக இடத்தைத் தேடும் தீவிரவாதிகளுக்குத் தர்பாரா சிங்கின் வீடு ஏற்றதோர் இடமாக அமைந்துவிட்டது. இரண்டு மூன்று முறை இந்த வீட்டில் பதுங்கியவர்கள் பிறகு, அடிக்கடி வர ஆரம்பித்தனர். தந்தையும் மகனும் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கா மல் இது தொடர்ந்தது. தர்பாராவின் ஃபியட் காரை ஆசையுடன் நோட்டமிட்டவர்கள், ''சலோ, அமிர்தசரஸ் போகலாம்... ஜலந்தர் போகலாம்...'' என்று தர்பாரா சிங்கை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர். நடுநடுவில் தங்கள் இயக்கத்தில் சேர்ந்துவிடும்படி கட்டாயப்படுத்தவும் ஆரம்பித்தனர். இது சில மாதங் கள் தொடர்ந்தன.
ஒரு நாள் காலை... முற்றத்தில் பாத்திரம் தேய்த்துக்கொண்டு இருந்த தன் தங்கையை, கண்களில் மோக வெறியுடன் தீவிரவாதிகளில் ஒருவன் பார்த்துக்கொண்டு இருந்ததைக் கண்டார் தர்பாரா சிங். 'இவர்களுடன் சேருவதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று அவர் முடிவெடுத்த தருணம் அது. அன்றிரவு மனித வேட்டைக்குக் கிளம்பிய அந்தப் பயங்கரவாதிகள் கூட்டத்துடன் தானும் ஒருவனாக தர்பாரா வெளியேறினார். அன்று - பஞ்சாபில் ஒரு புதிய தீவிரவாதி உருவானார்.
சம்பவங்களைக் கோவையாகச் சொன்ன தர்பாரா சிங், மனம் உடைந்து சோக கீதம் இசைக்கும் ஒரு குயில்போல மெல்லிய குரலில் தொடர்ந்தார்...
''பஹன்ஜி... அன்று நான் அவர்களுடன் சேர்ந்திராவிட்டால், என் தங்கையின் கற்பு பறிபோயிருக்கும். அடுத்து என் மனைவி. இந்த அதிர்ச்சிகளைத் தாங்காமல் என் பெற்றோரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். என் தம்பியையும் அந்தக் கூட்டம் விட்டுவைத்து இருக்காது. இதை எல்லாம் யோசித்துதான் நான் சங்கடமான அந்த முடிவை எடுத்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஏனென்றால், கூட்டத்துக்குள் 'ஜென்டில்மேன் ஒப்பந்தம்’ ஒன்று உண்டு - 'நமது கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களின் மீது யாரும் எந்தக் காரணம் கொண்டும் கை வைக்கக் கூடாது’ என்று. ஒரு காலத்தில் நாயைக்கூடக் கல்லால் அடிக்கத் தயங்கியவன் நான். சந்தர்ப்பச் சூழ்நிலையால் 17 கொலைகளைச் செய்துவிட்டு, இன்று இதோ உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். சில சமயம் கடவுள் மீது கூட ரொம்பக் கோபம் வருகிறது. பஞ்சாபில் ஏன் பிறந்தேன் என்றுகூடத் தோன்றுகிறது. எல்லாம் என் தலை விதி. இந்தக் கூட்டத்தில் சேர்ந்த புதிதில் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. என்னை வற்புறுத்தி முதல் கொலையைச் செய்யவைத்தார் கள். அதற்குப் பிறகு, அதுவே பழக்கமாகிவிட்டது. கூட்டத்தில் இருந்து வெளியே வரவும் வழி இல்லை. ஆரம்பத்தில் நாங்கள் செய்த கொலைகள் எல்லாமே பணத் தேவைக்காகவும் மக்களை எப்போதும் ஒருவிதப் பீதியில் ஆழ்த்திவைக்கவும்தான். சில கொலை களுக்குப் பிறகு, கேட்ட பணத்தைக் கொடுக்க யாருமே தயங்கவில்லை. உயிருக்குப் பயந்த பணக்காரர்கள் சிலர், மாதாமாதம் மாமூல் தொகையாக 20,000 ரூபாய் வரை அனுப்பிவிடுவதும் உண்டு. மேலிடத்தில் இருந்து எங்களுக்கு உத்தரவு வரும் - 'இன்னாரைக் கடத்திப் பணய மாக இவ்வளவு தொகையை வசூல் செய்யவும்’ என்று. ஒரு நாள் தாமதமாகப் பணம் வந்தாலும் உயிர் பறிக்கப்பட்டுவிடும். மிகவும் சுலபமாகப் பணம் சம்பாதிக்கும் வழி - பணக்காரர்களைக் கடத்துவதுதான்.
பணயத் தொகையாகக் கிடைத்த பணத்தை மேலிடத்துக்கு அனுப்பிவிடுவோம். மற்றபடி செலவுக்கு அவ்வப்போது எந்த ஊரில் போய் யார் வீட்டில் கேட்டாலும் பணம் கிடைத்துவிடும். எங்கள் கூட்டங்களில் நாங்கள் முக்கால்வாசிப் பேர் வெஜிடேரியன்கள். கொஞ்சம் கஞ்சா, அபின் என்று போதைப் பழக்கம் உண்டு. இரவு முழுக்க நடக்க வேண்டியிருக்கிறதே.
ஒரு ஆள் ஒரு கிலோ பாதாம் பருப்பை ஒரே இரவில் தின்று முடித்துவிடுவான். கூடவே, ரெண்டு மூணு லிட்டர் பாலும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மாதிரி நாங்களும் கைவசம் சயனைட் தயாராக வைத்திருக்கிறோம். ஆனால், அதைச் சாப்பிடும் அளவு தைரியம் நிறையப் பேருக்கு இல்லை.
நடுநடுவில் பயிற்சிக்காகவும் ஆயுதங்கள் எடுத்து வருவதற்காகவும் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் போவது உண்டு. நானே மூன்று முறை போயிருக்கிறேன். எல்லையை க்ராஸ் பண்ணிவிட்டால், அவர்கள் எங்கள் கண்களைக் கட்டி டிரக்கில் ஏற்றி ஊருக்கு வெளியே பெரிய பங்களா ஒன்றில் கொண்டுபோய் விடுவார்கள். அங்கே துப்பாக்கி சுடப் பயிற்சி அளித்தனர். மது கண்டிப்பாகக் கிடையாது. ஆனால், ஓபியம் நிறைய உண்டு. ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை எங்களிடம் கொடுத்து (ஆயுதங்களுக்குப் பணம்கூட வாங்குவது இல்லை!) மறுபடி எல்லைக்கு வெளியே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.
இந்த 'காலிஸ்தான் விவகாரம்’ எங்களில் முக்கால்வாசிப் பேருக்குப் புரியவில்லை. தலைவர்கள் பெரிய கூட்டங்களில் பேசிக் கேட்டதோடு சரி. எல்லோருமே என்னைப் போல, வேறு வழி இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் தீவிரவாதியாக மாறியவர்கள்தான். மிலிட்டரிபோலவே எங்களிடையேயும் பதவி உண்டு - லெப்டினென்ட் ஜெனரல், ஏரியா கமாண்டர் என்று. நானே ஒரு ஏரியா கமாண்டர்தான். எங்களுடைய லெப்டினென்ட் ஜெனரலுக்கு - அவன் தீவிரவாதி ஆவதற்கு முன்பே திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலை காரணமாக அவன் தீவிரவாதியாக மாறிவிடவே, பெண் வீட்டார் பெண்ணைக் கொடுக்க மறுத்துவிட்டனர். விடுவோமா என்ன... நாங்களே நேராகப் போய் அந்தப் பெண்ணைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வந்துவிட்டோம். குருத்வாராவில் வைத்துக் கல்யாணமும் செய்துவைத்தோம். நல்ல வேளை... அந்தப் பெண் இதற்கெல்லாம் எதிர்ப்பு சொல்லவில்லை. இப்போது அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்'' என்று தர்பாரா சிங் முழுவதுமாகச் சொல்லி முடித்தார்.
''இத்தனை கொலைகள், கடத்தல்கள் எல்லாம் செய்தபோது உங்கள் மனதில் துளியும் வருத்தம் ஏற்படவில்லையா?''
''மேடம், அந்தச் சமயங்களில் நாங்கள் யோசிப்பது இல்லை. அளிக்கப்பட்ட வேலை தான் முக்கியம். பரிதாபப்பட்டுப் பிரயோஜனம்இல்லை. மேலிடத்து உத்தரவின்படி நான் அந்தக் காரியங்களைச் செய்யாவிட்டாலோ, செய்யத் தயங்கினாலோ, அடுத்த நாளே நான் உயிரோடு இருக்க மாட்டேன். உயிரின் மேல் யாருக்குத்தான் ஆசை இல்லை? அநேகமாக நாங்கள் கேட்ட பணயத் தொகையைக் கொடுக்க மறுத்தவர்கள்தான் கொல்லப் பட்டார்கள். இந்த வகைக் கொலைகளின் எண்ணிக்கைதான் அதிகம். சில கொலை களுக்கான காரணமே எங்களுக்குத் தெரியாது. மேடம், ஒட்டுமொத்தமாக எங்களைப் பழிக்கும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்... நாங்களும் சாதாரண ஆசை களுடன், சராசரி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தவர்கள்தான். பிறக்கும்போதே தீவிரவாதியாக யாராவது பிறக்கிறார்களா என்ன? என்னைப் போல எத்தனையோ பேர் மறுபடி சாதாரணமாக வாழத் தொடங்க மாட்டோமா என ஏங்குகிறார்கள். இத்தனை வருஷங்களுக்குப் பிறகு இப்போதுதான் சரணடைந்தவர்களை மன்னித்து, புது வாழ்க்கை தரும் சர்க்காரின் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு நானும் சரணடைந்தேன். சர்க்கார் மட்டும் எங்களுடைய கேஸ்களை எடுத்து, சீக்கிரமாக பைசல் பண்ணி ஒரு புது வாழ்வு கொடுக்கட்டும்... அதற்குப் பிறகு புரியும், எத்தனை தீவிரவாதிகள் வெளியே வரத் தயாராக இருக்கிறார்கள் என்று.
நம் நாட்டுக்கே உரித்தான 'சிவப்பு நாடா’ ஊழல் காரணமாக எல்லாமே தாமதம்... இதோ, என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்... நான் சரணடைந்து இந்த ஜெயிலுக்கு வந்து எட்டு மாதமாகிறது. என்னை எப்போது வெளியே விடுவார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. என் மனைவி, குழந்தைகள் மாதம் ஒரு முறை வந்து பார்க்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து புது வாழ்வைத் தொடங்க நான் ஏங்கித் தவிக்கிறேன். புதிய ஊரில், புதிய சூழ்நிலையில், 'மெக்கானிக் ஷாப்’ ஒன்றை ஆரம்பித்து, என் குழந்தைகளை நன்றாகப் படிக்கவைத்துப் பெரிய ஆபீஸர்களாக்க வேண்டும் என்பதே என் ஆசை. அந்த நாளுக்காக நான் காத்துக்கிடக்கிறேன்!'' என்று கண்களில் ஏக்கத்துடனும் வார்த்தைகளில் உறுதியுடனும் சொல்கிறார் தர்பாரா சிங். ''விரைவில் உங்களுக்கு நல்லது நடக்கட்டும்'' என நம்பிக்கையான வார்த்தைகளுடன் அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பெரோஸ்பூர் ஜெயிலைவிட்டு நான் வெளியே வந்தேன்.
- ரூபா பத்மநாபன்

-Vikatan Article

No comments:

Post a Comment