Friday, February 7, 2014

போன்டோக்களுடன் ஒரு நாள்! Vikatan 25.11.1984

றைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்திக்கு ஆதிவாசிகளிடத்தில் எப்போதுமே தனிப்பட்டதொரு பிரியம் உண்டு. எங்கே அவர்களைக் கண்டாலும் உடனே காரை நிறுத்தி, அவர்களோடு பேசி, சிரித்து,  நடனமாடி மகிழ்வதில் உற்சாகத்தைக் கண்டவர் அவர்.
இறப்பதற்கு முதல் நாள் ஒரிஸ்ஸாவில் பயணம் செய்தபோதுகூட, ஆதிவாசிகளைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்திருக்கிறார்.
''ஆதிவாசிகளைப் பார்க்கும்போது எல்லாம் நானும் அவர்களைச் சேர்ந்தவள் என்ற உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. சென்ற பிறவியில் நான் ஓர் ஆதிவாசியாக இருந்திருப்பேனோ என்று நினைக்கிறேன்...'' என்று இந்திரா ஒரிஸ்ஸாவில் பயணம் செய்தபோது கூறியிருக் கிறார்.
ஒரிஸ்ஸாவில் 62 இனங்களைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் வாழ்கின்றனர். இவர்களில், ஆதிகாலந்தொட்டே இருந்துவருபவர்கள் 'போன்டோ’ என்ற இனத்தினர் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
போன்டோக்கள் வசிக்கும் மலைக்குத் தனியாகச் செல்வது உயிருக்கே ஆபத்தான விஷயம் என்றும் போன்டோக்களின் திருவிழா சண்டைச் சச்சரவில் ஆரம்பித்து, கடைசியில் கொலையில் முடியும் என்றும் புத்தகத்தில் படித்திருந்தேன்.
போன்டோக்கள் வசிக்கும் இடம் எங்கிருக்கிறது?
ராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் முக்கியமானது தண்டகாரண்யம். ஒரிஸ்ஸா மாநிலத்தின் தென்பகுதியில் கோராபுட் மாவட்டத்தில் இருக்கும் இது, பிற்காலத்தில் 'போன்டோ ஹில்ஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டது. இங்கேதான் போன்டோ இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் வசிக்கின்றனர் என்கிற விவரத்தை முதலில் தெரிந்துகொண்டேன்.
'அங்கே செல்ல வழித்துணை வேண்டுமே’ என்று நான் தேடிக்கொண்டு இருந்த வேளையில், நண்பர் திரு. ஹரிநாயக் கைகொடுத்தார். ஹரிநாயக் ஆசிரியர் வேலை பார்ப்பவர். இவர், சில ஆண்டுகளுக்கு முன் போன்டோ மலையில் பல நாட்கள் தங்கி மக்கள்தொகை கணக்கெடுத்து இருக்கிறார். எனவே, அவரையே வழிகாட்டியாக அழைத்துக்கொண்டு நான் இரு நண்பர்களுடன் புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன் கோராபுட் மாவட்ட கலெக்டரின் அனுமதியையும் பெற்றுக்கொண்டோம்.
கோராபுட்டில் இருந்து ஜெய்ப்பூர் வழியாக. (இங்கேயும் ஒரு ஜெய்ப்பூர் இருக்கிறது) காட்டு இலாகாவினர் அன்புடன் அளித்து உதவிய ஜீப்பில் 140 கி.மீ. பயணம் செய்து கொய்ராபுட் என்னும் இடத்தை அடைந்தோம். இது போன்டோ மலையடிவாரத்தில் இருக்கும் சிறு கிராமம். போன்டோ மலைவாசிகளுக்கும் இந்தக் கிராமத்தாருக்கும் இடையே பண்டமாற்று முறை இருந்து வருகிறது. மலையில் கிடைக்கும் பலாப்பழம், வாழைப்பழம், தேன் போன்றவற்றை போன்டோவாசிகள் கிராமவாசிகளிடம் விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக உப்பு, வண்ண மணி மாலைகள் மற்றும் தேவையான பொருட்களைப் பெற்றுச் செல்கிறார்கள்.
மலையடிவாரமான கொய்ராபுட் வரையில்தான் வாகன வசதி. அதற்குப் பிறகு கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான மலையேற்றம். குறைந்தபட்சம் 3,800 அடி உயரமான இந்த மலை உச்சியை அடைய எட்டு மைல் ஏறியாக வேண்டும். அப்படியும் இப்படியுமாகத் தட்டுத் தடுமாறி நாங்கள் மலை ஏறி முடிக்கும்போது, சூரியன் மறைந்துவிட்டு இருந்தான்.
நாங்கள் முதலில் கண்ட இடம் முந்தலபாடா என்னும் மலைக் கிராமம். பிரிட்டனைச் சேர்ந்த மானிடவியல் அறிஞரான எல்வின் என்பவர் 1943-ம் ஆண்டு இங்கே வந்து ஆராய்ச்சி செய்து, போன்டோக்களைப் பற்றித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டதால், முந்தல பாடாவில் இரவைக் கழிப்பதே நல்லது என்று ஹரி சொன்னார். சரியென்று அங்கிருந்த குப்பைக் கூளங்களை எல்லாம் பெருக்கிச் சுத்தம் செய்து, கீழே படுத்த உடனேயே உறங்கிவிட்டோம். அவ்வளவு களைப்பு!
காலையில் பளீரென்று சூரியன் முகத்தில் அடித்தபோதுதான் கண் விழித்தோம்.
கண் விழித்த எங்கள் முன்னே தலை முழுவதும் மழிக்கப்பட்டு, கழுத்தில் வளையங்களுடன், உடல் முழுக்க வண்ண மாலைகளை ஆடையாகக் கொண்டு ஓர் இளம் பெண் நின்றிருந்தாள். அவள் அருகில் இரு சிறுவர்கள். அந்தப் பெண் திக்பிரமை பிடித்தாற்போல என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
''ஒன்றும் பயப்படாதீர்கள்... அவள் உங்களை யும்... உங்கள் உடைகளையும் பார்த்து வியப்படைந்து போயிருக்கிறாள்...'' என்றார் ஹரி, சிரித்துக்கொண்டே.
அன்று காலை முதல் வேலையாக, போன்டோக்களின் அரசனைச் சந்தித்தோம். அவருக்கு 80 வயதுக்கு மேல் இருக்கும். அவர் முகத்தில் அவ்வளவு மூப்பு தெரிந்தது. போன்டோ மலைவாசிகள் பெரும்பாலும் தங்கள் காட்டு மொழியிலேயே பேசுகின்றனர். ஒரிய மொழியை மிகச் சிலரே அறிந்திருக்கின்றனர்.
போன்டோ அரசனுக்குக் கொஞ்சம் கொஞ்சம் ஒரிய மொழி தெரிந்திருக்கிறது. அதனால் நான் அவரிடம், ''உங்களுக்கு என்ன வயதிருக்கும்?'' என்று கேட்டேன். அதற்கு அந்தத் தலைவர் சொன்ன பதிலை ஹரி எனக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். ''நீங்களெல்லாம் படித்தவர்கள்... நீங்கள்தான் சொல்லுங்களேன், எனக்கு என்ன வயதிருக்கும் என்று..?'' என்று அரசன் என்னையே திருப்பிக் கேட்டார். நான் அசடு வழிந்தேன். மக்களைக்  காப்பதும் பொதுக் காரியங்களைக் கவனிப்பதும் அரசனின் முக்கியமான பொறுப்புகள்.
போன்டோ இனப் பெண்கள், 'கெரங்கா’ என்னும் மரத்தின் பட்டையை உரித்து, அதில் இருந்து எடுக்கப்பட்ட நூலில் விதவிதமான வண்ணங்களைத் தோய்த்துப் பின்னி, அதை ஆடையாக நெய்து தங்கள் இடுப்பில் மட்டும் சுற்றிக்கொள்கின்றனர். சிறுமியில் இருந்து வயது முதிர்ந்தவர் வரை பெண்கள் கூந்தல் வளர்ப்பது இல்லை. மொட்டை அடித்து, தலையில் வண்ண மணிமாலைகளைச் சுற்றிக்கொள்கின்றனர். காதுகளிலும் கழுத்துகளிலும் வெள்ளி வளையங்களையும் கழுத்தில் இருந்து இடுப்பு வரை வெறும் மணிமாலைகளையும் மட்டுமே அணிந்திருக்கின்றனர். ஆண்கள் இதற்கு நேர்மாறாக, பெண்களைப் போல் நீண்ட தலைமுடியை வளர்த்து, இடுப்பில் சிறிய துண்டுடன், கையில் எப்போதும் வேல் அம்புடன் திரிகின்றனர். பாதுகாப்புக்காகப் பெண்கள் எப்போதும் தங்களிடம் சிறிய கத்தி ஒன்றினை வைத்திருக்கிறார்கள்.
போன்டோ இன மக்களின் திருமண முறையும் வித்தியாசமானது.
இங்கே ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் களுக்கென்று ஒரு வீடு ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. மாலை நேரங்களில், இந்த வீட்டில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் சந்திக் கின்றனர். பாட்டும் நடனமுமாகத் தொடர்ந்து பல நாட்கள் சந்திப்பு நடக்கும். இந்தச் சந்திப் பின்போது, தங்களுக்குத் தகுந்த ஜோடி கிடைத்தவுடன் அவர்கள் கூட்டத்திலிருந்து தனியே பிரிந்துவிடுகின்றனர். இதைக் காணும் மணமகனின் நண்பர்கள் அவனுடைய காதலியை மட்டும் தனியே கடத்திச் செல்கின்றனர். காதலியைத் தேடிக் கண்டுபிடிப்பது காதலனின் வேலை. அவன் தேடி அலைந்து தன் காதலியைக் கண்டுபிடித்ததும், இருவரையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, ஒரு குடிசையினுள் அடைத்துவிடுகின்றனர். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் கணவன் - மனைவி என அறிவிக்கப்படுகின்றனர்.
மாலையில், ஈச்ச மரத்தில் இருந்து கிடைக்கும் மதுவுடன் விருந்து அமர்க்களமாக நடக்கும். ஈச்ச மர மதுவுக்கு 'சலாப்’ எனப் பெயர். போன்டோ இனத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை 'சலாப்’ குடி மன்னர்கள்! இதைக் குடிப்பதாலேயே பெரும்பாலும் சண்டைச் சச்சரவுகள் ஏற்படுகின்றன.
போன்டோ இனத்தினர் பெரும்பாலும் விவசாயம் செய்கின்றனர். இவர்களின் பொழுதுபோக்கு வேட்டையாடுவது; இவர்களின் உணவு அரிசி, சோளம், கேழ்வரகு, வனவிலங்குகளின் இறைச்சி.
நாகரிகம் அற்றவர்கள், முரட்டுச் சுபாவம் கொண்டவர்கள், பழகும் தன்மை அறியாதவர்கள் என்றெல்லாம் போன்டோ ஆதிவாசிகளைப் பற்றிப் பலர் சொல்ல, எழுதக் கேள்விப்பட்டு இருந்தாலும், 'ராம்... ராம்...’ என்றும், 'பாபுஜி... பாபுஜி...’ என்றும் அவர்கள் எங்களிடம் காட்டிய பரிவையும் பாசத்தையும் அன்பையும் எங்களால் மறக்கவே முடியாது!
கட்டுரை, படங்கள்: விவேக் விக்கி

ஆதிவாசிகள்
ஆதிவாசிகளிடையே ஓர் ஒற்றுமை உணர்வு உண்டு. ஓர் இனம் ஏதாவதொரு மிருகத்தையோ, செடியையோ அதன் அடையாளமாக வைத்துக்கொள்ளும். எனவே, அந்த இனத்தினர் அந்த மிருகத்தைக் கொன்று தின்பது இல்லை. ஒரே சின்னத்தை உடையவர்கள் உறவினராகக் கருதப்பட்ட படியால் அவர்கள் ஒருவரை ஒருவர் கொல்வது இல்லை. அதே இனப் பெண்ணை மணம் செய்துகொள்வதும் இல்லை.
தொடக்கக் கால ஆதிவாசிகளைப் பற்றி ஜூலியஸ் சீசர் ஒரு நூல் எழுதி இருக்கிறாராம்.
கோயா போன்ற இனங்களின் தலைவன், விழாக் காலங்களில் மட்டும் மதுவும் ஆடையும் பெறுவான். வழிபாட்டுக் காலங்களில் அவருக்கு ஒரு ஜோடி வேட்டியும் ஒரு சேவலும் தருவர். வேட்டையில் கிடைப்பவற்றில் ஒரு பகுதியும் அவருக்கு உண்டு. அவர் யாரையும் தனக்கு வேலை செய்ய உத்தரவிடலாம். அபராதத் தொகையில் ஒரு பகுதியை உபயோகித்துக்கொள்ளலாம். தலைவர் இத்தனை அதிகாரங்கள் பெற்றிருந்தாலும், அவர் மனம் போனவாறு நடந்துகொள்ள மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நாகர் இனத்தில், ஒருவர் வெட்டி வரும் தலையின் எண்ணிக்கையை வைத்தே அவருடைய வீரத்தைப் பாராட்டுவார்கள்; மாயோரிகள் போன்ற இனத்தில் நடனத் திறமை பாராட்டு பெறும். போன்டோ மக்கள் நிறைய மது தருபவனைப் புகழ்வர்.
வழக்கம், நம்பிக்கை, மூடநம்பிக்கை இவற்றில் ஆழ்ந்த கவனம் செலுத்துபவர்கள் ஆதிவாசிகள். தேவதைகளுக்குக் கோபம் வந்தால் நோய் முதலியன வரும் என்று நம்புப வர்கள். இதைத் தடுப்பதற்காக, மந்திரவாதிகளையும் புரோகிதர்களையும் வரவழைத்து, பலியிடுதல் போன்ற வழக்கமும் உண்டு.

_ Vikatan article

No comments:

Post a Comment