Saturday, February 1, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 19

அதிகாரம் மொத்தமும் தன் கையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்த இந்திரா, அதற்காகக் கண்டுபிடித்த வழிதான் எமர்ஜென்ஸி!
 நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தன்னைக் காப்பாற்ற இதனை விட்டால் வேறு வழி இல்லை என்று ஒருசில காங்கிரஸ் தலைவர்களையாவது நம்பவைக்க, இந்திரா முயற்சித்தார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜே.வெங்கல்ராவ், டெல்லி வரவழைக்கப்பட்டார். 'நம்முடைய ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது’ என்று சொல்லி, அவரை நம்பவைத்தார். இதனை கர்நாடக முதல்வரிடம் சொல்லச் சொன்னார். மத்தியப்பிரதேச முதல்வர் பி.சி. சேத்தியை அழைத்துப் பேசினார். அவரிடமும் இதனைச் சொன்னார். இவரை ராஜஸ்தான் முதல்வர் ஹரிதேவ் ஜோஹியைச் சந்திக்க அனுப்பினார். இந்திரா சொன்னதை இவர் போய்ச் சொன்னார். இவை அனைத்துக்கும் விமானப் படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஹரியானா முதல்வர் பன்சிலாலுக்கு செய்தி அனுப்பப்பட்டது. பீகார் முதல்வருக்கு, 'ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது. எது நடந்தாலும் ஆதரியுங்கள்’ என்று தகவல் போனது. ஆனால் யாருமே, எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட இருக்கிறது என்று நினைக்கவில்லை.
ஜூன் 25-ம் தேதி (1975) மாலையில் ஆர்.கே.தவானின் தனி அறையில் அப்போதைய உள்துறை இணை அமைச்சர் ஓம்.மேத்தா, ஹரியானா முதல்வர் பன்சிலால், டெல்லி சி.ஐ.டி. எஸ்.பி. பக்வா ஆகியோர் கூடியிருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைதுசெய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அன்று இரவு 7.30 மணிக்கு திகார் சிறைக்கு டெல்லி தலைமைச் செயலாளர் ஜே.கே.கோளி போய்ப் பார்த்தார்.
இந்தச் செய்திகள் அனைத்தும் வெளியில் கசிந்துவிடாதவாறு தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 26.6.1975 காலையில் எந்த செய்தித்தாளும் வெளிவரக் கூடாது என்று டெல்லி லெப்டினென்ட் கவர்னர் கூறினார். அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார். டெல்லி மின்சார வாரியத்தின் முந்தைய பொதுமேலாளர் பி.என்.மஹ்ரோத்ராவை அழைத்தார். பத்திரிகை அலுவலகங்களுக்குத் தரப்பட்டுள்ள மின்சாரத்தை இரவு 2 மணிக்குத் துண்டிக்கச் சொன்னார். இதன்படி பத்திரிகை அலுவலகங்களில் மின் இணைப்பு துண்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் தகவல்களை அமல்படுத்துங்கள் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் செய்தி போனது.
அன்றைய தினம் பிரதமர் இந்திராவை மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த்த சங்கர் ரே சந்திக்கப் போனார். ''நாட்டின் நிலைமை சீர்குலைந்திருப்பதால், ஒரு அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுகிறது'' என்று அவரிடம் இந்திரா கூறினார். ''நாட்டில் இப்போதுள்ள சட்டங்களை வைத்தே சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றலாம்'' என்று ரே கூறினார். ஆனால், அதனை இந்திரா ஏற்கவில்லை. குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவைச் சந்திக்கச் சென்றார் இந்திரா. தன்னோடு சித்தார்த்த சங்கர் ரேவையும் அழைத்துப் போனார். 'உங்கள் பரிந்துரையை அனுப்புங்கள்’ என்றார் குடியரசுத் தலைவர். அப்போது காங்கிரஸ் தலைவராக தேவ்காந்த் பரூவா இருந்தார். அவரிடம் பேசுங்கள் என்றார் ரே. பரூவாவிடம் இந்திரா பேசினார்.
இந்திரா, பரூவா, ரே ஆகிய மூவரும் நெடுநேரம் இதுபற்றி விவாதம் செய்துகொண்டு இருந்தார்கள். நேரத்தை இழுத்தடிப்பதாக சஞ்சய் காந்தி நினைத்தார். இப்படி பேசிக்கொண்டே இருப்பது சஞ்சய் காந்திக்குப் பிடிக்கவில்லை. இருவருடன் ஆலோசனைசெய்து காலம் கடத்துவதை அவர் விரும்பவில்லை. 'உங்களுக்கு நாட்டை ஆளத் தெரியாது’ என்று சித்தார்த்த சங்கர் ரேவை நோக்கி சஞ்சய் காந்தி கத்தினார். ஆனாலும், அமைதியாக நின்றார் ரே.
திடீரென இந்திரா, 'உயர் நீதிமன்றங்களையும் பத்திரிகை அலுவலகங்களையும் மூடப்போகிறேன்’ என்று கூறினார். ஆடிப்போனார் ரே. 'சட்டத்தில் அதற்கெல்லாம் இடம் இல்லை’ என்றார் ரே. பதிலே பேசாமல் தன்னுடைய அறைக்குள் போனார் இந்திரா.
அடுத்து, உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி வந்தார். அப்போது இரவு 10.30 மணி. 'நாடு மிகக் குழப்பமான நிலையில் இருக்கிறது. அதிர்ச்சி வைத்தியம் தர வேண்டும்’ என்றார் இந்திரா. 'அப்படியானால் என்ன?’ என்று பிரம்மானந்த ரெட்டி கேட்டார். 'அவசரநிலைப் பிரகடனம் கொண்டுவரப்போகிறேன்’ என்று இந்திரா சொன்னார். 'எந்தச் சூழ்நிலையையும் இந்த நாட்டில் ஏற்கெனவே உள்ள சட்டத்தால் சமாளிக்க முடியும்’ என்றார் பிரம்மானந்த ரெட்டி. அவரைப் போகச் சொல்லிவிட்டார் இந்திரா. இரவில் மறுபடியும் அவரை வரச் சொன்னார். 'நீங்கள் சொன்னது பற்றி யோசித்தேன். நீங்கள் சொல்வது இந்த நாட்டுக்குச் சரியாக வராது. அவசரநிலைப் பிரகடனம்தான் சரியாக இருக்கும்’ என்றார். 'உங்களுக்கு எது சரியோ... அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் பிரம்மானந்த ரெட்டி.
அவர் போனதும் குடியரசுத் தலைவருக்கு பிரதமரின் கடிதம் தயார் ஆனது. இரவு 11.20 மணிக்குக் கடிதம் கொண்டுசெல்லப்பட்டது.
'டாப் சீக்ரெட்’ என்று தலைப்பிட்டு அந்தக் கடிதத்தை இந்திரா எழுதினார். 'டியர் ராஷ்டிராபதிஜி’ என்று தொடங்கியது அந்தக் கடிதம்.
''இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இதற்கு உள்நாட்டுக் குழப்பம்தான் காரணம். இதுபற்றி விவாதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை நான் கூட்ட விரும்பினேன். ஆனால், இன்று இரவுக்குள் அது முடியாது என்பதால், என் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறேன். 352 விதியின்படி செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய இரவே அவசரநிலையைப் பரிந்துரை செய்ய வேண்டும்'' - என்று கடிதத்தில் குறிப்பிட்டவர் 'யுவர் சின்சியர்லி’ என்று எழுதி இந்திரா காந்தி என்று கையெழுத்துப் போட்டார். அந்த நாள் 25.6.1975.
இந்தக் கடிதத்தின் மீது எந்தக் கேள்வியும் எழுப்பாமல் ஏற்றுக்கொண்டார் குடியரசுத் தலைவர். 'உள்நாட்டு சட்டம் - ஒழுங்கு சீர்குலைவினால் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவசரநிலையைப் பிரகடனம் செய்கிறேன்’ என்று குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது பிரகடனம் செய்தார். அந்த நள்ளிரவு நேரத்தில் ஜனநாயகம் இருட்டறையில் தள்ளப்பட்டது!
அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்படுவதாக இருந்தால், அது உள்துறைக்குத் தெரிந்திருக்க வேண்டும். உள்துறை அதிகாரிகளுக்கும் தெரியவே தெரியாது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு 11.20-க்கு கடிதம் அனுப்பிவைக்கப்படுகிறது என்றால், 10.30-க்குத்தான் உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டிக்குத் தெரியும். ஆனால், உள்துறை இணை அமைச்சர் ஓம்.மேத்தாவுக்கு அனைத்தும் முன்கூட்டியே தெரிந்திருந்தது. பிரம்மானந்த ரெட்டி எதையும் ஏற்க மாட்டார் என்பதால், ஓம்.மேத்தாவை வைத்து காரியம் சாதித்துக்கொண்டார்கள். இவையும் ஓம்.மேத்தாவுக்குத் தெரியுமே தவிர, உள்துறை அதிகாரிகள் யாருக்கும் தெரியாது.
ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொன்னால், இந்தத் தகவலை முதலில் அரசுக்குச் சொல்ல வேண்டியது புலனாய்வுத் துறை. ஆனால், நாட்டில் 12.6.1975 முதல் 25.6.1975 வரை எந்த வன்முறைச் சம்பவமும் நடந்ததாகவோ, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றோ எந்தவொரு அறிக்கையையும் புலனாய்வுத் துறை, உள்துறைக்கோ பிரதமர் அலுவலகத்துக்கோ அனுப்பவில்லை. நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது பற்றிய தகவலை ஜூன் 26-ம் தேதி, தான் அலுவலகம் போன பிறகே தெரிந்துகொண்டதாக ஐ.பி. இயக்குநர் ஆத்ம ஜெயராம் கூறினார். மறுநாள் 26-ம் தேதி காலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடியபோதுதான் அமைச்சர்கள் அனைவருக்கும் அவசரநிலைப் பிரகடனம் அமலான செய்தியே தெரியும். அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் சரண் சிங். 'இதுபோன்ற முரட்டுத்தனமான நடவடிக்கைகள் அதிக நாள் நீடிக்காது’ என்று சரண் சிங் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் சரண் சிங் பதவி இழந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சராக ஆனார் பன்சிலால். சஞ்சய் காந்தியின் கார் கம்பெனிக்குத் தாராளமாய் நிலம் தாரை வார்த்துக்கொடுத்தவர் இந்த பன்சிலால்.
'எல்லாச் செய்திகளையும் நான் பார்த்துத்தான் அனுப்ப வேண்டும்’ என்று செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஐ.கே.குஜ்ராலிடம் சஞ்சய் காந்தி சொன்னார். குஜ்ரால் இதனை ஏற்கவில்லை. உடனடியாக சஞ்சய் காந்தியின் இன்னொரு இடது கையான வி.சி.சுக்லா, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டார். உள்துறை அமைச்சரான பிரம்மானந்த ரெட்டியை, அதன் பிறகு இந்திரா மதிக்கவே இல்லை. ஓம்.மேத்தா உள்துறை அமைச்சராகவே வலம் வந்தார். இப்படிப்பட்டவர்களைத்தான் இந்திரா - சஞ்சய் ஆகிய இருவரும் விரும்பினார்கள். மற்றவர்கள் வாய்மூடி மௌனியானார்கள்.
சித்தார்த்த சங்கர் ரேயிடம்தான் இப்படிச் செய்யப்போவதாக இந்திரா முதலில் சொன்னார். அவர் ஆரம்பத்தில் பல விஷயங்களை ஏற்கவில்லையே தவிர, கடுமையாக எதிர்க்கவில்லை. குடியரசுத் தலைவரை இந்திரா பார்க்கப் போனபோது, உடன் சென்ற இவர்தான் இந்திராவுக்கு பல விஷயங்களை எடுத்துக்கொடுத்தார் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுபவராக குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது இருந்தார். இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடியவராக சஞ்சய் இருந்தார்.
'அலகாபாத் தீர்ப்பு மூலமாக தனிப்பட்ட இந்திராவுக்குத்தானே சிக்கல் வந்தது. அவர் சில மாதங்கள் பதவி விலகி இருக்கட்டும்’ என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள். அதனையும் சஞ்சய் ஏற்கவில்லை. 'எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் இந்திராதான் பிரதமர்’ என்றார் சஞ்சய். ஆனால், உண்மையான பிரதமராக அவரே அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கு இருந்தார்!
- Vikatan Article 

No comments:

Post a Comment