Friday, February 7, 2014

டெல்லியில் ஒரு மோதல்! Vikatan 07.02.1993

டெல்லியில் 24-வது சர்வதேசத் திரைப்பட விழா நடந்துகொண்டு இருந்த சமயம், கமல்ஹாசன் உட்பட அதில் கலந்துகொண்ட அனைத்துத் திரைப்படக் கலைஞர்களின் முகங்களிலும் விழா முழுவதும் ஏதோ ஒரு சஞ்சலம். காரணம், அப்போது பற்றி எரிந்துகொண்டு இருந்தது பம்பாய்!
'பம்பாயில் நிலைமையைச் சகஜ நிலைக்குக் கொண்டுவர உடனடியாக பிரதமர் பம்பாய்க்குச் செல்ல வேண்டும்...’ போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கொடுப்பதற்காக, திரைப்பட நட்சத்திரங்களும் இயக்குநர்களும் ஜனவரி 13-ம் தேதி காலை, ரேஸ்கோர்ஸ் சாலையில் இருக்கும் பிரதமர் வீட்டின் தோட்டத்தில் குழுமினர்.
அவர்களைச் சந்தித்த பிரதமர், ''பம்பாயில் 60 சதவிகித பஸ்கள் இப்போது இயங்கத் தொடங்கிவிட்டன. ரயில் போக்குவரத்தும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. நிலைமையைச் சமாளிக்க, சரத்பவாரை என் பிரதிநிதியாக அங்கு அனுப்பி இருக்கிறேன். இப்போது அங்கு மெதுவாக சகஜ நிலை திரும்பி வருகிறது. நாளை சங்கராந்தி பண்டிகை என்பதால், நாளை மறுநாள் காலை நான் பம்பாய்க்குச் செல்கிறேன். பம்பாய் கலவரம் உங்களைப்போலவே என்னையும் கலக்கத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. உங்களின் மனுவில் கூறியபடி கலவரப் பகுதிகளில் 'நெருக்கடி நிலை’ கொண்டுவருவதில் சில பிரச்னைகளை யோசிக்க வேண்டி உள்ளது'' என்றார்.
தொடர்ந்து, ஷர்மிளா தாகூரின் கேள்விக்குப் பதில் அளித்தபோது, ''அங்கொன்றும் இங்கொன்றுமாக விஷமிகள் சிலர் கலாட்டா செய்வதும் தீ வைப்பதும், சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸாரோ, ராணுவத்தினரோ வருவதற்குள், அங்கே இருந்து ஓடிவிடுவதுமாக இருக்கின்றனர்'' என்றார் பிரதமர்.
இந்த பதில் ஷபனா ஆஸ்மியையும் கமல்ஹாசனையும் அதிகமாக உணர்ச்சிவசப்பட வைத்தது. ஷர்மிளா தாகூரிடம் இருந்து ஷபனா ஆஸ்மி மைக்கை வாங்கிப் பேச ஆரம்பித்தார். ''பம்பாய் கலவரத்துக்குச் சில விஷமிகளே காரணம் என்று தவறுதலாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல. மைனாரிட்டி மக்க ளின் மீது திட்டமிட்டுத் தாக்கு தல் நடத்தப்படுகிறது. இதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கலவரம் டிசம்பர் 27-ம் தேதி ஆரம்பித்தது. ஆனால், இன்றுவரை நீங்கள் சொல்வதுபோல நிலைமை மேம்படவில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டுதான் வருகிறது!'' என்று                                   பேசினார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய பிரதமர், ''எனக்கு வரும் அறிக்கைகளின்படி பம்பாயில் நிலைமை மேம்பட்டு வருகிறது என்றுதான் சொல்வேன். அங்கே நிலைமையைச் சமாளித்து வரும் அதிகாரிகள், 'ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைமை மேலும் சகஜ நிலைக்குத் திரும்பும்’ என்று உறுதியாக நம்புகிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்'' என்றார்.
''அப்படியானால், பம்பாய்க்குச் செல்லாமல் இன்னும் எவ்வளவு நாள்தான் பொறுமையாக இருக்கப்போகிறீர்கள்?'' என்று குரலில் கொஞ்சம் கோபம் சொட்டக் கேட்டார் கமல்.
கமல்ஹாசன் கேள்வியை முடிப்பதற்கு முன்பே பிரதமர்
குறுக்கிட்டார். ''என்னை இப்போது என்ன செய்யச் சொல்கிறீர்கள்? உடனே ஏர்போர்ட்டுக்கு ஓடச் சொல்கிறீர்களா? I am sorry. There is a limit beyond which a Prime Minister cannot run. நான் கடந்த மூன்று நாட்களாகவே பம்பாய்க்குப் போக வேண்டும் என்று முயற்சி செய்துவருகிறேன். ஆனால், அங்கே சட்டம் - ஒழுங்கைக் கட்டுப்படுத்தி வரும் அதிகாரிகள், என்னை உடனடியாக பம்பாய்க்கு வர வேண்டாம் என்று சொல்கிறார்கள். அவர் களின் யோசனையை மீறி நான் செயல்பட முடியாது. தயவுசெய்து என் நிலையைப் புரிந்துகொள்ளுங்கள்!'' என்றார்.
''ஏன் உடனே போக முடியாது?'' - கமல்ஹாசன்.
''பிரதமர் என்ற முறையில் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்கு என்னால் போக முடியாது. பம்பாய்க்கு மாத்திரம் அல்ல... இங்கே டெல்லியிலேயேகூட பக்கத்தில் இருக்கும் நாடாளுமன்றத்துக்கோ, அல்லது ஜனாதிபதி மாளிகைக்கோ நீங்கள் என்னை இப்போது அழைத்தால், என்னால் உடனே கிளம்பிவிட முடியாது. நான் வெளியே செல்வதற்கு எனக்கென்று சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உண்டு'' என்று பிரதமர் கடுமையான குரலில் கூறினார்.
''சங்கராந்தி கொண்டாட்டத்துக்குப் பிறகு நாளை மறுநாள் நீங்கள் பம்பாய்க்குச் சென்றால்?'' - கமல்ஹாசன் விடவில்லை.
''சகஜ நிலை வந்தாலும் சரி... வராவிட்டாலும் சரி... நாளை மறுநாள் நான் பம்பாய்க்குச் செல்கிறேன். பம்பாய் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகுதான் நான் அங்கே போகப்போகிறேன் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு!'' - குரலைச் சற்று உயர்த்திக் கூறினார் பிரதமர்.
''அப்படி என்றால், நாளை மறுநாளுக்குள் பம்பாய் சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் என்று நீங்கள் நினைக்கவில்லை... அப்படித்தானே?'' - கமல்ஹாசன் சளைக்காமல் பிரதமரை மடக்கினார்.
''என்னை என்ன குறுக்கு விசாரணை செய்கிறீர்களா?'' - பிரதமர் புருவத்தை நெரித்தபடி எரிச்சலுடன் கேட்டார்.
''உங்களைவிட்டால் நாங்கள் யாரிடம் குறுக்கு விசாரணை செய்வது?'' - என்று கமல்ஹாசன் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் பதிலுக்கு பிரதமரிடம் எதிர்க் கேள்வி கேட்டார்.
''கமல்ஹாசன்! தயவுசெய்து இதைப் புரிந்துகொள்ளுங்கள். நாளை மறுநாளுக்குள் பம்பாய் சகஜ நிலைக்குத் திரும்பிவிடும் என்று அதிகாரி கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையாக இருப்பதால்தான், நான் நம்பிக்கை யாக இருக்கிறேன்!'' என்று பிரதமர் ஒரேமூச்சில் பேசி நிறுத்தினார்.
பிறகு, எல்லோரையும் பார்த்து பிரதமர் பொதுவாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, ''பம்பாயில் நடந்த கலவரங்களும் அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களும் இழப்புக்களும்தான் வெளி உலகத்துக்குத் தெரியுமே தவிர, அரசும் அதிகாரி களும் எத்தனை அசம்பாவிதங்களைத் தடுத்து இருக்கிறார்கள்... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் புரிந்து கொள்வதும் இல்லை... பாராட்டுவதும் இல்லை'' என்று கூறி கை குலுக்கி எல்லோரையும் வழி அனுப்பிவைத்தார்!

No comments:

Post a Comment