Friday, February 7, 2014

20 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரிடம் டிரைவராகப் பணிபுரிந்த மதுரை ராமசாமி சொல்கிறார்: 06.11.88

ஐயோ... உங்க காரையா நிறுத்தினேன்?
சோலை
20 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரிடம் டிரைவராகப் பணிபுரிந்த மதுரை ராமசாமி சொல்கிறார்:''அந்த நடிகர் நாடக கம்பெனி ஒன்றில் துணை நடிகராக இருந்தார். மயிலாப்பூர் தேரடித் தெருவுக்குப் பக்கத்தில் குறுகலான ஒரு சந்தில் குடியிருந்தார். அவருடைய புதல்விக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம்.
தமது நாடக கம்பெனியிலும் எதிர்பார்த்த உதவி அவருக்குக் கிடைக்கவில்லை. நம்பிச் சென்ற இடங்களில்  நல்ல பதில் கிடைக்கவில்லை. இன்னும் ஐயாயிரம் ரூபாய் தேவை.
'டேய்! ஏண்டா எங்கெங்கோ அலையறே? போய்ப் பேசாமல் எம்.ஜி.ஆரைப் பார்!’ என்று இன்னொருதுணை நடிகர், அந்த நடிகருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த நடிகருக்கோ, எம்.ஜி.ஆர். என்றால் பிடிக்காது. ஏனெனில், அவர் இன்னொரு நாடக கம்பெனியின் நடிகராயிற்றே?
என்றாலும், அவர் லாயிட்ஸ் சாலை இல்லத்துக்கு வந்து தலைவரைச் சந்தித்தார். ஐயாயிரம் ரூபாய் இல்லை என்றால், திருமணமே நின்றுபோகும் பரிதாப நிலையை அந்தத் துணை நடிகர் கரகரத்த குரலில் தலைவரிடம் விவரித்தார்.
'உங்கள் முவரியைக் கொடுத்துவிட்டு நீங்கள் செல்லலாம்’ என்று தலைவர் கூறினார்.
முகவரியை வாங்கித் தனது சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டார் தலைவர். அன்று முழுவதும் இடைவிடாத படப்பிடிப்பு. இரவு 11 மணிக்குத் தான் தலைவர் வீடு திரும்பினார். சட்டைப் பைக்குள் கையைவிட்டவருக்கு அந்தத் துணை நடிகரின் முகவரி தென்பட்டது. 'ஏன் என்னிடம் காலாகாலத்தில் நினைவுபடுத்தவில்லை?’ என்று என் மீது சீறிப் பாய்ந்தார். நள்ளிரவு 1 மணிக்கு அந்தத் துணை நடிகரின் இல்லம் தேடிச் சென்றேன்.
ஒரு சிம்னி விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. அந்த விளக்குக்கு முன்பு அந்தத் துணை நடிகரும் அவரது துணைவியாரும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பாக மூன்று டம்ளர்களில் பால்... ஆம்... விஷம் கலந்த பால்!
மணப்பெண்ணோ நடைபெறுவது தெரியாமல் உறங்கிக்கொண்டு இருந் தார். அவருக்கும் சேர்த்துத்தான் விஷம் கலந்த பால் தயாராக இருந்தது!
''சார்... சார்!’
'யாரது?’
'நான்தான்... எம்.ஜி.ஆருடைய டிரைவர் வந்திருக்கிறேன்.’
அந்தத் துணை நடிகர் ஓடி வந்து வாயிற்கதவைத் திறந்தார். உள்ளே சென்றேன்.
'இந்தாருங்கள் ஆறாயிரம் ரூபாய். தலைவர் கொடுத்தார். ஜாம்ஜாமென்று கல்யாணத்தை நடத்துங்கள்’ என்று எடுத்துக் கொடுத்தேன்.
மைசூரில் ஒரு கதை விவாதம். பெங்களூரில் இருந்து மைசூர் நோக்கி பிளைமவுத் கார் படுவேகமாகப் பறந்துகொண்டு இருந்தது.
பின் சீட்டில் தலைவருடன் அம்மா (ஜானகி அம்மையார்), அம்மாவின் சகோதரர் மணியின் இரண்டு குழந்தைகள் லதா, சுதா...
திடீர் என்று 'காரை நிறுத்தித் திருப்பு’ என்று தலைவர் கட்டளையிட்டார். மீண்டும் கார் பெங்களூர் நோக்கிப் பறந்தது.
நடுப் பகல். நல்ல வெயில். வயது முதிர்ந்த மூதாட்டியும் ஒரு குழந்தையும் சாலை ஓரமாகச் சென்றுகொண்டு இருந்தனர். அந்த மூதாட்டியின் தலையில் விறகுச் சுமை. அவர்களுக்குப் பக்கத் தில் வந்ததும், 'காரை நிறுத்து’ என்றார் தலைவர்.
'ஜானு... உன் செருப்புகளைக் கழற்று, லதாவின் செருப்புகளையும் கழற்று’ என்றார். ஏதும் புரியாமல் அம்மா கழற்றினார்.
'சூடு தாங்க முடியாமல் அந்த மூதாட்டியும் குழந்தை யும் ஓடி ஓடி நடைபோடுவதைப் பார்! அவர்களுக்கு அந்தச் செருப்புகளைக் கொடுத்து விடு’ என்றார். அம்மாவும் கொடுத்துவிட்டார்.
முதுமலைக் காட்டுப் பகுதியில் தேவர் ஃபிலிம்ஸ் படப்பிடிப்பு முடித்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டு இருந்தோம். காலை 7 மணி. சாலையே தெரியாத அளவுக்கு மஞ்சு மூட்டம். வழியில் ஒருவர் கை காட்டி காரை நிறுத்தச் சொன்னார். முன்பின் தெரியாத ஒருவர் கை காட்டினால், நடுக்காட்டில் - மனித நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஏன் நிறுத்த வேண்டும் என்று நான் காரை நிறுத்தவில்லை.
'காரை நிறுத்து’ என்று தலைவர் உரத்த குரலில் உத்தரவிட்டார். அந்த ஆள் ஓடி வந்தார். அழுக்குப் படிந்த மேனி. வியர்வை நாற்றம் வேறு.
'ஐயா! காலையில் வர வேண்டிய பஸ் வர வில்லை. இங்கே என் மகளைப் பார்க்க வந் தேன். நான் நேரத்துக்கு வேலைக்குப் போக வில்லை என்றால், வேலையே போய்விடும். என்னை மெயின் ரோட்டில் இறக்கிவிடுங்கள். அங்கே இருந்து நான் பெங்களூர் போய்விடுகி றேன் என்று அந்த ஆள் கெஞ்சினார்.
தலைவர் பின் பக்கக் கதவைத் திறந்து அவரைத் தன் அருகில் அமரச் சொன்னார். சற்று நேரத்துக்கெல்லாம் தலைவரை அடையா ளம் கண்டுகொண்டு, 'ஐயோ..., உங்கள் காரையா நிறுத்தினேன்?’ என்ற அவர் கீழே குதித்துவிடுவார் போலிருந்தது. அவருடைய இரு கரங்களையும் தலைவர் பற்றிக்கொண்டார். 'நானும் பெங்களூர்தான் போகிறேன். அங்கேயே இறக்கிவிடுகிறேன்’ என்றார். அவரை அவருடைய மில் வாசலிலேயே இறக்கிவிட்டோம்.
நான் ஒரு சாதாரண டிரைவர். அவருடைய வேலைக்காரன்தான். ஆனால், மதுரைக்கு வந்தால் என்ன செய்வார் தெரியுமா? அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு என் அம்மாவை அழைத்து வரச் சொல்வார். அவருடன் அரை மணி நேரமாவது அளவளாவுவார்.''
''எண்ணிப் பார்க்கவே உடல் நடுங்குகிறது!''
20 ஆண்டுகளாக எம்.ஜி.ஆருக்கு மெய்காப்பாளராகப் பணிபுரிந்த மாடக்குளம் தர்மலிங்கம் சொல்கிறார்.
''கோல்கொண்டா கோட்டையில் 'பாக்தாத் திருடன்’ வெளிப்புறப் படப் பிடிப்பு. தலைவருக்கு ஜோடியாக வைஜயந்திமாலா நடித்தார். காலை நேரப் படப்பிடிப்பு முடிந்து அந்தக் கோட்டை யில் தலைவர் ஓய்வில் இருந்தார். அந்தக் கோட்டை மிகப் பழமையானது. ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் அமர்ந்திருந்தார். மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது. தலைவர் எழுந்து சில அடிகள் தூரம்தான் சென்றிருப்பார். அவர் அது வரை அமர்ந்திருந்த இடத்துக்குச் சரியாக நேராகக் கோட்டையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து மண் மேடானது. தலைவர் திரும்பிப் பார்த்தார். ஒரு விநாடி திகைத்து நின்றார்.
இன்னும் ஒரே ஒரு நிமிடம் அவர் அந்த இடத்தில் அமர்ந்திருந்தால்..? எண்ணிப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.
1962-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம். சேலத்தில் இருந்து துவங்க வேண்டும். முதல் நாள் இரவு 8 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட வேண்டும்.
தலைவரின் துணைவியார் அம்முக்குட்டி அம்மாள் (தங்கமணி) மிகுந்த நோய்வாய்ப்பட்டு இருந்தார். அவரிடம் சொல்லிவிட்டு வருவதற் காக அறைக்குள் சென்றார். சென்றவர் திரும்பி வரவே இல்லை.
தலைவரின் கரங்களை அந்த அம்மையார் இறுகப் பற்றிக்கொண்டுவிட்டார். அதிகாலை 5 மணிக்குத்தான் வந்தார். 'எதிர்பாராதது ஏதாவது நடந்துவிட்டால், எனக்குத் தகவல் கொடுங்கள்’ என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
'கண்டிப்பாகத் தேர்தல் பிரசாரம் செய்வேன்’ என்று அண்ணாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த, தனது துணைவியாரை மரணப் படுக்கையில் விட்டுவிட்டுப் புறப்பட்டார்.
சேலம் - கோவை - திருச்சி மாவட்டச் சுற்றுப்பயணத்துக்குப் பின்னர் தஞ்சை...
தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை எதிர்த்துக் கழக வேட்பாளராக கலைஞர் போட்டியிட்டார்.
தஞ்சைத் தொகுதியில் கிராமம் கிராமமாகச் சுற்றுப்பயணம்.
ஒரு வயலில் நாற்று நட்டுக்கொண்டு இருந்த பெண்கள், தலைவரைக் கண்டதும் ஓடி வந்தனர். 'யாருக்கு ஓட்டு போடுவீங்க?’ என்று தலைவர் கேட்டார்.
'ஐயாவுக்குத்தான்...’
தலைவருக்குச் சந்தேகம் வந்தது. 'எந்த ஐயாவுக்கு அம்மா?’
'பரிசுத்த ஐயாவுக்குத்தானுங்க...’ - தலைவர் திடுக்கிட்டார்!
'நான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன். எதற்குத் தெரியுமில்ல? நீங்கள்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப் போடணும். கலைஞரின் சின்னம் அதுதான், போடுவீங்களா?’ என்றார்.
'நீங்களே வந்து நேரடியாகக் கேட்கும்போது தட்ட முடியுங்களா?’
ஞ்சையில் இரு பெரும் ஊர்வலம். தேர்தல் ஊர்வலம்தான்!
பெரியார் - காமராஜர் - எம்.ஆர்.ராதா ஆகியோர் பங்குகொள்ளும் காங்கிரஸ் ஊர்வலம் - பிற்பகல் 4 மணிக்கு!
பிற்பகல் மணி 3... காங்கிரஸ் ஊர்வலம் கிளம்புவதாக இல்லை. அந்த ஊர்வலம் சென்ற வுடன்தான் கழக ஊர்வலம் போக வேண்டும் என்று போலீஸார் கூறினர். மாலை 4 மணி ஆயிற்று. அப்போதும் காங்கிரஸ் ஊர்வலம் புறப்படுவதற்கான அறிகுறியே இல்லை.
தலைவர் பொறுமை இழந்தார். மளமளவென்று வந்தார். கழக ஊர்வலம் துவங்கிவிட்டது என்பதற்கு அடையாளமாக ஒரு லாரியில் நின்று கிளம்பினார். உடன் கலைஞரும் வந்தார். தஞ்சையில் அது வரை அப்படி ஓர் ஊர்வலம் நடந்தது இல்லை என்றார்கள். துணிச்சலுக்குப் பெயர் பெற்றவர் எம்.ஜி.ஆர். என்பதற்கு அன்று அவர் தலைமையேற்றுச் சென்ற ஊர்வலமே சாட்சியாக இருந்தது.''
''ஏன், உனக்குச் சம்பளம் போதவில்லையா..?''
''பல வருடங்களாக எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் சமையல் பணிபுரிந்த சின்னய்யா சொல்கிறார்:
''பத்தாண்டுகளுக்கு மேல் அவரிடம் பணி செய்த பின்னர் ஒரு நாள் 'ஏதாவது தொழில் செய்யலாம் என்று நினைக்கிறேன்’ என்று தலைவரிடம் கூறினேன்.
'ஏன்? உனக்குச் சம்பளம் போதவில்லையா?’ என்றார்.
'நிறைய சம்பளம் கொடுக்கிறீர்கள். ஆனால், உங்கள் நிழலில் ஒரு ஆட்டுக் குட்டியைப் போல் வளர்ந்த நான், உங்கள் கண் முன்னேயே ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று ஆசை. அதனைப் பார்த்து நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பது என் விருப்பம்’ என்று தொடர்ந்தேன்.
'போவது என்று முடிவு செய்துவிட்டாய். இனி உன்னைத் தடுக்க முடியாது. அதே சமயத்தில் என்னிடம் இருந்தவர்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது. என்ன செய்ய வேண்டும் என்று சொல்’ என்று தலைவர் நிதானமாக, அதே சமயத்தில் அழுத்தமாகக் கேட்டார்.
'ஒரு ஹோட்டல் நடத்த விரும்புகிறேன்’ என்றேன்.
45 ஆயிரம் ரூபாயை மனம் நிறைய - கை நிறைய அள்ளிக் கொடுத்தார்.
தலைவர் என்னை வேலைக்காரனாக நடத்த வில்லை. அவரது குடும்பத்தில் ஒருவனாகவே நடத்தினார். ராமாவரம் தோட்டத்தை அடுத்த சத்தியா நகரில் என் குடும்பத்துக்கு என்று ஒரு வீடு. அந்த வீட்டில் விளக்கேற்றிவைத்துவிட்டு வரும்படி அம்மாவை அனுப்பினார். என் பையனுக்கு அவரே வெற்றிச்செல்வன் என்று பெயரிட்டார்.''
-Vikatan Article

No comments:

Post a Comment