Monday, May 11, 2015

குற்றம் புரிந்தவர் : ஹே ராம்..! 2

- vikatan article

ஜனவரி 30. 1948.  

தில்லி பிர்லா மாளிகையின் புல்வெளியில், மகாத்மா காந்தியுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதற்காக ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர்.
மாலை மணி 05.10. தான் தங்கியிருந்த அறையில் இருந்து தொண்டர்கள் சிலருடன் புறப்பட்டார் காந்தி. 78 வயதிலும் சுறுசுறுப்பாக, பிரார்த்தனை மேடையை நோக்கி நடந்தார்.
இருமருங்கிலும் கூடி நின்று வணங்கிய மக்களுக்குப் புன்முறுவலுடன் பதிலுக்கு வணங்கியவாறே பிரார்த்தனை மேடையின் படிக்கட்டுகளில் ஏறினார்.
மணி 05.17. கூட்டத்தில் படபடக்கும் இதயத்துடன் காத்திருந்த நாத்துராம் கோட்ஸே திடீரென காந்தியை நெருங்கினார். காந்தியின் பாதத்தைத் தொட்டு வணங்குவதுபோல, அவருக்கு முன் குனிந்தார் கோட்ஸே. 
காந்தியுடனிருந்த ஆபா சட்டோபாத்​யாய் என்ற பெண் சேவகி, ‘சகோதரரே, பிரார்த்தனைக்கு ஏற்கெனவே நேரமாகி​விட்டது’ என்று சொல்லி, கோட்ஸேவை  விலக்க முயன்றார்.
கோட்ஸே நிமிர்ந்தார். ஆபாவை முரட்டுத்தனமாகத் தள்ளினார். ஆபா, காந்தியிடமிருந்து விலகி கீழே விழுந்தார். மணி 05.20.
கோட்ஸே சற்றும் யோசிக்கவில்லை. மகாத்மா காந்திக்கு நேரெதிரில் நின்று, தன் வலது கையில் பிடித்த துப்பாக்கியை உயர்த்தினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் விசையை அடுத்தடுத்து இயக்கி, மகாத்மாவை மார்பிலும் வயிற்றிலும் சுட்டார். மூன்று குண்டுகள் மகாத்மாவின் உடலைத் துளைத்தன. குருதி பொங்கியது.
‘ஹே ராம்’ என்று தனது இஷ்ட தெய்வத்தின் நாமத்தை உச்சரித்தவாறே மகாத்மா காந்தி பின்புறம் சரிந்து விழுந்தார்.
அந்தக் காட்சியைக் கண்ட மக்கள் ஓலமிட்டார்கள். காந்தியைச் சுமந்துகொண்டு, பிர்லா மாளிகைக் கட்டடத்துக்கு ஓடினார்கள்.
ஆனால்... ஆனால்... 
ஆயுதம் ஏந்தாமலேயே, சக்தி வாய்ந்த ஆங்கிலேய ஆட்சியை அகற்றி, பாரதத்துக்கு விடுதலை பெற்றுத் தந்த அகிம்சா மூர்த்தி, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உயிர் பிரிந்தது.
மக்களில் சிலர் கோட்ஸே மீது பாய்ந்தனர். தப்பியோட முயற்சி எதுவும் செய்யாமல், அருகிலிருந்த போலீஸாரிடம் சரணடைந்தார் கோட்ஸே. அவருடைய கூட்டாளி நாராயண் ஆப்தேயையும் காவல் துறையினர் கைது செய்தார்கள். 
காந்தி படுகொலைக்குப் பின்னணியில் இருந்த சதியை அம்பலப்படுத்தவும், கொலைகாரருடன் இணைந்து செயல்​பட்ட சதிகாரர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தவும், தீவிர புனலாய்வை மேற்கொண்டது காவல் துறை.
கோபால் கோட்ஸே, ஷங்கர் கிஸ்தயா, மதன்லால் பஹ்வா, திகம்பர் பட்கே, வினாயக் சாவர்கர், விஷ்ணு கர்கரே என்ற ஆறு பேரும் அந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்டவர்கள் என்று அறிந்து, அவர்களையும் காவல் துறை கைது செய்தது.
நாத்துராம் கோட்ஸே, கூட்டாளி ஆப்தே, மற்ற சதிகாரர்கள் அனைவர் மீதும் போலீஸ் வழக்குத் தொடர்ந்தது. பஞ்சாபின் உயர் நீதிமன்றம் அமைந்திருந்த ஷிம்லாவில் அந்தப் பரபரப்பான வழக்கு நடந்தது. 
“யோசிக்காமல் அவரைக் கொலை செய்யவில்லை. மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளன..” என்று நாத்துராம் கோட்ஸே காரணங்களை அடுக்கினார்.
“ஒன்று: 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்தியா, பாகிஸ்தானுக்கு 75 கோடி ரூபாய் கொடுப்பது என்று முடிவானது. இதில் 20 கோடியை இந்தியா உடனடியாகப் பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் பாகிஸ்தான், இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீர் மீது உடனடியாகப் படையெடுத்து வந்து, ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியது. இதனால் வெகுண்ட இந்தியா, மீதித் தொகையான 55 கோடியை கொடுக்காமல் நிறுத்தி வைத்தது. ஆனால் காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு, இந்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார். மீதித் தொகையான 55 கோடி ரூபாயையும், படையெடுத்து வந்த பாகிஸ்தானுக்குக் கொடுக்கும்படி செய்தார். ஏழ்மையில் உழன்று கொண்டிருந்த இந்தியாவுக்கு காந்தி செய்த துரோகம் இது.
“இரண்டு: பாரதம் பிளவுண்டு போனதற்கு காந்திதான் காரணம். அந்தப் பிரிவினையின்போது, லட்சக்கணக்கான  இந்துக்கள் சூறையாடப்பட்டனர். கொல்லப்பட்டனர். பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டனர். குழந்தைகள் அனாதைகள் ஆயினர். அனைத்துக்கும் காந்திதான் பொறுப்பு.
“மூன்று: காந்தி மேற்கொண்டிருந்த முஸ்லிம் ஆதரவு நிலையும், முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த அவர் செய்த செயல்களும்தான், முஸ்லிம்களுக்கு தைரியத்தைக் கொடுத்து, இந்துக்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டியது. காந்தி இருக்கும்வரை  இந்துக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.  இந்து தர்மமும்,  இந்துஸ்தானமும் அழிந்துவிடும் அபாயம் இருந்தது. அதைத் தடுக்க அவரை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை”
மேம்போக்காகக் கவனித்தால், கோட்ஸேயின் இந்த வாதங்கள் அர்த்தமுள்ளவைபோலத் தோன்றினாலும், உண்மைக்கும் இவற்றுக்கும் தொடர்பு இல்லை.
காந்தி பலமுறை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அதுபோலவேதான் பிரிவினை மற்றும் சுதந்திரத்துக்குப் பின்னும், அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
 இந்து - முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பது மட்டும்தான் அந்த உண்ணாநோன்பின் ஒரே நோக்கம். அதற்கும், இந்தியா, பாகிஸ்தானுக்குக் கொடுத்த மீதிப் பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த உண்ணாநோன்பின்போது அந்த மீதித் தொகை கொடுக்கப்பட்டது என்பதை மட்டும் வைத்து அவர் மீது குற்றம் சுமத்தினார் கோட்ஸே. ஆனால், பணம் கொடுக்கப்பட்ட பின்னரும், மேலும் சிலநாட்கள் காந்தியின் உண்ணாநோன்பு தொடர்ந்தது.
பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று கோட்ஸே குற்றம்சாட்டியதிலும் அர்த்தம் இல்லை.
‘என் பிணத்தின் மீதுதான் நாடு பிளவுபடும்’ என்று அறிவித்தவர் காந்தி. ஆனால், ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாலும், முஸ்லிம் லீக் தலைவர் முகம்மது அலி ஜின்னாவின் பிடிவாதத்தாலும்தான், பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார் காந்தி. உண்மையில், பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமானவர்கள் மீது குறி வைக்க வேண்டும் என்றால், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் லார்ட் மவுன்ட்பேட்டனையோ, முகம்மது அலி ஜின்னாவையோதான் கோட்ஸே குறி வைத்திருக்க வேண்டும்.
காந்தியை இந்து விரோதி என்பது கேலிக்குரியது.  இந்துமத சித்தாந்தங்களில் அவரைவிட அதிக நம்பிக்கை கொண்டவர் வேறு யாரும் இருக்கவே முடியாது. தீண்டாமை போன்ற கொடுமைகளை ஒழித்து, அந்த மதத்தைப் புனிதமாக்குவதைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகவே கொண்டிருந்தார் காந்தி. செத்து விழும்போதும் “ஹே ராம்..!” என்றவர் அவர்.
சுதந்திர இந்தியாவில், சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம் குடிமக்களுக்கு இருந்த நியாயமான அச்சங்களைக் களையவே காந்தி, அவர்களுக்காக தியாகங்களைச் செய்யுமாறு  இந்துக்களை கேட்டுக்கொண்டார். 
பிரிவினை வாதத்தை எழுப்பி, முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டைத் துண்டாக்கிவிடாமல் இருக்க, இது மட்டும்தான் ஒரே வழி என்று நம்பினார் அவர். ஆனால், அவரது இந்த நல்ல எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்து மதத் தீவிரவாதிகள், இளைஞர்கள் சிலர் மனதில் விஷத்தை விதைத்து, காந்திக்கு எதிராகத் திசை திருப்பிவிட்டனர்.
கோட்ஸேயும், அவரது சதிகார நண்பர்களும்  இந்து தீவிரவாதிகளின் பிரசாரத்தை நம்பி, காந்தி மீது கோபம்கொண்டு அவரைக் கொன்றுவிட்டனர்.
தீவிரமாக நடைபெற்ற வழக்கு முடிந்தது. 1949 நவம்பர் 8-ம் தேதி தீர்ப்பு வெளியானது. கொலைகாரர் நாத்துராம் கோட்ஸேவுக்கும், கூட்டாளி நாராயண் ஆப்தேவுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், வினாயக் சாவர்கர் விடுவிக்கப்பட்டார். மற்ற சதிகாரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
‘தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீது கருணை காட்டவேண்டும்’ என்று எழுந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களில், மகாத்மா காந்தியின் மகன்களும், பிரதமர் நேருவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், 1949 நவம்பர் 15-ம் நாள், கோட்ஸேயும், ஆப்தேயும் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
மனித குலமே போற்றிய ஒரு மகானின் சகாப்தம், ஒரு மதவெறியரின் அடாத செயலால் திடீரென முடிவுக்கு வந்தது.
மகாத்மா இறந்துபோவதற்கு இரண்டே நாட்கள் முன்பு, 1948 ஜனவரி 28 அன்று, ‘உங்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடக்கிறது’ என்று காந்திஜியிடம் சொல்லப்பட்டது.
காந்திஜி அதைக் கேட்டு, புன்னகை செய்தார். புறங்கையை வீசி அந்தக் கூற்றை அலட்சியப்படுத்தினார்.
“மனநிலை சரியில்லாத மனிதன் செலுத்தும் துப்பாக்கிக் குண்டினால் உயிர் துறக்க நேர்ந்தால், நான் புன்னகையுடன் மரணமடைய வேண்டும். என் மனதில் கோபம் இடம்பெறக் கூடாது. இறைவனின் நாமம் என் மனதிலும் உதட்டிலும் நிறைந்திருக்க வேண்டும்” என்றார் அவர்.
உண்மையில் யார் குற்றம் புரிந்தவர்? ஆங்கிலேயர்களா? முகம்மது அலி ஜின்னாவா? மதவெறியாளர்களா?
ஒன்றுக்கும் உதவாத மதவெறி ஒரு மகாத்மாவின் உயிரை காவு வாங்கியதோடு நின்றதா? மதவெறியின் பேய்த்தாண்டவம் இன்று வரை அடங்கவில்லையே?
ஓர் உயிர் ஜெருசலேமில் உதித்தால் அது கிருத்துவம் என்று பெயர் சூட்டப்பட்ட மதத்தைச் சார்கிறது. அரபுநாடுகளில் அவதரித்தால் அது இஸ்லாம் என்று பெயரிடப்பட்ட மதத்தைச் சேர்ந்ததாகிறது. அதுவே இந்தியாவில் பிறந்தால்  இந்து என்ற பெயரைக்கொண்ட மதத்தைத் தழுவியதாகிறது. அத்தனை மதங்களும் இறை நிலையை எய்த போதிக்கும் வழி ஒன்றே.
அன்பு என்னும் ஆயுதத்தைத் தவிர, மதத்தின் பெயரால் வேறு எந்த ஆயுதத்தையும் எடுப்பதில்லை என்று அழுத்தமான தீர்மானத்துக்கு வராதவர்கள் அனைவரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்.
 
மதம், இனம், குலம், நிறம், மொழி இவற்றைப் பின்தள்ளி, சக மனிதனிடத்தில் நிபந்தனையற்ற அன்பு காட்டத்  தொடங்கிவிட்டால், குற்றங்கள்  நிகழ ஏது வாய்ப்பு? இந்த உண்மை தெரிந்திருந்தும், அதை உணர மறுக்கும் நாமெல்லோரும் குற்றம் புரிந்தவர்கள்தாம்.  

No comments:

Post a Comment