Monday, May 12, 2014

உணவு யுத்தம்! - 2

மரண விலாஸ்!
 உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாழ்க்கை ஆரோக்கியமாக இல்லை. சாப்பிடும்​போதே இதை உணர முடிகிறது!
விவசாயிகள் ரசாயன உரம், கடன் சுமை, தண்ணீர் பிரச்னை என ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 2002 முதல் 2006-ம் ஆண்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,500 என்கிறது ஒரு புள்ளி விவரம். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம், பன்னாட்டு நிறுவனங்களின் துரித உணவு வகைகள் பட்டிதொட்டி வரை அறிமுகமாகி நம் உடலைச் சீர்கெடுத்து நோயாளி​யாக மாற்றிவருகின்றன. இந்தி​யர்கள் ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்களை உண்பதற்குச் செலவிடுகிறார்கள். ஆனால், மருந்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று கணக்கெடுக்க முடியுமா?
நண்பர்களே... இன்று இந்தியாவெங்கும் நடப்பது உணவு அரசியல். அதன் ஒரு அங்கம்தான் நமது உணவு முறைகளின் மாற்றம். இது திட்டமிட்டு நடக்கும் ஒரு வணிகத் தந்திரம். இந்த மோசடி வலையில் கோடான கோடி மக்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
இத்தாலியர்களின் உணவான ஸ்பெகட்டி சென்னையில் சாப்பிடக் கிடைக்கிறது. ஆனால், உளுந்தங்களி சாப்பிட வேண்டும் என்றால், ஒரு கடையும் கிடையாது. இதே ரீதியில் போனால், நாளை தமிழ் உணவுகள் பெயரளவில் வெறும் சொற்களாக மட்டுமே மிஞ்சிப்போகவும் கூடும்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு நேர்ப்பேச்சில் சொன்னது நினைவுக்கு வருகிறது. சாப்பாட்டை பொருத்த மட்டில் கீழே போகப்போகத்​தான் ருசி. அவர் கீழே என்று சொன்னது, அடித்தட்டு வாழ்க்கையை. அதன் பொருள் 6,000 ரூபாய் கொடுத்துச் சாப்பிடும் உணவைவிட கையேந்தி பவன்களில் கிடைக்கும் உணவுக்கு ருசி அதிகம். இதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
ஏழை எளிய மனிதர்கள், இருப்பதைக் கொண்டு சமைப்பதில் உருவாகும் ருசி நிகரற்றது. இன்று நாம் பசிக்கு சாப்பிடுவதற்குப் பதிலாக, ருசிக்கு சாப்பிடப் பழகிவிட்டோம். அதிலும் தினம் ஒரு மாறுபட்ட ருசி தேவைப்படுகிறது. பசி, ருசி அறியாது என்பார்கள். இன்று ருசி பணத்தையோ, உடல்நலக் கேட்டையோ அறிவதே இல்லை. உடலைக் கெடுக்கும் என்று அறிந்தே சக்கை உணவுகளைத் தேடிச் சென்று சாப்பிடுவது முட்டாள்தனமா இல்லை திமிரா? இளந்தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும்.
பன்னாட்டு உணவகம் தந்த அனுபவம் ஒருவிதம் என்றால், மறுபக்கம் ஹைவே மோட்டல்ஸ் எனப்படும் சாலையோர உணவகம் தந்த கசப்பான அனுபவம் மறக்கவே முடியாதது.
சாலையோர மோட்டல்களில் சிக்கி, பணத்தைப் பறிகொடுக் காத ஒருவர்கூட தமிழகத்தில் இருக்க முடியாது. நிச்சயம் ஏதாவது ஒரு பயணத்தில் தனது பாக்கெட்டில் இருந்து நூறோ, இருநூறோ இழந்திருப்பார். குடும்பத்துடன் பயணம் போகிறவர்கள் பயப்படுவது சாலை விபத்துகளை நினைத்து இல்லை... ஹைவே உணவகங்களின் கொள்ளையை நினைத்துதான்.
25 ஆண்டுகள் முன்பு வரை லாரிகளில் வருபவர்கள்தான் இரவில் இதுபோன்ற சாலையோர உணவங்களில்  சாப்பிடுவார்கள். நெடுந்தூர பேருந்து நள்ளிரவில் தேநீர் கடைகளில்தான் நிற்கும்.
மோட்டார் ஹோட்டல் என்பதே மோட்டலாக மாறியது. 1925-ம் ஆண்டு ஆர்தர் ஹெய்ன்மென் அமெரிக்காவில் முதல் மோட்டலைத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின் பிறகே அமெரிக்காவில் சாலையோர மோட்டல்கள் அதிகமாக துவங்கின.
ஒடிசாவிலும் கொல்கத்தாவிலும் அரசே சாலையோரங்களில் மோட்டல்களை நடத்துகின்றன. சுகாதாரமான கழிப்பறை, நியாய விலை உணவகம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்... என இவை நீண்ட தூரப் பயணிகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தேன். இரவு உணவகம் ஒன்றில் நிறுத்தினோம். திறந்தவெளி கழிப்பறை, அருகிலே கொசு மொய்க்கும் சமையல்கூடம், அழுக்கான சாம்பார் வாளி, கழுவப்படாத டம்ளர்கள், காது கிழியும் குத்துப் பாடல்... சாப்பிட உட்காரவே தயக்கமாக இருந்தது.
பரோட்டா, சப்பாத்தி, தோசை மூன்று மட்டுமே இருப்பதாகச் சொன்னார்கள். தோசைக்கு சட்னி, சாம்பார் கிடையாது. குருமா வாங்கிக்கொள்ள வேண்டும். அது 75 ரூபாய். தோசை 100 ரூபாய். 'தோசைக்கு யார் குருமா வைத்து சாப்பிடுவார்கள்?’ என்றேன். 'இஷ்டம் இருந்தா சாப்பிடுங்கள்’ என்றார்கள்.
பசிக்கு ஏதாவது பழம் வாங்கி சாப்பிடலாம் என நினைத்து வெளியே வந்தால், பழக்கடையில் ஒரு வாழைப்பழம் 15 ரூபாய். பெயர் தெரியாத ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 50 ரூபாய்.  ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் 80  ரூபாய்.
ஹோட்டல் வாசலில் ஒரு கிராமத்துப் பெண் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். 'ஒத்தை தோசை 100 ரூபாயா? பகல் கொள்ளையா இருக்கு. ஒரு கிலோ இட்லி அரிசி 25 ரூபாய். ஒரு கிலோ உளுந்து 61 ரூபாய். மாவு ஆட்டுற செலவு, எண்ணெய் எல்லாம் சேர்த்தாகூட ஒரு தோசை விலை 20 ரூபாய்க்கு மேல வராது. வியாபாரம் பண்ணுறவன் 30 ரூவான்னு வித்துட்டு போ. 100 ரூபாய்னு அநியாயம் பண்ணாதப்பா. இந்த துட்டு உடம்புல ஒட்டாது’ என்று சாபமிட்டார்.
அந்த அம்மாவின் கோபத்தை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர், 'தோசை ஒரே புளிப்பு. ரப்பர் மாதிரி இருக்கு. கிழங்கு மாவு கலந்து இருக்காங்க’ என்றார். 'ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே?’ என்றதும், 'இது கட்சிக்காரங்க கடை’ என சுவரில் மாட்டப்பட்ட புகைப்படத்தைக் காட்டினார். இதிலுமா கட்சி?
'சாப்பாட்டு விஷயத்துலகூட கட்சி வெச்சிருக்கிறது தமிழர்கள்தான்’ என்று ஒரு சொற்பொழிவில் எம்.ஆர்.ராதா கேலி செய்வார். தோசை வரை கட்சி ஆக்ரமித்திருக்கிறது.
ஃபிரான்ஸ் நாட்டில் வேகவைத்த இறைச்சியை விற்பது 1765-ம் ஆண்டு வரை தடைசெய்யப்பட்டிருந்தது. மீறி விற்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். பொலிஞ்சர் என்பவர் பொறித்த இறைச்சியை விற்பனை செய்கிறார் எனக் கைதுசெய்யப்பட்டு அவர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதில் அவர் வெற்றிபெற்ற பிறகே ஃபிரான்ஸில் இறைச்சி உணவுகள்  விற்கப்பட்டன.
அந்தக் காலங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் களைப்பாறிச் செல்வதற்காகவே வழியில் சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதில் இலவசமாகச் சாப்பாடு போட்டார்கள். விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் வழிப்போக்கர்களுக்குச் சோறு விற்கப்படும் கடைகள் தொடங்கப்பட்டன என்கிறார் தமிழ் அறிஞர் தொ.பரமசிவன்.  அவரது, 'அறியப்படாத தமிழகம்’ என்ற நூலில் தமிழ் மக்களின் உணவு முறைகளைப் பற்றி தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.
'சமைத்தல்’ என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது 'அடுதல்’ எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. நீரிலிட்டு அவித்தல், அவித்து வேகவைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயில் இட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.
நகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்​களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் தமிழர்களின் உணவு முறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது என்பது தொ.பரமசிவன் அவர்களின் ஆதங்கம்.
ஒரு நாளைக்கு நெடுஞ்சாலையில் ஆயிரமாயிரம் கார்கள் போய்வருகின்றன. எங்கும் முறையான கழிப்பறை கிடையாது. குடிநீர் கிடையாது. உணவகம் கிடையாது. முதலுதவி மருத்துவமனைகள் கிடையாது. ஆனால், டோல்கேட் வசூல் மட்டும் முறையாக நடக்கிறது. அடிப்படை வசதிகள் பற்றி யாரும் எந்தப் புகாரும் தெரிவிப்பது இல்லை... தெரிவித்தால் கண்டுகொள்வதும் இல்லை.
சாலையோர கடைகளில் மாமிசம் சுவையாக இருப்பதற்காகவும் உடனடியாக வேக வேண்டும் என்பதற்காகவும் பாரசிடமால் மாத்திரைகளைக் கலக்குகிறார்கள் என்கிறார்கள். சாலையோர உணவகங்களில் தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பை மற்றும் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.
இந்தக் கொடுமை போதாது என்று சமீப காலமாக நெடுஞ்சாலை எங்கும் கும்பகோணம் காபி கடைகள் பத்து அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. இந்தக் கடைகளுக்கும் கும்பகோணத்தின் ஃபில்டர் காபிக்கும் ஒரு ஸ்நானப்பிராப்தியும் கிடையாது. ஏமாற்றுவதற்கு ஒரு பெயர்தானே வேண்டும். எல்லா கடைகளிலும் சொல்லிவைத்தாற்போல செம்பு டபரா, டம்ளர் செட், அதில் பாயசத்தில் காபி தூளைப் போட்டுக் கலக்கியதுபோல ஒரு காபி. பாவம் மக்கள்... இந்தக் கண்றாவியைக் குடித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.
நெடுஞ்சாலை உணவுக் கொள்ளையைப் போல ஊர் அறிந்த மோசடி எதுவுமே இல்லை. ஸ்குவாட் அமைத்து எதை எதையோ அதிரடியாக சோதனை செய்கிறார்களே... அப்படி ஒரு பறக்கும் படை அமைத்து உணவகங்களை சோதனை செய்து தரமற்ற கடைகளை மூடலாம்.
ஒரு பக்கம் பன்னாட்டு உணவங்கள் நம் மக்களை கொள்ளையடிக்கின்றன. மறுபக்கம் உள்ளுர்வாசிகள் தரமற்ற உணவைத் தந்து மக்களைத் துரத்தியடிக்கிறார்கள். காசு இல்லாமல் உணவுக்குக் கஷ்டப்பட்ட நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இன்று மக்களிடம் ஓரளவுக்குக் காசு இருக்கிறது. ஆனால், தரமான உணவு கிடைக்காமல் அல்லாடும் நிலை உருவாகியிருக்கிறது.
சமீபத்தில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சாலையோர உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராமல் நுழைந்து, வரிசையில் நின்று தனக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார். உணவுக்கு அவர் தந்த கட்டணம் வெறும் 21 யுவான். அந்தப் பணத்தில் பெரிய ஹோட்டலில் ஒரு பாட்டில் தண்ணீர்கூட வாங்க முடியாது. நாட்டின் ஜனாதிபதி உணவகத்துக்கு வந்தபோதும், கடையில் ஒரு பரபரப்பும் இல்லை. மக்கள் இயல்பாக அவரோடு இணைந்து சாப்பிட்டுப் போனார்கள்.
நமது அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை ஒருமுறை ஹைவே மோட்டலுக்குச் சென்று மக்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும்... அது எவ்வளவு பெரிய கொடுமை என்று.
சாலையோர மோட்டல்களை மரண விலாஸ் என்பார் எனது நண்பர். அதைவிட சிறந்த பெயர் இருக்க முடியாதுதானே?

- VIkatan

No comments:

Post a Comment