Saturday, December 28, 2013

மகாத்மா முதல் மன்மோகன் வரை !

அதிகாரம் அப்பாவிடம் இருந்து மகளுக்கு! 
பிரதமராக நேரு இருந்தபோது அதிக அதிகாரம் பொருந்தியவராக அவரது செயலாளர் மத்தாய்தான் இருந்தார். அமைச்சர்களுக்கே உத்தரவிடும் கட்டளைத் தளபதியாகவும் அவர் இருந்தார். வருமானத்தை மீறிச் சொத்துச் சேர்த்ததாக மத்தாய் மீது புகார் கிளம்பியது. தேயிலைத் தோட்டங்கள் அவருக்கு இருந்ததாகக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். அதனை முதலில் நேரு நம்பவில்லை. ஆதாரங்கள் தரப்பட்டதும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இறுதியில் மத்தாய் பதவி விலகவேண்டியது ஆயிற்று. இவையெல்லாம் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தபோதுதான், நேருவின் மீதான பிம்பம் படிப்படியாக உடைந்தது. அவர் அதிகாரம் பொருந்தியவராக இருந்தார். அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால், அவருக்கு ஆலோசனை சொல்வதற்குக்கூட யாருமே இல்லாமல் போனார்கள். அதிகாரத்தை தன்னுடைய கொள்கைகளை அமல்படுத்துவதற்காக நேரு செலுத்தவில்லை என்பதுதான் துரதிருஷ்டமான உண்மை. அந்த அதிகாரத்தை மற்றவர்களை அடக்குவதற்குப் பயன்படுத்தினார். இதனால் அவரது நிர்வாகம் தேங்கிக் கிடந்தது. சிறந்த நிர்வாகத்தில் அதிகாரக் குவிப்பு இருக்காது. தான் ஒன்றை எப்படிச் செய்வோமோ அதனை அப்படியே செய்து காட்டக்கூடிய திறமைசாலிகளை தன்னோடு வைத்துக்கொண்டு வேலை வாங்குவதுதான் சிறந்த நிர்வாகத்துக்கு அழகு. 'நானே அனைத்தும் செய்து முடிப்பேன்’ என்பது திறமையைக் காட்டாது. ஆணவத்தையே வெளிப்படுத்தும். இதனால் காலப்போக்கில் திறமைசாலிகள் வெளியேறினார்கள். அதனால் சோஷலிசம் என்ற அலங்காரமான வார்த்தை மட்டும்தான் அவரிடம் மிச்சம் இருந்தது.
'விழாக்களில் நேரு கொஞ்சுவதற்காக கொழுகொழு குழந்தைகளைத் தேடிப் பிடித்தார்களே தவிர, சராசரி இந்தியக் குழந்தை அப்படி இல்லையே’ என்று கிண்டல் செய்யும் அளவுக்குத்தான் நேருவின் ஆட்சி நிலைமை இருந்தது. மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் அவரது ஆட்சியில் போடப்பட்டன. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, ''எவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் இன்றளவும் இந்தியாவின் பல பாகங்களில் ஒரு பானை குடிநீருக்குக்கூட மக்கள் அலைந்து திரிகின்ற காட்சிகளைப் பார்க்கின்றபோது நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்’ என்றுதான் பிரதமர் நேருவால் சொல்ல முடிந்தது. ''ஊழல் என்பது ஜனநாயக முறைகளின் கீழ் இயங்கும் நாட்டின் நடைமுறையில் ஒரு பகுதியாக மாறி வருகிறது. அது ஓரளவு வளர்ந்துள்ளது என்று சொல்வதற்காக நான் பயப்படுகிறேன். ஜனநாயகக் கோட்பாடு தருகின்ற தீமைகளின் பங்கு இது'' என்று வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டிய நிலைமைக்கு நேருவே தள்ளப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்து ஊழல்களை ஃபெரோஸ் வெளிப்படுத்தினார் என்றால், இந்த ஆட்சி மீதான மிகத் தெளிவான விமர்சனங்களை வைத்ததில் முதன்மையானவர் ராஜாஜி.
இந்தியா சுதந்திரம் அடைந்து 6 மாதம்கூட ஆகவில்லை. ராஜாஜி என்ன சொன்னார் தெரியுமா?
'50 ஆண்டுகள் போராடிப் பெற்ற இந்திய சுதந்திரம் என்பது வெறும் லஞ்ச ஊழலாக முடியுமானால் அதைவிடச் சோகம் வேறென்ன இருக்க முடியும்?'' என்று ராஜாஜி கேட்டபோது, அவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். காங்கிரஸ் அளித்த பதவியில் இருந்தார். பிரதமர் நேருவுக்கு நெருக்கமாக இருந்தார். அவரது அமைச்சரவைக்கு ஆலோசனை சொல்பவராக இருந்தார். இதனாலேயே அதிகார மையத்தில் இருப்பவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டு ராஜாஜி, காங்கிரஸைவிட்டு வெளியேறினார். ''நேரு சொல்லும் சோஷலிசம், இந்தியாவுக்குப் பயன்படாது'' என்று சொல்லிவிட்டு சுதந்திராக் கட்சி ஆரம்பித்தாலும், ''இன்றைய காங்கிரஸ் கட்சியும் அதனுடைய ஆட்சியும் நாம் எதிர்பார்க்கும் நேர்மைத் திறத்துடன் இல்லை'' என்பதுதான் ராஜாஜிக்கு அதிகப்படியான கோபத்துக்குக் காரணம். அதனால்தான் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் அன்றைய காங்கிரஸ் கட்சியின் முறைகேடுகளை அதிர்வேட்டுகளைப்போல ராஜாஜி வெளிப்படுத்தினார்.
''காங்கிரஸ்காரர்கள் ரொம்ப வசதியாக இருப்பதுபோல் காணப்படுகிறார்கள். அவர்கள் ஏதாவது புதிய தொழிலை மேற்கொண்டு பணம் சம்பாதிக்கிறார்களா என்ன? எங்கிருந்து அவர்களுக்கு கிடைத்தது பணம்?''- இந்தக் கேள்வியை 1956-ல் ராஜாஜி கேட்டுள்ளார்.
''முழுநேரக் காங்கிரஸ்காரர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு காங்கிரஸ்காரனாக இருப்பதே உத்தியோகமாகிவிட்டது. இவர்கள் ஆட்சி, அரசியல் மட்டங்களில் தங்களது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். ஒட்டுண்ணி போலிருந்து பணத்தைச் உறிஞ்சிக் கொள்கிறார்கள்'' - என்று 1958-ல் ராஜாஜி சொல்லி இருக்கிறார்.
அன்றைய மத்திய அரசுக்கு அவர் ஒரு பெயரை வைத்தார், 'பட்மிட்-லைசென்ஸ்-கோட்டா ஆட்சி.’ சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 'பட்மிட் ராஜ்.’
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சலுகை கொடுத்தார்கள், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைத்தன என்று ராஜாஜி குற்றம்சாட்டினார். ''பட்மிட் - லைசென்ஸ்-கோட்டா முறையானது காங்கிரஸ் கட்சியின் பணக்கார நண்பர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கியது. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கியது'' என்று பகிரங்கமாக ராஜாஜி சொல்ல ஆரம்பித்தார். நேருவின் காலமே இத்தகைய விமர்சனத்துக்கு ஆளாகியது என்றால் கல்மாடி காலத்தில் எப்படி இருக்கும்? இதனை இன்று தடுக்க முடியாதவராக மன்மோகன் சிங் இருப்பதைப்போலத்தான் நேருவும் இருந்துள்ளார். அதனால்தான் விமர்சனங்கள் அவர் மீது இவ்வளவு வந்தன.
நேரு எப்படிப்பட்டவர் என்பதை நேதாஜி முன்பு ஒருமுறை சொன்னார்,
''ஒரு நெருக்கடியான நேரத்தில் நீங்கள் வெற்றிபெறும் வகையில் செயல்படுவது இல்லை. ஊசலாடும் மனம் உங்களுடையது'' என்பதே அது. ஆனால் நேரு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இந்த விமர்சனங்களை எல்லாம் தூரத் தூக்கி வைத்துவிட்டு, மகள் இந்திராவுக்கு மகுடம் சூட்டும் காரியத்தை நேரு கனகச்சிதமாகப் பார்த்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரி வந்தார், சாஸ்திரி இறந்த பிறகு, 'வேறு வழியில்லாமல் இந்திரா அழைத்துவரப்பட்டார்’ என்று சிலர் புதிய வரலாற்றை உருவாக்கிவிட்டார்கள். உண்மை அது அல்ல. பிரதமர் நாற்காலியில் நேரு உட்கார்ந்து இருக்கும்போதே காங்கிரஸ் தலைவராக இந்திரா உட்கார வைக்கப்பட்டார். அன்றைய இந்திராவுக்கு 'அலங்கார பொம்மை’ என்று பெயர். எமர்ஜென்சியைக் கொண்டுவந்த அடங்காத இந்திரா அல்ல, அவர் அப்போது!
நேரு எங்கே போனாலும் மகளை அழைத்துச் சென்றார். அரசாங்கச் செலவில் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். எங்கே நேரு இருந்தாலும் இந்திரா அருகில் இருப்பார். யாரோடும் பேசமாட்டார். லேசாகச் சிரிப்பார் அவ்வளவுதான். ஒரு அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நேருவுக்கு அருகில் புரோட்டக்கால் நெறி முறைகளை மீறி இந்திரா உட்கார வைக்கப்பட்டார். அந்த விழாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அழைப்பு இல்லை. ''ஏன் எங்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை?'' என்று ஃபெரோஸ் காந்தி கேட்டார். ''யாருக்குமே அழைப்பு அனுப்பவில்லையே?'' என்று நேரு பதில் சொன்னார். ''அப்படியானால் உங்கள் மகள் மட்டும் அந்த விழாவில் கலந்துகொண்டது எப்படி?'' என்று கேட்டார் ஃபெரோஸ். நேருவால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. கேள்வி கேட்பது மருமகன். கேட்பது மகளைப் பற்றி. நேருவின் எதிரிகள் அனைவரும் ரசித்த காட்சி அது. ஆனாலும் இந்திராவை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதை நேரு விடவில்லை.  இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இந்திரா ஆக்கப்பட்டார். அடுத்து கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு தேர்தல் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவே 1959-ல் இந்திரா உட்கார வைக்கப்பட்டார். 'இனி என்ன செய்வீர்கள்?’ என்று கேட்பதைப்போல இருந்தது நேருவின் நடவடிக்கைகள்!
காமராஜர் இருக்கும்போது, லால்பகதூர் சாஸ்திரி இருக்கும்போது, நிஜலிங்கப்பா இருக்கும்போது, கோவிந்த வல்லபந்த் இருக்கும்போது துணிச்சலாக இந்திராவை காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் கொண்டுவந்து நேரு உட்கார வைக்கிறார் என்றால், இந்தக் கட்சியில் தனக்குப் பிறகு தன்னுடைய மகள் இந்திராதான் இந்தப் பதவிக்கு வரத் தகுதியானவர், இந்திரா மட்டுமே தகுதியானவர் என்று நினைத்ததுதான் காரணம். இன்று ராகுல் காந்தியின் துதிபாட ஒரு திக் விஜய்சிங் இருப்பதைப்போல அன்று இந்திராவுக்கு கோவிந்த வல்லபந்த் கிடைத்தார். 'நான் பிரதமராக இருக்கும்போது என் மகள் காங்கிரஸ் தலைவராக இருப்பது நல்லதல்ல’ என்று நேரு சும்மா சொல்லிப் பார்த்தார். கடைசியில் 'வேறு வழியில்லாமல்’ இந்திரா தலைவர் ஆனார். இன்று ராகுலை அறிமுகப்படுத்துவதற்கு எந்த வார்த்தையைச் சொல்கிறார்களோ அந்த வார்த்தையை நேரு சொன்னார். ''புது முகங்களை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள்'' என்று நேரு அன்று சொன்ன வார்த்தைதான் இன்று வரைக்கும் அனைத்து அரசியல் தலைவர்களாலும் தந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
'இந்திரா என்னுடைய மகள் என்பதில் முதலில் பெருமைப்பட்டேன். என்னுடைய தோழர் என்பதில் அடுத்ததாகப் பெருமை அடைந்தேன். இப்பொழுது என்னுடைய தலைவர் என்ற பெருமையும் அடைந்துவிட்டேன்'' என்று நேரு சொன்னார்.
ஆனால் நேரு பெருமைப்படுவது மாதிரி எதையும் செய்பவராக இந்திரா இல்லை!

ஜனநாயகக் குழந்தையைக்  கொன்ற பொம்மை!
அப்பா நேரு, இந்தியப் பிரதமராக இருக்கும்போது மகள் இந்திரா அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரானால் அதிகாரம் எப்படி தூள் கிளப்பி, துஷ்பிரயோகமாக மாறும் என்பதற்கு மறக்க முடியாத உதாரணம் கேரளா.
இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தை, சர்வாதிகாரக் கொடுக்குகள் சிறுகச்சிறுகச் சித்ரவதை செய்து கடைசியில் சிதைத்துப் போடும் காரியத்தை நேருவும் இந்திராவும் செய்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில ஆட்சியை, ஒரு துளி மையால் அழித்தனர். 'எங்கள் பூமியை நாங்கள்தானே ஆளவேண்டும், அந்நியரான ஆங்கிலேயருக்கு ஆள என்ன அருகதை இருக்கிறது?’ என்று கேள்விகேட்டு சுதந்திரப் போராட்​டம் நடத்தியவர்கள் 'சுதந்திரத்தின் பலனை’ இப்படிச் சுக்கு​நூறாக உடைத்துக் கொண்டாடிக் கழித்தனர். சர்வாதிகாரத்தின் பலிபீடத்தில் ஜன​நாயகக் குழந்தை யாரும் கேள்விகேட்க முடியாத கும்மிருட்டில் கழுத்தறுக்கப்பட்ட எதேச்​சதிகாரத்தின் தொடக்கம் அது. வெறும் பொம்மை என்று சொல்லப்பட்ட இந்திரா, நான் வெறும் பொம்மை அல்ல, ஷாக் அடிக்கும் பொம்மை என்று சொல்லிய ஆண்டு 1959!
ஆம்! கேரள மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் இந்திரா தூண்டினார். ஜனநாயகம் குறித்தும் மக்களாட்சி பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிய பிரதமர் நேருவும் அதற்கு சம்மதித்தார். 'முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், இந்திராவின் பிடிவாதம் காரணமாக இறுதியில் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று’ என்று சொல்வார்கள். வரலாறு எப்போதுமே முடிவுகளையே வரவு வைக்கும். முடிவுக்கு முந்தைய விவாதங்கள், காலங்கள் கடந்ததும் வீணானவையே!
1957-ல் கேரளாவில் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் இருந்த 126 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60 இடங்களில் வென்றது. அதன் ஆதரவு சுயேச்சைகள் 5 இடங்களைப் பிடித்தனர். காங்கிரஸ் படர்ந்த நாடாக இருந்த இந்தியாவில் கம்யூனிஸம் மலர்ந்த மாநிலமாக கேரளா ஆனது. அப்போது கேரள எல்லைக்குள்ளும் அதன் பிறகு இந்திய பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவராகவும் உயர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவில் தொடங்கப்பட்ட கால் நூற்றாண்டு காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது ஒரு கௌரவமாகவும், கம்யூனிஸ சமுதாயம் உருவாவதற்கான ஆரம்பமாகவும் கேரள ஆட்சி உற்சாகம் கொடுத்தது. 'இன்று கேரளா, நாளை இதர மாநிலங்கள், இறுதியில் மத்திய அரசாங்கம்’ என்று கம்யூனிஸ்ட்கள் பேசத் தொடங்கினார்கள். ஆனால், இதனை காங்கிரஸ் கட்சி கசப்பாகவே பார்க்க ஆரம்பித்தது.
''ஐந்து சுயேச்சைகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசுவேன். அவர்கள் சொல்வது திருப்தியானால்தான் உங்களைப் பதவியேற்க விடுவேன்'' என்று கேரள ஆளுநராக இருந்த ஹைதராபாத் காங்கிரஸ்காரர் கிடுக்கிப்பிடி போட்டுத்தான் ஈ.எம்.எஸ்-ஸை பதவி ஏற்கவே அனுமதித்தார். ஆங்கிலோ இந்திய பிரதிநிதி ஒருவரை சட்டமன்றத்துக்கு நியமித்துக்கொள்ளும் அதிகாரம் ஆட்சியை அமைக்கும் ஆளுங்கட்சிக்கு உண்டு. அது அன்று மட்டுமல்ல... இன்றுவரை இருக்கும் நடைமுறை. ஆனால், காங்கிரஸ்காரரான அந்த ஆளுநர், ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நான்தான் நியமனம் செய்வேன் என்பதில் பிடிவாதம் காட்டினார். இத்தகைய சூழ்நிலையில் ஆட்சியை அமைத்த ஈ.எம்.எஸ். சில முக்கியமான முடிவுகளை, கொள்கைகளை அமல்படுத்தினார். அமல்படுத்த முயற்சித்தார்.
1. மலபார், கொச்சி, திருவிதாங்கூர் ஆகிய முக்கியமான மூன்று பகுதிகளிலும் வெவ்வேறு விதமான நிலக் குத்தகை முறை இருந்தது. பதவியேற்ற ஒருவார காலத்தில் அனைத்துவகை வெளியேற்றங்களையும் தடைசெய்து ஒரு அவசரச் சட்டத்தை போட்டார்கள். இது விவசாய சீர்திருத்தம் எனப்பட்டது. அதாவது கிராமப்புற சாதாரண மக்களுக்கும் நகர்ப்புறத்தில் இருந்த நடுத்தர மக்களுக்கும் இது மகிழ்ச்சியைக் கொடுத்தது. சமூகத்தின் வசதி படைத்தவர்களுக்கு இது கோபத்தைக் கிளப்பியது.
2. நகர்ப்புறங்களில் நடந்த வேலை நிறுத்தங்களின்போது போலீஸைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. போலீஸின் வேலை கிரிமினல்களைப் பிடிப்பதுதானே தவிர தொழில் உறவுகளில் தலையிடக்கூடாது என்று சொல்லப்பட்டது. 'இது சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும்’ என்று விமர்சனம் செய்யப்பட்டது.
3. மத்திய அரசின் நிதி ஒத்துழைப்பு இல்லாததால், மாநிலத்துக்கு வெளியே இருக்கும் தொழில் அதிபர்களை கேரளா பக்கமாக ஈர்க்க இந்த ஆட்சி முயற்சிகள் எடுத்தது. இது உள்ளூர் தொழில் அதிபர்களை ஆத்திரம் அடைய வைத்தது.
4. புதிய கல்வி மசோதாவைக் கொண்டு வந்தார்கள். தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பள்ளிகளை வைத்துக் கொண்டு தங்குதடையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் மொத்தமாக பள்ளி, கல்லூரிகளை ஆரம்பித்தவர்களுக்கு செக் வைத்தது. மதத்துக்கு ஆபத்து என்று இவர்கள் கிளம்பினார்கள்.
5. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, இதர பின்தங்கியவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்ந்தது. அதில் ஒரு சீர்திருத்தத்தை இந்த ஆட்சி கொண்டுவந்தது. இடஒதுக்கீடு பெறுபவர்களே ஒரு குறிப்பிட்ட அளவு வருட வருமானத்தை அடைய ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று செய்யப்பட்ட அறிவிப்புக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு இந்தத் திருத்தத்தை வாபஸ் வாங்கிவிட்டனர்.
-இந்த ஐந்து கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் நடந்த அனைத்துப் போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. நிலச்சீர்திருத்தம் மற்றும் கல்வி மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசினரும் குடியரசுத் தலைவரும் இழுத்தடித்தனர். இவை அனைத்தையும் 'பரிசோதனை முயற்சிகள்’ என்று கம்யூனிஸ்ட் அரசாங்கம் சொல்லிக்கொண்டது. ஆனால், இந்தப் பரிசோதனைகளை அனுமதிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. இத்தனைக்கும் அன்றைய பிரதமர் நேரு, சோஷலிசம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சொல்லிக்கொண்டு இருந்ததும், இவர்கள் அமல்படுத்த நினைத்ததும் ஏறத்தாழ ஒன்றுபோல் நினைக்கத் தக்கவையே. ஆனால், காங்கிரஸின் ஏகபோகத்துக்கு இந்த மாதிரியான மாற்றுக் கட்சிகளின் பரிசோதனை முயற்சிகள் இடையூறாக இருக்கும் என்று அன்றைய காங்கிரஸ் தலைவர் இந்திரா நினைத்தார். மாநில அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை, 'வெகுஜன எழுச்சி’ என்று நேருவும் இந்திராவும் பட்டம் கொடுத்தனர். ''கேரளாவில் நடக்கும் எழுச்சி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது'' என்று இவர்கள் சொல்லிக் கொண்டார்கள். 'இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக உடனடியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்கள். கேரளாவில் அரசாங்கம் அமைந்து இரண்டு ஆண்டுகள்கூட முழுமையாக முடியவில்லை. இந்த யோசனையை முதல்வர் ஈ.எம்.எஸ். கடுமையாக எதிர்த்தார்.
''தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அதனுடைய ஐந்து வருட பதவிக் காலத்துக்குள்ளேயே புதிய தேர்தலுக்கு ஆட்பட வேண்டும் என்று எவரும் கேட்க முடியாது. பிரதமராக இருந்தாலும் அதனைக் கேட்க முடியாது. பெரும்பான்மையே இருந்தாலும் நாங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதே இதன் உள் அர்த்தம். நாங்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் இதுதான்''- என்று ஈ.எம்.எஸ். அறிவித்தார். அதன் பிறகு, ஆட்சியைக் கலைக்க நேரு காலதாமதம் செய்தார். ஆனால், இந்திரா கட்டாயப்படுத்தினார். ஒரு மாநிலத்தில் அமையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 356-வது சட்டப்பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்கி இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த இந்திரா வலியுறுத்தினார். நோக்கம் நிறைவேறியது. ஈ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்டது. 200 ஆண்டு காலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பலனை, ஜனநாயகத்தின் அருமையை 28 மாதங்கள்கூட 'அடுத்த கட்சி’ அனுபவிக்க அனுமதியாத சர்வாதிகார வடிவம் கேரளாவில் இருந்து தொடங்கியது. இந்த எடுத்தேன், கவிழ்த்தேன் போக்கு இந்திராவுக்குப் பிடித்திருந்தது.
அன்றைய தேதியில் கேரளா தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. கேரளாவில் ஈ.எம்.எஸ். அரசாங்கம் 59-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் காங்கிரஸ் தலைவராக உட்கார்ந்தார் இந்திரா. உட்கார்ந்த உடனேயே ஒரு மக்களாட்சிக்கு உலை வைத்தார். இதற்கு இன்னொரு உள்நோக்கம் கற்பிக்கப்படும். 'கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைக்க அமெரிக்க உளவு நிறுவனம் சில முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு டெல்லி காங்கிரஸின் அதிகார மட்டத்தில் இருந்த சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்’ என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டானியல் பேட்ரிக் எழுதியதாகச் சொல்வார்கள். இதைப் பின்பற்றி மலையாளத்திலும் புத்தகங்கள் வெளிவந்தன. அது உண்மையானால் இன்னும் ஆபத்தானது.
'ஐவஹர்லால் நேருவுக்கு பெண் பிறந்ததற்குப் பதிலாக ஒரு மகன் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? மகன் தந்தைக்கு தோழனாகவும் பின்னர் வாரிசாகவும் ஆகியிருந்தால் அதிக சிரமம் இருந்திருக்காது அல்லவா?’ என்று அமெரிக்கப் பத்திரிகை நிருபர் ஒருவர் இந்திராவிடம் கேட்டார். ''அதெப்படி சொல்ல முடியும்? ஒருவேளை சிரமங்கள் அதிகமாகி இருக்கலாம் அல்லவா?'' என்று இந்திரா பதில் சொன்னார். எந்தப் பொருளில் அப்படிச் சொன்னாரோ, இந்திய ஜனநாயக நெறிமுறைகளுக்கு அதிகப்படியான சிரமங்களை இந்திரா தனது ஆட்சி காலத்தில் செய்தார். அவர் 1966 ஜனவரி 24-ம் தேதி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் 1977 வரையிலான 11 ஆண்டு காலத்தில் 356-வது பிரிவைப் பயன்படுத்தி 29 முறை இந்தியாவின் பல்வேறு மாநில ஆட்சிகளைக் கலைத்தார். அதற்கான ருசியை ஏற்படுத்திக் கொடுத்தது கேரளா. மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி. அப்படி ஆட்சி அமையவில்லையானால் வேறு கட்சி ஆட்சி அமைந்தால் அதனைக் கலைத்துவிட்டால் போகிறது என்ற 'அதிகார உச்சபட்ச குணம்’ கேரளாவில்தான் அரும்பியது. அடுத்த 25 ஆண்டுகள் அதுவே ஆட்டிப் படைத்தது.
கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டது இந்திய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அதற்கு முன் அப்படி ஒரு காட்சியை இந்தியா பார்த்தது இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா ஆனதன் அடையாளம்தான் இது என்று அன்றைய தலைவர்கள் சொல்லத் தொடங்கினர்.
இந்திரா, தலைவர் ஆக்கப்பட்டதாகத் தகவல் வந்தபோது ராஜாஜி, பெங்களூரில் இருந்தார். அன்று அவரும் மசானியும் ஒரு கூட்டத்தில் பேசினார்கள். மசானி, நேருவையும் இந்திராவையும் தர்க்கரீதியாக விமர்சித்துப் பேசினார். எப்போதும் தர்க்கரீதியாகப் பேசும் ராஜாஜி அன்று கோபமாகப் பேசினார். ''எனக்கு முன்பு பேசிய மசானி, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் ஜாக்கிரதையாகப் பேசினார். ஆனால் எனக்கு அந்தக் கட்டுப்பாடு எதுவும் இல்லை'' என்று சொன்ன ராஜாஜி, ''நேருவுக்குத் தன்னைவிட்டால் வேறு ஆள் கிடையாது என்ற பித்தம் தலைக்கேறிவிட்டது. அதனால்தான் இப்படி நடந்துகொள்கிறார்'' என்று குற்றம்சாட்டினார். அந்தக் கூட்டத்தில்தான், ''புதிய கட்சியை அமைத்துவிட வேண்டியதுதான். அதற்கான காலம் நெருங்கிவிட்டது'' என்றும் ராஜாஜி சொன்னார். அதாவது, காங்கிரஸ் கட்சி நேரு, இந்திரா என வாரிசு அடிப்படையில் வலம் வர ஆரம்பித்துவிட்டது என்ற கொந்தளிப்புத்தான் ராஜாஜியை சுதந்திரா கட்சியை தொடங்க வைத்தது.
கேரள ஆட்சி கலைக்கப்பட்டபோதும் ராஜாஜி அந்தக் கொந்தளிப்பை அதிகமாகக் காட்டினார். ராஜாஜிக்கு கம்யூனிஸ்ட்களைக் கண்டாலே பிடிக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியவதைவிட சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அதிகம் பேசியவர் ராஜாஜி. அப்படிப்பட்ட ராஜாஜிக்கு கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான சர்வாதிகார நடவடிக்கை என்று ராஜாஜி குற்றம்சாட்டினார்.
''கம்யூனிஸ்ட்கள் இப்போதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்றார்கள். அவர்களை ஜனநாயக மரபுகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவர்களை இந்த மாதிரி நடத்தினால் அவர்கள் மீண்டும் தலைமறைவாகி சதிச்செயல்களில் ஈடுபட வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளாவார்கள். மேலும், சட்டசபையில் அவர்களது பெரும்பான்மை பலம் குறையவில்லை என்பது தெளிவாக இருக்கும்போது ஆட்சியை டிஸ்மிஸ் செய்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் உடன்பாடானவை அல்ல. ஆனால் அவர்களை நடத்தவேண்டிய விதம் இது அல்ல'' என்று தன்னுடைய 'சுயராஜ்யா’ பத்திரிகையில் ராஜாஜி எழுதினார். அந்த அளவுக்கு இந்திராவின் நடவடிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு கலைக்கப்பட்டதை ஃபெரோஸ் காந்தி கடுமையாகக் கண்டித்தார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் இதனை முழுமையாக எதிர்த்தார். ஆனாலும் இந்திரா கேட்கவில்லை. இந்திராவை நேருவால் தடுக்க முடியவில்லை.
பின்பு ஒருமுறை பேட்டி அளித்த இந்திரா, கேரள அரசு கலைக்கப்பட்டதற்கு நான் காரணம் அல்ல என்றார். ''காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கம்யூனிஸ்ட் அமைச்சரவையை அகற்றிவிட்டு ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனப்படுத்தும்படி எந்தக் காரணங்களுக்காக ஆலோசனை கூறினீர்கள்?'' என்று பத்திரிகையாளர் கே.ஏ.அப்பாஸ் கேட்டபோது, ''நான் அப்படி ஆலோசனை சொல்லவில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியின் காரணமாக மாநிலத்தில் ஒரு குழப்பமான நிலைமை இருந்தது. அதனால் மீண்டும் தேர்தல் நடத்தி வாக்காளர்கள் இன்னும் தெளிவான தீர்ப்பு அளிப்பதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கருதினோம்'' என்று இந்திரா சொன்னார். இதேபோன்ற சூழ்நிலை காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் இப்படிச் செய்திருப்பீர்களா என்று அப்பாஸ் திருப்பிக் கேட்கவில்லை. இது சரியா, தவறா என்ற விவாதங்களைத் தாண்டி 'இந்திரா என்றால் நினைத்ததை சாதிக்கக் கூடியவர்’, 'நேருவின் மகள் மன உறுதி படைத்தவர்’ என்ற பிம்பம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்பட இந்த சம்பவம் காரணமாகிவிட்டது. அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் இந்திராவின் செல்வாக்கை உணர்த்துவதற்கு இந்த ஆட்சிக் கலைப்புப் பயன்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலையில் ஓராண்டு காலத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இந்திரா விலகியது இன்னும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது.
ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக ஆனால், இரண்டு ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருக்கலாம். அது முடிவதற்கு முன்னதாகப் பதவியைவிட்டு விலகி நேருவுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கினார் இந்திரா. கேரள ஆட்சியைக் கலைக்கும் முடிவுக்கு முழுமையான ஆதரவை காங்கிரஸ் தலைவர்கள் தராததும் பம்பாய் மாநிலத்தை மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்று அவர் எடுத்த முடிவை சில தலைவர்கள் எதிர்த்ததும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. நேருவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது பெண்மணி என்ற தகுதியை அப்போது அடைந்திருந்தார் இந்திரா. அதற்கு முன் அன்னிபெசன்ட், சரோஜினி தேவி, நெல்லி சென்குப்தா ஆகிய மூவர் தலைவராக இருந்துள்ளார்கள். நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராக ஆனதில் மூன்றாவது நபர் என்ற தகுதியும் இந்திராவுக்கு இருந்தது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு அடுத்து இவர் தலைவராகி இருந்தார். இப்படி ஒரு கௌரவத்தை ஒருநாள் இரவில் திரும்பக் கொடுத்துவிட்டார் இந்திரா. அதாவது, தான் நினைத்தது நடக்காவிட்டால் அந்தப் பதவியே தேவையில்லை என்ற மனோபாவம் கொண்டவராக அவர் இருந்தார். அப்படித்தான் வளர்ந்தார்.
நேரு இருந்த காலக்கட்டத்திலேயே இப்படி என்றால் நேருவே இல்லாத சூழ்நிலையில்..? 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்ற பெரும் முழக்கமே யதார்த்த வடிவம் எடுத்தது.
நேரு தன்னுடைய இறுதிக் காலக்கட்டத்தில் எடுத்த தூய்மை நடவடிக்கை ஒன்று மறைமுகமாக இந்திராவுக்கு வசதியாகப் போனது. 1962 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் சரிவைச் சந்தித்தபோது நேரு மிகவும் வருந்தினார். தன்னுடைய லட்சியங்களை நிறைவேற்ற முடியாத ஏக்கம் ஒருபுறம், காங்கிரஸ் பிரமுகர்கள் மீது எழுந்த ஊழல் முறைகேடுகள் மறுபுறம் அவரை வாட்டியது. அப்போது நேருவும் காமராஜரும் சேர்ந்து எடுத்த முடிவுதான், காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கு வசதியாக மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை விட்டு விலகுவதும், கட்சிப் பணிகளுக்குத் திரும்புவதும் என்பது. 'கே பிளான்’ என்று வரலாற்றில் இது பதிவானது. இந்த அடிப்படையில், இதை முன்மொழிந்த காமராஜரே, தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பிஜு பட்நாயக் (ஒடிசா), சந்திர பானு குப்தா (உத்தரப்பிரதேசம்), பஷி குலாம் முகமது (காஷ்மீர்), ஜீவராஸ் மேத்தா (குஜராத்), பகவதிராய் மண்ட்லோய் (மத்தியப் பிரதேசம்) ஆகிய முதலமைச்சர்களும் பதவி விலகினார்கள்.
மத்திய அமைச்சரவையில் இருந்து லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், எஸ்.கே.பாட்டீல், பி.கோபால், கே.எல். ஸ்ரீமலி ஆகியோரும் பதவி விலகினார்கள். பதவியைவிட்டு விலகி, கட்சிப் பணியாற்ற பெரிய தலைவர்கள் செல்வது ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நேருவின் எதிரிகள் வேறுமாதிரியாகச் சொல்ல ஆரம்பித்தனர். 'அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவரது சிறகுகளையும் மறைமுகமாக நேரு வெட்டிவிட்டார்’ என்றனர். ஏனென்றால் அமைச்சர் பதவியை விட்டு விலகியவர்களில் பலருக்கும் கட்சிப் பணிகளோ, பதவிகளோ பின்னர் தரப்படவில்லை.
காமராஜரை அடுத்து லால்பகதூர் சாஸ்திரிதான் நேருவின் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். பதவி விலகிய சாஸ்திரியை அழைத்து, மீண்டும் அமைச்சர் ஆக்கினார் நேரு. புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர், காங்கிரஸின் அகில இந்திய தலைவர் ஆனதும், சில மாதங்களில் நேரு மறைந்ததும் நடந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரியைப் பிரதமர் ஆக்குவதற்கு மொரார்ஜி தேசாய் தவிர வேறு யாரிடமும் எந்தத் தடங்கலும் இல்லாமல் போனது. சாஸ்திரி - மொரார்ஜி மோதலில் காமராஜர், சாஸ்திரி பக்கம் இருந்தார். அவரை பிரதமர் ஆக்க அனைத்தையும் செய்தார். அதைப் போலவே, அப்பாவின் மறைவுக்குப் பிறகு அமைதியாக உட்கார்ந்து அரசியல் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துவந்த இந்திராவை, மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கும் காமராஜர் நினைத்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இந்திரா ஆனார். மொத்தமே 17 மாதங்கள்தான் சாஸ்திரி பிரதமர் நாற்காலியில் அமருவதற்கு இயற்கை அனுமதித்தது.
அடுத்தது யார் என்ற கேள்வி அதற்குள் வரும் என்பதை காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் மொரார்ஜி முகம் முன்னுக்கு வந்தது. நேர்மையாளர் என்று பெயர் எடுத்தாலும் நெகிழ்வுதன்மை இல்லாதவர் என்று பெயர் வாங்கியவர் மொரார்ஜி. அவரை சமாளிக்கவே முடியாது என்று காமராஜர் நினைத்தார். அப்போது இந்திராவைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. 'இந்திராதான் அடுத்த பிரதமர்’ என்ற முடிவோடு களத்தில் இறங்கிய காமராஜர், தனக்கு அடுத்த இடத்தில் இருந்த அல்லது தன்னைவிட பெரிய மனிதர்களாக இருந்த அனைவரிடமும் இந்திராவைப் பிரதமராக்குவதற்காக ஆதரவு கேட்டு அலைந்தார். நிஜலிங்கப்பாவோ, சஞ்சீவி ரெட்டியோ ஆரம்பக் கட்டத்தில் இந்திராவை ஆதரிக்கவில்லை. 'இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்றுதான் சொன்னார்கள். ஆனால் தன்னுடைய இத்தனை ஆண்டுகால கடும் உழைப்பால் திரட்டி வைத்திருந்த அத்தனை பேரையும், புகழையும் பயன்படுத்தி, இந்திராவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வைத்தார் காமராஜர். ஆனாலும் மொரார்ஜி, இந்திராவை எதிர்த்து தேர்தலில் நின்றார்.
ரகசிய வாக்கெடுப்பு நடந்த நாளில், வெண்மையான கதர் புடவையும் பழுப்புநிற காஷ்மீர் சால்வை அணிந்து, அதில் சிறு ரோஜாப் பூவையும் செருகி நாடாளுமன்ற மத்திய மண்டபத்துக்கு வந்தார் இந்திரா. மொரார்ஜியைப் பார்த்ததும் அருகில் சென்று கை கொடுத்தார். அடுத்த சில மணிநேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு 189 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இந்திரா அறிவிக்கப்பட்டது அவரை பிரதமர் ஆக்க உழைத்த அனைத்துத் தலைவர்களுக்கும் மகிழ்ச்சியளித்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சியை இந்திரா நீடிக்கவிடவில்லை. காமராஜர் உள்ளிட்ட அனைவரையும் காயப்படுத்தும் காரியங்களைத் தொடங்கி முழு அதிகார மையமாக இந்திரா தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்.

பெருந்தலைவர் காமராஜரும் கசக்க ஆரம்பித்ததுதான் இந்திரா வாழ்க்கையில் மறைக்க முடியாத வடுவாக இன்று வரைக்கும் இருக்கிறது.
பெரிய விவகாரமாக இருந்தால் எதையும் நான்கு பேராக யோசித்துச் செய்ய வேண்டும் என்பார்கள். படேல் - ராஜாஜி, ஆசாத் ஆகிய மூவரோடுதான் ஆரம்ப காலத்தில் நேரு ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு சாஸ்திரி - காமராஜ் - இந்திரா ஆகிய மூவரோடுதான் கலந்து ஆலோசனை செய்தார். இதில் காமராஜரின் பிம்பம்தான் இந்திராவை எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஏனென்றால், நேருவுக்கு இணையாக அகில இந்தியத் தலைவர்கள் அனைவராலும் காமராஜர் மதிக்கப்பட்டார். நேருவிடம் சொல்ல முடியாததையும் காமராஜரிடம் அனைவரும் சொல்வார்கள். நள்ளிரவைத் தாண்டியும் அவரது வீட்டில் ஆலோசனைகள் தொடரும். நேருவுக்கு அடுத்து பிரதமர் யார் என்ற போட்டி நிலவியபோது, சாஸ்திரியைக் கொண்டு வந்ததும் அல்லாமல், அதற்கு எதிராக இருந்த மொரார்ஜி அணியை எழ முடியாமல் ஆக்கிய சாமர்த்தியம் காமராஜருக்கு இருந்தது.
அதேபோல் சாஸ்திரிக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்வி வந்தபோது, ஏக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் இந்திராவைவிட்டால் வேறு வழியில்லை என்று சொல்லவில்லை. இந்திரா பெயரை காமராஜர் உச்சரித்ததால்தான் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். காமராஜர் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை என்பதால் அவர் மீது கூடுதல் பாசம்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ வேறு விதமாக இந்திரா நினைத்தார்.
ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர்கள் இனி கட்சியில் இருந்தால் அது நம்முடைய பதவிக்கு, நாற்காலிக்கே வினையாகிவிடும் என்று அரசியல் தலைவர்கள் நினைப்பது எந்தக் கட்சியிலும் வாடிக்கைதானே. இதற்கு இந்திராவும் விதிவிலக்கு அல்ல. காரணம், அந்த அளவுக்கு காமராஜர் செல்வாக்கு காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தது.
இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியாவுக்கு என்ன மரியாதை தரப்படுகிறதோ அதைப்போல மரியாதை அன்று காமராஜருக்கு தரப்பட்டு வந்தது. 1963-ல் நடந்த ஜெய்ப்பூர் காங்கிரஸில், 'இனி நம்முடைய தலைவர் காமராஜர்தான்’ என்று அறிவித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அடுத்த ஆண்டு நடந்த புவனேஸ்வர் காங்கிரஸில் ஹீரோவே காமராஜர்தான். இந்தக் காட்சியைப் பார்க்க தமிழ்நாட்டில் இருந்து பலரும் கிளம்ப... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 'புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயிலே போனது. காமராஜரும் இந்த ரயிலில் போனார். சென்னையில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வர் வரைக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கூடி நின்று கூடை கூடையாகப் பூக்களைத் தூவினார்கள் காமராஜரோடு வந்த 700 பேருக்கும் அந்தந்த ஊரில் காங்கிரஸ் தொண்டர்கள் உணவு கொடுத்து உபசரித்தார்கள். இப்படி வந்து சேர்ந்த காமராஜரை, ஒரிஸ்ஸா தலைவர் பட்நாயக் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்றார். இது 68-வது காங்கிரஸ் என்பதால் 68 குண்டுகள் முழங்கி காமராஜர் வரவேற்கப்பட்டார். பல்வேறு கலைக்குழுவினர் முன்னே நடந்து காமராஜர் அழைத்து வரப்பட்டார்.
மாநாட்டுப் பந்தலிலும் 68 குண்டுகள் முழங்க... 68 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸின் கொடியை காமராஜர் ஏற்ற... ஜோதிக்கு எண்ணெய் ஊற்றிய நேரு... 'நீங்கள் எண்ணெய் ஊற்றுங்கள்’ என்று சொல்ல... அந்த இடமே காமராஜரின் கும்பாபிஷேகமாக இருந்தது.
இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சீவய்யா, 'எனக்குத் தமிழ் தெரியும். தலைவர் காமராஜுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் அளிக்குமாறு பிரார்த்திக்கிறேன்’ என்று சொல்லி மாலையைப் போடுகிறார்.
'ஈவு இரக்கமற்ற அசோகச் சக்ரவர்த்தியை ஒரு மகாபுருஷராக மனம் மாற்றம் செய்த இந்த இடத்துக்கு வந்துள்ளவர்களை வரவேற்கிறேன்’ என்று சொல்லி காமராஜருக்கு மாலை அணிவிக்கிறார் பட்நாயக். 'காமராஜ் ஜிந்தாபாத்’ என்று மூன்று முறை முழக்கமிட்ட பட்நாயக்கின் மகன்தான் இன்றைய ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்.
மாநாட்டில் நடந்து போய்க்கொண்டிருந்த சஞ்சீவி ரெட்டியை தடுத்து நிறுத்திய ஜெகஜீவன்ராம், ''என்னைப் பார்க்க என் அறைக்கு வருவதாகச் சொன்னீர்களே, ஏன் வரவில்லை?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். ''நான் என்ன செய்வேன்? மாப்பிள்ளைத் தோழன் போல காமராஜுக்குத் தோழனாக நான் இருக்கிறேன். காமராஜுடன் இருப்பதால் ராஜோபசாரம் கிடைக்கிறது'' என்று சஞ்சீவி ரெட்டி சொன்னார் என்றால் நிலைமையைக் கவனியுங்கள்.
காமராஜரைச் சந்திப்பதற்காக அவரது அறைவாசலில் மாஜி மன்னர் ஒருவர் காத்திருந்தார் அவர் பெயர் ராஜா கிருஷ்ண சந்திரமான்சிங் ஹரிச்சந்திர மராத்ராஜ் பிரமார்பரே பாரிகுட் ராஜா என்பதாகும். ''யாரையும் பார்க்க முடியாது'' என்று காமராஜ் அவரைத் திருப்பிஅனுப்பினார் என்றால் கொடி எவ்வளவு தூரம் பறந்தது என்று பாருங்கள்.இவ்வளவையும் இந்திரா பார்த்துக்கொண்டுதான் இருந்தார் புவனேஸ்வரில். இந்த மாநாட்டுக்கு வந்த நேரு உடல் நலிவுற்று திரும்பிவிட்டார். அவருக்கான நாற்காலி, காலியாகவே மேடையில் இருந்தது. அந்த நாற்காலி தனக்கா... அல்லது காமராஜருக்கா? என்று இந்திரா யோசித்திருப்பார்.
இந்த மாநாடு முடிந்ததும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் காமராஜர் சுற்றுப்பயணம் கிளம்பினார். 18 நாட்கள், 300 ஊர்கள், 2000 மைல்கள் கடந்து ஒரு கோடி பேரைச் சந்தித்த அந்தப் பயணத்தில்தான் வட இந்திய மக்கள். 'காலா காந்தி... காலா காந்தி’ என்று அழைத்தார்கள். கருப்பு காந்தியாக அவர் வலம் வரத் தொடங்கினார். இதன் பிறகே நேருவின் மறைவும், சாஸ்திரி பிரதமர் ஆனதும், அவர் மறைந்ததும் நடந்தன. சாஸ்திரிக்குப் பிறகு காமராஜர் பிரதமராக வரவேண்டும் என்று அதுல்யாகோஷ் போன்றவர்கள் யோசனை சொன்னபோது, 'இந்த விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்’ என்று நேருக்கு நேராக மறுத்துவிட்டார். இதுவும் அவரது பெயரை உயர்த்தியது. அதனால்தான் 1964 முதல் 67 வரை இரண்டு முறை அவரால் தலைவராக இருக்க முடிந்தது. இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் இந்தியா மூன்று பிரதமர்களை அதாவது நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரைக் கண்டது. ஆனால் கர்மவீரரை நகர்த்த முடியவே இல்லை.
''காமராஜ் எதை எல்லாம் செய்யச் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்வேன். அவர் வழிகாட்டுதல்படியே நடப்பேன்'' என்று சொன்ன இந்திரா, அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால் காமராஜர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 1967 பொதுத் தேர்தல் நெருங்கி வந்ததால் அமைதியாக இருந்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் இருந்த 518 உறுப்பினர்களில் (அன்று எம்.பி-க்கள் எண்ணிக்கை இதுதான்) 282 பேர் மட்டுமே காங்கிரஸ் உறுப்பினர்கள். இந்த தடவையும் பிரதமர் பதவிக்கு இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டார் மொரார்ஜி. இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் யார் பிரதமர் என்பதற்கான தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் மொரார்ஜியை சமாதானப்படுத்தினார் காமராஜர். ''யார் தோற்றாலும் கட்சி உடையும். காங்கிரஸைக் காப்பாற்ற நீங்கள் போட்டியிலிருந்து விலகித்தான் ஆக வேண்டும்'' என்று காமராஜர் சொன்னதை மொரார்ஜியால் தட்டமுடியவில்லை. போட்டியிலிருந்து விலகினார். இறுதியில், ஏகமனதாக இந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
இங்குதான் காமராஜரின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. கடிவாளம் இல்லாத குதிரையாக இந்திராவை விடுவது ஆபத்தானது என்பதைக் கடந்த இரண்டாண்டு காலம் (1966-67) காமராஜருக்கு உணர்த்தி இருந்தது. மொரார்ஜியை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திராவிடம் வலியுறுத்திய காமராஜர், 'அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும், மேலும் துணைப் பிரதமர் பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவார்’ என்று சொன்னார். இதை இந்திரா எதிர்பார்க்கவில்லை. தன்னை பிரதமர் ஆக்குவதற்கு இருந்த அத்தனை தடைக்கற்களையும் நொறுக்கிவிட்டு காமராஜர் நல்ல பாதை போட்டுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுவார் என்று நினைத்து இந்திரா காத்திருக்க... மொரார்ஜி என்ற சிவப்பு விளக்கை தலையில் கொண்டுவந்து மாட்டுவார் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
ஆனால் கேட்டவர் காலா காந்தி ஆச்சே! கர்ம வீரர் ஆச்சே! அப்பாவுக்கே தலைவராக இருந்தவர் ஆச்சே! இன்று நாம் பிரதமர் ஆகி ஆட்சி நம் வசம் வந்தாலும், கட்சி அவர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது! நினைக்க நினைக்க சிக்கல், சிக்கிக்கொண்டே போனது. வேறு வழியில்லை. மொரார்ஜியை நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இந்திரா தள்ளப்பட்டார். ஆனால் அன்று முதல் காமராஜர் என்ற பெயர் இந்திராவுக்குக் கசக்க ஆரம்பித்தது.

- Vikatan Article

No comments:

Post a Comment