Saturday, December 14, 2013

மகாத்மா முதல் மன்மோகன் வரை !

நேருவின் ஷர்வானி கோட்டில் உள்ள ரோஜாவுடன் சேர்த்து சிறு துளி கறையும் இருந்துவிட்டதே எதனால்?
 ''நாம் ஒரு யுகத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். பசப்பு வார்த்தைகள், அரசியல் தந்திரம், மோசடி மற்றும் சராசரி அரசியல்வாதியின் எல்லா வித்தைகளுக்கும் இனி இடமில்லை''- என்று டேராடூன் சிறையில் இருந்த நேரு, காந்திக்கு எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள். அதனை அவரது ஆட்சியிலேயே கடைப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் வேதனை.
''நமது அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் மிகவும் முக்கியமானவை. அவற்றைத் தீர்க்காமல் நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அரசியல் சுதந்திரம் என்பது முதலும் முடிவும் அல்ல. நாம் நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு அது ஒரு சாதனம். மனித உறவைப் பற்றிய பிரச்னையின் தீர்வுக்கு ஒரு சாதனம். ஆனால் அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை அகற்றாமல் நாம் முன்னேற முடியாது''- சுதந்திரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவர்களிடம் நேரு பேசினார். அந்த இலக்கை அவரது 16 ஆண்டு கால ஆட்சியில்கூட நிறைவேற்றிக் காட்ட முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
''உங்களுடைய லட்சியம் எப்படி இருக்க வேண்டும்? எஜமானர்கள் மாறி உங்கள் துன்பங்கள் நீடிக்குமானால் அதனால் உங்களுக்கு அதிகமான பயன் இருக்காது. ஒருசில இந்தியர்கள் அரசாங்கத்தின் உயர்ந்த பதவிகளை வகிப்பதால் அல்லது அதிகமான லாப ஈவுத் தொகைகளை அடைவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. உங்களுடைய பரிதாபகரமான நிலைமை அப்படியேதான் இருக்கும். நீங்கள் இடைவிடாமல் உழைத்துப் பட்டினியில் ஓடாகத் தேய்வீர்கள். உங்களுடைய நெஞ்சில் எரியும் விளக்கு அணைந்துவிடும்''- என்று சுதந்திரத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நேரு, பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இப்படிப் பேச முடியவில்லையே... ஏன்?
பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த ஆரம்ப காலக்கட்டத்தில் இந்தியாவில் வகுப்பு வன்முறை வெறியாட்டம் அதிகமாக நடந்தது. அதனைக் கட்டுப்படுத்தி ரத்தச் சகதியை நிறுத்தியாக வேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் நேருவுக்கு இருந்தது. தன்னுடைய மனதளவில் இந்துத்துவா கொள்கையும் மத மேலாண்மைச் சிந்தனையும் இல்லாதவராக மட்டுமல்ல, தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலும் பெருமைப்பட்டுக் கொண்டவர் நேரு. துணிச்சலாய் சில நடவடிக்கைகளை அவர் எடுத்தார். நேருவின் பிம்பம் அத்தகைய நடவடிக்கைகளுக்கு தடங்கலற்ற அனுமதியை அளித்தது. இது முதல் சாதனை.
அடுத்த சிக்கல் சமஸ்தானங்கள் வடிவில் வந்தன. பெரிய சமஸ்தானங்கள் தாங்கள் சுதந்திரமான அரசுகளாகச் செயல்பட விரும்பின. 'நாங்கள் சுதந்திரமான அரசுகள்தான்’ என்று சில சமஸ்தானங்களின் அரசர்கள் அறிவித்தார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலை அது. இந்தியாவைச் சுற்றி சின்னச் சின்ன சமஸ்தானங்கள் இருந்தால் இந்தியாவுக்கு தீராத் தலைவலியாக அது அமையும் என்று பிரதமர் நேருவும், அன்றைய உள்துறை அமைச்சரும் நேருவின் சகாவுமான படேலும் நினைத்தார்கள். தன்னுடைய தனித்திறமையால் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார் படேல். சிக்கல் ஏற்படுத்தியவர்கள் மூன்று பேர். திருவிதாங்கூர், போபால், ஹைதராபாத் ஆகியவை அவை. ''நாம் உடனடியாக இதனைச் சரி செய்யாவிட்டால் தியாகங்கள் பெற்று அடைந்த சுதந்திரக் காற்று, சமஸ்தானங்களின் வழியாக வெளியே போய்விடும்'' என்று சமஸ்தானங்கள் இணைப்புத் துறைச் செயலாளராக இருந்த வி.பி.மேனன் எச்சரித்தார். முரண்டுபிடித்த சமஸ்தானங்களை இணைப்பதற்கும் ஆரம்பக் காலக்கட்டத்தைச் செலவுசெய்ய வேண்டியதாயிற்று. படையெடுத்தும் பயமுறுத்தியும் இந்த ஐக்கியத்தை படேல் சாதித்தார். சமஸ்தானத்தையும் தங்களது அதிகாரத்தையும் ஒப்படைத்த அரசர்களுக்கும் மன்னர்களுக்கும் ஆயுட்கால மானியம் வழங்கப்பட்டது. அன்றைய மதிப்பில் 4.66 கோடி ரூபாய் மன்னர்களுக்கு மானியமாகத் தரப்பட்டது. இவ்வளவு சலுகை விலையில் வேறு எந்த நாட்டுக்கும் நாடுகள் கிடைத்திருக்காது. இது இரண்டாவது சாதனை.
வலிமையான மத்திய அரசு அமைய வேண்டுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் என்று நேரு நினைத்தார். இந்திய வரலாற்றை மிக உன்னிப்பாகப் படித்த முதலும் கடைசியுமான பிரதமர் நேரு. பல்வேறு பட்ட மொழி, இனம், மதம் கொண்ட மக்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதை உணர்ந்தவர். ஒப்புக்கொண்டவர். அதன் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தவர். இந்தி மொழி திணிக்கப்பட்டால் தமிழன் இரண்டாம் தர குடிமகனாக ஆக்கப்படுவான் என்ற கிளர்ச்சி 1938 முதல் தமிழகத்தில் நடந்துவந்தது. ''இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்'' என்று பிரதமர் நேரு செய்த அறிவிப்புதான் (7.8.1959) இன்று வரைக்கும் நடைமுறையில் இருக்கிறது. ''இதை எப்போது மாற்றலாம் என்று என்னிடம் கேட்டால், அதனை இந்தி பேசாத மாநில மக்கள்தான் முடிவு செய்வார்கள்'' என்றும் சொல்லும் பரந்த மனப்பான்மை நேருவுக்கு இருந்தது. மொழிவாரி மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற போதும், அது இந்தியாவைச் சிதைத்துவிடும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். 'இல்லை அது இந்தியாவைப் பலப்படுத்தும்’ என்று சொன்னவர் நேரு. இன்று ஏக இந்தியா காப்பாற்றப்பட்டு இருப்பதற்கு இந்த மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இது நேருவின் மூன்றாவது சாதனை.
பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நேரு எதிர்த்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலக நாடுகள் சில அமெரிக்காவின் தலைமையிலும் சில நாடுகள் ரஷ்யாவின் தலைமையிலும் பிரிந்தன. வல்லரசு நாடுகளின் கூட்டணிக்குள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடுகளும் கட்டாயப்படுத்தப்பட்டன. இந்தியா இதில் எந்தக் கூட்டணிக்குள்ளும் போய் சிக்கிக்கொள்ளக் கூடாது, எந்த அணியிலும் சேராத அணி சேராக் கொள்கைதான் நம்முடைய அடித்தளம் என்று சொன்னவர் நேரு. தன்னுடைய சோசலிசக் கொள்கை காரணமாக நேரு, பின்னர் சோவியத் பக்கம் சாய்ந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் அவர் எந்த ஏகாதிபத்திய நலன் சார்ந்தும் முடிவுகள் எடுப்பதற்கு கடைசி வரைக்கும் தயங்கினார். இது அவரது நான்காவது சாதனை.
ஐந்தாவது சாதனையாக அவரது சோசலிச எண்ணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அது சோதனையைத்தான் கொடுத்தது. அதுவே இந்தியாவுக்கான வேதனையாகவும் மாறியது.
'கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம்’ என்ற கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதராக காந்தி வலம் வந்தார். ஆனால் நேரு முன்மொழிந்த வார்த்தைகள் கிராமம், நகரம், படித்தவர், பாமரர், பணம் படைத்தவர், ஏழை ஆகிய அனைத்துத் தரப்பையும் கவனிக்க வைத்தது. சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, அறிவியல் மூலமாக சமூகத்தின் வளர்ச்சி என்று நேரு சொன்னார். அவராகச் சொல்லிக்கொண்ட சோசலிசத்தின் அடிப்படைகள் இவை. இதற்கும் மார்க்சியத் தத்துவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அதுதான் வேறு வார்த்தைகளில் வருகிறது என்று வர்த்தகர்கள் பயந்தார்கள். அதுதான் இது என்று சொல்லி பொதுவுடைமைவாதிகள் சிலரும் வழிமொழிய ஆரம்பித்தார்கள். ஏழைகளுக்குச் சாதகமான மாற்றங்களைச் சும்மா செய்ய முடியாது என்று நேருவும் நினைத்தார். அதனால்தான் அதற்கு, 'அறுவைச் சிகிச்சை’ என்று பெயரும் வைத்தார்.
இதனை நாடாளுமன்ற, சட்டசபைகளின் மூலமாகத்தான் செய்ய முடியும் என்று அவர் நினைத்தது முதல் சறுக்கல். பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று முதலில் சொன்னார். தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் பொதுத் துறை நிறுவனம் ஆகிவிடும் என்று அடுத்துச் சொன்னார். 'தேசிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமானால் பொதுத் துறையும் தனியார் துறையும்  இணைந்து செயல்பட வேண்டும்’ என்று கொஞ்சம் இறங்கினார். 'லாபகரமான தொழில்களில் அரசு இறங்கும்’ என்றார். 'நஷ்டம் அடைந்தால் அந்தத் தொழிலைக் கைவிட்டுவிடுவோம்’ என்று சொல்லிக்கொண்டார். அதனைச் செயல்படுத்த ஐந்தாண்டுத் திட்டங்கள் என்ற அஸ்திரத்தை எடுத்தார்.
ஐந்தாண்டுத் திட்டம் என்ற சிந்தனையே சோவியத் இறக்குமதிதான். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக 1923-28 காலக்கட்டத்தில் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது. அதுதான் ஐந்தாண்டுத் திட்டம் என அழைக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் இதனைப் பின்பற்றத் தொடங்கின. நேருவும் அதனையே பின்பற்றினார். அவருக்கு அப்படிப்பட்ட சிந்தனைத் தூண்டுதலைச் செய்தவர் வி.எம்.விசுவேஸ்வரய்யா. அவர்தான் 'இந்தி யாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற புத்தகத்தை, அடிமை இந்தியாவில் முதலில் எழுதினார். இது காங்கிரஸ் கட்சியைக் கவர்ந்தது. இதனைப் பற்றி ஆய்வுசெய்ய 'தேசிய திட்ட கமிட்டி’யை நேருவின் தலைமையில் அமைத்தார்கள். அரசியல் கொந்தளிப்பு அதிகம் ஆனதால் இந்த கமிட்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. சுதந்திரம் அடைந்ததும் பிரதமர் ஆன நேருவுக்கு, தான் முன்பு வகித்த கமிட்டி பதவி ஞாபகத்துக்கு வந்தது. அதை வைத்து ஒரு கமிஷனை அமைத்தார். அதுதான் இன்றுவரை நடைமுறையில் இருக்கும் 'திட்ட கமிஷன்’. அதன் தலைவராகவும் நேரு இருந்தார்.
''தேச மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக, வாழ்க்கை நடத்தப் போதிய வசதி பெறுவதற்கு உள்ள உரிமை தேவை. சமூகத்தின் பொருள் வசதிகள் முழுதும் பொதுமக்களின் பொதுநலத்துக்காகப் பயன்படும் விதத்தில் விநியோகிக்கப்படும் முறைகள் இருக்க வேண்டும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முறைகள் பொதுநலம் பாதிக்கப்படும் முறையில் இருக்கக் கூடாது. ஒரு சிலரிடம் செல்வமும் பொருள் உற்பத்தி வசதிகளும் குவிந்திருக்காமல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தேவை’- என்று அன்றைய அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது மாதிரி நடக்க முடியவில்லையே ஏன்?
டாக்டர் அம்பேத்கர் அடிக்கடி ஒரு உதாரணத்தைச் சொல்வார். ''சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற டெய்லர் ஒருவரிடம், தன்னுடைய கிழிந்த, நைய்ந்துபோன கோட் ஒன்றை எடுத்துக்கொண்டு ஒருவன் வந்தான். 'இதே மாதிரி எனக்கு ஒரு கோட் தைத்துக்கொடு’ என்று கேட்டான். இரண்டு வாரத்தில் அவனுக்கு கோட் தைத்துத் தரப்பட்டது. பழைய கோட்டில் எங்கெல்லாம் கிழிந்திருக்குமோ அங்கெல்லாம் கிழித்து, எங்கெல்லாம் நைய்ந்திருந்ததோ அங்கெல்லாம் அதேமாதிரி செய்து, அந்த புகழ்பெற்ற டெய்லர் கோட் தைத்துக் கொடுத்தார்'' என்று சொல்வார் அம்பேத்கர். பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெறப் போராடியவர்களும், அதே மாதிரியான ஒரு ஆட்சியைத்தானே கொடுத்தார்கள்? நேருவால்கூட அது முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

போராட்டக் காலத்தில் கொள்கை பொங்கப் பேசுபவர்கள், பதவியை அடைந்ததும் பெரும்பாலும் பதுங்கிப் படுத்துவிடுகிறார்கள் என்பதற்கு நேருவும் விதிவிலக்கு இல்லை. அதற்குக் காரணம், நேருவை எதிர்க்க காங்கிரஸுக்குள்ளேயே தலைவர்கள் இல்லாமல் போனதுதான்!
 'ஜவஹர்லால் நேருதான் என்னுடைய வாரிசு’ என்று சொன்ன மகாத்மா காந்தி, சுதந்திரம் அடைந்த சில மாதங்களில் மரணத்தைத் தழுவினார். அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி வந்தபோது நேருவுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பேசப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல், சில ஆண்டுகளில் மரணம் அடைந்தார். குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் நடைமுறை அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கிவிட்டார் பாபு ராஜேந்திர பிரசாத். உடம்பு முழுக்க மூளை கொண்டவர் என்று வர்ணிக்கப்பட்ட ராஜாஜியும், அதேபோல் அரசியல் செய்ய முடியாத கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர் என்ற பதவிகளில் போய் உட்கார்ந்தார். காந்தியின் சீடரான ஆச்சார்ய கிருபளாளி, கிசான் மஸ்தூர் பிரஜா என்ற கட்சியை உருவாக்கிவிட்டுப் போய்விட்டார். நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் அங்கம் வகித்த ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜனசங்கம் தொடங்கி அங்கே போய்விட்டார். கொள்கையும் அஞ்சாமையும் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், காங்கிரஸில் இருந்து விலகி பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொண்டார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் அரசியல் ஆர்வம் இல்லாமல் போனார். இவரது அறிவு நமக்குத் தேவை என்று எந்த அம்பேத்கரை நேரு தனது அமைச்சரவையில் சேர்த்தாரோ... அந்த அம்பேத்கர், பதவி விலகிவிட்டார்.
தனித்திறமை கொண்ட ஒவ்வொரு ஆளுமைகளும் வெவ்வேறு காரணங்களால் காங்கிரஸை விட்டும், தன்னுடைய அமைச்சரவையை விட்டும் வெளியேறியது நேருவுக்கு வசதியாகப் போனது. தன்னைத் தவிர யாருமே இல்லையே என்ற யதார்த்த நிலைமை, தன்னைத் தவிர இனி யார் இருக்கிறார்கள் என்ற கர்வ எண்ணமாக மாறியது. 'காங்கிரஸ்தான் நாடு; நாடுதான் காங்கிரஸ்’ என்று அவர் சொல்லத் தொடங்கினார். இதைத்தான் அவரது மகள் இந்திரா ஆட்சி காலத்தில், 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்று மாற்றிச் சொல்லப்பட்டது.
சிலர் விலகிப் போனார்கள் என்றால் சிலரை அடக்கியாக வேண்டும் என்று நேரு முடிவெடுத்தார். அதற்குக் காரணம், படேல். 'இன்னொரு படேல் கட்சிக்குள் வந்துவிடக் கூடாது’ என்பதில் நேரு உறுதியாக இருந்தார். எனவே, லேசாகத் தலைதூக்கிய பிரபலங்களை எல்லாம் முடிந்த அளவுக்கு களையெடுக்க நேரு முயற்சித்தார்.
நேர்மையும் சுயசிந்தனையும் கொண்ட தலைவர்களில் ஒருவராக அன்றைய தினம் புருஷோத்தம்தாஸ் டாண்டன் இருந்தார். அவரை காங்கிரஸ் தலைவர் ஆக்குவதற்குத்தான் பலரும் விரும்பினார்கள். அவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால் நேருவுக்கு ஏனோ பிடிக்கவில்லை. எல்லாவற்றிலும் கறாராகக் கருத்துச் சொல்லக்கூடியவர் டாண்டன் என்பதும் நேருவின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம். 'டாண்டனுக்கு பதிலாக கிருபளானியை தலைவர் ஆக்கலாம்’ என்றார் நேரு. ஆனால், இதனை படேல் போன்றவர்கள் ஆதரிக்கவில்லை. டாண்டனுக்கு ஆதரவு அதிகமானது. உடனடியாக பிரதமர் பதவியை விட்டும் கட்சிப் பதவியை விட்டும் விலக நேரு திட்டமிட்டார். 'இனி நான் கட்சிக்கும் ஆட்சிக்கும் பயன்பட மாட்டேன்’ என்றார். அவர் ராஜினாமா அஸ்திரத்தை எடுப்பது அது முதல் தடவை அல்ல.
காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால், 'நான் ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்று மிரட்டல் விடுத்தவர் நேரு. 'ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் ஆக்கக் கூடாது’ என்று சொல்லி அதனை யாரும் ஏற்காதபோதும், 'ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்றவர் நேரு. அரசியலில், 'ராஜினாமா’ அஸ்திரத்தை அதிகமாகவிட்டு, அதனை வாபஸ் வாங்கியும் சாதனை படைக்கலாம் என்பதைத் தொடங்கிவைத்து அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியவர் நேரு என்றும் சொல்லலாம்.
அவர்தான் டாண்டன் தலைவர் ஆகக்கூடாது என்பதற்காகவும் ராஜினாமா அஸ்திரத்தை எடுத்தார். 'என்னை எல்லோரும் துணிக் கடை பொம்மைபோல நடத்த நினைக்கிறார்கள்’ என்றும் சொல்லிக் கொண்டார். அவை எதுவும் எடுபடவில்லை. டாண்டன்தான் தேர்தலில் வென்றார். ஆனால், அவரைத் தனது கட்சித் தலைவராகவே நேரு நடத்தவில்லை. டாண்டனுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் நாடாளுமன்றக் கமிட்டியில் இணைத்தார் நேரு. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையெல்லாம் சேர்ப்பதைத் தடுத்தார் டாண்டன். 'நான் உபயோகமாக இருந்த காலம் முடிந்துவிட்டது’ என்று நேரு வருந்தி சொல்லிக்கொண்டார். இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் ராஜாஜியை பஞ்சாயத்து செய்பவராக நேரு வைத்திருந்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைமைக்கு ராஜாஜி தள்ளப்பட்டார். ஆனாலும் எந்த முடிவையும் ராஜாஜிக்கு தெரியாமலேயே நேரு எடுத்தார். ஒரு காரியத்தைச் செய்துவிட்டு தகவல் தருவதுதான் நேருவின் வழக்கமாக மாறியது.
'இப்படியெல்லாம் செய்து காங்கிரஸைக் குழப்பி அழிப்பதற்கு முன்னதாக என்னை நீங்கள் விடுவித்துவிட வேண்டும். தயவுசெய்து என்னை பைத்தியக்காரனாக ஆக்கிவிடாதீர்கள்'' என்று நேருவுக்கு கடிதம் எழுதிவிட்டு டெல்லியில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி வந்துவிட்டார் ராஜாஜி. அவரை எப்படியாவது டெல்லியில் உட்காரவைத்து தன்னுடைய காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நேரு நினைத்தார். அப்போது ராஜாஜி சொன்னது இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும் ஞாபகம்வைக்க வேண்டியது. ''நான் 'ஞாபகசக்தியை இழந்துவிட்ட வயதான முட்டாள்’ என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஓய்வெடுக்க விரும்பவில்லை'' என்று சொன்னார் ராஜாஜி.
அதாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக நேரு எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள்!
'அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்பது புகழ்பெற்ற அரசியல் பொன்மொழிகளில் ஒன்று. தட்டிக் கேட்பதற்கான சகாக்கள் தனக்கு இல்லை என்பதால்தான் செய்வதும், சொல்வதும்தான் சரியானது என்ற நிலைமை நேருவின் ஆட்சி காலத்திலேயே தொடங்கியது. ஆனால், அதனை எல்லாம் பச்சையாக இல்லாமல் சாமர்த்தியமாக நேரு செய்தார். ஏனென்றால் அவர் சாராசரி அரசியல்வாதி அல்ல!
அடிமை இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மகாத்மாவை அருகில் இருந்து தரிசித்தவர். தந்தை மோதிலால் நேருவின் தர்க்க நியாயங்களைக் கவனித்தவர். அனைத்துக்கும் மேலாக உலக நாடுகளை நேரில் கண்டவர். பல்வேறு நாடுகளில் அடக்குமுறை ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் வீழ்ந்தார்கள் என்பதை எழுத்தெண்ணிப் படித்தவர் நேரு. 'பிரதமர்’ நேருவை, 'தியாகி’ நேரு சிலநேரங்களில் பின்னால் இருந்து இழுத்துக்கொண்டே இருந்தார். அதனால், முதல் வாரம் சோசலிசத்துக்கு ஆதரவாகவும் அடுத்த வாரமே, அதற்கு எதிராகவும் பேச வேண்டியதாயிற்று. ''புதிய தொழில்களை அரசாங்கமே ஆரம்பிக்கும். தொழில் முறைகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். தனிப்பட்டவர்களிடம் தொழிலைக் கொடுக்காது’ என்று ஒருநாள் நேரு பேசிவிட்டார். அடுத்த நாளே பிர்லா, மோடி, ஷராப் போன்ற தொழிலதிபர்கள் அவரை வந்து சந்தித்தார்கள். 'இப்போதைக்கு எந்தத் தொழிலையும் அரசாங்கம் ஏற்றுச் செயல்படுத்தப் போவதில்லை’ என்று நேரு சொன்னார். இதில் எது ஒரிஜினல் என்ற குழப்பம் அவர் ஆட்சியில் இருந்த 16 ஆண்டுகளும் இருந்தது. இந்த ஊசலாட்டத்தின் காரணமாகச் சிலரை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவர நேரு நினைத்தார்.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனை அழைத்துப் பேசினார். அவரை காங்கிரஸ் கட்சிக்குள் வர வேண்டும் என்று நேரு கேட்டுக்கொண்டார். அப்படியானால் நேரு என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஜே.பி. பட்டியல் கொடுத்தார். அந்தப்பட்டியல் இன்றுவரை பொருத்தமானதுதான்.
''மத்தியில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. அதனைப் பகிர்ந்துகொடுத்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். வணிகத் துறையை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்...'' என்று பல்வேறு கோரிக்கைகளை ஜே.பி. அடுக்கினார். ஆறு மாத காலம் பேச்சுவார்த்தையை இழுத்த நேரு இறுதியில், 'இதை எல்லாம் நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை. பிரதமராகவும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருக்கின்ற என்னால் இதையெல்லாம் நிறைவேற்ற இயலாது’ என்றுசொல்லி அமைதியாகிவிட்டார். ''மாஸ்கோவை இந்தியாவுக்கு கொண்டுவந்து காட்டுவேன்'' என்று சொன்ன நேருவே, ''எதனையும் ஒழுங்காக இயக்குவதற்குரிய வழிமுறைகள் வகுக்காமல் நாட்டுடமை ஆக்குதல் ஆபத்தானது'' என்று சொல்லும் அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டார். சோஷலிசத்தை திசை திருப்பும் தந்திரம் என்று சோஷலிசத் தலைவர்கள் சொன்னார்கள். அன்று அண்ணா சொன்ன வாசகம்தான், ''காகிதப் பூ மணக்காது, காங்கிரஸின் சோஷலிசம் இனிக்காது!’
அதற்காக நேரு தனது ஆட்சிக்காலத்தின் அனைத்து முறைகேடுகளுக்கும் உடன்பட்டார், அவருக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடந்தன என்று சொல்ல வரவில்லை. 'எனக்குச் சொத் துடைமை மனப்பான்மை இல்லை. செல்வத்தையும் சொத்துக்களையும் சுமந்துகொண்டு இருப்பது ஒரு பெரிய பாரம் என்பதையும் நான் அறிவேன். தொல்லை என்பதையும் உணர்வேன்’ என்றார். ஆனால், ஊழல் புரிந்தவர்களை அவரால் தடுக்க முடியவில்லை. முறைகேடுகளைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அதற்கு ஓர் உதாரணம்... அவரது செயலாளர் எம்.ஓ.மத்தாய்.


- Vikatan Article

No comments:

Post a Comment