Saturday, December 28, 2013

ஆ... சாமியோவ்! 9

ஆசாராமுக்கு கூட்டத்தில் இருக்கும் பக்தகோடிகளில் ஒரு பெண்ணை பிடித்துவிட்டால்... யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம், அதை தெரியப்படுத்த வேண்டிய தனது விசுவாசமான சீடர்களுக்குத் தெரியப்படுத்த அவர் பல தந்திரங்களை வைத்திருந்தார்.
 கண்களை மூடியபடி, 'ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஹரிராம்’ என்று பக்தர்களை தாளமிட்டு ஆடவைத்துவிட்டு, கையில் இருக்கும் ஒரு பழத்தை தன் மனம் கவர்ந்த பெண்ணை நோக்கி ஆசாராம் வீசுவார். பழத்தால் அடிப்பட்ட பெண் பக்தையோ, இறைவனே தனக்கு ஞானப்பழத்தை அளித்துவிட்டதைப்போல மகிழ்ந்துபோவார். அப்போது ஆசாராமின் நம்பிக்கைக்குரிய சீடர்கள் அந்த பக்தையை அணுகி, 'உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது. நீங்கள் அவசர அவசரமாக வீட்டுக்குத் திரும்பாமல் இன்று ஒரு நாள் ஆசிரமத்தில் தங்கினால் இறைவனின் முழு அனுக்கிரகத்தையும் பெறலாம்’ என்று மூளைச் சலவை செய்வார்கள். ஒருவேளை அந்தப் பெண், அப்பா, அம்மா என்று குடும்பத்தோடு வந்திருந்தாலும் மொத்த குடும்பத்தையும் ஆசிரமத்தில் தங்க வைத்துவிட்டு சில 'மந்திர அனுஷ்டானங்களை’ உபதேசிப்பதாக சம்பந்தப்பட்ட பெண்ணை மட்டும் ஆசாராமின் அறைக்கு அன்று இரவு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
அறைக்குள் சென்றதும் அந்தப் பெண்ணை பார்வையால் விழுங்குவதைப்போல பார்ப்பார் ஆசாராம். 'உன் உடலில் தீய சக்திகள் ஏராளமாக உள்ளது. அதை வெளியேற்றவில்லை என்றால் உன் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ - இப்படி ஆசாராம் சொன்னதும், 'அதை வெளியேத்த என்ன செய்யணும் குருஜி...’ என்று பயபக்தியுடன் கேட்பார் அந்தப் பெண். கண்களை மூடி யோசிப்பார் ஆசாராம். பிறகு அந்தப் பெண்ணை அருகில் வந்து அமரச் சொல்வார். 'இப்போ எனக்குள் இருக்கும் தெய்வ சக்திகளை உனக்குள் அனுப்பப் போறேன்... இந்த பாக்யம் வேற யாருக்கும் கிடைக்காது’ என்று சொல்லிவிட்டு விபூதியை அந்தப் பெண்ணின் நெற்றியில் பூசிவிட்டு, அவரது கைகள் மெள்ள கீழே இறங்கும். இப்படி ஏராளமான பெண்களை ஆசாராம் சூறையாடியிருப்பதாக அவரது தனிப்பட்ட டாக்டராக இருந்த பிரஜாபதி உட்பட அவரது பழைய சிப்பந்திகள் பலர் இப்போது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
ஆசாராமின் மகனான நாராயண சாய் பெண்கள் விஷயத்தில் அப்பாவைவிட பல மடங்கு அட்வான்ஸாக இருந்தார். இதெல்லாம் வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்தது, ஆசாராமினால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி, முதல் புகாரைக் கொடுத்தப் பிறகுதான். இதை அடுத்து ஆசாராம் மீது மட்டுமல்ல... அவரது மகனான 41 வயது நிறைந்த நாராயண பிரேம் சாயின் மீது பதைபதைக்க வைக்கும் பல குற்றச்சாட்டுகள் புற்றீசல்கள்போல கிளம்பியிருக்கின்றன.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது சூரத்தை சேர்த்த சகோதரிகள் இருவர் கொடுத்த புகார்கள். அகமதாபாத்தில் இருக்கும் ஆசிரமத்தில், ஆசாராம் தன்னை தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தினார் என்று அக்கா புகார் கொடுக்க... இதே அகமதாபாத்தில் இருக்கும் இன்னொரு ஆசிரமத்தில் அவரது மகனான நாராயண சாய் தன்னை பல முறை சீரழித்தான் என்று அவரது தங்கை போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
பல நூறு கோடி புழங்கும் ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி திருமகனான நாராயண சாய் இளம்பருவத்தில் இருந்தே வயதுக்கும் தகுதிக்கும் மீறிய மரியாதையோடு ஆசாராமின் பக்தர்களாலும் ஊழியர்களாலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறான். 'குருவின் குமாரனும் குருவே’ என்று நம்பிய பக்தர்கள் இவனை 'பரம பூஜ்ய நாராயண சாய் ஜி’ என்று பக்தி சொட்ட அழைத்திருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் ஆசாராமின் பாதங்களைத் தொட்டு வணங்கும் பக்தர்கள் நாராயண சாயின் பாதங்களையும் தொட்டு வணங்கத் துவங்கினார்கள். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே தன் தந்தையின் அரண்மனையைப் போன்று ஆசிரமம்; தன் ஏவலுக்காக காத்திருக்கும் ஆசிரமத்தின் மூளைச் சலவை செய்யப் பட்ட அடிமை ஊழியர்கள்; ஆசிரமத்தின் பணிப் பெண்களாக வேலை செய்வதே மாபெரும் பேறு என்று கருதுகிற அழகான அப்பாவிப் பெண் பக்தர்கள். ஒருவன் காமக்கொடூரனாக மாற இதைவிட மோசமான சூழ்நிலை தேவையா என்ன?
அந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்துக்கு வந்த பக்தையான ஒரு பெண்ணிடம் ஆசைவார்த்தைகள் கூறி மயக்கி அந்தப் பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கி அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தையையும் கொடுத்தார் நாராயண சாய். ஆனால், சிறிது காலத்துக்குள்ளேயே அந்தப் பெண்ணும் அவளது குழந்தையும் காணாமல் போய்விட்டனர். பெரிய புள்ளிமான் கூட்டத்திலிருந்து தினம் தினம் தன் இரையைத் தேர்ந்தெடுக்கும் மிருகத்தைப்போல இவன் வேளைக்கு வேளை தன் காமப்பசிக்கு அப்பாவி இளம் பெண் பக்தர்களைத் தேர்ந்தெடுத்து சீரழித்திருப்பதை முழுநேர வேலையாகவே செய்திருக்கிறார்.
சூரத் நகரைச் சேர்ந்த சகோதரிகள் இவர் மீதும் ஆசாராம் மீதும் கொடுத்த புகாரை அடுத்து, வேறு வழி இல்லாமல் குஜராத் போலீஸ் இவரைத் தேடியது. குஜராத் மட்டுமல்லாது, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர்... என்று பல மாநிலங்களிலும் ஆசாராமுக்கு பக்தர்களும் அரசியல் பெரும்புள்ளிகளின் செல்வாக்கும் இருப்பதால் போலீஸால் இவரை அத்தனை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. நாராயண சாயைத் தேடி போலீஸ் எந்த ஊர் ஆசிரமத்துக்கு சென்றாலும் போலீஸை ஆசாராமின் பக்தர்கள் மறித்து கோஷம் எழுப்பினார்கள். கடைசியில் டெல்லி ஹரியானா பார்டரில் வைத்து டிசம்பர் மாதத் தொடக்கத்தில் போலீஸ் நாராயண சாயைக் கைது செய்துவிட்டது.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இப்போது காவலில் வைக்கப்பட்டிருக்கும் இவர், 'சூரத் நகரைச் சேர்ந்த பெண் கொடுத்த வாக்குமூலம் உண்மைதான்’ என்று ஒப்புக்கொண்டிருப்பதுடன், தன்னோடு சேர வேண்டும் என்று விருப்பப்பட்ட எட்டுப் பெண்களோடு மட்டும்தான் இதுவரை தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். எந்த எந்த ஊர்களில் எல்லாம் எந்தெந்த மாதிரியான கிரிமினல் வேலைகள் செய்தேன் என்பதை இப்போது ஒவ்வொரு ஊராகச் சென்று போலீஸுக்கு நடித்துக்காட்டி வருகிறார்.
ஆசாராம் உருவாக்கி வைத்திருக்கும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சாம்ராஜ்ஜியம் இப்போது அனாமத்தாகக் கிடக்கிறது!

-Thanks Vikatan

No comments:

Post a Comment