Saturday, December 28, 2013

ஆ... சாமியோவ்! 8

1990-களின் முற்பகுதி. ராமஜென்ம பூமி பிரச்னை வெடித்து அதன் விளைவாக... பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் போன்ற தீவிர இந்து இயக்கங்களின் குரல்கள் அதிகமாக ஒலிக்க ஆரம்பித்த நேரம். ஆசாராம் என்ற நச்சுச்செடி தழைத்து வளர ஆரம்பித்தது இந்தக் கட்டத்தில்தான். கதாகாலட்சேபம் மட்டும் செய்தால் கல்லா கட்ட முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஆசாராம் பாபு, கலாசாரக் காவலனாக வேடம் தரித்தார்.
 'எவன் ஒருவன் டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட் போடுகிறானோ... அவனால் ஆத்மசுத்தி அடைய முடியாது.’
'மாமிசம் சாப்பிடுகிறவர்கள் எல்லாம் இந்த நாட்டவர்களே அல்ல. மாமிச உணவு அவர்களை காமாந்தகர்கள் ஆக்கிவிடும்.’
- இப்படி பல அணுகுண்டுகளை அவர் மேடைகளில் வீச ஆரம்பித்தார்.
இதையெல்லாம் கேட்டு பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர்கள் ஆசாராமை தேடி வந்தனர். 'பெரிய பெரிய புள்ளிகளே இவரை பார்க்க வருகிறார்களே?’ என்ற ஆச்சர்யத்தில் ஆட்டுமந்தை குணம் கொண்ட அப்பாவி ஜனங்கள் இவரின் ஆசிரமத்துக்குப் படையெடுத்தார்கள். இதைப் பார்த்து, 'இவருக்கு இத்தனை பக்தர்களா?’ என்று வியந்து பி.ஜே.பி. தலைவர்கள் வர ஆரம்பித்தனர். இந்த மாய சுழற்சியின் வேகம் குறைந்துவிடாமல் இருக்க, ஆசாராம் பாபு சூழ்ச்சி வலையைப் பின்ன ஆரம்பித்தார். பஜ்ரங் தள் மற்றும் வி.ஹெச்.பி. தலைவர்களைக் குதூலிக்க வைக்கும் கலாசாரக் குண்டுகளைத் தொடர்ந்து பற்றவைத்துக்கொண்டே இருந்தார். பி.ஜே.பி-க்கு ஆதரவுள்ள மாநிலங்களில் எல்லாம் அவர் தனது கிளை ஆசிரமங்களை நிறுவினார். மிகத் தீவிரமான பஜரங் தள் மற்றும் வி.ஹெச்.பி. தலைவர்களே செய்யத் தயங்கக்கூடிய காரியங்களை இவர் சர்வ சாதாரணமாக செய்தார்.
'மலை சாதியினருக்கு எல்லாம் ஏதேதோ ஆசைகள் காட்டி அவர்களை கிறிஸ்தவர்கள் ஆக்கிவிட்டனர். அதனால், அவர்களை மீண்டும் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்போகிறேன்’ என்று அறிவித்ததோடு, அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் படுவிமரிசையாக அரங்கேற்றினார். என்ன நினைத்து ஆசாராம் இதையெல்லாம் செய்தாரோ... அது நிறைவேறியது. சத்தீஸ்கர் மாநிலத்தை ஆட்சிசெய்த பி.ஜே.பி. ஆட்சியாளர்களை ஆசாராம் கவர்ந்தார். 'காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை பெற்றோர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்று ஆசாராம் முன்வைத்த யோசனையை அந்த மாநில அரசு ஏற்றுக்கொண்டது. அதோடு, 'பிப்ரவரி 14-ம் தேதியை பெற்றோர் தினமாக கொண்டாடுங்கள்!’ என்று மாநிலத்தில் இருக்கும் அத்தனைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையே அனுப்பியது.
'தான் என்ன பிதற்றினாலும் அதற்கு சட்ட உருவம் கொடுக்க சில மாநிலங்களின் ஆட்சியாளர்களே தயாராக இருக்கிறார்கள்!’ என்ற போதை கண்களை மறைக்க... ஆசாராம் முன்னைவிடவும் மோசமாக பிதற்ற ஆரம்பித்தார். சாத்தான் வேதம் ஓதுவதைப்போல 'காமத்தை எப்படி வெல்வது?’ என்று ஆசாராம் அரைவேக்காட்டுத்தனமாக பல கதைகளை கட்டவிழ்த்துவிட்டார். இன்னொருபுறம், ''டான்ஸ் ஆடினால் முட்டி ஆட்டம் கண்டு பாலியல் உணர்வு போய்விடும்'' என்று பயம் காட்டினார். அதே மூச்சில், ''பண்டிகை நாட்களில் எல்லாம் தம்பதிகள் தாம்பத்ய உறவில் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால் நரகம் நிச்சயம்'' என்று ஒரு பூதத்தை அவிழ்த்துவிட்டார்.
ஆனால், ஆசாராம் பாபு கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டே கடைந்தெடுத்த காமாந்தகனாக எப்படி வாழ்ந்தார்... ஊருக் கெல்லாம் நல்ல புத்தி சொல்கிறேன் என்று வேடம்போட்ட இவர், வக்கிரபுத்தி நிறைந்தவனாக எப்படி வலம் வந்தார்... என்பதற்கு இவரது ஆசிரமத்தில் 18 ஆண்டுகள் டாக்டராக வேலை செய்த பிரஜாபதியே சாட்சி.
ஆரம்ப கட்டத்தில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்துக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடல் உபாதைகளை அவரிடம் சொல்ல... அவர்கள் எல்லாம் ஆயுர்வேத மருந்துகளுக்கான மிகப்பெரிய சந்தையாக ஆசாராம் பாபுவின் கண்களுக்குத் தெரிந்தனர். அதனால், ''இங்கிலீஷ் மருந்தெல்லாம் ஒரு மருந்தா... நம்முடைய முனிவர்கள் விட்டுப்போயிருக்கும் ஆயுர்வேத மருந்தின் கால் தூசுக்கு இவை சமமாகுமா?'' என்று போகும் இடமெல்லாம் ஆசாராம் பாபு ஆக்ரோஷமாக ஸ்பீச் கொடுப்பார். ''நம்ம சுவாமிஜி சொல்றது நிஜம்தானே!’ என்று பக்தர்கள் மதிமயங்கியதைப் பார்த்து, ஆசாராம் பாபுவின் பிசினஸ் மூளை விழித்தெழுந்தது.
''ஆயுர்வேத டாக்டர்கள் தேவை. மாத சம்பளம்: 15 ஆயிரம் ரூபாய்'' என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். இது நடந்தது 1988-ம் ஆண்டு. இந்த விளம்பரத்தைப் பார்த்து வேலைக்கு வந்த ஆயுர்வேத மருத்துவர் பிரஜாபதிக்கு முதலில் கொடுக்கப்பட்டது மருந்து தயாரிக்கும் வேலை. பிரஜாபதி தயாரித்தது சாதாரண ஆயுர்வேத மருந்துதான் என்றாலும், அதை நோயாளி பக்தர்கள் ஆண்டவனின் பிரசாதமாகவே பாவித்து சாப்பிட்டார்கள். அதனால் நாளாக ஆக இந்த மருந்துக்கு கிராக்கி கூடியது. பிரஜாபதியின் ஆயுர்வேத மருந்துகள் ஆசாராமின் ஆசீர்வதிக்கப்பட்ட பிரசாதமாக அவரின் எல்லா கிளை ஆசிரமங்களிலும் சுறுசுறுப்பாக விற்பனையானது. பல நாடுகளில் இருந்தும் பண மழை. இந்த மருந்திலும் அதிக லாபம் பார்க்க ஆசைப்பட்ட ஆசாராம் பாபு ஒரு கட்டத்தில்,  பிரஜாபதியிடம், 'மருந்து தயாரிக்க அக்மார்க் மூலப்பொருட்களை வாங்காதே. சுமாரான மூலப்பொருட்களோடு நிறுத்திக்கொள்!’ என்று உத்தரவே போட்டார். இப்படி படிப்படியாக ஆசாராம் பாபுவின் கட்டுப்பாட்டுக்கு வந்து அவரின் அந்தரங்க மருத்துவராகவே உயரும் அளவுக்கு முன்னேறினார்.
ஆனால், இதே பிரஜாபதியை ஒரு கட்டத்தில் ஆசாராம் பாபு ஆள்வைத்து துரத்தித் துரத்தி அடித்தார். உயிருக்குப் பயந்து ஓடிய பிரஜாபதி, தான் இருக்கும் இடத்தை தன் குடும்பத்தாருக்குக்கூட சொல்லாமல் உயிர் பயத்தோடு தலைமறைவாக வாழ்கிறார். காரணம், பிரஜாபதி பார்த்த ஒரு காட்சி! ஆசாராம் பாபுவைப் பெற்றெடுத்த தாயார் இறந்த அடுத்த நாள்... ஏதோ ஒரு வேலையாக ஆசாராம் பாபுவின் அறைக் கதவை திறந்துகொண்டு பிரஜாபதி உள்ளே நுழைய, அங்கே ஒரு பெண்ணுடன் ஆசாராம் பாபு நெருக்கமாக இருக்கும் காட்சியைப் பார்த்துவிட்டார். பிரஜாபதி வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இதுதான். அன்று முதல் இன்று வரை பிரஜாபதி உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். அவ்வப்போது ஏதோ ஒரு ஊரில் இருந்து ஏதோ ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு போன் செய்து, ''என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று கதறுகிறார்.
இப்படி நாலாத் திசைகளில் இருந்தும் கதறல்கள் நெஞ்சை உலுக்கினாலும், ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகியைப்போல சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்துக்கும் ஹாயாக போய்வந்து கொண்டிருக்கிறார் ஆசாராம் பாபு. அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தவர் என்பதை உறுதி செய்வதைப்போல ஆசாராம் பாபுவின் மகனான நாராயண சாய் செய்த அட்டூழியங்கள் இப்போது அம்பலத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. அது அடுத்த இதழில்...
 

No comments:

Post a Comment