Saturday, December 14, 2013

ஆ...சாமியோவ் ! - 6 & 7

ஆசாராம் பாபுவின் ஆற்றலையும் அசுரத்தனமான வளர்ச்சியையும் பார்த்த எவரும் இவர் இப்படி ஒரேடியாகச் சறுக்குவார் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மயக்கும் மேடைப் பேச்சால், தான் ஒரு தெய்வப்பிறவி என்று லட்சக்கணக்கானவர்களை நம்பவைத்தது மட்டுமன்றி, வாஜ்பாய் தொடங்கி அப்துல்கலாம் வரை; பி.ஜே.பி-யின் தலைவர் ராஜ்நாத் சிங் தொடங்கி பல மாநில முதலமைச்சர்கள் வரை பலராலும் பல வகையிலும் புகழப்பட்டவர் இந்த ஆசாராம் பாபு.
 இப்போது வேண்டுமானால் இவர் சிறைச்சாலையில் இருக்கலாம். ஆனால், கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இவர் இருந்தது சிம்மாசனத்தில். குஜராத்தின் அஹமதாபாத் நகரில் 10 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து இருக்கும் இவரது ஆசிரமம்தான், இவரது சாம்ராஜ்ஜியத்தின் தலைமையகம்.
ஆசாராம் பாபுவை 'சாமியார்’ என்று ஒற்றை வார்த்தையால் வர்ணிப்பது பொருத்தமாக இருக்காது. இவரது பக்தர்கள் இவரை 'பூஜ்ய பாபாஜி’ என்று ஏன் அழைக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால், பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்த இவரது அஹமதாபாத் ஆசிரமத்துக்கு, உலகெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியான மையங்களும் இருக்கின்றன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் மட்டுமன்றி, தைவான், துபாய், மலேசியா... என்று உலக வரைபடத்தில் இருக்கும் பலதரப்பட்ட நாடுகளுக்கும் சென்று 'சத்சங்கம்’ செய்து இவர் உருவாக்கி வைத்திருக்கும் ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தின் இன்றைய மார்க்கெட் மதிப்பு பல நூறு கோடி ரூபாய்!
பெரிய பெரிய கம்பெனிகளின் முதலாளிகளுக்கும் இயக்குநர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் சில சாமியார்களை 'கார்பரேட் சுவாமி’கள் என்று சொல்வதுண்டு. ஒரு விதத்தில் பார்த்தால், ஆசாராம் பாபு இப்படிப்பட்ட சுவாமிகளுக்கும் மேலானவர். காரணம், இவரது ஆன்மிக சாம்ராஜ்ஜியமே கார்பரேட் கம்பெனிகளின் அளவுக்கு பெரியது. தவிர, இந்த சாம்ராஜ்ஜியத்தை ஆசாராம் பாபு நடத்தியதும் கார்பரேட் ஸ்டைலில்தான்.
'பக்தி என்ற ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்துக்கொண்டு ஆன்மிகக் கடை விரித்தால், வியாபாரம் விறுவிறுப்பாக நடக்காது’ என்று கருதிய ஆசாராம் பாபு... யோகா, தியானம், மந்திர ஸ்லோகங்கள், தீக்ஷை, ஆயுர்வேத சிகிச்சை, ஆரோக்கிய உணவு, ஏழைகளுக்கு சேவை என்பது போன்ற பாவ்லா... என்று தனது ஒவ்வொரு ஆசிரமத்தையும் ஒரு ஹைப்பர் மார்க்கெட் மாதிரி விளம்பரம் செய்துவந்தார். விளம்பரத்தைத் தாண்டி மார்க்கெட்டிங்கிலும் ஆசாராம் பாபு மிகப்பெரிய வித்தகர்.
போதாக்குறைக்கு வெண்மேகம் போன்ற இவரது தாடியும் தும்பைப்பூ போன்ற வெள்ளை உடையும் இவரை ஒரு புனிதர் என்று எடுத்த எடுப்பிலேயே நம்பவைத்துவிடும். அன்பும் அக்கறையும் வழிந்தோடும் இவரது பேச்சைக் கேட்டால் ஹிப்னாடிஸம் செய்ததைப்போல மொத்த ஜனமும் மயங்கி, 'ஹரி ஓம், ஹரி ஓம்’ என்று சாமி வந்ததைப்போல ஆடும். பாப் பாடகர்கள் ஆடியன்ஸுக்கு கட்டளையிடுவது மாதிரி மூச்சுவிடாமல் பக்தர்களைத் தன்னோடு தாளம் போட்டுக்கொண்டு பாட இவர் உற்சாகப்படுத்துவார்.
உணர்ச்சிகளால் உசுப்ப முடியாதவர்களைத் தர்க்கரீதியான வாதங்களை வைத்து தன் வழிக்கு கொண்டுவருவதிலும் ஆசாராம் பாபு கில்லாடி. அற்புதமான குரல் வளம் கொண்ட அவர் இறக்கங்களோடு வேதங்களில் இருந்தும், திரிக்கப்பட்ட புராணச் சரித்திரங்களில் இருந்தும் மேற்கோள்களை காட்டி உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவார். பக்தர்களுக்கோ ஞான மழையின் சாரலில் நீராடுவதைப்போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்.
ஒரு சமயம் குஜராத்தின் கோத்ரா நகரில், கல்லூரி ஒன்றில் இவரது சத்சங்கம் ஏற்பாடாகி இருந்தது. பறந்து பறந்து ஆன்மிக 'சேவை’ செய்யும் ஆசாராம் பாபு அன்று ஹெலிகாப்டரில் கோத்ரா வந்து தரையிறங்கியபோது, பைலட்டின் தவறினால் ஹெலிகாப்டர் விளையாட்டு மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்தது. இந்த விபத்தில் இருந்து ஆசாராம் பாபா பிழைத்துவிட்டார். இது போதாதா? 'மரணத்தால்கூட சீண்ட முடியாதவர்’ என்று இவரது ஜால்ராக்கள் இவரை புகழ... அதன் பிறகு எந்த ஊரில் பேசினாலும், 'அன்று கோத்ராவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது, என்ன நடந்தது தெரியுமா?’ என்று கேட்டு ஆசாராம் பாபு தன்னைத்தானே அற்புதமாக மார்க்கெட்டிங் செய்துகொண்டார்.
'மார்க்கெட்டிங் திறமை’ என்பது ஆசாராம் பாபுவுக்கு ஆரம்ப காலம் தொட்டே இருந்த ஒன்று. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்துவந்த இவர்களது குடும்பம் பிரிவினைக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் இருக்கும் அஹமதாபாத்துக்கு குடியேறிய சில வருடங்களுக்குள்ளேயே இவரது அப்பா காலமாகிவிட்டார். அப்போது டீ விற்று பிழைப்பை நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்தது. உலகம் தெரிய ஆரம்பித்ததும் அதுவரை அஸ்மல் ஹர்பாலனியாக அறியப்பட்ட இவர், தன் தாயிடம் இருந்து கற்ற யோகாவை மூலதனமாக வைத்து வாழ்க்கையை ஓட்டினார். தாயிடம் இருந்து கற்ற புராணக் கதைகளையும் அவ்வப்போது அவர் எடுத்துவிட... இவரை ஒரு சுவாமிஜியாகவே மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இதுதான் சரியான ரூட் என்பதை புரிந்துகொண்டு அங்கிருந்து பிருந்தாவன் சென்று ஒரு குருவிடம் மேலும் சில வித்தைகளை கற்றுக்கொண்டு பாபுவாக மீண்டும் அஹமதாபாத் வந்தார்.
பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து குஜராத் அரசிடம் இருந்து 10 ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கே ஓர் ஆசிரமத்தை நிறுவி, அதை வேகமாகப் பிரபலப்படுத்தினார். இவர் ஆசிரமத்தில் இருந்ததால், ஆசிரமம் பாபு என்ற அர்த்தத்தில் ஆசாராம் பாபு என்று பக்தர்கள் இவரை அழைத்தனர்.
'பாவங்களை உதறிவிட்டு ஞானத்தைப் பெற என்னிடம் தீக்ஷை பெற்றுக்கொள்ள வாருங்கள்!’ என்று விடுத்த அழைப்பை ஏற்று, இவர் எங்கே போனாலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். 'தீக்ஷை’ என்பது ஆசாராம் பாபுவின் பிராண்ட் வேல்யூவை உயர்த்த... இவர் இதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு எட்டு திக்குகளிலும் தனது ஆசிரமத்தின் கிளைகளைத் திறந்தார். செல்வம் குவிய குவிய... செல்வத்தை வேகமாக சேர்க்க இவருக்கு வெறி ஏற்பட்டது. அதனால் அரசு தானமாக கொடுத்த அஹமதாபாத் ஆசிரம நிலத்துக்கு அக்கம் பக்கத்தில் இருந்த ஆறு ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட ஏழை ஜனங்கள் போராட... வேறு வழியில்லாமல் அரசாங்கம் புல்டோசர் கொண்டு இவரது ஆக்கிரமிப்புகளை அகற்றியது. ஆனால் ஆசாராம் பாபு, இதை தன் மீது படிந்த களங்கமாக எடுத்துக்கொள்ளவில்லை. இது நடந்த அடுத்த வருடமே ஆசாராம் பாபுவின் அசிங்கமான முகம் மீண்டும் தன் கோரமான முகத்தைக் காட்டியது.
மத்தியப்பிரதேசத்தில் ஒரு மாபெரும் சத்சங்கம் நடத்தப்போகிறேன் என்று இவர் ஒரு தனியார் கம்பெனியை உதவிகேட்டு அணுகினார். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அந்த நிர்வாகத்தினர் தங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை சத்சங் செய்துகொள்ள கொடுத்து உதவினர். ஆனால், 11 நாட்கள் சத்சங் நடந்த பிறகு... ஆசாராம் பாபுவுக்கு மீண்டும் மண் ஆசை தலைதூக்கியது. 700 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை காலிசெய்ய மறுத்ததோடு, அந்த இடத்துக்கு சொந்தமும் கொண்டாடிவிட்டார். மண் ஆசையில் இப்படி இவர் பல மோசடிகள் செய்தாலும், இந்த வார்த்தை வித்தகனுக்கு மிகப்பெரிய சறுக்கல் இவர் உதிர்த்த வார்த்தைகளினால்தான் வந்தது.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது நாடே அந்த மாணவிக்காக கணணீர் சிந்திக்கொண்டிருந்த நேரத்தில், ''நடந்த தவறில் அந்த மாணவிக்கு சரிபாதி பங்கு இருக்கிறது. தன்னைப் பலாத்காரம் செய்ய முற்பட்டவர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு, 'அண்ணா... என்னை விட்டுவிடுங்கள்’ என்று அந்த மாணவி மன்றாடியிருந்தால், அந்த மாணவிக்கு இந்த கதி நேர்ந்திருக்காது!’ என்று தன் அடிமனத்தில் படிந்துகிடந்த அழுக்கு எண்ணங்களை ஆசாராம் பாபு வெளிப்படுத்த... கண்டங்களைத் தாண்டியெல்லாம் அவருக்கு கண்டனங்கள் வந்தது.
இந்தக் கருத்தை உதிர்த்த ஒரு சில மாதங்களிலேயே தன்னை தெய்வம்போல நம்பி வாழ்ந்துவந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை, தனது பக்தை என்றும் பாராமல் இவர் சின்னாபின்னமாக்கியபோது,  ''அந்த சிறுமி, 'தெய்வமே என்னை விட்டுவிடு’ என்று உன்னைப் பார்த்து கதறினாளே... ஏன் அவளை நீ விடவில்லை? ஒரு வேளை, 'தாத்தா என்னை விட்டுவிடு’ என்று கதறியிருந்தால் விலகி இருப்பாயோ?'' என்று, இப்போது சிறையில் இருக்கும் ஆசாராம் பாபுவை நோக்கி நாட்டு மக்கள் கோப கேள்வி எழுப்பினர்! இதையடுத்து ஆசாராம் பாபுவின் காமக் களியாட்டங்கள் ஒவ்வொன் றாக வெளியே வரத் தொடங்கி இருக்கின்றன.

- 7

அபாரமான ஆற்றலும் ஆஸ்தியும் அதிகாரமும் கொண்ட ஒருவனிடம் வக்கிரபுத்தியும் சேர்ந்தால் என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதற்கு ஆசாராம் பாபு சரியான எடுத்துக்காட்டு.  தன்னையே கடவுளாக வணங்கிவந்த 16 வயது சிறுமியை, 'பேய் ஓட்டுகிறேன் பேர்வழி’ என்று சின்னாபின்னமாக்கிய சம்பவத்தால் 72 வயதான ஆசாராம் பாபு இப்போது கைதாகி சிறையில் இருந்தாலும் இதைவிட கொடுமையான - மர்மமான - பல குற்றச்சாட்டுகள் இப்போது இவரைப் பற்றி வெளிவரத் தொடங்கியுள்ளன.
 அதில் முக்கியமானது ஜூலை 2008-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலைகள்.
'மேற்கத்திய கலாசாரம் நமது பண்பாட்டை எப்படி எல்லாம் சீரழிக்கிறது... என்று தொடங்கி, இனி பிப்ரவரி 14-ம் தேதியைக் காதலர்கள் தினமாகக் கொண்டாடக்கூடாது. அதை, பெற்றோர்களுக்கு நன்றி சொல்லும் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என ஆசாராம் அவிழ்த்துவிட்ட மேடைப் பேச்சுகளால் கவரப்பட்ட பல அப்பாவிகளில் குஜராத்தைச் சேர்ந்த வகேலாவின் குடும்பமும் ஒன்று. இப்படிப்பட்ட அற்புதமான ஆசிரமம் நடத்தும் குருகுலப் பள்ளியில் தங்கிப் படித்தால்தான் பிள்ளைகள் நமது பாரம்பரிய பண்பாட்டோடு வளர்வார்கள் என்ற நம்பிக்கையோடு, அபிஷேக் வகேலா மற்றும் திப்பேஷ் வகேலா ஆகிய தங்கள் பிள்ளைகள் இருவரை ஆசாராமின் பாலகேந்திரா குருகுலப் பள்ளியில் சேர்ந்தனர்.
இதுவரை பிள்ளைகள் தங்களைவிட்டுப் பிரிந்து வெளியே தங்கியது இல்லை என்பதால்... பாச உணர்வோடு அடிக்கடி பிள்ளைகளைப் போய் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் வகேலாவின் மனைவி, ஆசிரமத்தில் போய் பிள்ளைகளைப் பார்த்தபோது அவர்கள் தலை மொட்டையடிக் கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த அதிர்ச்சியோடு அவர், வீட்டுக்கு வந்த ஒரு சில மணி நேரத்துக்குள், ''உங்கள் பிள்ளைகள் வீட்டுக்கு வந்துவிட்டார்களா?'' என்று ஆசிரமத்தில் இருந்து ஒரு போன். 'ஐயோ வரவில்லையே... அவர்களுக்கு என்னானது?’ என்று மார்பிலும் முகத்திலும் அடித்துக்கொண்டு அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்துக்கு ஓடினார்கள்.
அங்கே சரியான பதில் ஏதும் கிடைக்காததால்... ஆசிரமத்தைச் சுற்றியிருக்கும் இடங்களில் எல்லாம் பிள்ளைகளைத் தேடி இருக்கிறார்கள். அப்போது இவர்களை சந்தித்த ஆசிரமத்தின் நிர்வாகி பங்கஜ் சக்ஸேனா, 'அரச மரத்தை பதினோரு முறை பயபக்தியோடு சுற்றிவந்து வீழ்ந்து கும்பிட்டுவிட்டு மடிப்பிச்சையாக குழந்தைகளைத் திரும்பவும் கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’ என்று பிரசன்னம் சொல்லியிருக்கிறார்.
'எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்று இருந்த அந்தக் குடும்பத்தினர் அவர் சொன்ன மாதிரியே பதினோரு முறை அல்ல... அன்று இரவு முழுவதும் ஆசிரமத்தில் இருந்த அரச மரத்தை ஓயாமல் சுற்றிவந்து வேண்டியிருக்கின்றனர். ஆனால், பிள்ளைகள் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை போலீஸில் புகார் செய்யலாம் என்று கிளம்பியவர்களை ஆசிரம நிர்வாகிகள் தடுத்துவிட்டனர். ஆனால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வகேலா குடும்பத்தினர் போலீஸ் நிலையம் சென்றபோது, ஆசிரமத்தின் நிர்வாகிகள் இரண்டு பேர் போலீஸ் அதிகாரிகளோடு சிரித்துப் பேசிவிட்டு வெளியே வந்திருக்கின்றனர். போலீஸார் இவர்களது புகாரை வாங்கவில்லை. மாறாக, ''என்ன... பிள்ளைகளை ஒளித்து வைத்துக்கொண்டு நாடகமாடுகிறீர்களா?'' என்று இவர்களையே மிரட்டியிருக்கிறார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையோடு வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு ஆசிரமத்தில் இருந்து ஒரு செய்தி. ''உடனடியாக முச்சந்திக்கு சென்று ஏழு கற்களை பொறுக்கி எடுத்துவந்து காணாமல்போன குழந்தைகளின் உடைகளில் சுற்றி கொதிக்கும் தண்ணீரில் நனைத்து அவர்களின் அறையில் காயவையுங்கள். அவர்களது ஆடைகள் உலர்வதற்கு முன்பு அவர்களைப் பற்றிய நல்ல செய்தி வந்துவிடும்'' என்றது அந்தத் தகவல். ஆடைகள் காய்ந்தன. ஆனால் வகேலாவின் குடும்பத்தினர் விட்ட கண்ணீர் ஓயவில்லை. குழந்தைகளைக் கேட்டு அடுத்த நாள் மீண்டும் அவர்கள் ஆசிரமத்துக்குச் சென்றனர்.
''இங்கே ஆசாராமின் அருள் கிடைத்த பத்து வயதுகூட நிரம்பாத பாலகன் ஒருவர் இருக்கிறார். விரல் நகரத்தைப் பார்த்தே குறி செல்லும் சக்தி அந்த பாலகனுக்கு உண்டு. உங்கள் பிள்ளைகள் இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கேளாள் என்ற கிராமத்தில் இருப்பதாக அந்தப் பாலகன் குறி சொல்கிறார்'' என்ற ஆசிரம நிர்வாகிகள் இவர்களை அலைகழிக்க.. இது உண்மையாக இருந்துவிடாதா என்ற நப்பாசையில் வகேலாவின் குடும்பம் அந்த கிராமத்துக்கு ஓடியது. ஆனால், பிள்ளைகள் அங்கு இல்லை. ஆனால், அதற்குள் ஆசிரமத்துக்கு அருகில் இருக்கும் ஆளரவமற்ற சபர்மதி ஆற்றங்கரையில் இந்தச் சிறுவர்கள் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடப்பதாகத் தகவல் வர... வகேலா குடும்பத்தினர் வெடித்து அழுதபடி ஆற்றங்கரைக்கு ஓடினர்.
அங்கே அவர்களின் முன்பு இரண்டு உடல்கள் கிடந்தன. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை கணித்த வகேலா, வீட்டில் இருந்து வந்திருந்த பெண்களைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, முதல் போர்வையை அகற்றினார். அங்கே அவரது மகன் திப்பேஷ் மாறு கை மாறு கால் வாங்கப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார். தன் பிள்ளையின் உள்ளுறுப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு வெறும் மார்புக்கூடு மட்டுமே எஞ்சி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அடுத்த போர்வையை விலக்கியவர் அகிலேஷின் எரிந்தும் எரியாமல் இருக்கும் பிணத்தைப் பார்த்து துடித்துப் போனார்.
''பாவிகளா... மூன்று நாளா துடிச்சுட்டு இருக்கோமே... உடனே என் பிள்ளைங்களைக் கண்டுபிடிச்சு கொடுத்திருந்தா அவங்களுக்கு இப்படி ஆகியிருக்காதே...’ என்று வகேலா அங்கே வந்த போலீஸாரைப் பார்த்து ஆத்திரத்தில் கத்த... அப்போது அந்த ஆற்றங்கரைக்கு ஆசிரமத்தின் டெம்போ ஒன்று ஆயுதம் தாங்கிய அடியாட் களுடன் வந்தது. வந்ததும் இவர்களை அங்கிருந்து மிரட்டி விரட்டியடித்தது.
பயந்து ஓடிய வகேலாவின் குடும்பத்தினருக்கு அப்போது மீடியாதான் துணை. ஆசாராம் ஆசிரமம் என்பது இரும்புக் கோட்டை மாதிரி. அந்தக் கோட்டையின் கதவுகளை உடைத்துக்கொண்டு பத்திரிகையாளர்களும் டி.வி. கேமராக்களும் உள்ளே புகுந்தபோது ஆசாராமின் சிஷ்யர்கள் என்ற போர்வையில் இருந்த குண்டர்கள் அவர்களையும் தாக்கி னார்கள். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் மத்தியப்பிரதேசத்தில் ஆசாராம் பாபு நடத்தும் இன்னொரு ஆசிரமத்தில் படித்துவந்த இரண்டு சிறுவர்கள் இதேபோல மர்மமாக இறந்து, அங்கேயும் பிரச்னை வெடித்தது.
அடுத்தடுத்து கிளம்பிய பிரச்னையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஆசாராம், 'பல்லுக்கு பல். கண்ணுக்கு கண்’ என்று மத துவேஷங்களைக் கிளப்பினார். ஆனால், அது அவருக்குக் கைகொடுக்கவில்லை. கடைசியில் வேறு வழியே இல்லாமல் குஜராத் அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே.திரிவேதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை நியமித்தது. ஆசிரமத்தில் பில்லி சூனியம் போன்ற மாந்த்ரீக காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாகப் பிள்ளைகளைப் பறிகொடுத்த வகேலா குடும்பத்தினர் இந்த கமிஷன் முன்பு கண்ணீரோடு வாக்குமூலம் கொடுத்தனர். அதனால், ஆசாராம் பாபு இதுபோன்ற மாந்த்ரீக காரியங்களுக்காகத்தான் வகேலா வீட்டுப் பிள்ளைகளை நரபலி கொடுத்தாரோ என்ற சந்தேகத்தில் குஜராத்தே கொந்தளித்தது.
ஆனால், ஆசாராம் பாபுவோ விசாரணை கமிஷனையே துச்சமாக நடத்தினார். 'இந்த கமிஷன் அனுப்பும் சம்மனுக்கெல்லாம் கட்டுப்பட்டு நான் ஆஜராக முடியாது!’ என்று சொல்லி குஜராத் உயர் நீதிமன்றத்துக்குப் போனார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ''குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் முன்பு விசாரணை கமிஷன் மண்டியிட்டு கைக்கூப்பி விசாரணைக்கு வரும்படி ஒன்றரை வருடங்களாக கெஞ்சுவதா..?’ என்று கோபமாகக் கேட்டது.
இதற்குப் பிறகு ஆசாராம் பாபு விசாரணை கமிஷனுக்கு சாட்சி சொல்ல வந்தார் என்றாலும், அரசியல்வாதிகளைப் போல இவர் ஒரு பெரிய கூட்டத்தோடு வருவதும் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே இடையிடையே நீதிபதியிடம் அனுமதிகூட பெறாமல் வெளியே கோஷம்போட்டுக் கொண்டிருக்கும் தன் பக்த கோடிகளை சமாதா னப்படுத்தி அருளுரை நிகழ்த்துவதுமாகவே இருந்தார்.
இந்த இரட்டைக் கொலைகள் நடந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தன் அரசியல் பலத்தை வைத்து இந்த வழக்கை ஆசாராம் பாபு இன்றுவரை வெற்றிகரமாக இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்.
- ஆசாராம் பாபுவைப் பற்றிச் சொல்ல இன்னும் இருக்கிறது!

- Vikatan Article

No comments:

Post a Comment