Saturday, December 14, 2013

ஆறாம் திணை - 66

26 காசில், உங்கள் வீட்டுக் குழந்தைகள் ஒரு நாள் உண்பதற்கான காய்கறிகளை வாங்க முடியுமா?
'முடியவே முடியாது’ என்று சொல்லாதீர்கள். தமிழகத்தில் இயங்கும் 55,000 அங்கன்வாடியின் 15 லட்சம் குழந்தைகளுக்கு, தலா 26 காசைத்தான் காய்கறி வாங்குவதற்கென அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது. 'ஸ்நாக் பாக்ஸ்’ எடுத்துக்கொண்டு, ஏ.சி. காரில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அல்ல அவர்கள். கூலி வேலைக்குச் சென்று சனிக்கிழமை சம்பளத்தில் அரிசி வாங்கும் ஏழைகளின் வீட்டில் மலர்ந்த மலர்கள்!
முந்திரி பக்கோடாவும் பாதாம் இனிப்பும் சாப்பிட்டு, ஏலக்காய் டீ குடித்து ஏப்பம் விட்டு என்றோ போட்ட இந்தத் திட்டங்களை, தூசி தட்டி மறுபரீசிலனை செய்யக்கூட அரசாங்க அதிகாரிகளுக்கு நேரம் இல்லை!
ஆறு வயது வரை ஏறத்தாழ 15.6 கோடி குழந்தைகள் உள்ள இந்தத் தேசத்தில் ஒரு உசேன் போல்ட்டோ, கஸ்தூரிரங்கனோ, டெண்டுல்கரோ உருவாக ஐந்து வயது வரையிலான அவர்களின் சாப்பாடுதான் ஊக்கமூட்டும். உடல் உறுதி மட்டுமல்ல, நோய் எதிர்ப்பாற்றல், உளவியல் வலிமை, ஒட்டுமொத்த சுரப்புகள், ஹார்மோன்களின் சீரான செயல்பாடு, புத்திக் கூர்மை, விவாதிக்கும் திறன், ஆளுமைத்தன்மை... என அத்தனைக்கும் 'காய் பூவாவும் கீரை மம்மும்’தான் அடித்தளம்.
இந்த ஒருமித்த வளர்ச்சி இல்லாத குழந்தைகளை 'வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள் உணவியலாளர்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும். சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான சூழலில் தேவையான அளவு சரிவிகித சம உணவு கிடைக்காதபோதே, குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டு முதல் மூன்று வயதுக்குள் சரியான உணவுக் கலாசாரத்தை குழந்தைகளுக்கு நாம் கொண்டுசெல்லாவிட்டால், பின்னாளில் நோய்க்கூட்டத்தின் வலுவான பிடிக்குள் அந்தக் குழந்தைகள் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உண்டு. உணவுக்கூறுகளின் குறைபாட்டால், ஒல்லியாக மட்டுமல்ல, சில நேரத்தில் குண்டாகவோ, இளம்வயது சர்க்கரை வியாதியோ, ரத்தக்கொதிப்போகூட வரக்கூடும்.
'என் குழந்தையை சூப்பர் சிங்கர் ஆக்கப்போகிறேன், சானியா மிர்சா ஆக்கப்போகிறேன்’ என நம் இயலாமையையும், தோல்வியையும் ஏமாற்றத்தையும் மூன்று வயதுக் குழந்தைகளிடம் திணிக்கும் முன்னர், நமக்கு எல்லாம் இயல்பாகக் கிடைத்த உணவுப்பழக்கத்தை அவர்களுக்கு கொஞ்சம் மெனக்கெட்டுப் புகட்ட வேண்டியது, காலத்தின் கட்டாயம்!
இரும்பு, நாகச் சத்து (ZINCசி), சுண்ணாம்பு (CALCIUM) இந்த மூன்றும் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படாமல் இருக்க மிக அவசியமான நுண்கனிமச் சத்துகள். இவற்றுடன் புரதம், சரியான கார்போஹைட்ரேட் மிக அவசியம். சித்த மருத்துவப் பார்வையில் உடலை வளர்க்கப் போதிய அளவிலான இனிப்புச் சுவையும் தேவை. இனிப்பு என்றதுமே, 'சளி பிடிக்குமே, வெள்ளைச் சர்க்கரை வேண்டாம் என்றல்லவா சொன்னீங்க?’ என்று கேட்காதீர்கள். பழங்கள் வாயிலாக வரும் ஃபுருக்டோஸ் இனிப்பும், பனங்கருப்பட்டி வழியாக வரும் இனிப்பும் குழந்தைகளுக்கு அவசியம்.
ளி, ஊட்டம் அளிக்கும் ஓர் உன்னத உணவு. கேப்பைக்களி, கம்பங்களி, காரக்களி, உளுந்தங்களி, பாசிப்பயறு களி முதலான இனிப்புக் களி வகைகள் நம் பாரம்பரிய உன்னத உணவுகள். அதுவும்போக, களி ஒரு சரிவிகித சம உணவும்கூட. உளுந்தங்களியில் இரும்பு முதலான நுண்கனிமச் சத்துகளுடன் புரதமும் நாரும் அதிகம். பெண் குழந்தைகளின் கருப்பை வலுப்பெறவும், வயதாகும்போது மூட்டுகளின் 'கார்டிலேஜ்’ எனும் தசைநார்கள் வலுப்பெறவும் உளுந்தங்களி உதவும். திருவாதிரையில் சிவன் கோயிலில் தரும் பாசிப்பயறு களியும், வீட்டுப் பெரியவர்களுக்குத் தரப்படும் வெந்தயக்களியும் அப்படி ஒரு மருத்துவ உணவுதான்.
ஆனால், உதடுகளில் படாமல் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு, டிஷ்யூ பேப்பரால் நாசூக்காக ஒற்றிக்கொள்ளும் நவநாகரிகக் குழந்தைகளை 'களியும் பணியாரமும்’ சாப்பிடச் சொன்னால், முகம் கோணுகிறது. 'ஐயே... அது கையெல்லாம் ஒட்டிக்கும்’ என்கிறார்கள். இதுகூட பரவாயில்லை... 'பிசுபிசுனு கைல ஒட்டினா என் பிள்ளை சாப்பிடாது. ரொம்ப ஹைஜீனிக்’ என்று தூபம் போடும் பெற்றோர்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும். இத்தனைக்கும் நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்த களி, பிசுபிசுவென ஒட்டாது.
உணவுப் பதார்த்தங்கள் பாத்திரத்தோடு ஒட்டாதிருக்க, பாத்திரங்களில் டெஃப்லான் கோட்டிங் முதல், உணவில் கொழுப்பு அமிலம் வரை பல நச்சுகள் சேர்க்கப்படுகின்றன என்பதைச் சொல்லித்தர, நம் அம்மாக்களில் பலருக்கு நேரம் இல்லை. விளைவு, 'களி’ சிறைச்சாலையில் தரும் தண்டனை உணவாகிவிட்டது. கையில் ஒட்டும் உணவை உதறும் இந்தப் பிஞ்சுகள்தாம், பின்னாளில் எதிலும் ஒட்டாத வாழ்வியலுக்குத் தயாராகிறார்கள். 'பேக்கிங் பவுடர் போடாத மஃபின்தான் 'பணியாரம்’. சாக்லெட்டிலும் டூட்டி ஃபுரூட்டியிலும் இல்லாத சத்து, பணியாரத்துடன் வரும் வெங்காயத் துண்டிலும் கொத்தமல்லி கீரையிலும் இருக்கிறது. அது நம்ம உடம்புக்கு ஹெல்த்தி ப்ளஸ் ஹைஜீனிக்’ என அந்தக் குழந்தைகளுக்கு நாம்தான் சொல்லித்தர வேண்டும்!
வளர்ச்சி குறைவுற்ற குழந்தைகள் இன்னும் இங்கே மிக அதிகமாக இருப்பதற்கும், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 50 குழந்தைகள் இறந்துபோவதற்கும் உணவைத் தாண்டி இன்னொரு விஷயம் உண்டு. பசியின் கட்டாயத்துக்காக, நகரங்களை நோக்கிப் பெருவாரியாக நகரும் கூட்டம் அதிகரித்துவரும் போக்கு, நம் தேசத்தின் அவலச் சின்னம். சாதீய சமூக அவலங்களாலும், சகமனிதரை நேசிக்காத நம் சுயநலத்தாலும், அப்படி நகர்ந்தவர் வீட்டுக் குழந்தைகளில் பெரும்பாலானவை அம்மாவின் அழுக்கு முந்தானைக்குள் பசியோடுதான் இன்றும் முனகிக்கொண்டிருக்கின்றன். சட்டீஸ்கரில் இருந்தும் பீகாரில் இருந்தும், ஊர், உறவு, மகிழ்வை எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கொத்துக்கொத்தாகத் தினமும் சென்னை சென்ட்ரலில் வேலையாளாக வந்து இறங்கும் இளைஞர் கூட்டத்தின் வலியும், 'விளாப்பாக்கத்தில் விவசாய வேலையில், சோளப்பயிர் வைத்திருந்தேன். முதலாளி அதை பிளாட் போட்டு வித்துட்டார். இப்போ நான் செக்யூரிட்டி. என் வீட்டம்மா நாலு வீட்ல பத்துப்பாத்திரம் தேய்க்கிறாங்க’ என்ற சொற்களின் பின்புல வேதனையையும் நாம் என்றுதான் புரிந்துகொள்ளப் போகிறோம்?

- VIkatan Article

No comments:

Post a Comment