Thursday, December 12, 2013

விளை நிலங்களில் எரிவாயுக் குழாய்...

கேரளாவில் இருந்து பெங்களூருக்கு, தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் வழியே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை, 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங் களில்... விவசாய நிலங்களில் குழாய் பதிப்பதற்கான குழிகளைத் தோண்டியது, மத்திய அரசின் 'கெயில்' நிறுவனம்!

இந்தத் திட்டம் விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பாதிப்பதாகக் கொதித்த ஏழு மாவட்ட விவசாயிகள், எதிர்க்குரல் கொடுத்து, தீவிர போராட்டங்களில் குதித்தனர். ஆரம்பத்தில், விவசாயிகளுக்கு எதிராக போலீஸை அனுப்பி லத்தியைச் சுழற்றிய தமிழக அரசு, ஒரு கட்டத்தில் திடீர் என்று விவசாயிகளுக்கு ஆதரவாக, தன்னை மாற்றிக் கொண்டது. 'விவசாயமும் விவசாயிகளும் தான் முக்கியம். அவர்களை பலிகொடுத்து வளர்ச்சிப் பணிகள் நடப்பதை இந்த அரசு ஒருபோதும் விரும்பாது' என்கிற ரீதியில் வீராவேசக் குரல் கொடுத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றப் படியேறிய இந்த விவகாரத்தில், குழாய் பதிக்கும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இறுதித் தீர்ப்பில், 'விவசாய நிலங்களில் குழாய் பதிக்கத் தடை இல்லை' என்று நீதிமன்றம் சொல்லிவிடவே... விவசாயிகள் மீண்டும் போர்க் கோலம் பூண்டுள்ளனர். தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்துள்ளது.

இதைப் பற்றி பேசிய விவசாயிகள் வாழ்வுரிமைப் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.என். கந்தசாமி, ''தமிழக அரசு தொடுத்துள்ள மேல்முறையீட்டில் எங்களையும் ஒரு மனுதாரராக இணைத்து, இந்த வழக்குக்கு வலுசேர்க்கப் போகிறோம். நீதிமன்றம் மூலம் வழக்கு வேலைகள் ஒருபுறம் இருக்க, பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து தமிழக அரசுடன் சேர்ந்து போராடவும் தயாராகி வருகிறோம்'' என்றார்.

விவசாயிகள் வாழ்வுரிமைப் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி (ம.தி.மு.க.), ''நீதிமன்ற உத்தரவுப்படி, விவசாயிகளை சென்னைக்கு வரவழைத்து, அவர்களின் கருத்தைக் கேட்டுப் பதிவு செய்தது தமிழக அரசு. மாநிலத்தை ஆளும் ஒரு அரசு, தன் மக்களுக்கு எதிராக நடக்கும் ஒரு விஷயத்தில், உறுதியான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. 'விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய்களை பதிக்க அனுமதிக்க முடியாது' என்றும் தமிழக முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால், மக்கள் மற்றும் மாநில அரசு இரண்டின் முடிவுகளுக்கு எதிராக, தற்போது உயர் நீதிமன்றத்திலிருந்து வந்திருக்கும் தீர்ப்பு, வேதனையைக் கூட்டுகிறது.

'தடை விதிக்க வேண்டும்' எனக் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது, தமிழக அரசு. இது விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் செயல். நாங்கள் எரிவாயுக் குழாய்கள் கொண்டு செல்லும் திட்டத்தைக் கண்மூடித்தனமாக எதிர்க்க வில்லை. 'விளைநிலங்களின் வழியே கொண்டு செல்லாமல், நெடுஞ்சாலை ஓரங்களில் குழாய்களைப் பதித்து கொண்டு செல்லுங்கள்’ என்றுதான் கேட்கிறோம். இப்படி சாலை வழியே கொண்டு செல்வதால், யாருக்கும் பாதிப்பு இருக்கப் போவதில்லை. அப்படியிருக்க, அதைச் செய்யாமல், விவசாய நிலங்களின் வழியேதான் கொண்டு செல்வோம் என்று எதற்காக அடம்பிடிக்க வேண்டும். இதை நீதிமன்றமும் கருத்தில் கொள்ளாதது வேதனை தருகிறது. அரபிக்கடல் ஓரமாகவோ அல்லது சாலை வழியாகவோ கொண்டு செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், அதையெல்லாம் பரிசீலிக்காமல், குழாய்களை வாங்கிவிட்டோம்... குழி தோண்டிவிட்டோம்... என்பதையே காரணங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கெயில் அதிகாரிகள்'' என்று சொன்னார்.

ஏன் இத்தனை அடம்? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 'கெயில்' நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, ''விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால், எதைப் பற்றியும் பேசஇயலாது'' என்று ஒதுங்கிக் கொண்டனர்.

'குழாய்களை வாங்கிவிட்டோம்... குழிகளைத் தோண்டிவிட்டோம்' என்று அடம்பிடிக்கும் அதிகார வர்க்கமே... நீங்கள் தோண்டியிருப்பது விவசாயத்துக்கும் விவசாயிகளுக்குமான குழி என்கிற உண்மையை ஏன் உணர மறுக்கிறீர்கள்!

No comments:

Post a Comment