Saturday, December 28, 2013

2013-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள் -விகடன் டீம்

மின்வெட்டு தொடர்பான கண்துடைப்பு நாடகங்கள் இந்த வருடமும் தொடர்ந்தன. தேங்காய் சட்னி அரைக்கக்கூட மின்சாரம் விநியோகிக்க முடியாமல் திணறியது மின்சார வாரியம். அனல், புனல் மின் நிலையங்கள் பல நேரங்களில் படுத்துவிட்டன. கூடுதல் மின்சாரம் கேட்ட தமிழக அரசுக்கு, 'பெப்பே’ காட்டியது மத்திய அரசு. சராசரி எட்டு மணி நேர மின்வெட்டு, மாநிலத்தில் வளர்ச்சி விகிதத்தை 4.6 சதவிகிதம் வரை குறைத்துவிட்டது. மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ, 'இது தற்காலிகத் தட்டுப்பாடு. கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின்தேவை காரணமாக இந்த மின்வெட்டு’ என்று கூசாமல் பொய் சொன்னார். குளிர்காலத்திலும் கோக்குமாக்காக மின்வெட்டு தொடர, 'காற்று வீசவில்லை’ என்று கதறினார்!
'தியேட்டரில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே, சந்தாதாரர்களின் டி.டி.ஹெச்-சில் படம் ஒளிபரப்பப்படும்!’ - 'விஸ்வரூபம்’ திரைப்பட விவகாரத்துக்கு கமல் திரி கிள்ள, திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, பணப் பஞ்சாயத்து என்று அதகளம் ஆரம்பம். இடையில் எதிர்பாராமல் புகுந்தது மதம். விசேஷத் திரையிடலில் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து உள்துறைச் செயலாளரிடம் மனு கொடுக்க, 'விஸ்வரூபம்’ வெளியீட்டுக்கு விழுந்தது தற்காலிகத் தடை. 'என் படைப்புச் சுதந்திரத்துக்கு பங்கம் வந்தால், நாட்டை விட்டே வெளியேறுவேன்!’ என்று அந்த வினோதமான சூழலை கமல் வெகு கவனமாகக் கையாண்டார். 'விஸ்வரூபம் வெளியாகும் 524 திரையரங்குகளில் பாதுகாப்புக்கு என நியமிக்க 56,440 போலீஸ் நம்மிடம் இல்லை’ என்று 'விஸ்வரூபம்’ தொடர்பான நீண்ட விளக்கத்தில் குறிப்பிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
தேசியக் கவனத்தை ஈர்த்த விவகாரம், ஏகப்பட்ட பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 'ஏழு காட்சிகள்’ நீக்கப்பட்டு வெளியானது. சர்ச்சை கொடுத்த ஓப்பனிங் ப்ளஸ் கமலின் ஆக்ஷன் அவதாரம் படத்துக்கு 'விஸ்வரூப’ வெற்றி கொடுத்தது!
'2007-ல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை ஏன் அரசிதழில் வெளியிடவில்லை?’ என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கண்டிக்க, உடனடியாக அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட, 'என் 30 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் இதைத்தான் மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்’ என்று பூரித்தார் ஜெயலலிதா. காவிரிப் பாசன விவசாயச் சங்கங்கள், ஜெயலலிதாவுக்கு 'பொன்னியின் செல்வி’ விருது வழங்கின. தீர்ப்பு, அரசிதழில் இடம்பிடித்ததில் தி.மு.க-வின் பங்கு குறித்து அறிக்கை வாசித்தார் கருணாநிதி!
'அழகிரிக்கு யார் ஆதர்சம்?’ என்பதில் தொடங்கியது 'பொட்டு’ சுரேஷ§க்கும், 'அட்டாக்’ பாண்டிக்குமான போட்டி. இந்த இருவரின் முட்டல், மோதல் அடிக்கடி தீப்பிடிக்க, திகில் அடித்தது மதுரை. கைமீறிய விபரீதம் காரணமாக, தன் வீட்டின் அருகிலேயே காரில் வந்த 'பொட்டு’ சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். 'பொட்டு’ சுரேஷைப் போட்டுத்தள்ளுவதற்காக பல மாதங்களுக்கு முன்னரே மதுரையைவிட்டு வெளியேறியதாகச் சொல்லப்படும் 'அட்டாக்’ பாண்டியை, இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறது தனிப்படை போலீஸ். இடையில் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டுவிட்டதாகக் கிளம்பியது பரபர வதந்தி!
கருணாநிதி, சுமார் 450 கோடிகளை வாரியிறைத்து ஆசை ஆசையாக இழைத்துக் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, சிறப்புப் பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டது ஜெயலலிதா அரசு. அதை எதிர்த்த வழக்கை, 'அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என்று நிராகரித்தது உயர் நீதிமன்றம். தி.மு.க-வின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரிக்க, பசுமைத் தீர்ப்பாயம் மருத்துவமனைக்கு பச்சைக் கொடி காட்ட உற்சாகமான ஜெயலலிதா, இந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றும், புனரமைக்கும் பணிகளுக்கென ஒட்டுமொத்தமாக 104 கோடிகளை ஒதுக்கினார்!
தி.மு.க-வில் தன் நட்சத்திர அந்தஸ்தை மெருகேற்றிக்கொண்டார் குஷ்பு. 'தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் தி.மு.க-வின் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்று குஷ்பு ஜஸ்ட் லைக் தட் சொல்ல, கொதித்துக் கிளம்பிய ஸ்டாலின் அணித் தொண்டர்கள், திருச்சி சென்ற குஷ்பு மீது செருப்பு வீச்சும், சென்னையில் அவர் வீட்டில் கல்வீச்சும் நடத்தினர். அப்செட் குஷ்பு, அமைதியாக இருந்தார். இதில் கருணாநிதியின் ஆதரவு குஷ்புவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட, நீறுபூத்த நெருப்பாக அடங்கியது போல இருக்கிறது விவகாரம்!
இது நிச்சயம் பகீர், திகீர் புள்ளிவிவரம்! 'கடந்த 10 ஆண்டுகளில், விவசாயத் தொழிலைக் கைவிட்டு நகரத்தை நோக்கி நகர்ந்துவிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை, சுமார் ஒன்பது லட்சம்’ என்றது தமிழக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. அன்று, ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கலாம். இன்று, டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ 5 ரூபாய். கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவு, ஆட்கள் பற்றாக்குறை... போன்ற பல காரணங்கள், விவசாயிகளை 'டவுன்’ பஸ் ஏறவைத்துவிட்டது! ஏர் உழைப்பாளர்களின் கோரிக்கைகள், 'பார்’ நடத்தும் அரசாங்கத்தின் செவிகளை எட்டுவதாக இல்லை!
ஆசிட் விற்பனை தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்த, வினோதினியின் உயிரைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று. தன் காதலை ஏற்றுக்கொள்ளாத வினோதினி மீது, 2012 நவம்பரில் ஆசிட் வீசினான் சுரேஷ்குமார். முகம் முழுக்க வெந்து, கண் பார்வையைப் பறிகொடுத்த வினோதினி, மூளை நரம்பு பாதிக்கப்பட்டு, நான்கு மாத சிகிச்சைக்குப் பின் பரிதாபமாக இறந்தார். சுரேஷ்குமாருக்கு, காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மகளின் மரணம் அளித்த நிம்மதியற்ற வாழ்க்கைச் சூழல் காரணமாக, வினோதினியின் தாய் சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்!
சென்னைப் பாட்டாளிகளின் பகல் உணவுக்குப் பந்தி வைக்க, ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாக உதயம் ஆனது 'அம்மா உணவகம்’. இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்... என மலிவு விலை உணவகங்களைத் தொடங்கியது சென்னை மாநகராட்சி. அந்த மலிவு விலையும், தரமும், சுவையும் பாராட்டுகளைக் குவிக்க, எலுமிச்சை / கறிவேப்பிலை சாதங்கள் என மெனு நீண்டதோடு, உணவகங்களின் எண்ணிக்கையும் 200 ஆக உயர்ந்தன. தொடர்ந்து 'அம்மா காய்கறி அங்காடி’, 'அம்மா குடிநீர்’ என மலிவு விலை பஜார்கள் தோன்றின!
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவ முகாமின் மணல் மூட்டைகளுக்கு மத்தியில் பிஸ்கட் சாப்பிடும் படத்தையும், பிறகு அவன் கொல்லப்பட்டுக்கிடக்கும் காட்சிகளை யும் வெளியிட்டது சானல் 4. அந்தப் படங்கள் தமிழ கத்தைக் கொதிகலனாக்கின. குறிப்பாக, தமிழகக் கல்லூரி மாணவர்கள், ஐ.நா.சபையில் தாக்கல்செய்யப்பட இருக்கும் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழகம் எங்கும் வீதிக்கு வந்து போராடினர். போராட்ட அனலைத் தாங்க முடியாமல், தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார்கள்!
2012 அக்டோபரில், சென்னையில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலில் இருந்து தப்பும்போது மரணமடைந்தார் மெரைன் இன்ஜினீயர் நிரஞ்சன். ஒரே மகனை இழந்து பரிதவித்து நின்ற நிரஞ்சனின் பெற்றோர் கோதண்டபாணி-பாரதி தம்பதியை, மகனின் படிப்புக்கு வாங்கிய கடன் சுமையும் அழுத்தியது. துயரம் தாளாமல் தங்களின் 28-வது திருமண நாளில் தற்கொலை செய்துகொண்டார்கள். பிரதீபா காவேரிக் கப்பல் நிர்வாகம் வழங்கிய இடைக்கால நஷ்டஈட்டுத் தொகையை நீதிமன்றம் சட்டபூர்வ வாரிசுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், பணி அலட்சியத்தால் நஷ்டஈடு உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்காததால், இரண்டு உயிர்கள் பறிபோயின!
துயரப் பெருங்கடலில் மிதக்கிறார்கள் தமிழகத் தில் வசிக்கும் 'இந்திய’ மீனவர்கள்! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது, வலை-படகுகள் பறிமுதல்... என அட்டூழியத்தின் உச்சத்துக்குச் சென்றன சிங்களக் கடற்படையின் வரம்புமீறல்கள். '1974-ல் கச்சத்தீவைத் தாரைவார்த்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் செல்லாது’ என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய, 'அந்த ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை கிடையாது’ என தன் பங்குக்கு அதிர்ச்சி அளித்தது மத்திய அரசு!
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம், இரண்டு முழு ஆண்டுகளைப் பூர்த்திசெய்தது. இடிந்தகரை போராட்டப் பந்தலில் உறுதியுடன் அமர்ந்திருந்த மக்களின் உறுதியைக் குலைக்க, மணல் ஆலை அதிபர்கள் மீனவர்களைப் பிளவுபடுத்தும் காரியங்களை மேற்கொள்ள, சமீபமாக இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து 8 பேர் பலியானார்கள். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக மாற்ற முயற்சிக்க, விரக்தியானார் சுப.உதயகுமார். மறுபக்கம் கூடங்குளம் அணு உலை இயங்கத் தொடங்கிவிட்டதாக, அரசாங்கம் கூறுகிறது!
தொகுதி வளர்ச்சிக்காக, அம்மாவிடம் ஆசி வாங்க... என்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் ஏழு பேர் அடுத்தடுத்து ஜெயலலிதாவிடம் சரண்டர் ஆனார்கள். 29 எம்.எல்.ஏ-க்களோடு எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்த விஜயகாந்த்துக்கு, இப்போது 21 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே. 'தே.மு.தி.க. வேட்பாளராகப் பெற்ற பதவியை ராஜினாமா செய்யுங்கள்’ என்று விஜயகாந்த் சொல்ல, 'தைரியம் இருந்தால் எங்களை நீக்குங்கள்’ என்று அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சொல்ல, வருட இறுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் வெடித்தது அதிர்வேட்டு!
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சட்டப் போராட்டம் 15 ஆண்டுகாலமாகத் தொடர்கிறது. மார்ச் மாதம், அந்த ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேற, உடனடியாக ஆலையை மூடச் சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டதோடு, ஆலையின் மின்சார இணைப்பையும் துண்டித்தது. ஆனால், பின்னர் உச்ச நீதிமன்றம், 'ஆலை இயங்கலாம்’ என்று இறுதித் தீர்ப்பு அளித்தது. அசுர பலமிக்க பன்னாட்டு ஆலையைக் கட்டுப்படுத்தும் சக்தி, மக்களின் போராட்டங்களுக்கோ, மாநில அரசுகளுக்கோகூட இல்லை என்பதை உணர்த்தியது ஸ்டெர்லைட்!
மீண்டும் சாதிக் குதிரையைத் தூண்டி அரசியல் சதுரங்கத்தில் வியூகம் வகுத்தார் டாக்டர் ராமதாஸ். மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பாக நடந்த சித்திரை முழு நாள் நிலவு மாநாட்டில், தலித் மக்களுக்கு எதிராக 'காடுவெட்டி’ குரு கக்கிய வசனங்கள் அச்சில் ஏற்ற முடியாதவை. ராமதாஸ், 'காடுவெட்டி’ குரு ஆகியோர் கைதாக, தொடர் கலவரங்களில் வட தமிழ்நாடே இரண்டு வாரங்கள் ஸ்தம்பிக்க, 1,027 பேர் மீது வழக்குகளைப் பதிந்தது காவல் துறை. பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் சட்டத்தின்படி, 100 கோடி ரூபாய் அளவுக்கு பா.ம.க-விடம் நஷ்டஈடு வசூலிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் தந்தியடித்தன!
தந்திச் சேவை, தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. 160 ஆண்டுகளாக கடைக்கோடி இந்தியனிடமும் தகவலைக் கொண்டுசேர்த்த தந்தி சேவைக்கு, சமீபமாக மக்களிடையே வரவேற்பு குறைந்தது. வருடத்துக்கு 75 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் தந்தி சேவைக்கு, 100 கோடி ரூபாய் செலவழித்து வந்தது பி.எஸ்.என்.எல். நிறுவனம். தந்திக்கு 'தந்தி’யடித்த ஜூலை 15-ம் தேதி அன்று, தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட் டோர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு 'இறுதித் தந்தி’ அனுப்பி வரலாற்றுப் பெருமை ஈட்டும் காகிதத்தைக் கைப்பற்றிக்கொண்டார்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் அந்தஸ்த்தில் இருக்கும் குருநாத் மெய்யப்பன் மீதே சூதாட்டப் புகார் எழுந்தது, தேசிய சர்ச்சையானது! 'அந்த ஐ.பி.எல். அணி யின் உரிமையாளர் என்.சீனிவாசன், எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் தலைவராக முடியும்?’ என்ற சர்ச்சையை நீதிமன்றம் சென்று முறியடித்தார் சீனிவாசன். 'கிரிக்கெட், வெறும் விளையாட்டு மட்டுமல்ல; கொள்ளைப் பணம் கொழிக்கும் வியாபாரம்’ என்று உணர்த்தியது இந்த விவகாரம்!
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரை உருவாக்கிய அண்ணாமலை அரசர், 1928-ம் ஆண்டு கல்வி நிலையங்களையும், 20 லட்ச ரூபா யையும் ஊராட்சி அமைப்பிடம் கொடுத்துவிட்டு, தன் வாரிசுகளை இணைவேந்தர்களாக நியமிக்கும் அதிகாரத்தையும் விட்டுச் சென்றார். ஆனால், அவருடைய வாரிசுகள் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு எனக் கடும் நடவடிக்கைகள் எடுக்க, கடந்த ஓர் ஆண்டாக ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சிறப்புச் சட்டம் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கியது தமிழக அரசு!
நள்ளிரவில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று, எழும்பூர் சாலையோரத்தில் தூங்கிய 13 வயது முனிராஜைக் கொன்று, 10 வயது சிறுமி சுபாவைப் படுகாயப்படுத்தினார் ஷாஜி. மதுபான நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் புருஷோத்தமனின் மகனான ஷாஜி, 20 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு, ரகசியமாக வந்து ஜாமீன் பெற்றுவிடலாம் என்று பாங்காக்கில் இருந்து கொச்சிக்கு வர, அங்கேயே அவரைக் கைது செய்தது போலீஸ். அதிகாரமும் பணமும் இருந்தால் ஆட்டம் போடலாம் என்ற எண்ணத்துக்கு செக் வைத்தது சென்னை போலீஸ்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழகம் உள்பட தென்னிந்தியாவின் பெருமளவு மின்தேவையைப் பூர்த்திசெய்கிறது. இதன் 6.44 சதவிகிதப் பங்குகள் ஏற்கெனவே விற்கப்பட்ட நிலையில் மேலும் இதன் 5 சதவிகிதப் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று 460 கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசுக்கு, செபி பரிந்துரைத்தது. தொழிலாளர்கள் அதை எதிர்க்க, முதல்வர் ஜெயலலிதா அந்தப் பங்குகளை தமிழகத் தொழில் துறை நிறுவனங் களான சிப்காட், டிட்கோ வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். தமிழக அரசியல் கட்சிகளை அபூர்வமாக ஓர் அணியில் திரளவைத்த நிகழ்வு!
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாகச் செயல்பட்ட கிரானைட் குவாரிகளை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா பூட்டி சீல் வைத்தார். பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து அன்சுல் மிஸ்ரா திடீரென மாற்றப்பட்டார். கிரானைட் மோசடி தொடர்பாக பதிவான 74 வழக்குகளில், 44, பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது பாய்ந்தன. தங்கள் நிறுவனத்தைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பி.ஆர்.பி., உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது!
திவ்யா, தன் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளவரசனைத் திருமணம் செய்ததை ஆதிக்கச் சாதிக்கும்பல் எதிர்த்தது. 'நாடகக் காதல்’ என்று டாக்டர் ராமதாஸ் கொச்சைப்படுத்திய அந்தக் காதலை, தன் உயிரை மாய்த்துக்கொண்டு வரலாற்றில் இடம்பெறச் செய்தார் தர்மபுரி இளைஞர் இளவரசன். திவ்யாவின் அப்பா நாகராஜ் தற்கொலை செய்துகொள்ள... திவ்யா, 'என் அம்மா எனக்கு முக்கியம்’ என்று இளவரசனைப் பிரிந்து அம்மா வீடு சென்றார். மனம் உடைந்த இளவரசன், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இளவரசன் மரணம் குறித்து நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணைக் கமிஷனின் விசாரணை தொடர்கிறது!
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரிலும் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும் மற்றும் சில இந்து அமைப்புகளின் பிரமுகர்களும் கொடூரமாகக் கொல்லப்பட, 'அரசும் போலீஸாரும், இந்து அமைப்பினரின் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக’ பா.ஜ.க. குற்றம்சாட்டியது. ஆடிட்டர் ரமேஷைக் கொலைசெய்தது 'போலீஸ்’ பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுக்கர் சித்திக் ஆகிய தீவிரவாதிகள்தான் என்று போலீஸ் அறிவித்தது. அந்த நால்வரில் அபுபக்கர் தவிர மற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்!
'டைம் டு லீட்’ தலைவா 'டைம் டு ஜெர்க்’ ஆனார்! 'தலைவா’ படம் வெளியாகும் தியேட்டர்களில் குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டலால், திரையரங்க உரிமையாளர்கள் மிரள, 'தலைவா’ தமிழகத்தில் வெளியாகவில்லை. விஜய், கொடநாட்டுக்குச் சென்று ஜெயலலிதாவைச் சந்திக்கக் காத்திருந்தும் பாராமுகம்தான். இதற்கிடையில் படத்தின் திருட்டு டி.வி.டி. அமோகமாக விற்க, படத்தயாரிப்பாளர் கதறி அழ, ஒருவழியாக, படத் தலைப்பில் 'Time to lead’ என்ற வாசகம் நீக்கப்பட்டு, வெளியானது. கடைசி வரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆட்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் பிளாக் காமெடி!
'என் அப்பா, என் காதலைப் பிரிக்க முயற்சி செய்கிறார்’ என்று இயக்குநர் சேரனின் இளைய மகள் தாமினி, சென்னையைச் சேர்ந்த சந்துருவோடு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்ச மடைந்தார். பரபர பஞ்சாயத்துகளைத் தொடர்ந்து, சந்துருவிடம் இருந்து 15 நாட்கள் பிரித்துத் தங்க வைக்கப்பட்ட தாமினி, இறுதியில் பெற்றோருடனேயே செல்ல முடிவெடுத்தார். 'நான் என் மகளின் காதலை எதிர்க்கவில்லை. காதலன் நல்லவன் இல்லை என்பதால், அவனை எதிர்த்தேன்!’ என்று தழுதழுத்த சேரன், ஊடகங்கள் முன் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது, இந்தக் காதல் அத்தியாயத்தின் க்ளைமேக்ஸ்!
சென்னையில் ஆட்டோக்களுக்கு, குறைந்த பட்சக் கட்டணமாக முதல் 1.8 கி.மீட்டருக்கு 25 ரூபாய் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு கி.மீட்டருக்கும் 12 ரூபாய் என்றும் அறிவித்து நடைமுறைப்படுத்தியது தமிழக அரசு. மீட்டர் கட்டணம் வசூலிக்காமல் முரண்டுபிடிக்கும் ஓட்டுநர்கள் குறித்து புகார் தெரிவிக்க, பிரத்யேக எண்களை வழங்கினார்கள். ஆரம்ப தட்டுத்தடுமாற்றங்களுக்குப் பிறகு, ஒருவழியாக சென்னையில் அமலுக்கு வந்தது மீட்டர் கட்டணம். ஆனாலும், வலியுறுத்தி மீட்டரை இயக்கச் சொல்லும் பொறுப்பு ஒவ்வொரு வாடிக்கையாளரின் மனஉறுதியில்தான் இன்னமும் தொக்கி நிற்கிறது!
குடிநீருடன் கழிவுநீர் கலப்பது சென்னையில் சர்வசாதாரணம். ஆனால், இந்த வருடம் கச்சா எண்ணெய் கலந்தது திகீர் களேபரம். வட சென்னை தண்டையார்பேட்டை பகுதி நிலத்தடி நீரில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கலந்தது. 'பாதிக்கப்பட்ட வீடுகளில் நிலத்தடி நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்ற வேண்டும். அதுவரை பாதுகாக்கப்பட்ட குடிநீரை அவர்களுக்கு எண்ணெய் நிறுவனமே வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். ஆனாலும் தரமான குடிநீர் கிடைக்காமல் அவதியில் இருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்!
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட சரத்குமார் தலைமையிலான அணி ஓர் ஒப்பந்தம் போட்டுவிட, விஷால் தலைமையிலான இளம் நடிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதல் பின்ன ணியுடன் அரங்கேறிய சங்கத்தின் 60-வது பொதுக் குழுவில், நீலநிற ஜீன்ஸ், வெள்ளைச் சட்டை அணிந்துவந்த விஷால், ஆர்யா, ஜீவா, 'ஜெயம்’ ரவி... உள்ளிட்ட அதிருப்தி கோஷ்டியினர், காரசாரமாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 'சங்கத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும்’ என்று பூசி மெழுகினார் சரத்குமார்!
கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கொலைவாளினை எடுத்த மூன்று கல்லூரி மாணவர்களால் அதிர்ந்தது தமிழகம். தூத்துக்குடி மாவட்டம் இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமாரை, அதே கல்லூரி மாணவர்கள் டேனிஸ், பிச்சைக்கண்ணு, பிரபாகரன் ஆகியோர் துள்ளத்துடிக்க வெட்டிக் கொன்றனர். சக மாணவிகளைக் கிண்டலடித்த அந்த மூவரையும் முதல்வர் சுரேஷ்குமார் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். அந்தக் கோபமே, கொலை செய்யத் தூண்டியது என்கிறது காவல் துறைக் குறிப்பு!
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் கலந்துகொண்ட 6.6 லட்சம் பேரில் 27,092 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 'தேர்வு வாரியத்தின் அணுகுமுறை எதேச்சதிகாரமாக இருக்கிறது. கடந்த ஜூலையில் நடந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு வினாத்தாளில் கணியன் பூங்குன்றனாரை 'கனியன்பூதுகுன்றனார்’ என்றும், இளங்கோவடிகளை 'இளதுகோவடிகள்’ என்றும் குறிப்பிட்டது உள்ளிட்ட 47 அச்சுப்பிழைகள். ஆகவே, அந்தத் தேர்வு முடிவை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, 'இதுபோன்ற எழுத்துப்பிழைகளுக்கு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்’ எனக் கடுமையாகக் கண்டித்தார்!
1913-ல் 'ராஜா ஹரிச்சந்திரா’வை, தாதா சாஹேப் பால்கே வெளியிட்டதில் தொடங்கும் இந்திய சினிமாவின் வரலாறுக்கு இது 100-வது ஆண்டு. 'சினிமா-100’ கொண்டாட்டத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து அரங்கேற்றியது தமிழக அரசு. ஆனால், முன்னாள் முதல்வரும், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையுமான கருணாநிதியின் படைப்புகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டது முதல் ரஜினி, கமலுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது வரை ஏகப்பட்டக் குளறுபடிகள். மக்களின் வரிப்பணமான 10 கோடி செலவில் முதல்வரின் புகழ்பாடும் நிகழ்ச்சியாகவே முடிந்தது 'சினிமா-100’ விழா!
சென்னை திருவள்ளூர் டி.டி.நாயுடு மருத்துவக் கல்லூரி நடத்திவரும், 'அதிரடி-அடிதடிக் கல்வித் தந்தை’ டி.டி.நாயுடு. முதலாமாண்டு படிப்புக்கு மட்டும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியைப் பெற்றுவிட்டு, அடுத்தடுத்த வருட வகுப்புகளை டி.டி.நாயுடு நடத்த, 'எங்கள் எதிர்காலத்துக்குப் பதில் சொல்லுங்கள்!’ என்று கொந்தளித்த மாணவர்கள் மிரட்டப்பட்டார்கள். மற்ற கல்லூரி மாணவர்களுடன் இணைந்து டி.டி. கல்லூரி மாணவர்கள் கோட்டையை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல்... என்று போராடத் தொடங்க, மூன்றாமாண்டு மாணவர்கள் மட்டும் தமிழகத்தின் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் சேர்க்கப்பட, வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார் டி.டி.நாயுடு!
தென்தமிழகக் கடற்கரையோர செந்நிற மணலில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், 'சட்டவிரோதமாகச் செயல்பட்டு, 96,120 கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளத்தைக் கொள்ளையடித்திருக்கிறது’ என்று புகார் கிளம்ப, மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார், வைகுண்டராஜனின் நிறுவனங்களைச் சோதனையிட உத்தரவிட்டார். ஆனால், சோதனை நடத்தப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஆஷிஸ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்! வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சோதனைக்குப் பிறகு மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது!
'அரசு வேலைவாய்ப்புகளில் அதிக இடஒதுக்கீடு’ உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைளை வலியுறுத்தி விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சென்னையில் போராடினார்கள். கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து திடீர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டவர்களை மொத்தமாகப் பிடித்துச் சென்று புறநகர்ப் பகுதிகளிலும் சுடுகாடுகளிலும் இறக்கிவிட்டு வந்தது போலீஸ். திசை புரியாமல் பசியில் சுருண்டு விழுந்தவர்கள் முன்னிலும் தீவிரமாகப் போராடினார்கள். காவல் துறையின் அராஜகத்தை உயர் நீதிமன்றம், 'மனித உரிமை மீறல்’ எனக் கண்டிக்க, அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு நன்மை நடந்திருக்கிறது!
'அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று ஒழித்தது இலங்கை. அங்கு நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டால் அதற்கான விளைவை மத்திய அரசு சந்திக்க வேண்டிவரும்!’ என்று கருணாநிதி எச்சரித்தார். 'இந்தியாவில் இருந்து யாருமே கலந்துகொள்ளக் கூடாது’ என்று தமிழகச் சட்ட சபையும் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவில் இருந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள, 'அரசியல் நெருக்கடியால் மன்மோகன் சிங் வரவில்லை!’ என்பது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் கிண்டல்!
மதுரையில் அத்வானியின் பயண வழியில் பைப் வெடிகுண்டு வெடிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 'போலீஸ்’ பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், அபுபக்கர் சித்திக் ஆகியோர் இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் கொலைகளில் சேர்க்கப்பட்டார்கள். முதலில் 'போலீஸ்’ பக்ருதீன் பிடிபட, ஆந்திராவின் புத்தூரில் பதுங்கியிருந்த மற்ற தீவிரவாதிகளைப்  பிடிக்கச் சென்றபோது இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தீவிரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பதிலடியாகத் தாக்கிய போலீஸார், அவர்களைக் கைது செய்ததோடு 17 கிலோ வெடி மருந்துகளையும் கைப்பற்றினர்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்து முறை பட்டம் வென்ற 'சென்னை கிங்’ விஸ்வநாதன் ஆனந்துக்கு சென்னையிலேயே செக் விழுந்தது. நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் நார்வே நாட்டின் கார்ல்சன் மேக்னஸிடம் 12 சுற்றுகள் கொண்ட போட்டித் தொடரில் 10-வது சுற்றிலேயே தோல்வியடைந்தார் ஆனந்த். 'நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’  என்று கூறினார் விஸ்வநாதன் ஆனந்த்!
தமிழக சட்டமன்றத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராகத் தீர்மானம்இயற்றிக்கொண்டே, ஈழத் தமிழர்களின் தியாகங்களைப் போற்ற தஞ்சையில் நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்தது தமிழக அரசு. முற்றத்துக்கு முன் இருக்கும் பூங்காவும் சுற்றுச்சுவரும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. இடிக்கும் பணிகளைத் தடுக்க முயன்ற பழ.நெடுமாறன் சிறையில் அடைக்கப் பட்டார். வைகோ, சீமான் ஆகியோர் ஆதரவாளர் களுடன் கூடி கோஷமிட்டார்கள். ஜாமீனில் வெளியான நெடுமாறன், 'சட்டரீதியாக இந்தப் பிரச்னையைச் சந்திப்போம்’ என்றார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றிய எஸ்.பி., தியாகராஜன்,  ''விசாரணையில் பேரறிவாளன், 'சிவராஜனுக்கு நான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக என்பது எனக்குத் தெரியாது’ என்றுதான் சொன்னார். ஆனால், 'சிவராஜனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தேன்’ என்பதை மட்டுமே பேரறிவாளனின் வாக்குமூலமாக நான் பதிவு செய்தேன்!'' என்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உரைத்தார். இளமையை சிறையில் தொலைத்த பேரறிவாளனின் வாழ்க்கையில் சின்ன நம்பிக்கைக் கீற்று!
சிங்கம்-II படத்தைப் போல ஒரு ரியல் திகில் தூத்துக்குடிக் கடலோரத்தில் அரங்கேறியது. அமெரிக்கத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்த ஆயுதக் கப்பல் சீமன் கார்டு ஒகியா, தூத்துக்குடி அருகே இந்தியக் கடல் எல்லையில் சந்தேகத்துக்கு இடமான நிலையில் உலவிக் கொண்டிருந்தது. தமிழக போலீஸார் கப்பலைக் கைப்பற்றி, அதில் பயணித்த 35 பேரைக் கைதுசெய்தனர். கப்பலில் ஆபத்தான ஆயுதங்களும் 5,680 தோட்டாக்களும் இருந்தன. கைதுசெய்யப்பட்டவர்களிடம் முறையான ஆவணங்களும் ஆயுதங்களுக்கு முறையான அனுமதியும் இல்லாததால் கப்பல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது!
சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், சிலையை அகற்றக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. போக்குவரத்து போலீஸாரும் அதை ஆமோதிக்க, 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை’யினர் '2006-ம் வருடம் இதே சிலையால் இடையூறு இல்லை என தமிழக அரசு கூறியது. இப்போது ஆட்சி மாறியதால் அரசின் கொள்கையை மாற்றிவிட முடியாது’ என்று மனுத் தாக்கல் செய்தார்கள். விசாரணை முடிவை எதிர்நோக்கி இருக்கிறது சிவாஜி சிலை!  
இந்து மடங்கள் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையானார்கள். ''முதலில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்கள் பிறழ்சாட்சியாகிவிட்டனர். சாட்சிகளும் பல்டி அடித்துவிட்டார்கள். எனவே, அனைவரையும் விடுதலை செய்கிறேன்'' என்றார் நீதிபதி முருகன். 'நீதி வென்றது, தர்மம் வென்றது’ என்று ஜெயேந்திரர் பக்தர்கள் குதூகலப்பட, கொல்லப்பட்ட சங்கர்ராமனின் மனைவி, மகனின் இழப்புக்கும் கண்ணீருக்கும் அர்த்தமே இல்லாமல் போனது காலக் கொடுமை!
மரணம் அடைந்தார் ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாள். இடைத்தேர்தலில் அவரது மனைவி சரோஜா அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட, தி.மு.க. தரப்பில் மாறன் போட்டியிட்டார். தமிழக அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்காடு தொகுதியில் முகாமிட, இரு தரப்பும் சளைக்காமல் செலவழித்தன. 'தேர்தல் பிரசாரத்தின்போது புதிய திட்டங்களை அறிவிப்பதில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கவன மாக இருக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திடம் குட்டு வாங்க... பரபர களேபரங்களுக்கு இடையில் 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா வென்றார்!  
தே.மு.தி.க. எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து வருட இறுதியில் தன் பெட்டியைக் கழற்றிக்கொண்டு விலகினார் பண்ருட்டி ராமச்சந்திரன். 'கட்சித் தலைவர் விஜயகாந்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தே.மு.தி.க-வுக்கான செல்வாக்கைக் குறைக்கிறது!’ என்று சொல்லி ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் தே.மு.தி.க-வின் அவைத் தலைவர் பொறுப்புகளில் இருந்து விலகினார் பண்ருட்டி ராமச்சந்திரன். கட்சியில் அவைத் தலைவர் பொறுப்பையே நீக்கினார் விஜயகாந்த்!
தமிழக சிறைச்சாலைகளில் பல மாற்றங்கள் அரங்கேறின. சேலம், கோவை சிங்காநல்லூர், சிவகங்கை போன்ற ஊர்களில் அமைந்திருக்கும் திறந்தவெளிச் சிறைகளில் கைதிகளுக்கு சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சென்னை புழல் சிறையில் கைதிகள் தயாரித்த ஆயத்த ஆடைகள், சோப், மெழுகுவத்தி, கொசுவலை ஆகியவற்றை விற்க அங்காடியும் தொடங்கப்பட்டது. சிறைவாசிகள் மாதத்துக்கு மூன்று முறை தன் குடும்பத்தினருடன் தொலை பேசி மூலம் பேசிக்கொள்ள, சிறைக்குள் தொலைபேசி வசதி அளிக்கப்பட உள்ளது!
தமிழ்நாட்டின் பெரிய கோயில்கள் அனைத்தும், இந்து சமய அறநிலையத் துறைக்கே சொந்தம். ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டும் 'எங்களுக்கே சொந்தம்’ என்கிறார்கள் தில்லை தீட்சிதர்கள். ஆனால், 'கோயில் அரசுக்கே சொந்தம்’ என, நீதிமன்றம் இருமுறை தீர்ப்பு அளித்துள்ளது. எனினும், தீட்சிதர்கள் தொடர்ந்து மேல் முறையீடு செய்ததில், வழக்கு இப்போது சுப்ரீம் கோர்ட்டில். இறுதி விசாரணையில் தமிழக அரசு கண்துடைப்பாக வழக்கு நடத்தியதைக் கண்டித்து, மனித உரிமை பாதுகாப்பு மையம், சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தினர். வழக்கு, விசாரணை முடிந்து தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது!
தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய மூன்று கட்சிகள் டிசம்பரில் நடத்திய செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை முறையே கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் வசம் அளித்தது. 'பிரதமராக என்னை முன்னிறுத்துவது கட்சியினரின் உணர்வு. அதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கு இல்லை’ என்றார். ஆனால், பெங்களூரில் நடைபெற்றுவரும் அவரின் சொத்துக்குவிப்பு வழக்கு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியிருப்பது ஜெ.வின் பிரதமர் கனவுக்குப் பெரும் சவாலாக அமையலாம்!
தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோரை இணைக்க பெரும் முயற்சி எடுத்துவருகிறார் தமிழருவி மணியன். விஜயகாந்த் மட்டும் மழுப்பிக்கொண்டிருக்க, வைகோவும் அன்புமணியும் டெல்லிக்குச் சென்று ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்கள். 'நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அவராகத்தான் இங்குமங்கும் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்று தமிழக பா.ஜ.க. தரப்பு தமிழருவி மணியனை உதாசினப்படுத்தினாலும், சளைக்கவில்லை இந்த 'காந்தி’ தொண்டர்!
நாடாளுமன்றக் கூட்டணிக்கு திராவிடக் கட்சிகளின் துணை கிடைக்காத விரக்தியில், புதிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை சத்தியமூர்த்தி பவனில் கூட்டினார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஓர் ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்பது மாமாங்க அதிசயம். ஆனால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, 'ஏன் மத்திய அமைச்சர்கள், முன்னாள் தலைவர்களைக் கூப்பிடலை?’ என்று வெகுண்டெழுந்து தங்கபாலு கோஷ்டி வெளிநடப்பு செய்ய, 'மேலிடப் பார்வையாளர்கள் சொல்றதைத்தானே செய்றேன்’ என்று கையைப் பிசைந்தார் ஞானதேசிகன்!

No comments:

Post a Comment