Saturday, December 28, 2013

2013 டாப் 10 மனிதர்கள் -விகடன் டீம்

நீதித் தமிழ்!
ழக்கறிஞராக 20 ஆண்டுகள், சீனியர் கவுன்சிலராக 10 ஆண்டுகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏழு ஆண்டுகள் பொறுப்பு வகித்த சந்துரு, 2013 மார்ச்சில் ஓய்வுபெற்றார்.
ஏழு ஆண்டுகளில் 96 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு அளித்தது, அர்த்தமுள்ள ஒரு சாதனை. உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடித்துத் தள்ள உத்தரவிட்டது, கோயில்களில் பெண்கள் பூசாரிகளாகப் பணியாற்றலாம் என்று தீர்ப்பளித்தது, 'பெரியார் அனைவருக்கும் பொதுவானவர்’ என்று அவரின் படைப்புகளை பொதுவுடைமை ஆக்கியது என, தன் பணிக்காலம் முழுக்க நீதியை நிலைநாட்டினார் சந்துரு.
கிட்னி பழுதான டாஸ்மாக் ஊழியர் தொடுத்த வழக்கில், 'மக்களின் ஈரலையும் சிறுநீரகங்களையும் மறைமுகமாகப் பாழ்படுத்தும் டாஸ்மாக் நிறுவனம், மது விற்பனை மூலம் பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதிக்கிறது. ஆனால், அதன் ஊழியரின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்ள மறுப்பது தொழிலாளர் நல சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி, அந்த ஊழியரின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.
ஒரு நீதிபதியாகத் தன் சொந்த வாழ்விலும் தூய்மையைப் பேணினார் சந்துரு. நீதிபதியாகப் பொறுப்பேற்ற மேடையிலேயே தன் சொத்துக் கணக்கை வெளியிட்டு, இந்திய நீதித் துறைக்கு முன்மாதிரி ஆனார். நீதிபதிக்கு முன்பாக வெள்ளைச்   ச¦ருடை ஊழியர்கள், செங்கோல் ஏந்தி 'உஷ்’ என்று சத்தம் எழுப்பிக்கொண¢டு செல்லும் நடைமுறையை நிராகரித்தார். தன் நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதியை 'மை லார்ட்...’ என்று அழைக்கத் தேவை இல்லை என்று உத்தரவிட்டார். ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கான பிரிவு உபசார விழாவைக்கூட மறுத்து, 'இத்தகைய சடங்குகள் வீண் செலவு’ என்று தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி விடைபெற்றார். வழக்காடிய கனல் காலங்கள், வழங்கிய கனல் தீர்ப்புகளைப் போலவே, ஓய்வுக்குப் பிறகான கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் அருமைத் தமிழன்... நம் பெருமைத் தமிழன்!
 'விண்’ணர்!
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் 'மங்கள்யான்’ திட்டத்தின் தூண், சுப்பையா அருணன்! அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ்... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய வியூகம் வகுத்த வியத்தகு அறிவியல் தமிழன்.
'மங்கள்யான்’ திட்ட இயக்குநரான இவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் கோதைச்சேரி சொந்த ஊர். 'சந்திராயனில்’ திட்டத் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மங்கள்யான் திட்டத்தை முழுமையாக உள்வாங்கி, இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுநர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு... மொத்த திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியவர் அருணன். மிகுந்த சிக்கலான, பல நாடுகளில் பல்வேறு கட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த 'மார்ஸ் மிஷன்’ திட்டத்தை மிகக் குறைந்த செலவில் வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் அருணன், இந்தியர்களின் அறிவியல் தீரத்தை பூமி தாண்டி மேலே, உயரே, உச்சியிலே பறக்கச் செய்கிறார்!
அற்புதம் அம்மா!
வியர்த்துக் களைத்த உருவம், காலில் ரப்பர் செருப்பு, தோளில் ஒரு துணிப்பை... ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் அடையாளம் இவைதான்.
22 ஆண்டுகளாக ஒற்றை மனுஷியாக தன் மகனின் உயிரைக் காப்பாற்ற உண்ணாது, உறங்காது ஊரெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கிறார். பேரறிவாளனின் 'தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்’ நூலை ஆங்கிலம், இந்தி, மலையாள மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு தங்கள் தரப்பு அரசியல் நியாயத்தை உலகம் அறியச் செய்தார்.
இந்தியா முழுவதிலும் உள்ள 14 தூக்குக் கைதிகளின் மேல் முறையீட்டு மனுக்கள் மொத்தமாக விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், தன் மகனை நிரபராதி என்று நிரூபிக்க நம்பிக்கைக்குரிய காய் நகர்த்தல்களைச் செய்திருக்கிறார் அற்புதம் அம்மாள். அதில் விழுந்த கடைசிக் கல்தான் சி.பி.ஐ. முன்னாள் எஸ்.பி., தியாகராஜனின் வாக்குமூலம். ஒரு போலீஸ் அதிகாரியின் மனசாட்சியில் உறைந்திருந்த குற்ற உணர்ச்சியை, மெதுமெதுவாகக் கரைத்து வெளியே கொண்டுவந்தது அற்புதம் அம்மாளின் இடைவிடாத போராட்டம். இவரது உழைப்பின் பயனாக, மரண தண்டனை ஒழிப்புப் பிரசாரத்தில் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது!
குரு தெய்வம்!  
ஓர் ஆசிரியர் நினைத்தால் பள்ளிக்கூடத்தை மட்டுமா, அங்கு பயிலும் மாணவர்களை மட்டுமா... ஒரு கிராமத்தையே  மாற்றிக் காட்டலாம் என நிரூபித்திருக்கிறார் கருப்பையா. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையா, 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் சுகாதார வசதிகள் இல்லாமல், படிப்பறிவு பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருந்த கிராமத்தைத் தலைகீழாக மாற்றியிருக்கிறார். ஊரில் கூட்டம் நடத்தி இளைஞர்களை அணிசேர்த்தவர், அதிகாலையில் டார்ச் லைட்டுடன் சத்தம் எழுப்பிக்கொண்டே வலம்வந்து திறந்தவெளியை மக்கள் கழிப்பறையாகப் பயன்படுத்துவதைக் குறைத்தார்.
மானியம் பெற்று கிராமத்தில் கழிப்பறைகள் கட்டியவர், 'சுகாதாரமான கிராமம்’ என்று அந்தக் கிராமம் பரிசு பெறச் செய்தார். பள்ளி மாணவர்களுக்குத் தலைமைப் பண்புகளைக் கற்றுத்தந்தார். பள்ளியை கணினிமயப்படுத்தினார். இப்போது இந்தப் பள்ளியின் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வலைப்பதிவு எழுதுகின்றனர். பின்தங்கிய நிலையில் மண்ணாக மட்கிக்கிடந்த ஒரு பள்ளியை, குன்றிலிட்ட விளக்காக ஜொலிக்கவைத்த கருப்பையாவுக்கு, மேளதாளம் முழங்க 100 தட்டுகளில் சீர்வரிசை வைத்து, 'கல்விச்சீர்’ கொடுத்து நெகிழ்ச்சி நன்றி செலுத்தினர் நெடுவாசல் வடக்கு ஊர் மக்கள்!
தோள் கொடுக்கும் தோழி!
தேவகோட்டை அருகேயுள்ள 'ஓரிக்கோட்டை’ என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் வசிக்கும் ஏழைக் கூலித் தொழிலாளி சந்தனமேரி. சாதி ஆதிக்கத்தின் சகல கூறுகளாலும் ஒடுக்கப்பட்ட சந்தனமேரியின் மனதினுள் கனன்ற நெருப்புக் கனல், அவரை கம்யூனிஸ்ட் ஆக்கியது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கம் ஒன்றில் இணைந்தார்.
தேவகோட்டை, காளையார்கோயில், ஆவணம் கைகாட்டி பகுதிகளில் இவரது ஒருங்கிணைப்பில் நடந்த மக்கள் போராட்டங்களுக்கு கணக்கு இல்லை. தன் சொந்த ஊரான ஓரிக்கோட்டையில் உள்ள தலித்கள், 'சாவுக்குக் கேதம் சொல்வது, பறை அடிப்பது, செத்த மாடு தூக்குவது... போன்ற அடிமை வேலைகளை இனி செய்ய மாட்டார்கள்’ என அறிவித்து, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 'உழைக்கும் பெண்கள் இயக்கம்’ அமைத்து அதன் மூலம் சுற்றிச் சுழலும் சந்தனமேரி, எந்த அதிகாரத்துக்கும் அரசுக்கும் அஞ்சாத மேரி!
இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் வாலிபர்களே!  
விறுவிறு வளர்ச்சியில் தமிழ்த் திரையின் தவிர்க்க முடியாத நாயகர்களாக உயர்ந்திருக்கிறார்கள் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்!
'குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்ற சாதாரண வசனம், விஜய் சேதுபதியிடம் இருந்து வரும்போது பன்ச் டயலாக் ஆகிவிடுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத, சினிமாவுக்கே உரிய பில்டப் ஏதும் இல்லாத விஜய் சேதுபதி, இந்த ஆண்டு தொட்டது எல்லாம் ஹிட். 'நாளைய இயக்குநர்கள்’ அத்தனை பேரின் விருப்ப நாயகனாக இருக்கும் இந்த 'சுமார் மூஞ்சி குமார்’, சின்சியர் சினிமாக்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதால், சினிமாவே ஹேப்பி அண்ணாச்சி!
குபீர் ஹீரோவாகக் கிளம்பி தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் கலெக்ஷனில் கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்கள் சிவாவின் கால்ஷீட்டுக்கு வரிசை கட்டுகின்றனர். ஃபேமிலி ஆடியன்ஸ், டீனேஜ் பட்டாளம், 'சி’ சென்டர்... என அத்தனை பேரையும் பாக்கெட் செய்கிறது சிவகார்த்திகேயனின் மெஸ்மரிசம். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து முன்னணி இடம் பிடித்திருக்கும் இவரது ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒளிந்திருக்கிறது கடும் உழைப்பு!
சுயமரியாதைமிக்க பக்தர்!
தில்லை சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமைக்காகக் களம் கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி. திருஞானசம்பந்தர் உள்ளிட்ட நால்வர் பாடிய தேவாரத்தை, உலக சைவர்களின் ஒரே கோயிலான சிதம்பரம் கோயிலில் பாடும் உரிமையை நீதிமன்ற உத்தரவு மூலம் நிலைநிறுத்தினார். ஆனால், இப்போது முதலுக்கே மோசம் வந்திருக்கிறது. சிதம்பரம் கோயிலின் உரிமை தொடர்பான வழக்கில், '45 ஏக்கர் கோயிலும், கோயிலுக்குச் சொந்தமான 2,500 ஏக்கர் நிலமும் எங்களுக்கே சொந்தம்’ என்கிறார்கள் தீட்சிதர்கள்.
வழக்கு விசாரணைகளில் தமிழக அரசு ஒப்புக்குச் சப்பாணியாக வாதாடி, கோயிலை தீட்சிதர்களுக்கே விட்டுக்கொடுப்பதாக விமர்சனங்கள் எழுந்தபோது... ஆறுமுகசாமி அதிரடியாக தில்லைக் கோயிலில் நுழைந்தார். கொட்டும் மழையில் சிற்றம்பல மேடையேறி 'சாகும் வரை தேவாரம் பாடும்’ போராட்டத்தை அறிவித்து, காவல் துறையினரின் நெருக்கடிகளைத் துணிவுடன் எதிர்கொண்டார். ஆறுமுகசாமியின் உடலுக்கு வயதாகலாம். அவரது சுயமரியாதைத் தாண்டவத்தை சிதம்பரம் மறக்காது!
தொல்லியல் வேந்தன்!
ந்திய தொல்லியல் துறை கொண்டாடும் மகத்தான மனிதர் பேராசிரியர் ராஜன். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜன், தன் ஆய்வு மாணவர்களோடு பழநி அருகே 'பொருந்தல்’ என்ற கிராமத்தில் மேற்கொண்ட அகழாய்வு, பல புதிய திறப்புகளை வழங்கியுள்ளது. ஒரு ஜாடியில் இருந்த இரண்டு கிலோ நெல்மணிகளை ஆய்வு செய்ததில், அவை கி.மு.490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்றும், தமிழர்களின் நெல் விவசாயப் பாரம்பரியம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் நிரூபித்தது. அதே ஆய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்பாண்டம் ஒன்றில் 'வயிர’ என்ற தமிழ் பிராமி எழுத்துகள் இருந்துள்ளன. இதன் மூலம் தமிழ் வரி வடிவத்தின் தொன்மை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2013-ல் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பேராசிரியர் ராஜனும், அவரது ஆய்வுக் குழுவினரும் நடத்திய மற்றோர் அகழாய்வில், 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக நகரமாக இருந்த கொடுமணலில், இரும்பு, எஃகு உருக்கு ஆலை மற்றும் கல்மணிகள் செய்யும் ஆலைகள் இயங்கியிருப்பது தெரிய வந்தது. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...’ என்பதை வெறுமனே இலக்கியப் பெருமிதமாகப் பேசித் திரிந்ததை வரலாற்று ஆவணங்களுடன் நிரூபித்த ராஜனின் பணி மகத்தானது!
எருக்கம்பூ கலகக்காரர்!
முழுநேர விவசாயப் போராளி சுந்தர விமலநாதன். காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளரான இவர், விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால், துயர் துடைக்க முதல் ஆளாக நிற்பார். தூர் வாரியதாகச் சொல்லி துட்டு வாரியவர்களையும், குளம் வெட்டியதாகச் சொல்லி பைசா அள்ளியவர்களையும், மதகு கட்டியதாகச் சொல்லி மாடிவீடு கட்டியவர்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்திவருபவர். 'சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு பூச்செண்டு கொடுப்பது எங்கள் வழக்கம். நீங்களோ மிகமிக மோசமாகச் செயல்படுகிறீர்கள். எனவே, உங்களுக்கு நினைவுப் பரிசாக இந்த எருக்கம்பூவைத் தருகிறோம்’ என்று சபைகளில் வைத்து அதிகாரிகளைக் கலங்கடிக்கும் கலகக்காரர்.
விவசாயக் கடன் தள்ளுபடியானாலும், விவசாய வீட்டுப் பிள்ளைகளுக்கு கல்விக் கடன் கிடைப்பதில் சிக்கல் என்றாலும் அங்கே சுந்தர விமலநாதன் ஆஜராவார். விவசாயிகளின் பிரச்னைகளுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட இவர், திருமணமே செய்துகொள்ளவில்லை!
மண்புழு விஞ்ஞானி!
டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், சென்னை, புதுக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் பயோடெக்னாலஜி துறைத் தலைவர். 'மண்புழு விஞ்ஞானி’ என்பதுதான் அவரது நிரந்தர அடையாளம். இப்போது உலக அளவில் மண்புழு உரம் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. ஆனால், இது தொடர்பாகக் கடந்த 20 வருடங்களாக ஆய்வுசெய்து அப்போதே மண்புழு உரத்தை உருவாக்கியவர்!
மண்புழு உரத் தொழில்நுட்பத்தைக் குறிக்க 'வெர்மி டெக்’ என்ற வார்த்தையை உருவாக்கிய இவர், உலகம் முழுக்கப் பயணித்து மண்புழு உரத்தின் பெருமைகளை உரக்கப் பேசிவருகிறார். இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுபவர், பள்ளிக் குழந்தைகளுக்கு 100 விதமான அறிவியல் செய்முறைகளை இலவசமாகப் பயிற்றுவிக்கிறார். அந்த அடிப்படை செய்முறை அறிவியலை தென் மாநிலப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் பொறுப்பை மத்திய அரசு இவரிடமும் ஒப்படைத்துள்ளது. கழிவுநீரை எளிய முறையில் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வீட்டுத் தோட்டங்களைச் செழிக்கச் செய்திருக்கிறார் இஸ்மாயில்!

No comments:

Post a Comment