Saturday, December 28, 2013

ஆ... சாமியோவ்! 10

குறுக்கு வழியில் சர்ர்ர்... என்று தங்களையும் தங்கள் ஆசிரமத்தையும் உலக ஆன்மிக வரைபடத்தில் இடம்பிடிக்க செய்துவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படும் 'அவதாரங்களுக்கு’ நம் நாட்டில் பஞ்சமே இல்லை. இந்த வரிசையில், இந்த இதழில் நாம் பார்க்கப் போகும் அவதாரம் கந்தநூரி சாய்பாபா என்கிற சேஷேசாய் சர்மா என்கிற பால சாய்பாபா என்கிற பாலசாய்!
 'ப்ராடெக்ட்’ என்றால் 'ப்ராண்ட் இமேஜ்’ முக்கியம். சாமியார் என்றால் 'கெட்-அப்’பும் காஸ்ட்யூமும் முக்கியம். தன்னுடைய புறத்தோற்றம் எப்படி இருந்தால் மக்களுக்கு தன் மீது இன்ஸ்டன்டான நம்பிக்கை வரும் என்று பாலசாய்  எப்போதோ முடிவு செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதனால் இதற்கு ஏற்ற மாதிரி ஒரு கதையும் அவர் கட்டவிழ்த்துவிட்டார்.
கேரளாவில் தன் சொந்த ஊரான பாலக்காட்டில் பாலகனாக தவழும்போதே பல 'அற்புதங்களை’ இவர் செய்ய ஆரம்பித்துவிட்டாராம். என்றாலும், 'இந்த ஊரிலேயே தங்கி ஆன்மிகப் பணிகள் செய்யுங்கள்’ என்று யாரும் இவர் காலில் விழுந்து கதறி அழுது தடுக்காததால், ஆந்திர மாநிலத்தில் துங்கபத்ரா ஆற்றங்கரையின் ஓரத்தில் இருக்கும் கர்நூல் என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தார். புட்டபர்த்தி சாய்பாபா போலவே முடி அலங்காரம். அவரைப் போலவே காவி அல்லது மஞ்சள் நிற ஆடை. பால்சாய் உட்காருவதுகூட சாய்பாபா பயன்படுத்தியதைப் போலவே ஒரு வெள்ளி ஆசனத்தில்தான்.
சர்கார் நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டிய தனது கர்நூல் ஆசிரமத்தில், புட்டபர்த்தி ஆசிரமத்தில் ஒலிப்பதைப் போன்றே பாடல்கள், பஜனைகள் என்று பாலசாய் கடை போட்டார். புட்டபர்த்தி சாய்பாபாவின் ஜெராக்ஸ் காப்பியைப் போலவே இருக்கும் இவரது தோற்றத்தைக் கண்டு மயங்கிய பக்தர்கள் இவரின் ஆசிரமத்துக்கு வந்தனர். வாயிலிருந்து லிங்கம் எடுக்கிறேன் என்று இவர் 'அற்புதங்கள்’ புரிய ஆரம்பித்தார். ஆனால் இந்த 'லிங்க’ வித்தைக்கு இவர் கொடுக்கும் பில்ட்-அப் இருக்கிறதே.... அதை கவுண்டமணி மொழியில் சொன்னால் - சூப்பர்ப்பு!
நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்பு தன் வெள்ளி ஆசனத்தில் தியானம் செய்வது மாதிரி கண்களை மூடி நிஷ்டையில் கொஞ்ச நேரம் அமரும் பாலசாய் கண்களைத் திறக்காமல் கொஞ்சம் தண்ணீர் குடிப்பார். பிறகு மூக்கை மேலிருந்து கீழாகக் கொஞ்சம் சொறிந்துவிட்டுக் கொள்வார். அதன்பிறகு  வானத்தைப் பார்ப்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு, வாயிலிருந்து நீரூற்று போல கொஞ்ச நேரத்துக்கு முன்பு குடித்த தண்ணீரை வெளியே துப்புவார். இப்படி துப்பும்போதே திடீர் என்று இவரது முகம் சீரியஸாகும். ஏதோ அற்புதம் நிகழ இருக்கிறது என்பதைப் போல அவரது சிஷ்ய கோடிகள் அத்தனை பேரும் இவரை பயபக்தியோடு கும்பிட்ட கரங்கள் நடுங்கப் பார்ப்பார்கள். அப்போது இவரது வாயிலிருந்து 'குபுக்’ என்று ஒரு கூழாங்கல் பீறிடும். அதை மிஸ் பண்ணாமல் சட்டென்று கேட்ச் பிடித்துவிடுவார். இதைப் பார்த்து கூட்டத்தில் இருப்பவர்கள் கைதட்டுவார்கள்.
எதிரே இருக்கும் ஒரு வெளிநாட்டு பக்தரையோ அல்லது மேடையில் இருக்கும் பணக்காரரையோ அழைத்து பாலசாய் அந்தக் கூழாங்கல்லை பூர்ண லிங்கம் என்று சொல்லி தனது பிரசாதமாகப் கொடுப்பார்.
பொதுவாக, சாமியார்கள் என்றால் மக்களை நல்வழிப்படுத்த ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை சொல்வார்கள். பாலசாய்பாபாவும் தன் பக்தர்களுக்குக் கதைகளைச் சொல்லுவார். சாம்பிளுக்கு அவர் அடிக்கடி சொல்லும் கதை ஒன்று:
''ஒரு ஊரில் ஒரு சாமியார். அந்தச் சாமியாரின் பெயர் பாலசாய். அதாவது அது நான்தான். எனக்கு உலகெங்கும் சீடர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் ஜப்பானைச் சேர்ந்த ஹிடேக்கி என்ற பௌத்த துறவியும் ஒருவர். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானத்தை தேடி என் ஆசிரமத்துக்கு வந்திருந்தார். அவர் கடந்த சிவராத்திரி அன்று ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் பியானோ கலைஞரான, 'ஜூங்கோ’ என்பவருடன் இணைந்து என் ஆசிரமத்துக்கு நிதி திரட்ட நிகழ்ச்சிகள் நடத்தினார். ஹிடேக்கி ஒரு பௌத்த துறவி என்பதால் அவருக்கு இமெயில் கிடையாது. அதனால் நன்றி சொல்வதற்காக 'பியானோ’ ஜூங்கோ-க்கு இமெயில் அனுப்பி இருந்தேன்.
இந்த இமெயில் கிடைக்கப்பெற்ற அதே நாள், அந்த பௌத்த துறவியின் வாழ்க்கையில் மிகப் பெரிய அற்புதம் நடத்தது. அந்த அற்புதத்தைக் கண்டு வியந்த ஹிடேக்கி எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதன் சாராம்சம் இதுதான். 'நீங்கள் அனுப்பிய செய்தி ஜூங்கோ வாயிலாக கிடைத்த அதே தினம். முக்கியமான ஒரு வேலை விஷயமாக வெளியில் செல்ல முற்பட்டேன். அப்போது ஒரு பேப்பரைத் தேடி துணிப்பை ஒன்றில் கைவிட்டேன். அந்தப் பையில் எப்போதோ வாங்கிய ஒரு நெக்லெஸ் (துறவிக்கு எதற்கு நெக்லெஸ்?) தென்பட்டது. தொலைந்துபோய்விட்டது என்று நான் கருதிய நெக்லெஸ் அது. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த உங்கள் (பாலசாய்பாபா) படத்தை நன்றி பெருக்கோடு பார்த்துவிட்டு, அந்த நெக்லெஸை மீண்டும் பார்த்தேன். அப்போது பருந்து முத்திரைப் பதிக்கப்பட்ட ஒரு மோதிரம் தோன்றியது(?). எங்கள் ஐதீகப்படி பருந்து என்பது காக்கும் கவசமாகும். எனக்கு மயிர் கூச்செறிந்தது. இந்த சம்பவத்தால் இரண்டு நிமிடம் தாமதமாக வெளியே கிளம்பினேன். எங்கள் தெருமுனை சந்திப்பில் ஒரு பெரிய விபத்து நடந்து ஒருவன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். மோதிரம் மட்டும் என் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால்... அந்த எவனோ ஒருவனின் இடத்தில் என் உடல் கிடந்திருக்கும். உங்களின் மோதிரம்தான் என்னைக் காப்பாற்றியது''
கதை ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் பால சாய்பாபாவின் நிதர்சனத்துக்கு வருவோம். கல்லூரி பேராசிரியர் என்றால் அவரின் பெயருக்குப் பின்னால் பல பட்டங்கள் இருந்தால்தான் அழகு. அதே போல சாமியார் என்றால் அவருக்குப் பின்னால் பல சர்ச்சைகள் இருப்பதுதான் அடையாளம். சிவபிரசாத் என்ற வியாபாரி ஒருவர், ''44 லட்ச ரூபாய் அளவுக்கு சுவாமிஜி என்னை ஏமாற்றிவிட்டார்’ என்று வழக்குத் தொடுத்திருக்கிறார். இதுபற்றி பாலசாய்பாபாவைக் கேட்டால், ''ஆமாம், அந்த வியாபாரி என்னிடம் கொஞ்சம் கடன் கேட்டார். நான் செக்காகக் கொடுத்தேன். என் கணக்கில் பணம் இல்லாத சமயம் அந்த வியாபாரி அதை வங்கியில் போட்டுவிட்டார்'' என்று பிரச்னைக்கு கனகச்சிதமான ட்விஸ்ட் கொடுக்கிறார் பாலசாய்.
இதுவாவது பரவாயில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் ஹைதராபாத் நகரில் ஆட்டோ ஒன்றில் ஆறே முக்கால் கோடி ரூபாய் அனாதையாகக் கிடந்தது. இதை கைபற்றி போலீஸ் வைத்திருந்தபோது, 'அது எங்களுடையதுதான்’ என்று ராமாராவ் என்பவர் அதற்கு உரிமை கொண்டாடி, கொண்டு போனார். அவர் யார் என்று விசாரித்தபோது பாலசாய்பாபா ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி என்பது போலீஸுக்குத் தெரியவர... அவர்கள் பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டார்கள்!.
பாலசாய் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தன்னை இப்போது அவர் புத்தர், ஏசு, ராமன், கிருஷ்ணபிரான் ஆகியோரின் அவதாரம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரைச் சொல்லி மார்க்கெட் செய்ய முற்பட்டிருக்கிறார். லேட்டஸ்ட் தகவல்: பாலசாய் தன்னை ஆண் வடிவில் இருக்கும் திரிபுரசுந்தரி என்று இப்போது சொல்லி வருகிறார்!

- Vikatan Article

No comments:

Post a Comment