Saturday, December 28, 2013

2013 டாப் 10 நம்பிக்கைகள் -விகடன் டீம்

எழுச்சித் தமிழச்சி!
பாலகன் பாலச்சந்திரனின் மரணத்துக்கு முன்-பின்னான புகைப்படங்கள் தமிழகத்தில் உருவாக்கிய எழுச்சி, கல்லூரி மாணவர்களிடையே அனல் வேள்வியைப் பற்றவைத்தது. அந்த இளைஞர் பட்டாளத்தை, 'தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு’வாக ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர் திவ்யா.
அறச்சீற்றத்துடன் வெடித்த திவ்யாவின் முழக்கங்கள், தமிழகக் கல்லூரி வளாகங்களில் பிரளயத்தை உருவாக்கின. அருப்புக்கோட்டையைச் சேர்ந்த திவ்யா, வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்குக் குரல்கொடுத்த கம்யூனிஸ்ட் களப்பணியாளர். பின்னாட்களில் மாணவர்களின் போராட்டக் கனல் தணிந்தபோதும், 'தமிழ்நாடு மாணவர் இயக்கம்’ என்ற பெயரில் இப்போதும் தமிழகம் முழுக்க இயங்கி வருகிறார் திவ்யா!
மிஸ்டர் கறார் ஐ.ஏ.எஸ்.!
டந்த செப்டம்பர் மாதம், திண்டுக்கல் சார் ஆட்சியராகப் பொறுப்பேற்றார் மதுசூதன ரெட்டி. அன்றே மணல் மாஃபியாக்களுக்கு எதிரான அதிரடி வேட்டையைத் தொடங்கினார். 200-க்கும் அதிகமான கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து, கிடப்பில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கவைத்தார். மிரட்டல்களைப் புறந்தள்ளி மணல் மாஃபியாக்களைத் துரத்தியடித்துக் கொண்டிருந்தவரை, இரண்டு மாதங்களுக்குள் பெரம்பலூருக்குத் தூக்கியடித்தது அரசு இயந்திரம். இப்போது பெரம்பலூரில் குவாரி முறைகேடுகளைக் குறிவைத்து வளைத்துக்கொண்டிருக்கிறார் மதுசூதன ரெட்டி!
மண்ணின் மைந்தன்!
யற்கை வளங்களை மாஃபியாக்கள் கொள்ளையடிப்பதை எதிர்த்து இடைவிடாமல் போராடும் வாஞ்சி நாதன், 'மனித உரிமைப் பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பின் மூலம், கடந்த ஆண்டு கிரானைட் கொள்ளைக்கு எதிராகப் பெரும் பிரசாரத்தை முன்னெடுத்த வழக்கறிஞர். தென்தமிழகக் கடலோரப் பகுதியில் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளைக்கு எதி ராகச் செயல்படும் இவரது தலைமையிலான உண்மை அறியும் குழு, தாது மணல் ஆலைகளுக்குள் புகுந்து, அதன் செயல்பாடுகளை முதன்முதலாக உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. இயற்கை அன்னை மெச்சும் மண்ணின் மைந்தன்... இந்த வாஞ்சிநாதன்!
சகலகலா வல்லவன்!
கொத்தனார், சென்ட்ரிங் பணியாளர், பெயின்டர்... என கிடைத்த வேலைகளைச் செய்து ஜீவிக்கும் மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி, இளம் தலைமுறையினருக்குப் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுத்தருவதை ஒரு தவமாகச் செய்கிறார். பரம்பரையாக சிலம்பம் சுற்றும் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தினமும் ஏராளமானோருக்கு சிலம்பம், பறை உள்ளிட்ட பல்வேறு கலைகளைக் கற்றுத்தருகிறார். ஏழை மாணவர்களிடம் கட்டணம் பெறாமல், இதுவரை
10 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்திருக்கும் தங்கபாண்டி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று அரசு சார்பான விழிப்பு உணர்வு பிரசாரங்களையும் மேற்கொண்டிருக்கிறார். தன்னலம் கருதாத துரோணாச்சாரியார்!
இனிய இசைஞன்!
.ஆர்.ரஹ்மான் இசைப் பட்டறையில் இருந்து வந்த 'எலெக்ட்ரிக்’ இசைஞன் சந்தோஷ் நாராயணன். ஆஸ்திரேலியாவில் ஆடியோ இன்ஜினீயரிங் படித்த திருச்சிப் பையன்.  அறிமுக 'அட்டகத்தி’யில் பின்னணி இசை, அதிரடி கானா என பின்னியெடுத்த சந்தோஷ், திகில் 'பீட்சா’விலும் திடுக்கிடவைத்தார். சிட்னி 'சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா’, ஆஸ்திரேலியா 'ஸ்டுடியோ 301’ என நவீன இசை வடிவங்களை தமிழ் சூழலுக்கு அறிமுகப்படுத்தும் கலைஞன். 'காசு... பணம்... துட்டு... மணி மணி’ என கானாவுக்குப் புத்துயிர் கொடுத்த சந்தோஷின் இசை, ரோல்ஸ்ராய்ஸ் கார் முதல் ராயபுரம் கார்ஷெட் வரை தடதடக்கிறது... கலகலக்கிறது!
நியூ வேவ் படைப்பாளிகள்!
'சூது கவ்வும்’ நலன் குமாரசாமி - 'மூடர் கூடம்’ நவீன் ஷேக் தாவூத்... யதார்த்த மாந்தர்கள், பகடி வசனங்கள், எளியவர்களின் கொண்டாட்டங்களை திரையில் பதிவுசெய்த 'நியூ வேவ்’ இளைஞர்கள்!
'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு மிகக் குறுகிய இடைவெளிக்குள் படத்தை அனுப்பவேண்டிய கட்டாயத்தில், டெட்லைன் டென்ஷனில் தவிக்கும் ஒரு குறும்பட இயக்குநரின் கதையையே 'ஒரு படம் எடுக்கணும்’ என்று இயக்கி, அனுப்பிவைத்தார் நலன். அந்தப் படம் குவித்த 'வார்ம் வெல்கம்’ வரவேற்பு, நலனை சில்வர் ஸ்கிரீனிலும் சிக்ஸர் அடிக்கவைத்தது!
'மூடர் கூடம்’ திரைக்கதையில், 'நாலு திருட்டுப் பசங்களும் பார்ல குடிச்சுட்டு குத்தாட்டம் போடுற மாதிரி ஒரு டான்ஸ் சேருங்க’ என்று தயாரிப்பாளர்கள் கரெக்ஷன் சொல்ல... நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சொந்த பேனரில் 'மூடர் கூடம்’ உருவாக்கி தமிழ் சினிமாவுக்கு வெரைட்டி விருந்து படைத்தார் நவீன். தரமான சினிமா ரசனைக்கு உத்தரவாதம் அளிக்கும் இளைஞர்கள்!
மாற்றி யோசித்தவர்!
சுமார் 400 பேர்... விழித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் போராட்டங்களால் 12 நாட்கள் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தனர். ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்காகப் போராடிய அவர்களை ஒருங்கிணைத்தவர், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் எது என்பதை கடைசி சில நிமிடங்களுக்கு முன்னர் முடிவு செய்வது, சிறுசிறுக் குழுக் களாகப் பிரிந்து பல்முனை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என காவல் துறையினரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது 28 வயது நாகராஜனின் ஒருங்கிணைப்பு. அந்தக் கோரிக்கைகள் தமிழக அரசின் உத்தரவாக மாறவிருப்பது, இவர்களின் வியூகம்-வியர்வைக்குக் கிடைத்த வெற்றி!
நீச்சல் ஏஞ்சல்!
ண்ணனின் நீச்சல் பயிற்சியைப் பார்க்கச் சென்ற ஜெயவீணாவுக்கும் நீச்சல் ஆசை தொற்றிக்கொள்ள, இரண்டரை வயதிலேயே குளத்துக்குள் குதித்துவிட்டார். இப்போது 15 வயதில் சீனியர்களுடன் தேசிய நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்க வேட்டையாடி வருகிறார் ஜெயவீணா. 50 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் இண்டிவிஜுவல் மெட்லே பிரிவில் ஜெயவீணாவை வெல்ல இந்தியாவில் இப்போதைக்கு ஆளே இல்லை. 2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை ஜெயவீணாவின் ஸ்ட்ரோக்குகளில் இருக்கிறது!  
கிராண்ட் மாஸ்டர்களின் மாஸ்டர்!
19 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியில் பட்டம் வென்றபோது, அரவிந்தனின் வயது 12. இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் அந்தப் பட்டம் வென்ற அரவிந்தன், காமன்வெல்த் போட்டியில் 'அண்டர் 14’ பிரிவில் தங்கம் தட்டினான். இந்த ஆண்டு ஆசிய செஸ் போட்டியில் தங்கம் வென்ற அரவிந்தன், சென்னையில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டித் தொடரில் 6 கிராண்ட் மாஸ்டர்களோடு மோதி சாம்பியன் பட்டம் தட்டியது மாஸ்டர் மூவ். விஸ்வநாதன் ஆனந்தை சமீபத்தில் வீழ்த்திய மேக்னஸ் கார்ல்சனின் அதிவிரைவாகக் காய்களை நகர்த்தும் பாணிதான் அரவிந்தனின் ஸ்டைலும்!
எள்ளல் ரசிகன்!
விஞர், புவியியல் ஆசிரியர் என இரு தளங்களிலும் சீரான படைப்பூக்கங்களை அளிக்கும் லிபி ஆரண்யாவின் இயற்பெயர் சரவணன். மதுரையில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் லிபி எழுதிய 'தப்புகிறவன் குறித்தான பாடல்கள்’, 'உபரி வடைகளின் நகரம்’ ஆகிய இரண்டு நவீனக் கவிதைத் தொகுப்புகள் சூழலியல், தனியார்மயக் கொள்கைகள், பி.வி.சி. பைப் புழக்கத்தால் அதிகரிக்கும் உடல்நலக் கோளாறு... என சமகாலப் பிரச்னைகளைப் பேசும். தமிழ்நாடு பாடநூல் ஆசிரியர் குழுவின் 13 புத்தகங்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கெடுத்தவர். கவிதைகளை, சிறுகதைகளை எள்ளல் நகைச்சுவையுடன் விமர்சிப்பதில் தனி பாணியை உருவாக்கியவர்.

No comments:

Post a Comment