Saturday, December 7, 2013

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 4



மரத்தை வெட்ட மரக்கோடரியே பயன்படுவதைப்போல, பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்திய முறைகேடுகளை அவரது மருமகன் ஃபெரோஸ் காந்தியே வெளிப்படுத்த வேண்டியதாயிற்று!
 இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி, பிரியங்கா காந்தி... என்று 'காந்தி’யை ஒட்டாகச் சேர்க்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மீதான பாசம், பற்று, நேசத்தால் அல்ல. காந்தி என்பது ஃபெரோஸ் காந்தியின் குடும்பப் பெயர். குஜராத்தைச் சேர்ந்த ஜஹான்கீர் காந்திக்கும் ஹட்டா காந்தி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ஃபெரோஸ் காந்தி. பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள். குஜராத்தில் பார்சிக்களும் இந்துக்களும் தங்களது குடும்பப் பெயராக காந்தி என்று வைத்துக்கொள்வது உண்டு. அதனால்தான் மகாத்மாவுக்கும் காந்தி என்ற பெயர் வந்தது. ஃபெரோஸுக்கும் காந்தி என்ற பெயர் வந்து சேர்ந்தது. ஆனால், மகாத்மா காந்தியின் வாரிசுகளாக இவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் நடத்தியதுகூடப் பரவாயில்லை. அது தவறுகளை மறைப்பதற்கான முகமூடியாகப் போனதுதான் மகாத்மாவுக்கு அவலம்.
இந்திராவின் கணவர் என்பதற்காகவோ, நேருவின் மருமகன் என்பதற்காகவோ ஃபெரோஸுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சுதந்திர தாகம்கொண்ட இளைஞராகத்தான் இளமைப் பருவம் முதல் அவர் வளர்ந்தார். வர்த்தகக் குடும்பத்துக்கு அரசியல் அலர்ஜி என்பதால், போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் பிள்ளையை வளர்க்கவே ஃபெரோஸின் பெற்றோர் விரும்பினார்கள். அலகாபாத் ஈவினிங் கல்லூரியில் மதியநேர உச்சி வெயிலில் பெண்கள் படையோடு ஆர்ப்பாட்டம் செய்யப் போன, நேருவின் மனைவி கமலா மயங்கி விழ... அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த ஃபெரோஸ் போய் அவரைத் தாங்கிப்பிடிக்க... அதன் பிறகுதான் ஆனந்த பவனத்துக்குள் அவர் போனார். ஆரோக்கியமற்ற உடல்நிலையைக் கொண்ட கமலா பெரும்பாலும் மருத்துவமனையிலும் படுக்கையிலும் காலம் கழித்தபோது அடிக்கடி போய் பார்த்து வந்தார் ஃபெரோஸ். அதன்பிறகு இவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திராவைச் சந்தித்தார். காதல் வயப்பட்டார். இந்திராவுக்கு 16 வயது இருக்கும்போது தன்னுடைய காதலைச் சொன்னார் ஃபெரோஸ். ஆனால், அதனை இந்திரா ஏற்கவில்லை. அம்மாவின் சிகிச்சைக்காக ஜெர்மன் போனார் இந்திரா. ஃபெரோஸும் படிக்க லண்டன் போனார். கமலாவின் உடல்நிலை மோசமானது. கமலாவைப் பார்க்க ஃபெரோஸ் சென்றிருந்த நேரத்தில்தான் அவர் இறந்து போனார். அதற்கு முன்னரே இந்திரா மீதான தனது காதலை ஃபெரோஸ், கமலாவிடம் சொல்ல, 'அவள் சின்னப் பெண்’ என்று சொல்லி மறுத்துவிட்டார். தன்னுடைய அம்மாவின் கடைசிக் காலத்தில் கவனித்துக் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்திராவுக்கும் ஃபெரோஸ் மீது கரிசனம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதாவது 1933 ஃபெரோஸ் வெளிப்படுத்திய காதலை, நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் இந்திரா ஏற்றுக்கொண்டார். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் நேருவிடம் இந்திரா சொன்னார். அவரும் இந்தக் காதலை ஏற்கவில்லை. தட்டிக் கழிக்க நினைத்தவர் காந்தி உட்பட தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது சம்மதத்தையும் இந்திரா வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நேரு. காந்தி ஏற்றுக் கொண்டார். ஆனால் நேரு குடும்பத்தினர் அனைவரும் எதிர்த்தார்கள். ஆனால், இந்திரா தன்னுடைய வைராக்கியத்தால் வென்று, ஃபெரோஸைக் கைப்பிடித்தார்.
தன்னை நேரு, முதலில் இருந்தே ஏற்கவில்லை என்ற கோபம் ஃபெரோஸுக்கு இருந்தது. திருமணம் ஆனதும், இந்திராவை அந்த பெரிய வீட்டில் இருந்து அழைத்துச் சென்று தனிக்குடித்தனம் வைத்தார் ஃபெரோஸ். நேருவின் வெளிச்சத்தில் வாழ விரும்பவில்லை. ஆனால் இந்தியத் தலைவர்கள் அனைவரும் சுற்றிச்சுற்றி கைதான சூழ்நிலையில் ஃபெரோஸும், இந்திராவுமே கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள். விடுதலை ஆகி வந்தவர்கள், ஆனந்தபவனத்தில் குடியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனென்றால் அப்போது நேரு, சிறையில் இருந்தார். அதன்பிறகு அப்படியே தங்கிவிட்டார் ஃபெரோஸ்.
முதல் குழந்தை பிறந்தது. ராஜீவ் ரத்னா என்று பெயர் வைக்க ஆசைப்பட்டார் இந்திரா. பிர்ஜிஸ் என்று வைக்க நினைத்தார் நேரு. 'எங்காவது நேரு என்று சேர்க்க முடியுமா?’ என்று தாத்தா மனது துடித்தது. ஃபெரோஸ் தனது குடும்பப் பெயரான காந்தி என்பதைச் சேர்க்க ஆசைப்பட்டார். அனைத்தையும் சேர்த்து ராஜீவ் ரத்னா பிர்ஜிஸ் நேரு காந்தி என்று பெயர் வைக்கப்பட்டது. தன்னை மனப்பூர்வமாக நேரு ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைத்த ஃபெரோஸ், தனது வாழ்க்கையை லக்னோவை நோக்கி நகர்த்தினார். அடிப்படையில் மார்க்சீய ஆர்வம் கொண்டவர் ஃபெரோஸ். பாசிசத்துக்கு எதிரான குரல்களைப் பதிவு செய்தவர். அடக்குமுறைகளை எதிர்த்தவர். எழுதுவதிலும் அதீத விருப்பம் கொண்டவர். 'நேஷனல் ஹெரால்ட்’ இதழின் நிர்வாக இயக்குநராக ஆனார். இது ஒருகாலத்தில் நேரு நடத்திய பத்திரிகைதான். லக்னோவுக்கும் அலகாபாத்துக்கும் போய் வந்துகொண்டு இருந்தார் இந்திரா. அதன் பிறகு சஞ்சய் பிறந்தார். சஞ்சய் என்று பெயர் வைக்கப் போகிறோம் என்றோ, என்ன பெயர் வைக்கலாம் என்றோ ஃபெரோஸிடம் யாரும் கேட்கவில்லை, இந்திரா உட்பட. அதனையும் சகித்துக்கொண்டார். இந்திராவுக்கு இளமைக் காலம் முதல் காச நோய் உண்டு. அதனால், குழந்தைகளை தனியாக வளர்ப்பது சாத்தியம் இல்லை என்பதால் அப்பா வீட்டோடு இருந்தாக வேண்டிய நெருக்கடி அவருக்கு. இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் இருந்து ஃபெரோஸ் எம்.பி-யாக தேர்வானார். எம்.பி-களுக்கான பங்களா கிடைத்தது. நேருவின் தீன்மூர்த்தி பவனில் இருந்து படிப்படியாக வெளியேறி எம்.பி. பங்களாவில் தங்க ஆரம்பித்தார்.
நேருவின் தலைமையில் புதிய முகங்கள் அதிகாரம் செலுத்தும் ஆட்சி உட்கார்ந்து இருந்ததை ஃபெரோஸால் ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும் பார்த்துக்கொண்டு இருக்கவே முடிந்தது. அந்த வட்டாரத்துக்குள் அவரால் போகவே முடியவில்லை. அந்த விரக்தியும், தன்னை ஆரம்பத்தில் இருந்தே உதாசீனம் செய்த நேருவின் மீதான கோபமும், தன்னைவிட அப்பா நேருவின் வார்த்தைகளுக்கே மனைவி இந்திரா கட்டுப்படுகிறார் என்ற எரிச்சலும் சேர்ந்தது. அப்போது அவருக்குள் இந்த பத்திரிகையாளன் மெள்ளத் தலைதூக்கினான். நேருவும் நேருவைச் சுற்றி இருப்பவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதைத் தோண்டித்துருவ ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியைத் தாண்டி வேறு கட்சியில் இருந்து வந்த எம்.பி-க்களோடு கைகோத்து அலைய ஆரம்பித்தார். அப்போது அவர் கையில் இன்ஷூரன்ஸ் மோசடி வசமாக மாட்டியது. இன்ஷூரன்ஸ் திட்டத்தில் செய்யவேண்டிய மாறுதல்கள் சம்பந்தமான புதிய மசோதா அமல்படுத்தப்பட்டபோது மைக் பிடித்தார் ஃபெரோஸ். வீட்டுக்குள் இருந்தே வாள் பாய்ந்து வரும் என்று நேரு எதிர்பார்க்காத பேச்சு அது.
இதோ நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசுகிறார்...
''காலம் தாழ்ந்து நடந்திருந்தாலும் நல்லதே நடந்திருக்கிறது. இந்தியாவில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப்போல எக்கச்சக்கமான இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் நிறைய முளைத்துவிட்டன. இவற்றில் நடந்துவரும் குளறுபடிகள்தான் இப்போது இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரக் காரணம். இவர்கள் பொதுமக்கள் பணத்துடன் விளையாடுவதை அனுமதிக்க முடியுமா?
ஒரு கம்பெனியில் முதலீடு, பின்பு வேறு கம்பெனியில், அதன் பிறகு வேறு ஒரு கம்பெனியில், பின்னர் பேர் இல்லாத பற்பல கம்பெனிகள் என்ற வகையில் பணத்தை பந்தாடிப் பந்தாடி கொள்ளை லாபம் அடித்துள்ளார்கள். இவை அனைத்துமே அவர்கள் உடல் உழைத்து ஈட்டிய பணமா? இல்லவே இல்லை. ஒன்றும் தெரியாத அப்பாவி பொதுமக்கள் பணம்தான். இது நமது நிதித் துறை வசம் உள்ள வருமானவரித் துறைக்குத் தெரியாதா? தெரியாது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா? ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போல இருக்கிறது? யாரைக் காப்பாற்ற இந்த அரசாங்கம் தன் நம்பகத்தன்மையை இழக்க வேண்டும்? நிதி அமைச்சர் எதற்காக காலஅவகாசம் கொடுக்கிறார்? ஏன் ஒட்டு மொத்தமாக இந்தப் பணத்தைத் திரும்பப்பெற முயற்சி எடுக்கவில்லை?
இதற்கெல்லாம் நம்முடைய அரசாங்கமும் நிதி அமைச்சகமும் முழுபொறுப்பேற்று நிலைமையை சீரடையச் செய்ய வேண்டுமா இல்லையா? அங்கும் இங்கும் சிற்சில விசாரணைகள் மட்டுமே நடைபெற்றன. நான் நமது வருவாய்த் துறை அமைச்சரிடம் கேட்டேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜால்ஜாப்பு சொல்கிறார். 'நான் அட்டர்னி ஜெனரலை கன்சல்ட் செய்கிறேன்’ என்பார். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பார். ஆனால், இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன. ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. நான் இறுதியாக நிதி அமைச்சரைக் கேட்டுக் கொள்வதெல்லாம்,
எப்படியாவது மோசடி செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுங்கள். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் என்பது பொதுமக்கள் வியர்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த பணம். இவ்வாறு செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் கடமை.'' - ஃபெரோஸின் இந்தப் பேச்சு இன்றுவரை பொருத்தமாகத்தான் இருக்கிறது. இரண்டரை வருடங்களில் எதுவும் நடக்கவில்லை என்று ஃபெரோஸ் வருந்தினார். 60 ஆண்டுகளாக அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. 'சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்’ என்ற வார்த்தைக்கு வாய் இருந்தால் கதறிக்கதறி அழும். பிரதமர் ஆரம்பித்து, விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட அனைவருமே, 'சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். எந்தச் சட்டப்படி என்பதுதான் இன்றுவரை விளங்கவில்லை. அட்டர்னி ஜெனரல் பற்றியும் ஃபெரோஸ் சொன்னதில் இன்றுவரை மாற்றம் இல்லை. நிலக்கரி வழக்கில் கோப்புகளே மாயம் ஆனது. 'கோப்புகளைக் காணாமல் போனதைக் கண்டுபிடிக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்தீர்களா?’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டபோது, அட்டர்னி ஜெனரல் வாகனவதி, 'சி.பி.ஐ-க்கு நிலக்கரித் துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்கும்'' என்று மையமாகச் சொன்னார். இன்னொருநாள் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். ''எல்லா விவரங்களையும் மூளையில் பதிவுசெய்து ஒப்பிக்க என்னால் இயலாது. முன்னறிவிப்பு இன்றி என்னிடம் எழுப்பப்படும் கேள்விகள் சங்கடமாக உள்ளது'' என்று மழுப்பினார். மறுநாள் வந்து, ''நான் இப்படி பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று சொன்னதும் அவர்தான்.
ஃபெரோஸின் பேரன் பிரதமர் ஆகப் போகும் காலக்கட்டத்திலும் எதுவுமே மாறவில்லை!

- Vikatan

No comments:

Post a Comment