Saturday, November 23, 2013

தனியார் வங்கி VS பொதுத்துறை வங்கி வீட்டுக்கடன் வாங்க எது பெஸ்ட்?

- Nanayam Vikatan

சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருப்பது அவசியமா அல்லது அந்தஸ்தா என்பதில் எல்லோருக்கும் இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், நம்மில் பலரும் ஒரு வீட்டை வாங்குவதாக இருந்தால், அதற்கான வீட்டுக் கடனை அரசு வங்கியில் வாங்குவதா அல்லது தனியார் வங்கியில் வாங்குவதா என்பதில் பல்வேறு கருத்துக்களுடனும், குழப்பங்களுடனும்  இருப்போம்.
அனைத்து பொதுத்துறை வங்கிகளும் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன என்றாலும், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட ஓரிரு பொதுத்துறை வங்கிகளே வீட்டுக் கடன் வழங்குவதில் மிக தீவிரமாக இருக்கின்றன.
பொதுத்துறை வங்கிகளில் கடனுக்கான வட்டி பெரும்பாலும் சிறிது குறைவாக இருக்கும். காரணம், அவற்றுக்கு நிதித் திரட்டும் செலவு (காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) குறைவு. அதனால் வீட்டுக் கடனை  குறைந்த வட்டியில் பொதுத்துறை வங்கிகளால் தர முடிகிறது.  
இப்படி வட்டி குறைவாக இருந்தாலும், அவற்றை விட்டுவிட்டு தனியார் வங்கிகள் அல்லது தனியார் வீட்டு வசதி நிறுவனங்களில் பலரும் வீட்டுக் கடன் வாங்குவது ஏன்? பொதுத்துறை வங்கிகளில் அப்படி என்னதான் பிரச்னை? என முன்னணி பொதுத்துறை வங்கி ஒன்றின் அதிகாரியிடம் கேட்டோம்.
''பல பொதுத்துறை வங்கிகளில் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. வீட்டுக் கடன் வழங்குவதற்கு என தனிப்பிரிவு சில பொதுத் துறை வங்கிகளில்தான் இருக்கிறது. யாராவது வீட்டுக் கடன் கேட்டு வந்தால், ஏதாவது ஒரு பிரிவில் இருக்கும் வங்கிப் பணியாளர்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இதுதான் மிகப் பெரிய பிரச்னை'' என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.
''வீட்டுக் கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் மும்முரமாகச் செயல்படுவதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கவே செய்கிறது. அதாவது, அந்த நிறுவனங்கள் ஒரு மாதத்தில் இவ்வளவு தொகையை வீட்டுக் கடனாக தரவேண்டும் என இலக்கு இருக்கிறது. மேலும், தருகிற கடனுக்கு ஏற்ப ஊக்கத்தொகையும் தந்துவிடுகிறார்கள். இந்த ஊக்கத்தொகை என்பது வீட்டு வசதி நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஏஜென்ட்கள் வரை பிரித்துத் தரப்படுகிறது. இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை பார்த்து வேகமாக வீட்டுக் கடனைத் தந்துவிடுவார்கள்.
இதுமாதிரியான இலக்கும் ஊக்கத் தொகையும் பொதுத்துறை வங்கிப் பணியாளர் களுக்கு கிடையாது. எனவேதான், இதில் அவர்கள் பெரியளவில் ஆர்வம் ஏதும் காட்டுவதில்லை'' என்றார்.
தனியார் வங்கிகளை வீட்டுக் கடனுக்கு பலரும் ஆர்வமுடன் அணுகுவது ஏன் என்று முன்னணி தனியார் வங்கி ஒன்றின் உயர் அதிகாரியிடம் பேசினோம்.
''அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவை பொதுத்துறை வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்படு வதால் மிகக் குறைந்த செலவில் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. ஆனால், தனியார் வங்கிகளுக்கு நிதி திரட்டும் செலவு அதிகமாக இருப்பதால் அவற்றால் அரசு வங்கிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு குறைவான வட்டியில் கடன் தர முடிவதில்லை. ஆனால், தனியார் வங்கிகள் தரும் சிறப்பான சேவையைப் பார்த்து பலரும் தேடி வரத்தான் செய்கிறார்கள்'' என்றார்.
வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தனியார் நிறுவனங்களை விரும்புவது ஏன் என்பது குறித்து வீட்டுக் கடன் துறையில் பத்தாண்டுகள் அனுபவம் கொண்டவரும், வீட்டுக் கடன் ஆலோசகருமான எஸ்.சிவக்குமார் விளக்கிச் சொன்னார்.
''அரசு வங்கிகளுடன் ஒப்பிடும்போது தனியார் வங்கிகள் மற்றும் வீட்டுக் கடனுக்கு என்று இருக்கும் வீட்டு வசதி நிறுவனங் களில் கடன் நடைமுறைகள் வேகமாக நடக்கும். இதற்கென இருக்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை அவர்களின் அலுவலகம் அல்லது வீடு தேடி சென்று கடனுக்கான ஆவணங்களைச் சேகரிப்பது, வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவது என்பது போன்ற வேலைகளைச் செய்து தந்துவிடுவார்கள். ஆனால், பொதுத் துறை ஊழியர்கள் அலுவலக நேரத்தில் மட்டுமே வீட்டுக் கடன் தொடர்பான வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள். கடன் வாங்குபவர்கள் அலுவலக ஊழியராக இருக்கும்பட்சத்தில் வங்கிப் பணியாளர் சொல்லும் நாள் அல்லது நேரத்துக்கு கஷ்டப்பட்டுதான் வரவேண்டியிருக்கிறது. தனியார் வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனப் பணியாளர்கள், வீட்டுக் கடன் கேட்டவர்களின் வீடு அல்லது அலுவலகத்துக்கே போய் கடன் நடைமுறைகளை கச்சிதமாக செய்து முடித்துவிடுகின்றனர். தனியார் வங்கி ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமைகூட வேலை பார்ப்பார்கள். இதனால் வீட்டுக் கடனை சீக்கிரமாக தர முடிகிறது.
ஆனால், பொதுத்துறை வங்கி எனில், வாடிக்கையாளர்தான் நேரடியாக தேடிப் போய் அத்தனை விஷயங்களையும் செய்து முடிக்க வேண்டும். இந்த அலைச்சலுக்கு பயந்தே பலரும் வட்டி அதிகம் என்றாலும் தனியார் வங்கி அல்லது தனியார் வீட்டு வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்கிறார்கள்'' என்றார்.
இது எந்த அளவுக்கு உண்மை என பஞ்சாப் நேஷனல் வங்கியின் உதவி பொது மேலாளர் (சென்னை) கணேசனிடம் கேட்டோம்.
''வீட்டுக் கடன் சந்தையில் அதிக போட்டி ஏற்பட்டுள்ளதால், பொதுத்துறை வங்கிகளும் இப்போது வேகம் காட்டத் தொடங்கி இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடன் கிடைக்க அதிக  நாட்களாகிறது என்கிறார்கள். நாங்கள் நிதானமாக ஆராய்ந்து, சரியான நபர்களுக்கும் சரியான சொத்துகளுக்கும் மட்டுமே கடன் தருவோம். வீட்டுக் கடன் வழங்க ரீடெய்ல் அசெட் பிராஞ்சுகள் நிறைய வந்துவிட்டதால், பொதுத் துறை வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க முன்பு போல அதிக காலம் ஆவதில்லை.  
மேலும், வீட்டுக் கடன் பெறுவதற்கான ஆவணங்களை சொத்தின் உரிமையாளர் நேரில் சென்று வாங்கி வருவதுதான் நல்லது. அதாவது, நமக்கான ஆவணங்களை நாம்தான் தேடிப்போக வேண்டும். வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனப் பணியாளர்கள் வாங்கி வருவது நல்லதல்ல. இதன்மூலம் பிற்காலத்தில் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து, சொத்துக்கான கட்டட அப்ரூவல் ப்ளான் விஷயத்தில் அரசு வங்கி கறாராக நடந்துகொள்ளும். இதனை பெற்றுத்தர கடன் பெறுபவருக்கு சற்று அதிக காலம் ஆகத்தான் செய்யும். அதேநேரத்தில், எந்த ஒரு சொத்தும் உடனே விற்பதற்கு ஏற்றதாக, எந்த வங்கிக்கு சென்றாலும் மீண்டும் கடன் வாங்கக்கூடியதாக அப்ரூவலுடன் இருப்பதுதான் சொத்தின் உரிமையாளருக்கும் வங்கிக்கும் நல்லதாக அமையும்.
அந்த வகையில், சரியான அப்ரூவல் இல்லாமல் பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குவதில்லை. இதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தை காலதாமதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடன் வாங்குபவர் அப்ரூவல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக சமர்ப்பித்தால் ஒரு வார காலத்துக்குள் பொதுத்துறை வங்கிகளில் கடன் கிடைத்துவிடும்'' என்றார்.
பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன் விரைவில் கிடைக்கும். ஆனால், கடனுக்கான வட்டி சுமார் 1% அதிகமாக இருக்கும். இப்படி கூடுதலாக கட்டப்படும் 1% வட்டியானது ஒருவர் 20 ஆண்டுகளுக்கு கட்டினால், அவர் எவ்வளவு பணத்தை அதிகமாக கட்டியிருப்பார் என்பதை ஒரு சின்ன கணக்கு மூலம் பார்ப்போம்.
ஒருவர் 25 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10.5 சதவிகிதத்தில் பொதுத்துறை வங்கியில் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். ஆனால், அவரது நண்பர் இதே தொகையை தனியார் வங்கியில் 11.5% வட்டியில் கடன் வாங்கி 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். இந்த 1 சதவிகித வட்டி வித்தியாசத்தைக் கணக்கிட்டால், தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர் பொதுத்துறை வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவரைவிட சுமார் 4 லட்சம் ரூபாய் அதிகமாக கட்டி இருப்பார். 0.5% வித்தியாசம் என்றால்கூட 2 லட்சம் ரூபாய் அதிகமாக கட்ட வேண்டும்.
வீட்டுக் கடன் வாங்குவதில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிலுள்ள சாதக, பாதகங்களைப் பட்டியலிட்டு சொல்லிவிட்டோம். நல்ல லாபகரமான முடிவு எடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
- சி.சரவணன், படம்: ப.சரவணகுமார்.

 பொதுத்துறை வங்கிகளே பெஸ்ட்!
 ரவி, முகப்பேர்
''பொதுத்துறை களில் கடன் வாங்கும் முன்பே, அதற்கான கட்டணங்களையும் வட்டியையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். மறைமுக கட்டணங்கள் இல்லை. வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை, ஆர்.பி.ஐ. அதிகரித்த சிலநாட்களுக்குள் பொதுத் துறை வங்கிகளும் உயர்த்திவிடுகின்றன. ஆனால், தனியார் வங்கி மற்றும் தனியார் வீட்டு வசதி நிறுவனங்களில் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஏற்றிவிடுகின்றன. இதனால் கூடுதலாக வட்டி கட்ட வேண்டியிருக்கிறது! என்னைப் பொறுத்தவரை, பொதுத்துறை வங்கிகளே பெஸ்ட்!''
ஆனால், அரசுத் துறை வங்கிகள் ஆமை வேகத்தில் செயல்படுவதால், பலரும் வேறு வழியில்லாமல்தான் கடன் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

 விரைவான சேவைதான் தேவை!
அஜய் தீபக், பெருங்குடி
''தனியார் வீட்டு வசதி நிறுவனத்தின் விரைவான சேவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு வாரத்தில் எனக்கு கடனுக்கான காசோலையைத் தந்துவிட்டார்கள். இதே கடனை பொதுத்துறை வங்கியில் வாங்க வேண்டும் எனில், குறைந்தது இரண்டு மாதம் அலையவேண்டியிருந்திருக்கும். விரைவான சேவைதான் எனக்குத் தேவை''
எனினும், வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.யை ஒரு மாதம் கட்டத் தவறினாலும், அபராதத் தொகையைப் போட்டு அலறவைத்துவிடுகின்றன. ஒரு முன்னணி தனியார் வங்கியில் இ.எம்.ஐ. கட்டத் தவறும் ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் அபராதமாம். இதே பொதுத் துறையில் வங்கியில் ஒரு நாளைக்கு 5 ரூபாய்தானாம்!

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
* வீட்டுக் கடன் வட்டி விகிதம் அடிப்படை வட்டி விகிதத்துடன் (பேஸ் ரேட்) இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதைக் கவனியுங்கள். பிரதான வட்டி விகிதத்தை (பி.எல்.ஆர்)விட பேஸ் ரேட் வெளிப்படையானதாக இருக்கும்.
* ஆரம்பத்தில் குறைவான வட்டி என்கிற கவர்ச்சியில் மயங்கி பலரும் வீட்டுக் கடனை வாங்கி வருகிறார்கள். இது முதல் ஓரிரு ஆண்டு மட்டுமே. அடுத்துவரும் ஆண்டுகளில் சாதாரணமாக விதிக்கப்படும் வட்டியைவிட அதிக வட்டி விதிப்பார்கள். எனவே, உஷார்!

No comments:

Post a Comment