Saturday, November 23, 2013

மகாத்மா முதல் மன்மோகன் வரை!

ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் எதற்காக இருக்கிறது? 
55 கோடி ரூபாய் பணத்துக்காகத்தான் மகாத்மா உயிரைவிட்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
''நான் (கோட்சே) ஏன் காந்தியைக் கொலை செய்தேன்? இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு எதற்காக வந்தது? தாதாபாய் நௌரோஜி, விவேகானந்தர், கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலக், வீரசாவர்க்கர் ஆகியோரின் படைப்புகளையும், இவற்றுக்கு எல்லாம் மேலாக காந்தியின் எழுத்தோவியங்களையும்தான் அதிகம் படித்தேன். நான் படித்த படிப்பெல்லாம் என் கடமை எது என்பதை உணர்த்தியது.
இந்த நாட்டைப் பிளந்து துண்டாடியவரை தெய்வம் என்று மற்றவர்கள் மதித்தாலும், என் உள்ளம் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காந்தி மீது எனக்கு கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பது எனக்குத் தெரியும். என் எதிர்காலம் சிதைந்துபோய்விடும் என்பதும் உறுதி. ஆனால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருந்தும் அட்டூழியத்தில் இருந்தும் இந்தியா விடுதலை அடைய வேண்டும். என்னை நீங்கள் முட்டாள் என்று சொல்லலாம். ஆனால், இந்தியா பலமுள்ள நாடாக ஆகவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இந்தியா பலமுள்ள வல்லரசாக மாற வேண்டுமானால், காந்தியின் கொள்கை​களை நாம் கைவிட வேண்டும். அவர் உயிரோடு இருந்தால், அவரது விருப்பத்தை மீறி நம்மால் செயல்பட முடியாது. அதனால்தான் அவரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டேன். தேசத்தந்தை என்று அவர் அழைக்கப்பட்டார். ஆனால், உண்மையான தந்தைக்குரிய கடமையில் இருந்து அவர் தவறிவிட்டார். அதனால்தான் பட்டப்பகலில் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்தியைச் சுட்டேன். இது உண்மை...''
- இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானித்த மகாத்மா காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோட்சே அளித்த வாக்குமூலத்தின் சாராம்சம் இது!
'இந்தியாவை இரண்டு துண்டாடுவதற்கு காந்தி சம்மதம் தெரிவித்தார். தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதையுடன் குரான் ஓதுவதற்கு அனுமதித்தார். இந்துக்கள் கொல்லப்படும்போது அமைதியாக இருந்தவர், முஸ்லிம்கள் கொலையாகும்போது அதிகமாகக் கவலைப்பட்டார்.’ - என்றெல்லாம் காந்தி மீது கோட்சேவுக்கு கோபம் இருந்தாலும், உடனடியாக காந்தியைக் கொலை செய்தே ஆகவேண்டும் என்று ஜனவரி 30-ம் தேதியை சதி நாளாகத் தீர்மானிக்க வைக்கக் காரணம்... அந்த 55 கோடி ரூபாய் பணம்!
1947 ஆகஸ்ட் முதல் கொந்தளிப்பான காலகட்டம். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ரத்தக்களறி தினந்தோறும் நடக்கிறது. அந்தச் செய்திகள் உடனுக்குடன் கோட்சேவுக்கு வருகிறது. 'நம் தாய்நாடு கூறு போடப்பட்டுவிட்டது. கழுகுகள் பாரத தேவியின் சதையைத் துண்டு துண்டாகக் கிழித்துவிட்டன’ என்று தன்னுடைய கொந்தளிப்பை வார்த்தைகளால் வடிக்கிறார் கோட்சே. கொல்கத்தா நவகாளி கலவரப் பகுதிக்குப் போய்விட்டு டெல்லி திரும்பிய காந்தி, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் உட்காருகிறார். இந்தக் கோரிக்கைகளில்  ஒன்றுதான், பாகிஸ்தானுக்கு இந்தியா தருவதற்கு ஒப்புக்கொண்ட பணத்தைத் தரவேண்டும் என்பது!
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு இந்தியா 75 கோடி ரூபாய் பணத்தைத் தரவேண்டும். இதில், 20 கோடி ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. மீதம் உள்ள 55 கோடியை இந்தியா தரவேண்டும். இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திக்கொண்டு இருப்பதால், அந்தப் பணத்தைக் கொடுத்தால் அதனை நமக்கு எதிரான போருக்குப் பயன்படுத்துவார்கள் என்று இந்தியா நினைத்தது. 55 கோடியைத் தராமல் இழுத்தடித்தனர். ''இந்த 55 கோடி ரூபாயை உடனடியாக பாகிஸ்தானுக்குக் கொடுத்தால்தான் உண்ணாவிரதத்தை நிறுத்துவேன்'' என்று காந்தி சொல்லிவிட்டார். காந்தியை இனியும் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்தால், அவர் உயிருக்கே அது ஆபத்தாக முடியலாம் என்பதை அவரது உடல் சொல்லியது.
இப்படிப்பட்ட இரண்டு கடினமான நெருக்கடியில் பிரதமர் நேருவும் அமைச்சர் படேலும் சிக்கிக்கொண்டனர். விடுதலை வாங்கிக் கொடுத்த மகாத்மாவை அநாதையாகச் சாகவிடும் அளவுக்கு அவர்களுக்கு மனம் கல்லாக ஆகிவிடவில்லை. உடனடியாக 55 கோடியை அனுப்பிவைக்கிறோம் என்று படேல் வாக்குறுதி கொடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட காந்தி தனது உண்ணாவிரதத்தை ஜனவரி 18-ம் தேதி முடித்துக்கொண்டார்.
''பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுத்தே ஆகவேண்டும் என்று நிபந்தனை விதித்து காந்தி உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார்'' என்ற தகவல் கோட்சேவுக்குக் கிடைக்கிறது. இதுபற்றி   அவருடைய நண்பர் ஆப்தேவிடம் சொல்கிறார். ''இந்துக்களுக்கு எதிராக எதையாவது செய்துகொண்டே இருக்கிறார் காந்தி. இந்துக்கள் மானத்தோடு வாழ வேண்டுமானால், அது காந்தி உயிரோடு இருக்கும்வரை நடக்காத காரியம். அவரைக் கொலை செய்தே ஆகவேண்டும்'' என்று அப்போதுதான் கோட்சே முடிவுக்கு வருகிறார். அதனை அவரது சகாக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஜனவரி 30-ம் தேதி காந்தி, உயிரற்ற உடலாகச் சரிகிறார்.
காந்தியின் மீது பல்லாண்டுகளாக இவர்களுக்கு கோபம் இருந்தாலும்... உடனடிக் கோபம், பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுக்கக் கூடாது என்பதுதான்!
55 கோடியை இன்னொரு நாட்டுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக மகாத்மாவைப் பறிகொடுத்தோம். ஆனால், எத்தனை லட்சம் கோடிப் பணம் இந்தியாவை விட்டு வெளியில் இந்த 60 ஆண்டுகளில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் போயிருக்கிறது?
உலக அளவில் கறுப்புப் பணம் பதுக்கலில் இந்தியாவுக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. சுவிஸ் உள்ளிட்ட பல நாட்டு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் 25 லட்சம் கோடி முதல் 70 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்று சொல்கின்றன புள்ளி விவரங்கள். இங்கே இருந்து கறுப்பாக வெளியே போய் வெள்ளையாக உள்ளே வருவதை 'முதலீடு’ என்றுகூடப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
2000 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80 சதவிகிதம் மொரிஷியஸ் நாட்டில் இருந்தும், 9.17 சதவிகிதம் சிங்கப்பூரில் இருந்தும் வந்துள்ளது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு சொல்லியது. கறுப்புப் பணத்தின் கொல்லைப்புற வழி இதுதான் என்று சி.பி.ஐ. மிகத் தாமதமாகக் கண்டுபிடித்துள்ளது. மொரிஷியஸ், கேமேன் தீவுகள் உள்ளிட்ட வரியில்லாத சொர்க்கங்கள் வழியாகத்தான், இவை மீண்டும் இந்தியாவுக்குள் வருகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ லட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் மட்டுமே போட்டு வைத்துள்ளார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி அமைப்பின் இயக்குநர் ரேமண்ட் பேக்கர் சொன்னதாக வெளியான அறிக்கையின்படி, அரசியல்வாதிகள் போட்டுவைத்திருப்பது மொத்தமே மூன்று சதவிகிதம்தான். மற்றவை அனைத்தும் பன்னாட்டு கம்பெனிகள், தொழில் அதிபர்கள், வர்த்தக முதலைகள் பதுக்கிவைத்திருப்பது.
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் பிரதமராக இல்லை மன்மோகன் சிங். ''கறுப்புப் பணம் இருப்பது உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்னை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது. இந்தியக் கறுப்புப் பணம் குறித்து ஆளாளுக்கு ஒரு தொகை சொல்கிறார்கள். எப்படி இவர்கள் இந்தத் தொகையைக் கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை?'' என்று எதுவும் தெரியாதவராகக் கேட்கிறார் மன்மோகன்.
ஏழை நாடு, வளரும் நாடு... என்று சொல்லிப் புலம்பியபடி பல லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டில் பதுக்குவது, ஆயிரம் கோடி, லட்சம் கோடி ரூபாய் என்று ஊழல் செய்வதும் சர்வசாதாரணமாகப் போய்விட்டது என்றால், வெள்ளையர்களை விரட்டியதே உள்ளூர்க்காரர்கள் கொள்ளையடிப்பதற் காகத்தானா? இதனைத்தானே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்தார்கள். அவர்களை விரட்டியதும் அதற்குத்தானே?
பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி தாதாபாய் நௌரோஜி எழுதினார்...
''பிரிட்டிஷாருக்கு முந்தைய படையெடுப்பாளர்கள் நாட்டைச் சூறையாடி கொள்ளையடித்து திரும்பியபோது, பெரும் காயங்களை ஏற்படுத்தினர். இருப்பினும், தன் விடாமுயற்சியால் இந்தியா மீண்டும் பலம் பெற்றது. காயங்கள் ஆறின. படையெடுப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கி ஆட்சியாளர்கள் ஆனபோதுகூட, அவர்களது ஆட்சி அன்றைய சூழலுக்கு ஏற்றார்போல் அமைந்திருந்ததே தவிர, நாட்டின் செல்வங்கள் ஏதும் வெளியேறவில்லை. இந்தியா உற்பத்திசெய்த பொருட்கள் இந்திய நாட்டிலேயே தங்கின.
ஆனால், ஆங்கிலேயரைப் பொறுத்தவரை பிரச்னை நூதனமானதாகும். போர்களின் மூலம் நாட்டின் மீது ஆங்கிலேயர் சுமத்திய கடன், பெரும் காயத்தை ஏற்படுத்தியது. உயிர்காக்கும் ரத்தத்தைத் தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம், அடைந்த காயம் ஆறாதவாறு செய்கின்றனர்.
முன்னாள் படையெடுப்பாளர்கள் எல்லாம், இங்கும் அங்கும் வெட்டிய கசாப்புக்காரர்கள் என்றால்... ஆங்கிலேயர், நிபுணத்துவம் மிக்க கத்தியை இதயத்துக்குள் பாய்ச்சுபவர்களாக உள்ளனர். காயம் வெளியே தெரியாத அளவுக்கு நாகரிகம், வளர்ச்சி எனப் பேசி அதை மறைக்கின்றனர். அனைத்துக்கும் சவால் விட்டு இந்தியாவின் நுழைவாயிலில் காவலர்களாக நின்றுகொண்டு எத்தகைய செல்வத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறார்களோ அவற்றையே பின்கதவு வழியாக அபகரித்து எடுத்துச் செல்கிறார்கள்''  - என்று எழுதினார் தாதாபாய் நௌரோஜி.
இன்றும் இந்த நிலைமைதான் தொடர்கிறது என்றால், இந்தியா பெற்றது சுதந்திரமா... வெறும் தந்திரமா? அல்லது சுரண்டலுக்கான சுதந்திரமா?
சுரண்டலை உணர்வோம்!

No comments:

Post a Comment