Saturday, November 30, 2013

ஆ...சாமியோவ் ! - 3'பத்து ரூபாய் வெச்சா... இருபது! இருபது ரூபாய் வெச்சா... நாற்பது!’ என்று பொருட்காட்சிகளில் சூதாட்டம் நடத்துகிறவர்களைப்போல வடக்கேயும் இந்த ரீதியில் ஏமாற்றிப் பிழைக்கும் திடீர் சாமியார்கள் அவ்வப்போது தோன்றுவார்கள். 'கஷ்டப்பட்டு படித்து வேலைக்குப் போய் சம்பாதித்து, குடும்ப செலவுகள் போக கொஞ்சம் பணத்தைச் சேர்த்துவைத்து - பணக்காரன் ஆகலாம் என்று நினைப்பது முட்டாள்தனம். ஆனால், அதுவே சாமியாராக மாறிவிட்டால் சம்பாதிப்பது சுலபம். சர்ர்ரென்று பணக்காரனாகிவிடலாம்!’ என்ற எண்ணம் வடக்கே ஒரு பெரிய கூட்டத்துக்கே வந்திருக்கிறது என்பதற்கு டெல்லி, உ.பி, ஹரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் வெளியாகும் நாளிதழ்களில் தினமும் வருகின்ற செய்திகளே சாட்சி. 
'சரி, சாமியாரானால் பணக்காரனாகிவிடலாம்’ என்று யார் இவர்களுக்கு சொன்னது? இந்தக் கேள்விக்கு விடை தேடியபோது, பல சாமியார்கள் நம் கண் முன்னே தோன்றினார்கள். அதில் ஒரே ஒரு சாமியாரைப் பற்றி, இல்லை... இரட்டை சாமியார்களைப் பற்றி மட்டும் இப்போது பார்க்கலாம்.
சிலரைப் பார்ப்பதே பரம பாக்கியம் என்று நினைப்போம் இல்லையா..? அதுபோன்று தேஜஸ். இந்த இரட்டைத் துறவிகளுக்கும். இதில் விசித்திரம் என்னவென்றால், இந்தத் துறவிகளில் குரு - சிஷ்யன் என்ற பேதம் இல்லை. இரண்டு பேருமே குருதான். பெரும்பாலான நேரம் மௌனமாகவே இருக்கும் இந்த இரட்டைத் துறவிகள் யாகம் வளர்த்தால்... இவர்களிடம் இருந்து வேத மந்திரங்கள் பிரவாகமெடுக்கும். அந்தப் புனிதமான மந்திர ஓசைகளின் அர்த்தம் புரியாவிட்டாலும், அது எதிரில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் மீது பட்டு தெறிப்பதே அவர்களுக்கு ஜென்ம சாபல்யத்தை அளிப்பதுபோல உணர்வைக் கொடுக்கும்.
தும்பைப்பூ போன்ற தூய்மையான உடையில் இருக்கும் இந்தத் துறவி​களுக்குச் சொந்தமாக ஆசிரமங்கள் எதுவும் இல்லை. கால்போனப் போக்கில் நடப்பார்கள். வானம் இருட்டிவிட்டால் எந்த ஊரில் அப்போது இருக்கிறார்களோ... அதே ஊரில் ஓய்வெடுப்பார்கள். தங்களுக்கு உணவளிக்கும் வீட்டினருக்கு பிரதியுபகாரமாக, அந்த இரவு நேரத்திலேயே அவர்களின் வீட்டுக்குச் சென்று யாகம் நடத்துவார்கள். அந்த யாகப் புகை வீடு முழுவதும் பரவும்போதே... வீட்டில் சரஸ்வதி கடாட்சமும் லட்சுமி கடாட்சமும் ஒருசேரப் பரவுவதைப்போல இருக்குமாம்.
பக்திக்கடலில் வீடு மூழ்கி இருக்கும் அந்த நேரத்தில், இந்தத் துறவிகள் எதைக் கேட்டாலும் இவர்களின் காலடியில் வைக்க அந்த வீட்டார் மனரீதியாகத் தயாராகிவிடுவார்கள். ஆனால் துறவிகளோ ஒரே ஒரு குண்டுமணி தங்கத்தை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அந்தக் குண்டுமணித் தங்கத்தை ஒரு சிறிய வஸ்திரத்தின் மீது வைத்துவிட்டு கண்மூடி தியானம் செய்தால்... வேத மந்திரங்கள் அவர்கள் மீது பட்டு அதிருவதைப்போலவே மூடியிருக்கும் வஸ்திரத்தின் உள்ளே இருக்கும் தங்கத்தின் மீதும் பட்டுத் தெறிக்கும்.
யாகம் முடிவடையும் நிலையில் சீனியர் துறவிகள் இருவரும் மூடப்பட்டிருக்கும் அந்த வஸ்திரத்தை வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்களிடம் கொடுப்பார்கள். வஸ்திரத்தை திறந்துப்பார்க்கும் அந்தப் பெண்கள், 'சொர்ண பாக்கியம்’ என்பதன் பொருளை முதன்முதலாக உணர்வார்கள். ஆம்! அவர்கள் வைத்த ஒரு குண்டுமணி தங்கம் இரண்டு குண்டுமணித் தங்கமாக இரட்டிப்பாகி இருக்கும். பக்தர்கள் கண்மூடிக் கண்திறப்பதற்கு இடையே இருந்த 60 வினாடிகளில் அந்த இரட்டைத் துறவிகள் இந்த அற்புதத்தை நிகழ்த்தி இருப்பார்கள்.
இப்போது அந்த வீட்டாரை ஆசை ஆட்டிப்படைக்கும். கை, கழுத்து, காது ஆகியவற்றில் இருக்கும் நகைகளை மட்டுமல்ல... உள்ளே அலமாரியில் இருக்கும் எல்லா நகை நட்டுக்களையும் கொண்டுவந்து அந்த இரட்டைத் துறவிகளின் காலடியில் வைத்து இரட்டிப்பாக்கிக் கொடுக்கச் சொல்லி இரைஞ்சுவார்கள்.
மீண்டும் வேத மந்திரங்கள் ஒலிக்கும். புகைமண்டலத்தில் வீடு மூழ்கும். மந்திர ஒலியும், யாகப்புகையும் முடியும் நேரம்... கண்விழித்துப் பார்த்தால் துலாபாரத்தின் துல்லியத்தோடு இவர்கள் வஸ்திரத்தில் வைத்த நகைகளுக்கு ஈடாக இரு மடங்கு தங்க நகைகள் அங்கே இருக்கும்.
சாப்பிட்ட ஒரு பிடி அவலுக்கு பல படிகள் அளந்த பரந்தாமனைப்போல, கொடுத்த ஒரு கவள உணவுக்குச் சொர்ணத்தை சொரிந்த இந்த இரட்டைத் துறவிகளின் காலடியில் அந்தக் குடும்பம் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும். அடுத்த நாள்... பொழுது புலரும்; இருள் விலகும்; மனசுக்குள் புல்லாங்குழல் ஓசையில் பூபாளம் கேட்கும். ஆனால், அள்ளித்தந்த துறவிகள் இருக்க மாட்டார்கள்.
அந்த நாளில் இருந்து, துறவிகள் படுத்திருந்த இடத்தை விளக்குமாறால் சுத்தம் செய்வதுகூட பாவம் என்று கருதி அந்த வீட்டுப் பெண்கள் அந்த இடத்தை மட்டும் தூய்மையான துணி கொண்டுதான் ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்துவார்கள். என்றாவது ஒருநாள் திடீர் செலவுக்காக அடகு வைக்க நகைகளை எடுத்துச் செல்லும்போதுதான் துறவிகள் கொடுத்தது செப்புக் கலந்த பொன் அல்ல; கலப்படம் இல்லாத பித்தளை என்பது தெரியும்.
வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு டெல்லியைச் சுற்றியிருக்கும் பல சிற்றூர்களிலும் இப்படி காவல் நிலையத்துக்கு குடும்பம் குடும்பமாக செல்லும் ஏமாந்தவர்கள் தொகை அதிகம். அந்தக் கில்லாடி சாமியார்களை போலீஸாரால் வெகுகாலம் பிடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் ஹரியானா, உ.பி, டெல்லி என்று மூன்று மாநிலங்களிலும் இந்த இரட்டைத் துறவிகள் தங்களின் ஜாகையை மாற்றிக்கொண்டே இருப்பதுதான்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கெட்டப், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ட்ரிக் என்று மீசை, தாடி, முடி அலங்காரம் என்று அனைத்திலும் வித்தியாசம் காட்டியதால்... எல்லா ஊர்களிலும் தில்லுமுல்லு செய்வது இதே இரட்டையர்கள்தான் என்பதை பலகாலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. என்னதான் கெட்டிக்காரன் புளுகாக இருந்தாலும், எட்டு நாளைக்குதான் என்பார்கள். ஆனால், பல வருடங்கள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த இவர்களின் புளுகு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஃபத்தேப்பூர் நகரில் அம்பலமானது.
யாருமே போடாத கெட்டப் போட வேண்டும் என்று சினிமா ஹீரோக்கள் மெனக்கெடுவது மாதிரி, அன்று மிகவும் மெனக்கெட்டு பாம்பு சாமியார் வேடம் போட்டிருந்த இரட்டை சாமியார்களிடம் பாரத் சிங் என்பவர் சிக்கினார். ஜடா முடியும் கழுத்தில் பாம்புமாக காட்சியளித்த இவர்கள் பாரத் சிங்கின் கண்களுக்கு, சாட்சாத் பரமசிவனாகவே தெரிந்திருக்கிறார்கள். தன்னுடைய வீட்டுக்கு இவர்களை அழைத்து போய் மரியாதை செய்த பாரத் சிங், தன்னுடைய தீராத வியாதிக்கு இவர்களிடம் தீர்வு கேட்டிருக்கிறார். வழக்கம்போல குண்டுமணித் தங்கத்தில் தங்களின் விளையாட்டைத் தொடங்கிய இந்த இரட்டையர்கள், அந்த வீட்டில் ஒரு குண்டுமணித் தங்கத்தைக்கூட மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு நடையைக் கட்டிவிட்டார்கள். மற்றவர்களைப் போல அல்லாமல், தான் ஏமாந்ததை சீக்கிரமே தெரிந்துகொண்ட பாரத் சிங் உடனடியாக போலீஸுக்குப் போனதால்... இருவரையும் ஃபத்தேப்பூர் போலீஸார் கைதுசெய்துவிட்டனர்.
போலீஸ் விசாரணையின்போது இந்த இருவரும் உ.பி. மாநிலம் ஃபெரிடாபாத்தைச் சேர்ந்த சூரஜ், தாராநாத் என்கிற சகோதரர்கள் என்பது தெரியவந்தது. ஹிப்னாடிஸ கலையில் தேர்ந்த இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட எப்படி ஒரு வீட்டைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியதைக் கேட்டால்... 'சூது கவ்வும் பார்ட் 2’ எடுக்கலாம்.
- முகத்திரை விலகும்!

No comments:

Post a Comment