Saturday, November 23, 2013

கதறவைக்கும் ஈழக் காட்சிகள்!

காமன்வெல்த் மாநாடு ராஜபக்ஷேவின் காலைச்​சுற்றிய பாம்பாக மாறி​விட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் மிகப்பெரிய இன அழிப்பு யுத்தம் அங்கு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி தமிழர்களுக்கு உரிமைகளை மறுத்துவந்தது இலங்கை அரசு. விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையிலும் தமிழர்களுக்கு எந்த உரிமையையும் அந்த அரசு தர மறுத்துவருகிறது. ஆனால், அந்தக் கொடூரங்களை உலக நாடுகள் புரிந்துவைத்துள்ளன. தன் மீதான களங்கங்களைத் துடைப்பதற்காக காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கான முயற்சிகளை ராஜபக்ஷே எடுத்தார். ஆனாலும் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. 
'காணாமல் போனவர்கள் எங்கே?’
காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடப்பதால் உலகத்தின் பார்வை இலங்கை மீது பட்டது. அப்போதும் தமிழர்கள் முழுமையாக அலட்சியப்படுத்தப்பட்டார்கள். இலங்கையின் தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு கோலாகலமாக நடந்த சமயத்தில், 'ராணுவத்தில் சரணடைந்த எங்கள் உறவினர்களை எங்கே?’ எனக் கேட்டு அமைதியான முறையில் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த மக்களை சர்வதேச ஊடகங்களுக்கு முன்னாலேயே ஷூ கால்களால் எட்டி உதைத்து ராணுவத்தினர் அட்டூழியம் செய்து இருக்கின்றனர்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனந்தி சசிதரன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்வானவர். ராணுவத்திடம் சரணடைந்த இவரது கணவர் எங்கு இருக்கிறார் என இன்னமும் தெரியவில்லை. அனந்தியிடம் பேசினோம்.
'வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிர் உருக்கும் பிரச்னை​யாக இருப்பது, 'சரணடைந்தவர்கள் எங்கே? காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே?’ என்ற கேள்விகள்தான். பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேணும் என்று சொல்லித்தான் யாழ்ப்பாணம் நூலகம் முன்பு போராட்டம் நடத்தினோம். பல குடும்பங்கள் அழிந்து உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வரும்போது, நாங்கள் யாருமே இயல்பு வாழ்க்கை வாழவில்லை, சரணடைந்த எங்கள் உறவுகள் எங்கே... என்பதை கருத்தில் கொண்டுதான் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டோம். ராணுவ புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக எங்களைப் பயம் காட்டிக்கொண்டே இருந்தனர். தடியடி நடத்தத் திட்டம் தீட்டினார் நாங்கள் யாழ்ப்பாண நூலகம், முனியப்பர் கோயிலில் அருகே வாயை கறுப்பு துணியால் கட்டி, சரணடைந்த எங்கள் உறவினர்களின் புகைப்படங்களை வைத்து கவனஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினோம்.
நாங்கள் உணர்வுபூர்வமாக ஒரு போராட்​டத்தை நடத்திக்கொண்டு இருக்கும்போது, அங்கு இருந்த போலீஸார் பெண்களின் மார்புகளில் கையை வைத்து மோசமாகத் தள்ளினார்கள். நான் அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகளிடம், 'எங்கள் பெண்களை அடிக்க எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை. பெண் போலீஸாரை வரச் சொல்லுங்கள்’ என்றேன். 'அப்படி உங்க இஷ்டத்துக்கு கொண்டு வர இயலாது’ என்று சொன்னது மட்டும் அல்லாமல் 'ஊர்வலம் முடியட்டும்.. உன்னை கவனித்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி என்னைச் சரமாரியாக அடித்தார்கள். அன்று நாங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு முன்னால் மோசமாகத் தாக்கப்பட்டோம். சர்வதேச ஊடங்கள் இருக்கும்போதே எங்களை இப்படித் தாக்கினார்கள் என்றால், மற்ற நேரங்களில் எங்களை எவ்வளவு சித்ரவதைகள் செய்து இருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்'' என்று தழுத்தழுத்தார்.
''பெண்களை உதைத்தார்கள்... மிதித்தார்கள்''
அவரே தொடர்ந்து பேசினார். 'பெண்கள் என்றும் பாராமல் கழுத்தில், மார்பில், வயிற்றிலும் போலீஸார் எட்டி உதைத்தனர். நான் வட மாகாண சபை உறுப்பினர். எனக்கு போராடும் உரிமை இருக்கிறது என்பதை சொல்லியும் அவர்கள் எல்லை மீறினார்கள். மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கேமரூனுக்கு காட்ட நினைத்தார்கள். நாங்கள் உடுப்புக்கோ, செருப்புக்கோ, சாப்பாட்டுக்கோ அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லை. ராணுவத்தில் சரணடைந்த எங்கள் உறவுகள் எங்கே என கேட்டுத் தான் போராட்டம் நடத்தினோம்' என்றார்.
''அமைதியாகச் சென்ற எங்களைத் தாக்கினார்கள்''
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரான துரைராசா ரவிகரனிடம் பேசினோம். இவரும் அந்தப் போராட்டக் களத்தில் இருந்தவர்.
'காணாமல் போனோரின் உறவினர்கள், கணவனை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்.. என பலரும் போராட்டம் நடத்தினோம். கொழும்பில் சிறிகோத்தா என்ற இடத்தில் இடம்பெற்ற மனித உரிமைக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சகாயம் என்பவர் தலைமையில்  மக்கள் திரண்டார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து என் தலைமையில் நாங்கள் புறப்பட்டுச் சென்றபோது மதவாச்சி என்ற இடத்தில் வைத்து சிங்கள ராணுவம் மடக்கி திருப்பி அனுப்பியது. இதேபோல மன்னாரில் இருந்து வணபிதா செபமாலை அடிகளார் தலைமையில் வந்தவர்களையும் திருப்பி அனுப்பினர். இந்த சூழ்நிலையில் நாங்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்தோம். டேவிட் கேமரூன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நாளன்று, யாழ்ப்பாணம் துரையப்பா ஸ்டேடியத்துக்கு அருகில் இருக்கும் முனியப்பர் கோயிலடியில் காலை 9 மணியில் இருந்து ஏராளமானவர்கள் கூடி இருந்து தங்களுடைய கவன ஈர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அங்கு சிறிது நேரம் கழித்து ஹெலிகாப்டர் சத்தம் கேட்டது. அப்போது கேமரூன் வருகிறார் என்ற நோக்கோடு அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்களான நான் மற்றும் அனந்தி சசிதரன், பொதுமக்கள் அனைவரும் எழுந்து யாழ் நூலகத்துக்கு முன்பாக உள்ள வீதியோரமாக எந்தவித இடையூறுமின்றி கைகளில் படங்களை ஏந்தியபடி கவலையை வெளிப்படுத்தும் விதமாக அழுதுகொண்டே ஊர்வலமாக நடந்து சென்றோம். மக்களும் கூட்டமாகக் கூடிவிட்டதால் போலீஸார் எங்களைத் தள்ள... நாங்களும் போலீஸாரைத் தள்ளினோம். வயதானவர்கள் பலர் கீழே விழுந்தனர். பிள்ளையைத் தேடி வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வயதான தாயருவரை போலீஸார் சப்பாத்துக் கால்களால் உதைத்ததில் அவர் இடறப்பட்டு கீழே விழுந்து கிடந்ததை நான் நேரில் பார்த்தேன்.
அந்த நேரம் சேனல் 4 ஊடகவியலாளர்கள் ஓடி வந்தனர். பிள்ளைகளைக் காணாது துயரத்தில் இருந்த பெற்றோர் அவர்களைக் கட்டிப்பிடித்து அழுதனர். இதைக் கண்டு அந்த ஊடகவியலாளர்களும் அழுதுவிட்டதை பக்கத்திலிருந்த நானும் நேரில் பார்த்தேன். இதற்கு நிச்சயம் தாங்களும் தங்களால் இயன்ற நடவடிக்கையினை எடுப்பதாக அவர்கள் மக்களிடம் கூறினர்'' என்றார்.
சுற்றிலும் உளவாளிகள்!
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்தி​ருந்த டேவிட் கேமரூன், இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் உதயன் பத்திரிகையையும் பார்வையிட்டார்.
உதயன் நாளிதழின் நிர்வாக இயக்குனர் சரவணபவனிடம் பேசினோம். 'காமன்வெல்த் மாநாட்டை வைத்து மட்டும் இலங்கையில் மாற்றம் நடந்துவிடும் என்று கருத முடியாது. எல்லாம் சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டதாக ராஜபக்ஷே அரசு சொல்கிறது. ஆனால், எந்த மாற்றங்களும் இதுவரை நடக்கவில்லை என்று இங்கு இருக்கும் மக்களுக்குத் தெரியும். காமன்வெல்த் மாநாட்டுக்கு இலங்கை வந்திருந்த கேமரூன் முக்கியமாக மூன்று இடங்களைப் பார்த்தார். முதலாவதாக வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இரண்டாவதாக, பல வருடங்களாக மக்கள் குடியேற்றப்படாமல் இருக்கும் முகாம்களைப் பார்த்தார். அதன் பிறகு எங்கள் ஸ்தாபனமான உதயன் பத்திரிகைக்கு வந்திருந்தார்.
கேமரூன் வரும்போது எங்களுடைய ஸ்தாபனத்தை சுற்றி உளவாளிகள் இருந்தனர். அதாவது ராணுவ உளவாளிகள் நிறைய பேர் எங்களைச் சுற்றிப் போடப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடைய பக்கத்தில் இருந்த ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் நின்று அவதானிக்க முற்பட்டார்கள். ஆனால், அந்த கட்டடமும் எங்களுடைய ஸ்தாபனத்துக்குச் சொந்தமானது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் கொஞ்சம் உருக்கமான தொனியில் சொல்லி அப்புறப்படுத்தினோம்'' என்றார்.
''நீங்கள் மிகவும் துணிச்சலான வீரர்கள்!''
தொடர்ந்து பேசிய அவர், 'நேரடியாக வந்த கேமரூன், எங்கள் அலுவலகத்தின் பல இடங்களையும் அதன் நிலைமைகளையும் சரியாகப் பார்த்து, உண்மையில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துகொண்டார். உதயன் பத்திரிகை காலம் காலமாகத் தொடர்ச்​சியாகத் தாக்கப்பட்டு வந்துள்ளது. இதை தாக்கியவர்களில் ஒருவரைக்கூட இலங்கை அரசு இதுவரை கைது செய்யவும் இல்லை. கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட்டன. எங்கள் ஊடகத்தைச் சேர்ந்த பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் கேமரூனிடம் சொன்னோம். எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டார்.
நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் புகைப்​படத்தை நீங்கள் பார்த்தால் பின்னாடி சிவப்பு மையால் வட்டமிட்டு இருப்போம். அவை இலங்கை ராணுவம் எங்கள் பத்திரிகை மீது தாக்குதல் நடத்திய துப்பாக்கி ரவைகள் துளைத்துச் சென்ற இடங்கள். இன்று வரை நாங்கள் அதை வட்டமிட்டு அழிக்காமல் வைத்து இருக்கிறோம். எங்கள் பத்திரிகையாளர்கள் பலர் கொல்லப்பட்டதையும் சொன்னோம். படங்களைப் பார்த்து அனுதாபங்களை தெரிவித்தார். எங்கள் ஸ்தாபனத்தில் தாக்குதல் நடந்த இடங்களை எல்லாம் பார்வையிட்டார்.  கேமரூன் போகும்போது எங்கள் ஊடகவியலாளர்களைப் பார்த்து பேசி ஒரு படமும் எடுத்தார். எங்களது ஊடகவியலாளர்களிடம் 'நீங்கள் மிகவும் துணிச்சலான வீரர்கள். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்!’ என்றும் சொன்னார். அவரது ஃபேஸ்புக், டிவிட்டர் தளத்திலும் இதையே நிலைத் தகவலாகவும் வெளியிட்டார்' என்கிறார் சரவணபவன்.
இங்கிலாந்து பிரதமரை நினைக்க பெருமையாக இருக்கிறது!
- நா.சிபிச்சக்கரவர்த்தி, செ.கிரிசாந்

No comments:

Post a Comment