Sunday, November 3, 2013

தமிழ்நாடு பத்திரமாக உள்ளதா?

-vikatan

மெஷின் இன்டலிஜென்ஸ்.. ஹியூமன் இன்டலிஜென்ஸ்.. ஸ்டெரைல் ஜோன்... இன்டர்மீடியட்..

முக்கியத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டு வருகிறது. அதற்கு உஷார்படுத்தவே இந்தக் கட்டுரை! 
''வெடிகுண்டுக்கு வேண்டியவன், வேண்டாதவன் என்று யாரும் கிடையாது. ஸ்மூத்தாக ஹாண்டில் செய்தால் ஓகே. கொஞ்சம் எசகுபிசாகாக கையாண்டால், சுக்குநூறாக ஆக்கிவிடும். உஷார்தனம் ரொம்ப முக்கியம்.'’ - மேலே உள்ள டயலாக்கை அடிக்கடி சொல்வார் இந்திய உள்துறை அமைச்சகத்தின் சீனியர் செக்யூரிட்டி அட்வைஸர் விஜயகுமார்.
பாதுகாப்பு பலவிதம்!
தீவிரவாதிகள் அச்சுறுத்தலை வைத்து இந்திய வி.ஐ.பி-க்களுக்கு தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) பாதுகாப்பு வீரர்கள் இசட், இசட் ப்ளஸ்... என இரண்டு பிரிவுகளில் பாதுகாப்பு தருகிறது. தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா... ஆகிய இருவருக்கு இசட் ப்ளஸுடன் கூடிய என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியும் இந்தப் பிரிவில் வருகிறார். என்.எஸ்.ஜி. படைவீரர்கள் சூழ, பீகார் தலைநகர் பாட்னா வில் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்தத் துயரச் சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் மத்தியில் ஒருவித கவலை ரேகைகள் படிய ஆரம்பித்துள்ளன. தீவிரவாதிகளின் இதுபோன்ற திடீர் தாக்குதலை சமாளிக்கக்கூடிய அளவுக்குத் தமிழகப் போலீஸ் இருக்கிறதா? மக்கள் நிம்மதியாக வலம் வரலாமா?
பகீர் பைப்!
புத்தூரில், தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் குடியிருந்த வீட்டின் மாடியைச் சோதனை செய்தபோது, தமிழகப் போலீஸ் இதுவரை கண்டிராத பகீர் ரக வெடிகுண்டு சிக்கியதாம். காந்தத்தின் கீழே டி.ஏ.டி.பி. ரக வெடிகுண்டை இணைத்து செய்திருக்கிறார். இதை ஒரு கார், வேன், டிரக்... இவற்றின் அடியில் பொருத்திவிட்டால், சுக்குநூறாக வெடித்துச் சிதறும். போலீஸ் பக்ருதீன் வீட்டில் இருந்து அதை அப்புறப்படுத்தி ரகசிய இடத்துக்கு கொண்டுபோய் செயலழிக்கச் செய்தனர் போலீஸார். அதைப்போல, ஏராளமான பைப் குண்டுகளையும் அதே மாடியில் கண்டெடுத்துள்ளனர். அவையெல்லாம் எங்காவது பொதுக்கூட்டத்தில், மக்கள் நடமாடும் இடங்களில் வெடித்திருந்தால்? இந்தக் கவலைதான் மக்களுக்கு இப்போது அதிகரித்துள்ளது.
மெஷின் இன்டலிஜென்ஸ்,
ஹியூமன் இன்டலிஜென்ஸ்!
டெல்லியில் இருந்த செக்யூரிட்டி அட்வைஸர் விஜயகுமாரிடம் பேசினோம்.
''1991-ம் ஆண்டில் ஸ்பெஷல் செக்யூரிட்டி குரூப் என்ற பெயரில் தமிழகத்தில் இந்தப் படைகளை ஆரம்பித்தோம். இதன்மூலம் வி.வி.ஐ.பி. பாதுகாப்பை கவனித்தோம். 1992-ல் பாம் ஸ்குவாட் முழுவீச்சில் செயல்பட்டது. தமிழ​கத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் யாராவது ஒருவர் விசேஷ பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்பதை அப்போதே திட்டமிட்டு செயல்படுத்தினோம். அது இன்றைக்கு நன்றாகக் கைகொடுக்கிறது.
கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை விசேஷ பயிற்சி என்பது ஒன்றுதான். என்.எஸ்.ஜி, எஸ்.பி.ஜி, பி.எஸ்.எஃப், ராணுவம்... ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களை வரவழைத்து பயிற்சி அளித்தோம். அந்தப் படையினரிடம் உள்ள நவீன கருவிகளை இந்தியாவிலேயே முதன்முதலாக இங்கே வரவழைத்து பயிற்சி அளித்தோம். மெஷின் இன்டலிஜென்ஸ் 50 சதவிகிதம், ஹியூமன் இன்டலிஜென்ஸ் 50 சதவிகிதம் என்ற விகிதத்தில் பணியாற்றினால் எந்தத் தாக்குதலையும் முறியடிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குகிறது. அதற்கு எந்தவகையிலும் தமிழகம் சளைத்ததல்ல. எந்த ஒரு ஆபத்துக் காலத்திலும் எதிர்தாக்குதல் நடத்தக்கூடிய திறமைசாலிகளை தமிழகத்தில் என்னால் பட்டியல் போட முடியும்'' என்றார்.
ஸ்டெரைல் ஜோன், இன்டர்மீடியட்...
ஒரு மாதத்துக்கு முன், திருச்சிக்கு நரேந்திர மோடி வந்தார். அப்போது அங்கே எடுத்திருந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்...
''பாட்னா பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் என்ன குழப்பம் நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், திருச்சியில் பொதுக்கூட்டம் நடப்பதற்கு பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பே ஐந்து கி.மீ. சுற்றளவை பாதுகாப்புப் படையினரின் வசப்படுத்தி, சாலைகளில் செக்போஸ்ட் மற்றும் சில ஏற்பாடுகளை செய்தோம். எங்களுக்கு எங்கெங்கு சந்தேகம் ஏற்படுகிறதோ அதையெல்லாம் செக்யூரிட்டி பாயின்ட்களாக பட்டியல் தயாரித்தோம். அடுத்து, பொதுக்கூட்டம் நடப்பதற்கு 72 மணி நேரம், 48, 24, 12, 6, அரை மணி நேரம்... என்று பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தினோம். உதாரணத்துக்கு, எதாவது எலெக்ட்ரானிக் பொருள் புதைத்து​வைக்கப்பட்டுள்ளதா? வான்வெளித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டா? மைக், ஸ்பீக்கர், போட்டோ​கிராபர் என ஒவ்வொன்றையும் பரிசோதித்தோம். வெளியில் இருந்து வருபவர்களை முழுமையாக ஸ்கேன் செய்தோம். கண்ணி வெடி, ரிமோட் வெடிகுண்டு இருக்கிறதா என்று தேடினோம். உளவுத் துறை என்ன சொல்கிறது என்று உன்னிப்பாகக் கவனித்தோம். எந்தெந்த தீவிரவாத இயக்கங்கள் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தும்? அதைச் சமாளிப்பது எப்படி என்று ஒத்திகை பார்த்தோம்.
பொதுக்கூட்ட மேடையை மையமாக வைத்து 300 மீட்டர் சுற்றளவை ஸ்டெரைல் ஜோன் (பாதுகாக்கப்பட்ட பகுதி) என்று சொல்வோம். அதில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். அடுத்து, இன்டர்மீடியட் என்று சொல்லக்கூடிய 300 மீ - 1,000 மீ இடைவெளி. இந்தச் சுற்றளவில் எங்காவது வெடிகுண்டு வெடித்தால், வி.ஐ.பி-க்கு பாதிப்பு இருக்காது. கடைசியாக, சப்போர்ட்டிங் ஏரியா... 1000 மீ சுற்றளவுக்கு வெளியே உள்ளது. இங்கெல்லாம் மோப்ப நாய் சுற்றிவரும். எங்காவது, வெடிபொருள் இருப்பதை அறிந்தால், உடனே எங்களுக்குத் தகவல் கொடுக்கும். தமிழகத்தில் 103 வெடிகுண்டு மோப்ப நாய்கள் இருக்கின்றன. இவைதவிர குற்றவாளிகள், போதைப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் 87 நாய்கள் உள்ளன. தினமும் அவை மோப்பப் பணியில் இருக்கின்றன. வதந்தி என்றால்கூட, முழுமையாக சோதனையை நடத்திவிட்டுத்தான் நாங்கள் வருவோம். இதனால்தான் இதுவரை தமிழகத்தில் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்து வருகிறோம்'' என்றார்.
எட்டு சூட்!
உலகத்தில் என்னென்ன நவீன வெடிகுண்டுகள் இருக்கின்றனவோ, அதன் டம்மிகளை வெடிகுண்டு வடிவிலேயே செய்துதரும் நிறுவனங்கள் இருக் கின்றன. அவற்றை 'டெமோ'வுக்காக வைத்துப் பயிற்சி பெற முடியும். அதை எல்லாம் காவல் துறையில் வாங்கி வைத்து பயிற்சி எடுக்கிறார்கள்.
வெடிகுண்டு இருக்கும் இடத்துக்குச் சென்று பார்க்கும் வீரர் அணியும் 'சூட்'கள் எட்டு உள்ளன. ஒன்றின் மதிப்பு சுமார் ஒன்பது லட்ச ரூபாய். ரிமோட் வெடிகுண்டைக் கண்டுபிடிக்கும் ஸ்பெஷல் கருவி வைத்திருக்கிறது. திருப்பதி அருகே சந்திரபாபு நாயுடு காரில் சென்றபோது, ரிமோட்டில் வெடி குண்டை வெடிக்க வைத்தார்களே... அதுபோன்ற அசம்பாவிதத்தை தவிர்ப்பது, வெடிமருந்து, கண்ணி வெடிகளை கண்டுபிடிக்கும் மானிட்டர், போர்டபிள் எக்ஸ்ரே மிஷின், ஒரு சூட்கேஸ் அல்லது இரும்புப் பெட்டியையோ ஸ்கேன் செய்து வெடிகுண்டை கண்டறியலாம். இப்போது கெமிக்கல் போரை தீவிரவாதிகள் நடத்தினால், அதை எதிர்கொள்ளக்கூடிய முகமூடியுடன் கூடிய சூட்கூட தமிழகப் போலீஸிடம் இருக்கிறது.
உளவுத் தகவல் ஒரு கண் என்றால் இன்னொரு கண்... பாம் ஸ்குவாட். இரண்டும் இணைந்து செயல்பட்டால்தான் இப்போது உள்ள சூழ்நிலைபோல் எதிர்காலத்திலேயும் எந்தத் தீவிரவாதத் தாக்குதலையும் தமிழகப் போலீஸாரால் எதிர்கொள்ள முடியும்!

No comments:

Post a Comment