Saturday, November 30, 2013

ஆ...சாமியோவ் ! - 2

'பாம்பா... பழுதா?’ என்று உடனடியாக முடிவுக்கு வரமுடி யாதபடி பல சாமியார்கள் சாமர்த்தியமாக ஏமாற்றுவார்கள். ஆனால் இந்தச் சாமியார், 'நான் பாம்பு’ என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டு ஊருக்குள் ஊர்ந்து வருகிறார்!
'நான் ஒரு பாம்பு’ என்று சொல்லாமல் சொல்வதைப் போல 'இச்சாதாரி நாக்’ என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரு சாமியார், டெல் லியில் மந்திரிகள், காவல் துறை அதிகாரிகள் என்று சகல மட்டத்திலும் கோலோச்சினார்.
'இச்சாதாரி நாக்’ என்றால், மனித வடிவில் இருக்கும் நாகம் என்று பொருள். பார்க்கின்ற பக்தர்களுக்கு எல்லாம் நாமம் போடுகிற இவரது இயற்பெயர்... ராஜீவ் ரஞ்சன் திரிவேதி என்ற சிவமூர்த்தி திரிவேதி என்ற இச்சாதாரி பாபா என்ற சுவாமி பீம்மானந்ஜி மஹராஜ் என்ற இச்சாதாரி நாக். ஆனால், அவரைப் பற்றி விவரம் அறிந்தவர்கள் சொல்வது, 'செக்ஸ் பாபா’!  
உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிர​தேசத்துக்கு இடையே இருக்கும் சரித்திரப் புகழ்வாய்ந்த சித்திரக்கோட்தான் ராஜீவ் ரஞ்சனின் சொந்த ஊர். பிறந்த ஊரில் பிழைக்க வழிதெரியாமல், 1988-ம் ஆண்டு டெல்லிக்கு ஓடிவந்த ரஞ்சனுக்கு, ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாசல் திறந்தது. அவனுக்கு கிடைத்த வேலை, ஹோட்டல் வாசலில் நிற்கும்  செக்யூரிட்டி வேலை. குறுக்கு வழியில் முன்னேறத் துடித்த ரஞ்சனுக்கு, செக்யூரிட்டி வேலை சரிப்பட்டு வருமா? அந்த வேலையை உதறிவிட்டு தன் 'கேரக்ட’ருக்கு ஏற்ற மாதிரி, மசாஜ் பார்லரில் ஒரு வேலையை தேடிக் கொண்டான். பல வகையிலும் அது ரஞ்சனுக்கு வசதியாக இருந்தது.
மசாஜ் பார்லருக்கு வரும் மைனர்களின் டேட்டா பேஸ் இவனிடம் மளமளவெனச் சேர ஆரம்பித்தது. இந்த மைனர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய பெண்கள் வேண்டுமே? எதைச் செய்தாலும் ஹை கிளாஸாக செய்ய வேண்டும் என்ற 'தாகம்’ கொண்டவன் ரஞ்சன். அதனால், தொழில்முறை பாலியல் தொழிலாளிகளை தனது கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொள்ளத் தயங்கினான். விமானப் பணிப்பெண்கள், சினிமாவில் நடிக்க விரும்பும் மாடல்கள், பகட்டாக வாழ ஆசைப்படும் கல்லூரி மாணவிகள்... ஆகியோரை ரஞ்சன் குறிவைத்தான். இனிக்க இனிக்கப் பேசுவது, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து அசத்துவது... என்று அவன் விரித்த வலையில், மேல்தட்டுப் பெண்கள் பலரும் விழுந்தனர்.
'கல்லடி பட்டாலும் படலாம். கண்ணடி படலாமா?’ ஒரேசமயத்தில் பல பெண்களும் ஆண்களும் இவனுடைய வட்டாரத்துக்குள் வந்து போனால்... அது அடுத்தவர்களின் கண் களை உறுத்தாதா? அதனால், அப்படிப்பட்டவர்களைத் திசைதிருப்ப இச்சாதாரி பாபாவாக மாறி, காவி உடுத்திக்கொண்டு, டெல்லியை ஒட்டியிருக்கும் கான்பூர் என்ற ஏரியாவில், ஒரு கோயிலை எழுப்பினார் ரஞ்சன். அவரே அந்தக் கோயிலின் பிரதான சாமியாராகவும் ஆனார். அன்னதானம், ஆன்மிகச் சொற்பொழிவு... என்று இடைவிடாது நடத்தி.. அந்தக் கோயிலை மிகக்குறுகிய காலத்தில் பிரபலப்படுத்தினார்.
வெளியே கோயிலாக இருந்தாலும், அதன் உள்ளே தியான அறையைத் தாண்டினால்... ஏசி செய்யப்பட்ட சொர்க்கம் போன்ற பல சுரங்கங்கள் அதில் விரிந்தன. அந்த மூன்று அடுக்கு சுரங்கம் பார்ட் டைம் அந்தப்புரமாகவும் திகழ்ந்தது. வெளியே இருக்கும் கோயில் ஊதுவத்தி மணத்தால் நிறைந்திருந்தாலும், உள்ளே இருந்த சுரங்கங்கள் மல்லிகைப் பூவின் வாசத்தால் நிறைந்திருந்தன. மாதச் சம்பளம் என்றால் 25 ஆயிரம் ரூபாய். கமிஷன் என்றால், 25 சதவிகிதம் - இதுதான் இச்சாதாரி பாபா தன்னிடம் பணிபுரிந்த ஹை கிளாஸ் பெண்களுக்கு நிர்ணயித்திருந்த ஊதிய விகிதம்.
கோயிலுக்குள் இருக்கும்போது சாமியார் போல தலையை விரித்துப் போட் டுக்கொண்டு காட்சியளிக்கும் இச்சாதாரி பாபா, அதே கோயிலில் இருக்கும் அந்தரங்கப் பகுதிக்கு வந்ததும் தலைமுடியை போனிடெய்ல் போல கட்டிக்கொண்டு ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து கொள்வார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இச்சாதாரி பாபாவின் சேவையை அனுபவிக்க விமானத்தில் பல செல்வந்தர்கள் வரத் தொடங்கினர். அவர்களுக்கு வெளிநாட்டுப் பெண்கள் தேவைப்பட்டனர். ஆசிரமம் என்றால் வெளிநாட்டுப் பெண்கள் இருப்பது சகஜம்தானே? காவி உடுத்திக்கொண்டு பன்னாட்டு பிரஜைகளைத் தனது கோயிலில் அவர் உலவவிட்டார். அமெரிக் காவின் லாஸ்வேகாஸ் தொடங்கி ரஷ்யாவின் மாஸ்கோ வரை பல நகரங்களில் இருந்தும் இப்படிப்பட்ட பெண்கள் இவரது ஆசிரமத்துக்கு 'தொழில்’ நிமித்தமாக வந்து போனார்கள்.
இவரது வட்டத்துக்குள் ஹை கிளாஸ் பெண்கள் இருந்ததால்... லோ கிளாஸ் அரசியல்வாதிகளும், போலீஸ் அதிகாரிகளும் தாங்களாவே வந்து சேர்ந்தனர். இவரின் ஆளு கையில் நூறுக்குக்கணக்கான ஏஜென்ட்கள் சேர்ந்தனர். டெல்லி யிலேயே ஐந்து இடங்களில் இவர் கிளைகளைத் தொடங்கினார். இதுதவிர புனே, லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத்... என்று நாட்டின் பல நகரங்களிலும் இவர் தன் சேவையை விரிவு படுத்தினார். தன்னை ஒரு பெரிய தானபிரபுவாகக் காட்டிக்கொள்ள 200 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையையும் கட்டினார் இச்சாதாரி பாபா. தான் செய்யும் சட்டவிரோதமான தொழிலுக்கு கோயிலும் மருத்துவமனையும் மட்டுமே கேடயமாக இருக்க முடியாது என்று தெரியாதவரா இச்சாதாரி பாபா? தனது தொழிலுக்கு பாதுகாப்பாக மிகப் பெரிய தாதாக்களை கூலிக்கு அமர்த்திக்கொண்டு, ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்துகொண்டார். தான் கட்டிய கோயிலில் ஏழுநாள் வேள்வியை, அவ்வப்போது வீதியை அடைத்து பந்தல்போட்டு விமரிசையாக நடத்துவார் இச்சாதாரி.
எல்லோர் வாழ்கையிலும் ஒரு எஸ்கலேட்டர் வருவதுபோல, இச்சாதாரி பாபாவின் வாழ்க் கையிலும் காமன்வெல்த் கேம்ஸ் எனும் வடிவில் ஒரு எஸ்கலேட்டர் வந்தது. காமன்வெல்த் கேம்ஸ் என்பதை இச்சாதாரி 'காமன்’ வெல்த் கேம்ஸாகவே பார்த்தார். ஒரே சமயத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்லிக்கு சுற்றுலாப் பயணிகள் வரும் நேரம் என்பதால்... இதுதான் தன்னுடைய தொழிலுக்கு பொன்னான நேரம் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்.
தன் கோயிலுக்கு வரும் வசதிபடைத்த பெண்களையும் கல்லூரி மாணவிகளையும்... லேப்டாப், செல்போன் போன்ற பரிசுப் பொருட்களைக் கொடுத்து மயக்கிவந்த இச்சாதாரி, காமன்வெல்த் டிமாண்டை முன்னிட்டு, தகுதியுள்ள பெண்களுக்கு கார்களைக்கூட பரிசாக கொடுத்து தன் தொழில் வளையத்துக்குள் கொண்டுவந்தார். ஆனால், தொழில்போட்டி குறுக்கே வந்தது. அதனால், காமன்வெல்த் போட்டிகள் நடப்பதற்கு வெகு முன்பாகவே... அதாவது, பிப்ரவரி மாதமே இவர் கைது செய்யப்பட்டார். அப்போது இவரிடம் இருந்து பணம், பொருள், அணிகலண்கள் உட்பட ஆறு டைரிகள் கைப்பற்றப்பட்டன. இந்த டைரிகளின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பெண்ணின் போன் நம்பர் மற்றும் அந்தப் பெண்ணின் கணக்கு வழக்குகளையும் எழுதி வைத்திருந்தார்.  இவர் நடத்திய கோயில் உண்மையிலேயே கொடியவர்களின் கூடாரமாக இருந்தது, அப்போதுதான் அக்கம் பக்கத்தில் இருந்த பலருக்கும் தெரியவந்தது.
ஆனால், அந்த நிலையிலும் இச்சாதாரியை பல பக்தர்கள் கெட்டவன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. 'எங்கள் குருஜி உத்தமர். அவரை விட்டுவிடுங்கள்!’ என்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு கோஷம் போட்டனர். பக்தர்கள் தன் மீது கொண்ட அந்த அதீத நம்பிக்கையை திகார் சிறைசாலைக்குச் சென்ற பிறகும்கூட இச்சாதாரி கைவிடவில்லை. சிறைச்சாலையில் தினமும் அவர் உபன்யாசம் செய்ய... அதையும் பக்தி சிரத்தையோடு பல கைதிகள் கேட்க... இச்சாதாரியின் பிசினஸ் முடிவே இல்லாமல் தொடர்கிறது.
இச்சாதாரிக்கு சிறைச்சாலையில் தனிஅறை கேட்டு நீதிமன்றத்தில் மனுப்போட்ட அவரது வழக்கறிஞர், ''என் கட்சிக்காரருக்கு நாடு முழுவதும் 2,500 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருப்பதால்... சிறைச்சாலையில் அவருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால், குறைந்தபட்சம் அவருக்கு தனி அறை கொடுக்க வேண்டும்’ என்று மனுப்போட்ட போது... அவரை ஆதரித்த அரசியல்வாதிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இச்சாதாரியின் விஸ்வரூபம் தெரிந்தது!

-முகத்திரை விலகும்!

No comments:

Post a Comment