Saturday, November 23, 2013

ஆ... சாமியோவ்!


பக்குவம் அடைந்த பற்றற்ற மனசு, ஏட்டுப் படிப்பைத் தாண்டிய எல்லை இல்லாத ஞானம், எளியவரின் சிரிப்பில் இறைவனைக் காணும் கண்கள்... என்று ஆன்மிக ஆசான்களை வரையறுப்​பார்கள். ஆனால் இன்று பலருக்கும் அந்தக் குணம் இல்லாமல் 'இதுவும் ஒரு பிசினஸ்’ என்பதுமாதிரி படோடாபமாக இறங்கிவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை கார்பரேட் சாமியார்கள் என்று செல்லமாக அழைக்கிறார்கள். லைசென்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன், தடையில்லாச் சான்றிதழ் என்று எதுவுமே தேவை இல்லாமல் அதிகமாக இவர்கள் உருவாகி வருகிறார்கள். வட இந்தியாவில் இந்த சாமியார்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடுகிறது.
 ஐந்நூறு ஏக்கரில் ஏர் கண்டிஷன் ஆசிரமம் கட்ட வேண்டும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா... என்று நாடு, நாடாக பறக்க வேண்டும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஆடம்பரத்தை அனுபவிக்க வேண்டும், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆஸ்தி படைத்தவர்கள், அழகிய சினிமா நட்சத்திரங்கள்... என்று அத்தனை பேரும் தன்னைச் சுற்றியிருக்க வேண்டும், அத்தனை சேனல்களிலும் அருள்வாக்கு சொல்ல வேண்டும். பத்திரிகைகள் எல்லாம் கார்பரேட் குரு என்று புகழ வேண்டும்... என்று நாடு முழுவதும் பல்வேறு நிறங்களில் ஆடைகள் பறக்க இந்த சாமியார்கள் புதிதுபுதிதாக பிறந்துகொண்டே இருக்கிறார்கள்.
நெருங்கிய சொந்தங்களின் எதிர்பாராத இழப்பு, தீராத நோயின் வலி, வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத நஷ்டம், தோல்வி அடைந்த இல்லற வாழ்க்கையால் ஏற்படும் வெறுமை, பாவ மூட்டைகளின் சுமையைத் தாங்க முடியாது ஏற்படும் குற்ற உணர்வு... என்று கஷ்டப்படுகிறவர்களைத்தான் இதுபோன்ற சாமியார்கள் வாயாலேயே வலைவிரித்து தங்கள் கஸ்டமர்களாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
இவர்களின் அருள்வாக்குக்கு அப்பாவிகளிடம் செல்வாக்கு கூடக்கூட... இவர்கள் அதிகாரத் தரகில் இருந்து ஆயுதத் தரகு வரை தங்களின் சாம்ராஜ்ஜியத்தை, நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் வேகமாக விரிவாக்கிவிடுகிறார்கள். இந்த சாமியார்கள் ஆசைப்படும் அத்தனையும் வெகு சுலபமாக கிடைத்துவிடுவதால், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு பல்வேறு ஆசைகள் தலைதூக்குகின்றன. சாமியார்கள், தங்களின் பேராசைகளை சந்தடியில்லாமல் நிறைவேற்றிக்கொள்ள... ஒருசில அஜாக்கிரதையான, போலி சாமியார்களின் சாயம்தான் பாதியிலேயே வெளுத்துவிடுகிறது.
அத்தகைய சாமியார்களைத்தான் இந்தத் தொடரில் 'தரிசிக்க’ இருக்கிறோம். லேடீஸ் ஃபர்ஸ்ட் என்பதால், ஒரு பெண் சாமியாரில் இருந்தே ஆரம்பிப்போம்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 3-ம் தேதி மும்பையில் போரிவில்லிப் பகுதி திருவிழா கோலம் பூணும். காரணம், அன்றுதான் அன்னை ராதே மாவின் அவதாரத் திருநாள். இந்த நாளில் ராதே மாவின் ஆசிபெற அவரது பக்தகோடிகள் முட்டிமோதுவார்கள் என்பதால், இந்த ஆண்டு அவரது சிஷ்யகோடிகள் செய்த ஏற்பாடுகள் ஒன்று போதும்... ராதே மா யார் என்பதை புரிந்துகொள்ள!
'இரவு வானத்தில் பிரகாசமான தாமரை மலர் ஒன்று மலர வேண்டும். அந்தத் தாமரைப் பூவில் பிறை நிலா ஒன்று பிரகாசிக்க வேண்டும். அந்த நிலாவில் அமர்ந்து ராதே மா விண்ணில் இருந்து பூமிக்கு இறங்கிவர வேண்டும்.’ - ராதே மாவுக்கு இப்படி ஒரு 'இன்ட்ரோ சீன்’ வைக்க... சினிமா படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு ராட்ஷத கிரேன் கொண்டு, ராதே மா என்ற பற்றற்ற பெண் துறவியை விண்ணில் இருந்து மண்ணுக்கு நேரடியாக இறக்கினார்கள்.
வானில் இருந்து இறங்கி வரும் தேவதையாகவே இருந்தாலும், வெள்ளை நிறம் எல்லாம் கூடாது என்று சொல்லிவிட்டு, எப்போதும்போல தகதகவென்று ஜோலிக்கும் தனது சிவப்பு நிற டிசைன் சேலையிலும், கிலோ கணக்கிலான தங்க, வைர நகைகளிலும் பிரகாசித்தார் ராதே மா. அவரது அழகுக்கு அழகு கூட்ட எப்போதும்போலவே, பல மணி நேரம் செலவுசெய்து பிரைடல் மேக்கப் போட்டிருந்தார். முக்காலமும் ஆட்சிசெய்யும் மாகாளியாவே ராதே மா-வை அவரது பக்தர்கள் பார்ப்பதால், அவர் வழக்கம்போல தனது மினியேச்சர் திரிசூலத்தையும் மறக்காமல் ஒரு ஆபரணத்தைப்போல எடுத்துவர... இசையருவியோடு பக்தி அருவி மிக்ஸ் ஆனது.
ராதே மா-வையும் அவரது பக்தர்களையும் பரவச நிலைக்கு கொண்டுபோவது பக்திப் பாடல்கள்தான். ஆயிரம் வாட் ஸ்பீக்கர்களில் இசை வழிய... ராதே மா வழக்கத்தைவிட மகிழ்ச்சியோடு அன்று ஆனந்த தாண்டவம் புரிந்தார். இப்படி ராதே மா நாட்டியமிடும்போது, அவரது பக்தர்கள் பக்தி பரவச நிலையை அடைந்து, ராதே மா-வை இரு கைகளாலும் ஜாக்கிரதையாக அனைத்து அலேக்காக தூக்குவதும்... அந்த நிலையில் பக்தனின் தலை மீது தனது வலது கையை வைத்து ராதே மா ஆசீர்வாதம் கொடுக்கும் பக்தி நிகழ்வும் வழக்கம்போலவே அன்றும் நடந்தது. ஆனால், ஒரே வித்தியாசம்... மற்ற நாட்கள் என்றால், ராதே மா-வை இப்படி தூக்கி முக்திபெறும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அன்று விசேஷமான நாள் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
'வெளிப்பார்வைக்கு இப்படி பகட்டாக இருப்பதால், ராதே மா-வை அவசரப்பட்டு ஃபைவ் ஸ்டார் பெண் சாமியார் என்று தவறாக எடைபோட்டுவிடக் கூடாது’ என்கிறார்கள்.காரணம்... தங்கத்தைவிட அதிகமாக விலை உள்ள மும்பையின் பரபரப்பான பகுதியில் இவரது ஆசிரமம் இருந்​தாலும், அது அவருக்கு சொந்தமானது இல்லை. கால்பந்தாட்ட மைதானத்​தின் அளவில் இருக்கும் பல மாடிகளைக் கொண்ட பளிங்கினால் ஆன அந்த குளுகுளு பங்களா, அவரது பரம சீடரான குப்தா என்பவருக்குச் சொந்தமானது.
43 வயதாகும் ராதே மா-வின் ரிஷிமூலம்தான் என்ன? பஞ்சாப் மாநிலத்தில் வசதிமிக்க, அரசாங்க உயர் அதிகாரிக்கு மகளாகப் பிறந்தவர்தான் ராதே மா என்று பக்தர்களால் அழைக்கப்படும் சுக்வீந்தர் கவுர்.அவர் சிறுமியாக இருக்கும்போதே தாயை இழந்ததால், அப்பா அவரைச் செல்லமாக வளர்த்தார். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் ஊர் வழக்கப்படி திருமணமும் நடந்தது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பிறந்தன. குழந்தைகள் பிறந்த கையோடு, திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதற்காக கணவர் அரபு நாட்டுக்குச் சென்றுவிட்டதால், ஊரில் இருந்த மாகாளி கோயிலில் ராதே மா நிறைய நேரம் செலவிட்டார். அந்த நேரம் ஊரில் இருந்த மஹா தீன்தாஸ் என்ற துறவி, சுக்வீந்தர் கவுருக்கு ராதே மா என்று திருநாமகரணம் சூட்டி இறைவழியில் ஈடுபடுத்தினார். ஒருநாள் ராதே மா-வின் கனவில் கடவுள் தோன்றி, 'யார் ஒருவர் உண்மையான பக்தியோடும் தூய்மையான மனதோடும் மாகாளியின் ஒன்பது திருத்தலங்களுக்கும் சென்றுவிட்டு கடைசியாக உன்னை வந்து தரிசிக்கிறார்களோ... அவர்களது வேண்டுதல் நிறைவேறும்’ என்று சொல்லிவிட்டு மறைந்து போனாராம். இவ்வளவு போதாதா..? ராதே மா-வின் புகழ் பஞ்சாப் முழுவதும் பரவி, பக்கத்தில் இருக்கும் டெல்லியையும் அடைந்தது. டெல்லியில் ராதே மா-வை சந்தித்த இவரது பரம பக்தரான குப்தா என்பவர், தனது குருமாதா எப்போதும் தன் குடும்பத்தோடு தனது பங்களாவிலேயே இருக்க வேண்டும் என்று விருப்பப்பட... ராதே மா தனது சிஷ்யரின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றும் விதமாக மும்பைக்கு இடம்பெயர்ந்தார். குப்தா ஒரு விளம்பர நிறுவனத்துக்கும் அதிபர் என்பதால்... ராதே மா-வுக்கு விளம்பரத்துக்குப் பஞ்சமே இல்லை.
வாழ்க்கையில் சகலவிதமான வசதிகள் இருந்தும் ராதே மா-வுக்கு ஒரு குறை உண்டு. 'மஹா மண்டலேஷ்வரர்’ என்ற பட்டத்தை அவர் தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். மாதாஜி விரும்புவது எதுவானாலும் அதை வாங்கிக் கொடுக்கும் செல்வமும் செல்வாக்கும் கொண்ட பக்தர்கள் இருப்பதால், ராதா மா-வை அந்தப் பட்டமும் தேடி வந்தது. என்றாலும், 'கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து இந்தப் பட்டத்தை வாங்கினார்’ என்ற குற்றச்சாட்டும் கூடவே வந்தது. இந்தப் பட்டம், 'தம்பட்டம்’ என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு சர்ச்சைக்கு உள்ளாகிவிட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் தனது கோடீஸ்வர பக்தர்களின் மனதைக் குளிர்விக்க இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாலும், அவர்களுக்கு ஆங்கிலத்தில் அருள்வாக்கு சொல்ல வேண்டியிருப்பதாலும், இப்போது இவர் தீவிரமாக ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கிறார். ராதே மா அடிக்கடி சொல்லும் மஹா வாக்கியம்: 'ஐ லவ் யூ ஃப்ரம் தி பாட்டம் ஆஃப் மை ஹார்ட்!’
- முகத்திரை விலகும்!
-Vikatan

No comments:

Post a Comment