Saturday, November 23, 2013

ஆறாம் திணை - 61

தினை, கண்ணுக்கு நல்லது; கம்பு, பெண்ணுக்கு நல்லது! கேழ்வரகு வளரும் குழந்தைக்கும், பனிவரகு வளர்ந்த பெரியவருக்கும் நல்லது! - இதனால் மட்டும் நான் சிறுதானியங்களை உயர்வாகச் சொல்லவில்லை. சிறுதானியங்களின் சாகுபடிக்கு ஆகும் தண்ணீரின் அளவு, நெற்பயிருக்கு ஆகும் செலவைக் காட்டிலும் மிகவும் குறைவு. இன்னொரு விஷயம், சிறுதானிய சாகுபடிக்கு மண்ணைப் புண்ணாக்கும் உரங்களோ, பூச்சிக்கொல்லி ரசாயனங்களோ தேவை இல்லை. இரண்டாம் உலகப் போரில் மீந்துபோன வெடிமருந்து உப்பை, எப்படியாவது விற்றுப் பிழைக்கவேண்டி இருந்ததால் உருவானதுதான் உரங்களின் வரலாறு என்று பலருக்கும் தெரியாது. இப்போது கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியத்தில் இந்தியாவின் மண்ணைக் கெடுக்கும் இந்த உரத்தின் பயன், குழந்தைக்குத் தரவேண்டிய தாய்ப்பாலை ஒதுக்கிவிட்டு புட்டிப்பாலில் புளகாங்கிதம் அடைவதைப் போலத்தான்.
1960-களில் ரேச்சல் கார்சனின் 'சைலன்ட் ஸ்பிரிங்’ நூல் மட்டும் வெளியாகவில்லை என்றால், 'டிடிடீ’ எனும் பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சுமுகம் பலருக்கும் தெரிந்திருக்காது. 'என்னடா... கொஞ்ச நாட்களாக, இளவேனிலின் வருகையை அறிவிக்கும் ராபின் பறவையின் குரலைக் காணவில்லையே?!’ எனப் பதறித் தேடிய விஞ்ஞானி ரேச்சல் கார்சன், 'டிடிடீ’ துணுக்குகள், ராபின் பறவையின் முட்டையின் மீது படிந்து அதன் வலுவைக் குறைத்து, முட்டைகளை உடைத்து நொறுக்கி... சத்தம் இல்லாமல் ஓர் இனப்படுகொலை நடத்துவதைக் கண்டறிந்தார். அவரது ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம்தான் உலகை உலுக்கிய 'சைலன்ட் ஸ்பிரிங்’ (தமிழில்: மௌன வசந்தம்)!
ராபின் பறவையின் முட்டையில் பிரச்னை எட்டிப்பார்த்தபோது அவ்வளவாகப் பதறாத அறிவியல் உலகம், அப்பாவி மனிதனான ராபினுக்கு உயிரணுக்கள் குறையும்போதும், 'எனக்கு மட்டும் ஏன் இப்படிக் குழப்புகிறது?’ என அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்து மருகும் ராமலட்சுமியின் சினைப்பையில், முட்டையைவிட நீர்க்கட்டிகள் அதிகமானதைப் பார்த்தபோதும், 'இது ரசாயனத் துணுக்குகளின் உக்கிரவேட்டையாக இருக்குமோ?’ என யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய்... என தினம் நோய்க்கூட்டங்கள் கட்டுக்கடங்காமல் பெருகுவதைப் பார்த்த பின்னர்தான், 'உற்பத்தி என்ற பெயரில் உணவைச் சிதைத்துவிட்டோமோ?’ என யோசிக்கத் தொடங்கியிருக்கிறது.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற மிகத் தெளிவான ecocentrism புரிதலோடு இருந்த நாம், மனித சுயநலனை மட்டும் முன்நிறுத்தி வாழும் வாழ்வியலுக்குள் (anthropocentrism) சிக்கவைக்கப்பட்டது யாரின் சூழ்ச்சி? உலகை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, இயற்கையை வெற்றிகொண்டதாக நினைத்து, பூமியின் ஒட்டுமொத்த உரிமையாளன் நாம்தான் என்ற எண்ணத்தில், பூமியை அதன் கடைசிக் காலத்தை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வோர் உயிரினத்துக்கும் பூமியில் வாழ முழு உரிமை உண்டு. 'பூமி’ என்ற புகைவண்டியில் எஸ் 6-ல் படுக்கை வசதியுடன் ரிசர்வ் செய்து பயணிக்கும் பயணிதான் மனிதன். ரயில் சினேகத்தில் எதிர் படுக்கைக்காரரிடம், 'மேல் படுக்கைக்கு என்னால் ஏற முடியாது சார்... கீழ் படுக்கை தர முடியுமா?’ எனக் கேட்கலாமே தவிர, அவருக்கு உரிய படுக்கையில் வம்படியாகப் படுப்பதோ, ரயில் பாதைக்கு அருகேதான் உங்கள் வீடு இருக்கிறது என்பதற்காக, வீட்டுக்கு அருகே ரயிலை நிறுத்துவதோ எங்கேயாவது சாத்தியமா? ஆனால், நவீனகால மனிதன் பூமி விஷயத்தில் அதைத்தான் செய்கிறான்.
இயற்கை உணவுச்சங்கிலியில் ஒரு கண்ணிதான் மனிதன் என்பதும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சின்ன வைரஸ்கூட மனிதனை 'கண்ணம்மாபேட்டை’க்கு அனுப்பும் வலுகொண்டது என்பதையும் பல நேரம் நாம் உணர மறுக்கிறோம்!  
ஒருகாலத்தில் பூமியை ஒட்டுமொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இனம் டைனோசரஸ். அதை இப்போது கல் பதிவுகளில் மட்டுமே பதித்திருக்கிறது இயற்கை. அதேபோல இன்னோர் உயிரினம், மனிதனின் கல் பதிவுகளைப் பார்த்து, 'பயங்கரப் புத்திசாலியான சுயநல இனம் ஒண்ணு இருந்துச்சு. அதுக்கு, 'மனுஷன்’னு பேர். அது இங்கேதான் இருந்துச்சு தெரியுமா?!’ என கதை பேசும் நிலை சீக்கிரமே வரலாம் என்பதை மறந்துவிடக் கூடாது.  
'அண்டத்திலுள்ளதே பிண்டம்; பிண்டத்திலுள்ளதே அண்டம். அண்டமும் பிண்டமும் ஒன்றே... அறிந்துதான் பார்க்கும்போதே!’ என பிரபஞ்சத்தின் ஒரு கூறாக மட்டுமே தன்னைப் பார்த்தது நம் தமிழ் இனம். முல்லைக்குத் தேர் கொடுத்த 'பாரி’யாகட்டும், மயிலுக்குப் போர்வை கொடுத்த 'பேகனா’கட்டும், மணிகள் ஒலிக்க வேகவேகமாகத் தேரோட்டி வந்தபோது, மணியோசையில் சிறு பறவைகள் பதறித் திரிவதைப் பார்த்து மனம் வெதும்பி, மணியின் நாக்குகளைக் கட்டச் சொன்ன 'தாதூண் பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரனா’கட்டும், 'இந்த மரத்தை வெட்டியா எனக்கு மருந்து வேண்டும், அதற்கு நான் மடிந்துபோகிறேன்’ என பேசிய அந்த நாள் மனிதனாகட்டும்... இவர்கள் எல்லோரிடமும் வெளிப்படுவது உயிர் நேயத்தின் உச்சங்கள்தானே! 'கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி’ என எத்தனை நாள் வெற்றுப் புளகாங்கிதம் பேசிக்கொண்டிருப்போம். கொஞ்சம் அந்தக் குடியின் உயிர்பன்மய வாழ்வியலை உற்றுப்பார்த்து, பிற உயிரையும் உலகையும் நேசித்துதான் வாழ்ந்துபோவோமே!
- பரிமாறுவேன்...

-Vikatan

No comments:

Post a Comment