Saturday, November 23, 2013

தங்கமே தங்கம்! ஒரு ‘நகைமுரண்’ பார்வை

ங்கத்திலேயே கோயில் கட்டுகிறார்கள் வேலூரில்; சாமியாருக்குக் கனவு வந்தது என்று தங்கப் புதையலைத் தேடி பூமியைத் தோண்டுகின்றனர் உத்தரப்பிரதேசத்தில்; 'தாலிக்குத் தங்கம்’ தருகிறது தமிழக அரசு; மகளின் திருமணத்துக்கு மாதம் 500 ரூபாய் நகைச் சீட்டு கட்டுகிறார் காய்கறி மார்க்கெட் தொழிலாளி... இப்படி எங்கெங்கும் தங்க மோகம்!
இந்தப் பூமியில் உள்ள எத்தனையோ கனிமங்களில் தங்கமும் ஒன்று. ஆனால், எப்படியோ அது மனிதகுலத்தை வசீகரித்து விட்டது.
'எல்லாம் என்னுடையது’ என்றது தங்கம்.
'எல்லாம் என்னுடையது’ என்றது வாள்.
'என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’ என்றது தங்கம்.
'என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’ என்றது வாள்.
- ரஷ்ய கவிஞர் புஷ்கினின் இந்தக் கவிதை, யுத்தத்துக்கும் தங்கத்துக்குமான தொடர்பை விவரிக்கிறது.
இப்போதும் இந்தியாவில் நடைபெறும் 25 சதவிகிதக் குற்றங்களுக்கு தங்கம் சார்ந்த காரணங்களே பின்புலம். இந்தியர்களின் தங்க மோகம் வேறுபட்டது. தங்கம் என்பது, இங்கு சமூக கௌரவம்; சென்டிமென்ட். உலக அளவில் இதுவரை
சுமார் 17 கோடி கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியக் குடும்பங்களில் உள்ள தங்கத்தின் அளவு, சுமார் 1,87,00,000 கிலோ. சுமார் 11 சதவிகிதம்!
தங்க மோகம்... பின்னணி என்ன?
மக்கள் ஏன் தங்கம் வாங்கு கிறார்கள்? முதலீடு, சேமிப்பு என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதன் மீது இனம்புரியாத ஓர் ஈர்ப்பு. வரலாற்றின் ஏதோ ஒரு தருணத்தில் இந்தத் தகதகக்கும் மஞ்சள் உலோகத்தின் மீது மனிதகுலத்துக்கு மோகம் வந்துவிட்டது. அது காலந்தோறும் அரசர்கள், செல்வந்தர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள்... என சகல பிரிவினரையும் ஆட்கொண்டுவிட்டது. அதனால்தான் 5,000 ரூபாய் சம்பாதித்தாலும், 500 ரூபாய்க்கு நகைச் சீட்டுப் போட்டு குண்டுமணித் தங்கமேனும் வாங்க முயற்சிக்கின்றனர். காலத்தின் வளர்சிதை மாற்றங்களில் எத்தனையோ நம்பிக்கைகள், பழக்கங்கள், கருத்துகள் மாறியபோதிலும் தங்க மோகம் இன்னும் தொடர்வதுடன், மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது.
திருமணப் பேச்சின் முதல் கேள்வியே, 'எத்தனை பவுன் நகைப் போடுவாங்க?’ என்பதில்தான் தொடங்குகிறது. தங்கள் மகளுக்கு இத்தனை பவுன் நகை போட்டுத் திருமணம் செய்து கொடுத்தால்தான் அவளுக்கும் தங்களுக்கும் கௌவரம் என்று பெற்றோர் நினைக்கின்றனர். இதனால் பெண் குழந்தை பிறந்த உடனேயே, அவளுக்காக நகை சேர்க்கத் தொடங்குகிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், தங்கள் மொத்த வாழ்நாளையும் பிள்ளைகளின் திருமணச் செலவுக்குப் பணம் சேர்ப்பதிலேயே கழிக்கின்றனர். வேறு விருப்பங்கள் பற்றி அவர்கள் சிந்திக்கவே முடியாது. இது எவ்வளவு பெரிய மன அழுத்தம்? 'இனிமேல் திருமணத்தின்போது பெண்களுக்கு நகைப் போடத் தேவை இல்லை’ என்ற நிலை இருந்தால் எப்படி இருக்கும்? கற்பனையே எத்தனை சுகமாக இருக்கிறது?!
வேட்கையைத் தூண்டும் விளம்பரங்கள்!
1990-ம் ஆண்டு வரையில் இந்தத் தங்க மோகம் வரம்புக்கு உட்பட்டே இருந்தது. இந்தியாவில் 91-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கை, தங்க இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அந்தச் சமயம் 100 கோடியை எட்டிப்பிடிக்கும் தொலைவில் இருந்த இந்திய மக்கள்தொகையை, கொழுத்த வியாபார வாய்ப்பாகப் பார்த்தார்கள் தங்க வியாபாரிகள். இந்தியா முழுவதும் பெரும் தங்க நகைக் கடைகள் படையெடுத்தன. ஏற்கெனவே இந்தியர்கள் இந்த 'மஞ்சள் பிசாசின்’ மீது  கொண்டிருந்த காதலை, தங்கள் விளம்பரங்கள் மூலம் பித்து நிலைக்குக் கொண்டுவந்தார்கள். அட்சயத் திருதியை போன்ற நாட்களைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள். இப்போது சினிமா நட்சத்திரங்கள் ஆளுக்கொரு நகைக்கடைக்கு விளம்பரம் செய்கிறார்கள். சென்னையில் குழந்தைகளுக்கான நகைகளை விற்பதற்கு என்றே தனியே கடை இருக்கிறது. பாதுகாப்பான முதலீடு என்பதைத் தாண்டி சமூக அந்தஸ்துக்கான அச்சாரமாக்கப்பட்டது தங்க மோகம்!

அவர்கள் என்ன ஆனார்கள்?
20 வருடங்களுக்கு முன்பு நகைக் கடை என்றால் எப்படி இருக்கும்? ஒரு சிறிய அறை, அதில் கண்ணாடித் தடுப்புக்கும் கீழே வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட நகைகள், சந்தனப்பொட்டு வைத்து, வெள்ளை வேட்டி சட்டையில் வாய் நிறையப் புன்னகையுடன் வரவேற்கும் கடைக்காரர், நம்பிக்கையின் பேரில் கடனுக்குக்கூட நடந்த வியாபாரம், ரோஸ் நிறக் காகிதத்தில் மடித்துத் தரப்படும் நகைகள், கடையின் பெயர் அச்சிடப்பட்ட மணி பர்ஸ், மஞ்சள் பை... இந்தக் காட்சிகள் இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டன. இப்போது நகைக் கடைகள், பிரமாண்டமாக இருக்கின்றன. மூன்று, நான்கு தளங்களில் ஆயிரக்கணக்கான டிசைன்களில் நகைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. 'இத்துணூண்டு நகையை விற்க இவ்வளவு பெரிய கடை எதற்கு?’ என்று நீங்கள்கூட நினைத்திருக்கலாம். ஆனால், எத்தனை நகைக் கடைகள் திறந்தாலும் காலை 10 மணிக்கே அதன் வாசலில் 10 பேர் நிற்கத்தான் செய்கின்றனர்.
முன்பு ஒவ்வோர் ஊரிலும் நகைக் கடை வீதி ஒன்று இருக்கும். உதாரணமாக கோவையில் டவுன்ஹால், மதுரையில் பச்சரிசிக்காரத் தெரு, தஞ்சையில் காசுக்கடை வீதி... என்று நகைப் பட்டறைகளுக்காகவே பெயர்பெற்ற வீதிகள் இருந்தன. இன்று அந்த வீதிகள் மட்டுமே இருக்கின்றன. பட்டறைகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. அவற்றில் வேலை செய்தவர்களில் 90 சதவிகிதத்தினர் வேறு வேலைகளுக்கு மாறிவிட்டனர். பிரமாண்ட நிறுவனங்களின் விஸ்வரூபத்துக்கு முன்னால் சிறு வியாபாரிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனில், இன்றைய நகைக் கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் விதம் விதமான நகைகளை யார்தான் செய்வது? இது, துயரமான ஒரு பதிலுக்கான கேள்வி.
முன்பு சொந்தமாக நகைப் பட்டறைகள் வைத்திருந்தவர்கள்தான், இப்போதைய பிரமாண்ட நகைக் கடைகளுக்கான பட்டறைகளில் கூலிக்கு வேலை பார்க்கிறார்கள். 1995-க்குப் பிறகு படையெடுத்த 'தங்க மாளிகை’களை எதிர்கொண்டு இவர்களால் தொழில் நடத்த முடியவில்லை. பட்டறையை மூடிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேலைகளுக்கு மாறத் தொடங்கினர். அதிலும் தாக்குப்பிடித்து நின்றவர்களை, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு படையெடுக்கத் தொடங்கிய பிரமாண்ட சங்கிலித் தொடர் நகை நிறுவனங்கள் அடியோடு துடைத்து வீசிவிட்டன. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல், 1999-ம் ஆண்டு வாக்கில் நூற்றுக்கணக்கான நகைப் பட்டறைத் தொழிலாளர்கள், நகைத் தொழிலில் பயன்படுத்தப்படும் சயனைடு உண்டு தற்கொலை செய்துகொண்டனர். இது அப்போது பரபரப்பான செய்தியானது. எஞ்சியவர்களுக்கு, வாழ்வதற்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் நகை வேலை மட்டுமே. அவர்கள் அத்தனை பேரும் பெரும் நிறுவனங்களின் தொழிற்கூடங்களில் சரணடைந்தனர். இப்போதைய பிரமாண்ட நகை நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவில் பணிபுரிவதில் முக்கால்வாசி பேர் இவர்கள்தான்.
இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் போக, 'இவ்வளவு நகை செய்தால், இவ்வளவு ரூபாய் ஊக்கத்தொகை’ என்று நிர்ணயிக்கப்படுகிறது. அந்த ஊக்கத் தொகையைக் கூடுதலாகப் பெறுவதற்காக இரவும் பகலும் பணிபுரிகின்றனர். அட்சயதிருதியை, முகூர்த்த நாட்கள்... போன்ற சமயங்களில் இவர்கள் மூன்று, நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும். தங்கத் துகள்களைக் கவர்ந்து சென்றுவிடக் கூடாது என்பதற்காகக் கடும் கண்காணிப்பு எப்போதும் இருக்கும். வேலை செய்யும் இடம் காற்றுப் புக வழி இல்லாத, நான்கு புறமும் அடைக்கப்பட்ட அறையாகவே இருக்கும். வேதிப்பொருள்களை நாள் முழுக்க சுவாசிக்க வேண்டியிருக்கும். இதனால் இந்தத் தொழிலில் உள்ளவர்களை ஆஸ்துமா, மூலவியாதி, தோல் நோய்கள்... போன்றவை எளிதில் தாக்குகின்றன. நாம் வாங்கும் தங்கம் ஜொலிக்கலாம். ஆனால், அதை உருவாக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையோ மங்கிக்கிடக்கிறது!
தங்கம் லாபம்... ஆனால், சரியானதா?
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறுமுகத்திலேயே இருக்கும் விலைதான், தங்கத்தை உலக மக்களின் நம்பிக்கைக்குரிய முதலீட்டுத் தேர்வாக வைத்திருக்கிறது. பாதுகாப்பு, உத்தரவாதம், நம்பகத்தன்மை போன்ற அம்சங்களால் மக்கள் இதைத் தேர்வு செய்கின்றனர். ஆனால், தங்கத்தின் இருப்பு என்பது வரம்புக்கு உட்பட்டது.
ஒவ்வொரு நாளும் உலகின் தங்கத் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக அளவில் தங்க உற்பத்தி ஆண்டொன்றுக்கு 2,450 டன். ஆனால், தேவை, 3,550 டன். பற்றாக்குறை, 1,100 டன். இந்தப் பற்றாக்குறை இனிவரும் ஆண்டுகளில் அதிகரித்தபடியே இருக்கும். மேலும், தங்கத்தைத் தேடி பூமியின் அடி ஆழத்துக்குச் செல்லச் செல்ல.. அதற்கான செலவும் அதிகரிக்கும். எனவே, தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி, இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் ஏறுமுகமாகவே இருக்கும் என்பது இந்தத் துறை நிபுணர்களின் கருத்து. அதாவது, அவர்கள் ஒரு முதலீடு என்ற கோணத்தில் தங்கத்தை வாங்குவது லாபகரமானது என்கிறார்கள். லாபமாக இருக்கலாம்; ஆனால், சமூக நலன் நோக்கில் இது சரியானதா?
'தங்கம் என்பது ஒரு கனிமம். அதில் இருந்து வேறு எதுவும் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. வெறுமனே லாபத்தை மட்டுமே கருத்தில்கொண்டு இதில் கொட்டப்படும் பல லட்சம் கோடி ரூபாயை, ஆக்கபூர்வமான வேறு துறைகளுக்குப் பயன்படுத்தலாம். மின்சாரம், விவசாயம், கட்டுமானம், தொழிற்துறை போன்ற உற்பத்தி சார்ந்த துறைகளில் இந்தப் பணம் பாயும்போது, அதனால் மக்களுக்குப் பயன் உண்டு. மாறாக, தங்கத்தை வாங்கிக் குவிப்பதால் எந்தப் பலனும் இல்லை. இது, மூலதனத்தை முடக்கும் செயல். இதில் கிடைப்பதாகச் சொல்லப்படும் லாபம் என்பது, செயற்கையான யூக லாபம். தங்கத்தை ஒரு சேமிப்பு என்ற அளவில் வாங்குவது வரை சரி. முதலீடு என்ற கோணத்தில் தங்கம் வாங்குவது, சமூக நலன் நோக்கில் சரியானது இல்லை!’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
மக்கள் தங்கத்தை ஏராளமாக வாங்கிக் குவிப்பதால் வேறொரு பிரச்னையும் இருக்கிறது. 'நடப்புக் கணக்குப் பற்றாக்குறை’ என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கக் கூடியது. இறக்குமதி அதிகம்; ஏற்றுமதி குறைவு என்ற நிலையில், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை. இது, ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 2.5 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது. அதுதான் ஆரோக்கியமான பொருளாதாரம். ஆனால், இந்தியாவில் இது, 4 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இதற்கு, தாறுமாறான தங்க இறக்குமதியும் ஒரு முக்கியக் காரணம். இந்தியத் தங்கத் தேவையின் 97 சதவிகிதம் இறக்குமதிதான்.
கீழே உள்ள கணக்கைப் பாருங்கள். இது ஒவ்வோர் ஆண்டும் இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவு...
2007            7,59,000 கிலோ
2008            4,81,000 கிலோ
2009            5,78,000 கிலோ
2010            9,63,000 கிலோ
2011            9,86,000 கிலோ
2012            8,00,000 கிலோ
ஆனால், உலகமே இப்படித்தான் இருக்கிறது என்பதால், 'எந்த நாடு அதிகமான தங்கம் வைத்திருக்கிறதோ... அந்த நாடுதான் பிஸ்தா’ என்ற நிலைதான் நிலவுகிறது. ஏனெனில், பொருளாதாரத் தள்ளாட்டம் எல்லா நாடுகளையும் பீடித்து வருகிறது. இந்தச் சூழலில், தத்தமது நாட்டு கரன்சிகளை நம்புவதைவிட, தங்கத்தை நம்புவதைத்தான் நாடுகள் விரும்புகின்றன. இதனால் பல நாடுகள் தங்களின் கையிருப்புத் தங்கத்தை, வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம் உயர்த்திக்கொள்கின்றன. உலக அளவில் அதிகத் தங்க கையிருப்புகொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இப்போது 11-வது இடம்!
அதிகரிக்கும் அடகுக் கடைகள்!
தங்க நகைக் கடைகள் மட்டும் அதிகரிக்கவில்லை. அடகுக் கடைகளும் தெருவுக்கு நான்காக முளைத்துள்ளன. அவை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்துள்ளன. அந்தப் பக்கம் சினிமா நட்சத்திரங்களை வைத்து தங்கம் விற்பவர்கள், இந்தப் பக்கம் அவர்களைக்கொண்டே, அடகு வைக்கச் சொல்லி அழைக்கிறார்கள். தெருவுக்கு நான்கு நகைக் கடைகள் முளைக்க மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததுதான் காரணம் என்றால், தெருவுக்கு எட்டு அடகுக் கடைகள் முளைக்க என்ன காரணம்?
ஏனெனில், புதிய தாராளமயக் கொள்கை ஒரு பகுதி நடுத்தரவர்க்க மக்களைச் செழுமைப்படுத்தி இருக்கும் அதே சமயம், பெரும்பான்மை மக்களை இறுக்கிப் பிடிக்கிறது. கல்வி, மருத்துவம், அன்றாடச் செலவுகள் அதிகரித்துவிட்டன. எனவே, மக்கள் வாங்கிய நகைகளை அடகுக் கடைகளை நோக்கிக் கொண்டுசெல்கின்றனர். பொருளாதார நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க, அடகுக்கடைகளும் அதிகரிக்கின்றன. உதாரணத்துக்கு, 'முத்தூட் ஃபைனான்ஸ்’ நிறுவனம்தான் தங்க நகைக் கடன் வழங்குவதில் உலகிலேயே பெரிய நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 4,000 கிளைகள் உள்ளன. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் வங்கிக்கு 2,100 கிளைகள் மட்டுமே உள்ளன. 2009-ம் ஆண்டு முத்தூட் நிறுவனத்துக்கு 985 கிளைகள்தான் இருந்தன. அதன் பிறகான நான்கு ஆண்டுகளில் 3,000 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கிளைகள். அதிலும் 2011-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மட்டும் இந்த நிறுவனம் 103 புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 'ஆத்திர அவசரத்துக்குப் பயன்படுமே’ என்ற எண்ணத்துடன்தான் தங்கம் வாங்குகின்றனர். அந்த 'ஆத்திர அவசரம்’ எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதற்கு மேலே உள்ள புள்ளிவிவரமே சாட்சி. பெரும்பான்மையான நகைக் கடைகளின் பூர்விகம் கேரளாதான். அதேபோல பெரும்பான்மையான நகை அடகுக் கடைகளுக்கும் கேரளாதான் பூர்விகம். உடம்பு முழுக்க நகைகளை அணிவித்து, பெண்களை நடமாடும் நகைக் கடையைப் போல வலம்வரச் செய்வதும் கேரளப் பாரம்பரியம்தான். இந்தியாவிலேயே அதிகம் கல்வியறிவு பெற்ற மாநிலம் கேரளாதான் என்பது இதில் உள்ள நகைமுரண்.
என்னவென்று சொல்வது... செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், பி.எஸ்.ஐ., கே.டி.எம்., ரேட்கார்டு, பிரைஸ் டாக், க்ளியர் பிரைஸ் டாக், புரட்சி, போராட்டம்!

No comments:

Post a Comment